Friday, May 12, 2017

நரபலியா... கடத்தலா..! - சிக்கலில் எம்.எல்.ஏ பிரபு குடும்பம்

நரபலியா... கடத்தலா..! - சிக்கலில் எம்.எல்.ஏ பிரபு குடும்பம்

ளம்பெண் கடத்தப்பட்டபுகாரில் அ.தி.மு.க எம்.எல்.ஏ-வும் அவரது தந்தையும் சிக்கியிருப்பது விழுப்புரம் மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி அருகேயுள்ள ஈய்யனூர் கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி சங்கர். இவருடைய மனைவி நந்தினி. ‘என் மனைவியை கள்ளக்குறிச்சி  அ.தி.மு.க எம்.எல்.ஏ பிரபுவின் தந்தையும், தியாகதுருகம் அ.தி.மு.க ஒன்றிய செயலாளருமான அய்யப்பா கடத்திச் சென்றுவிட்டார்’ என்று வரஞ்சரம் காவல்நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார் சங்கர். ஆனால், எம்.எல்.ஏ-வின் தந்தை மீது புகார் என்பதால் வழக்கைப் பதிவு செய்யாமல் நான்கு மாதங்களாக இழுத்தடித்திருக்கிறது போலீஸ். விரக்தியடைந்த சங்கர் உயர் நீதிமன்றத்தை அணுக, இப்போது வழக்கைப் பதிவு செய்திருக்கின்றனர் போலீஸார்.

சங்கரிடம் பேசினோம். “போன வருஷம் டிசம்பர் மாசம்தான் எனக்கும் நந்தினிக்கும் கல்யாணம் ஆச்சு. எதிர் வீட்ல இருக்கிற மணிமேகலைகிட்ட நல்லா பேசிட்டிருப்பா என் மனைவி. அப்படி ஜனவரி 1-ம் தேதி சாயங்காலம் போன நந்தினி, ரொம்ப நேரமாகியும் திரும்பி வரல. மணிமேகலை வீடும் பூட்டியிருந்துச்சு. நாங்க உடனே எல்லா இடத்துலயும் தேட ஆரம்பிச்சோம். அப்போ மணிமேகலையும் நந்தினிகூட போனதா பக்கத்து வீட்டுக்காரங்க சொன்னாங்க. மறுநாள் சொந்தக்காரங்க வீடு முழுசா தேடிப் பாத்துட்டு, என்ன பண்றதுனு தெரியாம வீட்டுக்கு வந்தோம். அப்போ மணிமேகலை எதிர்ல வந்துட்டு இருந்தாங்க. அவங்ககிட்ட என் மனைவியப் பத்தி கேட்டப்போ அவங்க முகமெல்லாம் மாறிடுச்சி. உடனே, ‘எனக்குத் தெரியாது’னு சொல்லிட்டாங்க.

எனக்கு சந்தேகம் அதிகமானதால அவங்க மேலேயும், அவங்க வீட்டுக்கு அடிக்கடி வந்து போற தாமரைச்செல்வன், ராஜா மேலயும் சந்தேகமா இருக்குதுனு வரஞ்சரம் போலீஸ் ஸ்டேஷன்ல போய்ச் சொன்னேன். அங்க இருந்த போலீஸ்காரங்க இதப்பத்தி விசாரிக்கறேன்னு சொன்னாங்க. ஸ்டேஷன்ல இருந்து வீட்டுக்குத் திரும்புறப்போ எம்.எல்.ஏ பிரபுவோட அப்பா அய்யப்பா எனக்குப் போன் செய்தார். ‘மணிமேகலை மேலயெல்லாம் தேவையில்லாம கம்ப்ளைன்ட் குடுக்காத. விஷயத்தப் பெருசாக்காத. உனக்குப் பொண்ணா கிடைக்காது? நந்தினி விஷயத்த வுட்டுடு. வேற கல்யாணத்தப் பண்ணிக்க. நானே ஐந்து லட்ச ரூபாய் செலவு பண்ணி உனக்குக் கல்யாணம் பண்ணி வைக்கறேன். இதைப் பெரிசாக்கினா நடக்கறதே வேற’னு மிரட்டினாரு. கொஞ்ச நேரத்தில எம்.எல்.ஏ பிரபுவும் மிரட்டுனாரு. அதுக்கு மறுநாள் ஆளுங்கள அனுப்பி எங்க வீட்டுல இருக்கறவங்களயும் மிரட்டினாரு. 

உடனே கம்ப்ளைன்ட்ல அவர் பேரையும் எழுதி எடுத்துக்கிட்டு ஸ்டேஷனுக்குப் போனேன். பலநாள் இழுத்தடிச்சிட்டு, ‘இந்தக் கேஸை கள்ளக்குறிச்சி ஸ்டேஷனுக்கு மாத்தியாச்சு. அங்க போயி கேளு’னு சொல்லிட்டாங்க. அங்கயும் அலைஞ்சு பாத்தேன். ‘எம்.எல்.ஏ விவகாரமா? அப்புறமா கூப்பிடறோம்’னு விரட்டுனாங்க. நாலு மாசம் ஆச்சு. வேற வழியில்லாம நான் கோர்ட்டுக்குப் போய் ஆர்டர் வாங்கனதுக்கு அப்புறம்தான் இந்த மாசம் 4-ம் தேதி வழக்குப் பதிவு செஞ்சாங்க.

எம்.எல்.ஏ-வோட அப்பா அய்யப்பா, மணிமேகலை வீட்டுக்கு அடிக்கடி வந்து போவாரு. என் மனைவி காணாம போனதில இருந்து இவங்க எல்லாரும் என்கிட்ட போன் பேசுன ஆதாரம் இருக்குது. எனக்கு என் மனைவி வேணும். என் மனைவிய நரபலி கொடுத்துட்டாங்கனு எல்லாம் பேசிக்கிறாங்க. பயமா இருக்கு” என்று உடைந்து அழுதார் சங்கர்.

எம்.எல்.ஏ-வின் தந்தை அய்யப்பாவை நாம் தொடர்பு கொண்டபோது இந்தக் குற்றச்சாட்டுக்களை மறுத்த அவர், “அந்தத் தம்பி யாருனுகூட எனக்குத் தெரியாது. அப்படி இருக்கும்போது நான் ஏன் அவரை மிரட்டணும்? நான் ஏன் அந்தப் பொண்ணைக் கடத்தணும்? எனது வளர்ச்சியை பிடிக்காதவங்க  என் மீது சேற்றை வாரி இறைக்கப் பாக்குறாங்க” என்றார்.

நரபலியா... கடத்தலா..! - சிக்கலில் எம்.எல்.ஏ பிரபு குடும்பம்

‘‘நந்தினியை பார்த்ததே இல்லை’’ என அய்யப்பா சொல்ல, அவரது மகன் எம்.எல்.ஏ. பிரபுவோ அதற்கு நேர் மாறாக பேசினார். “சார், இந்த சங்கர் கூட வாழப் பிடிக்காம அந்தப் பொண்ணு ஏற்கெனவே ரெண்டு முறை அவங்க மாமா கூட போயிடுச்சாம். அதுக்குக் காரணம் மணிமேகலைதான்னு அவங்ககிட்ட சங்கர் சண்டைக்குப் போயிருக்காரு. இதுபற்றி எங்க அப்பாகிட்ட மணிமேகலை சொல்லியிருக்காங்க. அப்பா அதனாலதான், ‘அந்தப் பொண்ணுக்குதான் உன்னைப் புடிக்கலைனு சொல்லுதே. நீ வேணும்னா வேற கல்யாணம் பண்ணிக்கப்பா’னு சங்கர்கிட்ட சாதாரணமா பேசியிருக்காரு. எங்க வளர்ச்சிப் பிடிக்காதவங்க தான் அதைத் தப்பா திரிச்சிவிடுறாங்க” என்றார்.

கள்ளக்குறிச்சி இன்ஸ்பெக்டர் பாண்டியன், “ஏற்கெனவே இரண்டுமுறை அந்தப் பெண் தன் பழைய காதலனுடன் சென்றுவிட்டார். இருந்தாலும் கணவர் கொடுத்த செல்போன் எண்களின் கால் டீடெய்ல்ஸ் எடுத்துக் கொண்டிருக்கிறோம். வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்துவருகிறோம்” என்றார்.

‘‘பிரச்னை எதுவாகவும் இருக்கட்டும். ஒரு பெண் கடத்தல் புகாரை வழக்குப்பதிவு செய்ய உயர் நீதிமன்ற உத்தரவு தேவைப்படுகிறது என்றால் அது காவல்நிலையமா அல்லது கட்டப்பஞ்சாயத்துக் கூடமா?” என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

News2
News2

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a comment