Friday, May 19, 2017

தலைநகருக்கு ஒரு நியாயம்... சிறுநகருக்கு ஒரு நியாயம்!

தலைநகருக்கு ஒரு நியாயம்... சிறுநகருக்கு ஒரு நியாயம்!

2002-ம் ஆண்டு மார்ச் 3-ம் தேதி...

கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து குஜராத்தில் மதக்கலவரம் வெடித்தது. அப்போது அகமதாபாத் அருகே உள்ள ரந்திக்பூரைச் சேர்ந்த பில்கிஸ் பானு, ஐந்து மாதக் கர்ப்பிணி. அவரின் கண் எதிரிலேயே, அவருடைய மூன்றரை வயது மகள், அம்மா, இரண்டு சகோதரிகள் உள்பட 14 உறவினர்களைக் கலவரக் கும்பல் வெட்டிப் படுகொலை செய்தது. கர்ப்பிணி என்றும் பாராமல் பில்கிஸ் பானுவையும் அந்தக் கும்பலைச் சேர்ந்தவர்கள் வன்புணர்வு செய்தனர். குற்றுயிரும் குலைஉயிருமாகத் துடித்துக்கொண்டிருந்த பில்கிஸ் பானு  பிறகு மீட்கப்பட்டார். குடும்பத்தினர் அனைவரையும் பறிகொடுத்துவிட்டு, சொந்த ஊரில் இருக்க முடியாமல், அகதி போல இன்றைக்கு வாழ்ந்து வருகிறார் பில்கிஸ் பானு.

2012-ம் ஆண்டு டிசம்பர் 16-ம் தேதி...

பிசியோதெரபி படிக்கும் 23 வயது நிர்பயா, இரவில் தன் நண்பருடன் டெல்லியில் ஒரு தனியார் பஸ்ஸில் பயணம் செய்துகொண்டிருந்தார். அந்த பஸ்ஸில் ஓட்டுநர் உள்பட ஆறு பேர் இருந்தனர். அவர்கள், அந்த நண்பரை அடித்துவிட்டு, நிர்பயாவை வன்புணர்வு செய்தனர். அவரை மிகக் கொடூரமாகத் தாக்கினர். சாலையில் இருவரையும் வீசிவிட்டு, பஸ்ஸை ஏற்றிக் கொல்லவும் முயற்சித்தனர். உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த நிர்பயாவை பொதுமக்களில் சிலர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். டிசம்பர் 29-ம் தேதி தன்னுடைய இறுதி மூச்சை காற்றில் கலக்கவிட்டு உயிரிழந்தார் நிர்பயா. 

இந்தக் கூட்டு வல்லுறவும், கொலைகளும் பில்கிஸ், நிர்பயா குறித்த செய்திகள் மட்டும் அல்ல. இந்தச் செய்திகள் இந்தப் புள்ளியில் முடியவும் இல்லை. இந்தியாவில் பெண்களுக்கான பாதுகாப்பை மட்டும் இந்தச் செய்திகள் பேசவில்லை; இதற்குப் பின்னால் சன்னமான குரலில் இன்னொரு செய்தியும் விசும்பிக் கொண்டிருக்கிறது. 

நிர்பயாவை வன்புணர்வு செய்து கொன்ற கொலையாளிகள் நால்வருக்கும் வழங்கப்பட்ட மரண தண்டனையை கடந்த வாரம் உறுதிப்படுத்தியது உச்ச நீதிமன்றம். இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டதற்கு ஒருநாள் முன்பாக, பில்கிஸ் பானு வழக்கில் பம்பாய் உயர் நீதிமன்றம் ஒரு தீர்ப்பை அளித்தது. இந்த வழக்கில் நேரடியாகச் சம்பந்தப்பட்ட 11 பேருக்கு ஆயுள் தண்டனையும், குற்றத்தை மறைத்த ஆறு காவலர்களுக்கும் ஓர் அரசு மருத்துவருக்கும் மூன்று ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் வழங்கியது. நிர்பயா வழக்கை இந்தியாவே கவனித்தது. துரதிர்ஷ்டவசமாக, பில்கிஸ் பானு வழக்கை யாரும் கவனிக்கவும் இல்லை... காத்துக் கிடக்கவும் இல்லை.

தலைநகருக்கு ஒரு நியாயம்... சிறுநகருக்கு ஒரு நியாயம்!

நிர்பயா வழக்குக்கு அரசாங்கம் உள்பட எல்லா தரப்பிலிருந்தும் ஆதரவு கிடைத்தது. பில்கிஸ் வழக்குக்குத் தடை ஏற்படுத்த பல்வேறு முயற்சிகள். அரசும் போலீஸும் கைகோத்துக் கொண்டு அவருக்கு எதிராக செயல்பட்டன. தன்னை வன்புணர்வு செய்த ஜஸ்வந்த் நய், கோவிந் நய் உள்ளிட்டவர்களால் தொடர்ந்து மிரட்டலுக்கு ஆளானார் பில்கிஸ். மிரட்டலுக்குப் பயந்து 15 ஆண்டுகளில் கிட்டத்தட்ட 20 முறை வீடு மாறியிருக்கிறார். நிர்பயா வழக்கில், நான்கரை ஆண்டுகளில் உச்ச நீதிமன்றம் வரை சென்று தீர்ப்பு வந்துவிட்டது. பில்கிஸ் பானு வழக்கில் பம்பாய் உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்க 15 ஆண்டுகள் ஆனது. தண்டனை பெற்றவர்கள் இப்போது உச்ச நீதிமன்றம் செல்ல இருக்கிறார்கள். இறுதித் தீர்ப்பு வருவதற்கு இன்னும் நாள்கள் ஆகலாம். 

நிர்பயாவுக்கு அதி விரைவாக நியாயம் கிடைத்துள்ளது. இது வரவேற்கத்தக்க விஷயம். ஆனால், 14 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர்... கர்ப்பிணி பெண் ஒருவர் குழுவாக வன்புணர்வு செய்யப்பட்டிருக்கிறார். அவர் வழக்கில் இதேபோன்ற தீர்ப்பு கிடைக்கவில்லை. ஏன் இந்தப் பாகுபாடு? நிர்பயாவின் மரணம் இந்தியாவின் தலைநகரில் நிகழ்ந்தது... கூப்பிடு தூரத்தில் நாடாளுமன்றமும் எம்.பி-க்களின் வீடுகளும், அனைத்து தேசிய ஊடகங்களின் தலைமையகங்களும் இருக்கும் இடத்தில் நிகழ்ந்தது. அதனால், அவர் வழக்கு குறித்த செய்தி, இந்தியாவின் கவனத்தை ஈர்த்தது. ஆனால், பில்கிஸ் தெற்கு குஜராத்தில், அகமதாபாத்திலிருந்து 200 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் ஒரு சிறு நகரத்தில் இருந்தபடி, தனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராகச் சட்டரீதியாகப் போராடிக்கொண்டிருந்தார். 

இருவரும் இந்தியாவின் மகள்கள். இருவருக்கும் ஒரே சட்டம்தான். இருவரும் மோசமான வெவ்வேறு நாளில் தேசத்தின் வெவ்வேறு பகுதியில் ஒரே மாதிரியான கொடுமைக்கு ஆளானார்கள். ஆனால், சட்டத்தின் பார்வை மட்டும் வெவ்வேறாக இருக்கிறது. அந்தக் கொடூர சம்பவத்தின்போது, பில்கிஸ் வயிற்றில் இருந்த ஐந்து மாத சிசுவுக்கு இப்போது 15 வயது. “அவளை வக்கீல் ஆக்கப்போகிறேன்” என்கிறார் பில்கிஸ். ஒருநாள், அவளாவது இந்த இந்தியாவுக்கு எது சமமான நீதி என்பதைச் சொல்வாளா?

News2
News2

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a comment