Saturday, May 06, 2017

சசிகலா குடும்பத்தார் இப்போது... - ஜூ.வி லென்ஸ்

சசிகலா குடும்பத்தார் இப்போது... - ஜூ.வி லென்ஸ்

எம்.ஜி.ஆருக்குப் பிறகான அ.தி.மு.க வரலாற்றை, சசிகலா குடும்பத்தை ஒதுக்கி வைத்துவிட்டு எழுத முடியாது. தமிழகத்தின் தலைமைச் செயலாளர் முதல் கட்சியின் ஒன்றியச் செயலாளர் வரை முடிவு செய்யும் அதிகார மையமாக அந்தக் குடும்பம் இருந்தது. அவர்களின் அதிகார ஆக்டோபஸ் கரங்கள், சகல திசைகளிலும் பரவி வேரூன்றின. ஜெயலலிதாவின் மரணத்துக்குப் பிறகு ‘சின்னம்மா’  என சசிகலாவை அழைத்தவர்களே இப்போது, ‘சசிகலாவின் குடும்பத்தை ஒதுக்கி வைப்பதாக’ அறிவித்துள்ளனர். இந்தக் களேபரங்களுக்கு மத்தியில், இப்போது சசிகலாவின் உறவுகள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்?

சசிகலா குடும்பத்தார் இப்போது... - ஜூ.வி லென்ஸ்

சசிகலா

சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறைக்குள் இருக்கிறார். உறவினர்கள், கட்சிக்காரர்கள் என்று பலரும் அவரைச் சந்திக்க, சிறைக்குப் படை எடுக்கின்றனர். ஆனால், இப்போது அவர்களில் யாரையும் சசிகலா சந்திக்க விரும்புவதில்லை. குடும்பத்துக்குள் நடக்கும் பிரச்னைகள், கட்சிக்குள் ஏற்பட்ட குழப்பங்கள் மற்றும் எதிர்ப்புகளால், சசிகலா மனம் உடைந்து போயிருக்கிறார். குறிப்பாக மகாதேவன் மரணம் அவர் மனதை வருத்தியிருக் கிறது. ‘‘கடைசிக் காலத்துல அவனுக்கு எதுவும் செய்ய முடியலையே’’ என்று புலம்புகி றாராம். பல ஆண்டுகளாக, தினமும் காலையில் தவறாமல் கடைப்பிடித்துவந்த நடைப் பயிற்சியையும், சமீப நாட்களில் அவர் முறையாகச் செய்வதில்லை. சொத்துக் குவிப்பு வழக்கில் மறுசீராய்வு மனுத்தாக்கல் செய்யும் விஷயமாகத் தன்னைச் சந்திக்க வரும் வழக்கறிஞர்களை மட்டுமே அவர் பார்க்கிறார். ‘இந்த வழக்கில் இருந்து எப்படியும் விடுவிக்கப்படுவோம்... சிறையில் இருந்து விடுதலை கிடைக்கும்’ என்ற நம்பிக்கையோடு நாட்களைக் கடத்தி வருகிறார் சசிகலா. 

சசிகலா குடும்பத்தார் இப்போது... - ஜூ.வி லென்ஸ்

நடராசன்

தமிழகத்தில், நிழல் அதிகாரத்தை முதலில் உருவாக்கியவர் நடராசன். பல ஆண்டுகளுக்கு முன்பே நடராசனை ஜெயலலிதா ஒதுக்கிவைத்தார். அதன்பின் போயஸ் கார்டன் பக்கமே போகாமல் இருந்த நடராசன், ஜெயலலிதா இறந்த அன்றைக்குத்தான் அங்கு போனார். ஜெயலலிதாவின் உடல் வைக்கப்பட்டு இருந்த ராஜாஜி ஹாலில் நின்றுகொண்டிருந்தார். அதன்பிறகு சசிகலாவைப் பொதுச் செயலாளர் ஆக்கியது, அவரை முதல்வர் பதவிக்குக் கொண்டுவர முயன்றது ஆகியவற்றில் நடராசனுக்குப் பெரிதாக விருப்பம் இல்லை என்றாலும், அந்த நடவடிக்கைகளை அவர் ஆதரித்தார். சசிகலா சிறைக்குச் சென்ற பிறகு, தினகரன் கட்டுப்பாட்டுக்குள் கட்சி போனதும், முற்றிலும் ஒதுங்கி இருந்தார் நடராசன். இடையில் அவருக்கு உடல்நலக்குறைவும் ஏற்பட்டது. மகாதேவனின் படத்திறப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடராசன், தற்போது அவருடைய பெசன்ட் நகர் வீட்டில் ஓய்வில் இருக்கிறார். “சசிகலாவின் விடுதலைதான் இப்போதைக்கு எனக்கு முக்கியம். அது கிடைக்கும்வரை நான் எதற்கும் ரியாக்ட் செய்யப்போவதில்லை” என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் சொல்லிக்கொண்டிருக்கிறார்.  

சசிகலா குடும்பத்தார் இப்போது... - ஜூ.வி லென்ஸ்

திவாகரன்

இவர், சசிகலாவின் தம்பி. ‘இவர் சொன்னால் சசிகலா தட்டமாட்டார்’ என்று குடும்ப உறவுகளால் அடையாளம் காட்டப்படும் நபர். மன்னார்குடி அருகே உள்ள சுந்தரக்கோட்டையில் வசித்து வருகிறார். அப்போலோவில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட பிறகு ஆட்சியிலும், கட்சியிலும் அடுத்து என்ன செய்யவேண்டும் என்ற முடிவுகள், திவாகரனின் எண்ணப்படிதான் எடுக்கப்பட்டன. இவருடைய ஒப்புதலுக்குப் பிறகுதான், சசிகலாவின் அரசியல் நகர்வுகளுமே இருந்தன. ‘பாஸ்’ என்று அ.தி.மு.க-வினரால் பவ்யமாக அழைக்கப்பட்ட இவரே இப்போது பவ்யமாகத்தான் இருக்கிறார். தினகரனின் லாபியைப் பார்த்து டென்ஷனாகி, “இவன்தான் கட்சினு நினைக்கிறானா? நாங்க இல்லாம இவன் இந்த அளவுக்கு வந்திருக்க முடியமா?” என்று தன் ஆதரவு அமைச்சர்களிடமே வெளிப்படையாக இவர் புலம்பினார்.  

உளவுத்துறையில் தனக்கு வேண்டிய நபர்களை உள்ளே நுழைத்த இவரால், ஆட்சியில் வேறு எதையும் பெரிதாக சாதிக்க முடியவில்லை. மணல் குவாரிகளைத் தனக்கு வேண்டியவருக்குப் பெற்றுத் தர கடுமையாக முயன்றும், கடைசிவரை பலனில்லை. இப்போது அமைதியாக தனது செங்கமலத்தாயார் கல்லூரி நிர்வாகத்தைப் பார்த்து வருகிறார். பகல் பொழுதைக் கல்லூரியில்தான் கழித்து வருகிறார். வாரத்தில் புதன்கிழமை அன்று மௌனவிரதத்தைக் கடைப்பிடிக்கிறார். தன் ஆதரவு அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்களைத் தனித்தனியாக வாரத்தில் ஒரு நாள் ரகசியமாக சந்தித்து, ஆட்சியிலும் கட்சியிலும் நடக்கும் விஷயங்களைக் கேட்டுத் தெரிந்துகொள்கிறார். “நான் சொன்னால் எதையும் செய்வதற்கு அ.தி.மு.க-வில் சிலர் இருக்கிறார்கள்” என்ற தெம்போடு மன்னார்குடியில் இருந்தபடியே சென்னையைப் பார்த்து வருகிறார். 

சசிகலா குடும்பத்தார் இப்போது... - ஜூ.வி லென்ஸ்

இளவரசி

சசிகலாவின் அண்ணன் ஜெயராமனின் மனைவிதான் இளவரசி. ஜெயராமன், ஜெயலலிதாவின் ஹைதராபாத் திராட்சைத் தோட்டத்தில் மின்சாரம் பாய்ந்து இறந்துவிட்டார். அதன்பிறகு, இளவரசியின் குடும்பமும் போயஸ் கார்டனில்தான் இருந்தது. சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலாவோடு தண்டனை பெற்றதால், தற்போது இளவரசியும் பரப்பன அக்ரஹாரா சிறைக்குள்தான் இருக்கிறார். அங்கு, அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளார். 

சசிகலா குடும்பத்தார் இப்போது... - ஜூ.வி லென்ஸ்

சுதாகரன்

சசிகலா, இளவரசி ஆகியரோடு சிறையில் இருக்கும் மற்றொருவர், சுதாகரன். சசிகலாவின் அக்கா வனிதாமணியின் மகன். ஜெயலலிதா இவரைத்தான் தன் வளர்ப்பு மகனாகத் தத்தெடுத்து, தமிழகமே அசந்துபோகும் அளவுக்கு ஆடம்பரமாகத் திருமணம் செய்துவைத்தார். ஆனால், அதன்பிறகு ஜெயலலிதாவின் கோபப்பார்வையில் சிக்கி, ஹெராயின் வழக்கில் கைதாகி, பல ஆண்டுகளாக அந்த வழக்கைச் சந்தித்து வந்தவர், சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று தற்போது சிறையில் இருக்கிறார். சுதாகரனை சசிகலா குடும்ப உறவுகளும் ஒதுக்கிவிட்டதால், அவர்களில் யாரும் அவரைப் போய்ப் பார்ப்பதில்லை. சோகத்திலும் ஆன்மிகத்திலும் அவரின் நாட்கள் நகர்கின்றன.

சசிகலா குடும்பத்தார் இப்போது... - ஜூ.வி லென்ஸ்

தினகரன்

அ.தி.மு.க-வின் துணைப் பொதுச் செயலாளர் தினகரன், தற்போது திஹார் சிறையில் இருக்கிறார். சசிகலா சிறைக்குச் சென்றதும், தினகரனின் எழுச்சியும் வீழ்ச்சியும் ஆச்சரியப்படத்தக்க வகையில் இருந்தன. விறுவிறுவென கட்சியைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த தினகரன், ஆர்.கே. நகர் இடைத் தேர்தலில் வேட்பாளராகவும் துணிந்து களம் இறங்கினார். தேர்தல் ஆணையம் இரட்டை இலைச் சின்னத்தை முடக்கி வைத்த போதும், கவலைப்படாமல் தொப்பிச் சின்னத்தில் போட்டியிட்டார். ஆரம்பத்தில், கடுமையான எதிர்ப்பு இருந்த ஆர்.கே. நகர் தொகுதியை இறுதிக்கட்டத்தில் தனக்குச் சாதகமாக மாற்றினார். ஆனால், ஃபெரா வழக்கு, வருமானவரித் துறை ரெய்டு எல்லாம் தினகரனைச் சுற்றிக்கொண்டே இருந்தன. 

கடைசியில் ஆர்.கே. நகர் தேர்தல் ரத்துசெய்யப்பட்டது. கட்சியில் இருந்தும் ஆட்சியில் இருந்தும் தினகரனை அ.தி.மு.க அமைச்சர்கள் ஒதுக்கினார்கள். இரட்டை இலைச் சின்னத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டெல்லி போலீஸ் ஒரு பக்கம் துரத்தியது. இந்த நிலையில், கூலாக சரண்டர் ஆன தினகரன், “நான் கட்சியில் இருந்து நேற்றே ஒதுங்கிவிட்டேன்” என்று சொல்லிவிட்டு டெல்லி கிளம்பினார். 

தினகரனின் மனைவி அனுராதா, சசிகலாவின் அண்ணன் சுந்தரவதனனின் மகள். தினகரன் கைதுக்குப் பிறகு, மிகவும் அப்செட்டில் இருக்கும் அனுராதா, அடையாறு வீட்டை விட்டு வெளியே வருவதில்லையாம். குடும்ப உறவுகளும் கண்டுகொள்ளவில்லை என்று உறவுகள் மீது கோபத்தில் உள்ளார்.

சசிகலா குடும்பத்தார் இப்போது... - ஜூ.வி லென்ஸ்

பாஸ்கரன்

சசிகலா குடும்பத்திலே விநோதமான நபர் இவர்தான். அரசியலைவிட சினிமா மீதான ஆர்வம்தான் அதிகம். ஹீரோவாக வேண்டும் என்பதற்காகவே உடல் எடை குறைத்து ஸ்லிம்மாக கோடம்பாக்கம் பக்கம் சுற்றித்  திரிந்தார். சசிகலாவின் அக்கா வனிதாமணியின் மகன்களில் இவரும் ஒருவர். ஜெ.ஜெ டி.வி-யின் நிர்வாக இயக்குநராக இருந்தவர். அந்தக்கால வழக்குகளுக்காக இப்போதும் கோர்ட் படியேறிக் கொண்டிருக்கிறார். சினிமா ஆசையில் குடும்ப உறவுகளி லிருந்து கொஞ்சம் ஒதுங்கி இருந்தவரை, ஜெயலலிதா மரணத்தின்போதுதான் கட்சியினர் மீண்டும் பார்த்தார்கள். அதன்பிறகு போயஸ் வீட்டுப் பக்கம் அடிக்கடி வந்துபோனார். இப்போது அமைதியாக இருக்கிறார். “நான் தேர்தலில் நின்றால் ஒருத்தனும் ஓட்டு போட மாட்டான். என் அண்ணனும், மாமாவும் கட்சியையும் ஆட்சியையும் பார்த்துக் கொண்டாலே போதும். நான் பவரில் இருக்கிற மாதிரிதான்” என்று கோடம்பாக்கம் வட்டாரத்தில் இவர் பேசும் டயலாக் ரொம்ப பாப்புலர். மகாதேவன் மறைந்தபோது, மரண வீட்டில் கூலிங் கிளாஸோடு நின்ற இவரை, கொஞ்சம் வித்தியாசமாகத்தான் உறவினர்கள் பார்த்தனர்.

சசிகலா குடும்பத்தார் இப்போது... - ஜூ.வி லென்ஸ்

டாக்டர் சிவகுமார்

சசிகலாவின் அண்ணன் சுந்தரவதனனின் மகள் பிரபா. இந்த பிரபாவின் கணவர்தான் டாக்டர் சிவகுமார். 2011-க்குப் பிறகு சசிகலா குடும்பத்தினரை ஜெயலலிதா ஒதுக்கி வைத்தார். அதன்பிறகு சசிகலாவைத் தவிர யாரும் போயஸ் கார்டன் பக்கமே வரவில்லை. ஆனால், டாக்டர் சிவகுமாரும் அவரின் குடும்பத்தினரும் எப்போதும் போயஸ் கார்டனுக்குப் போய் வரும் உரிமையைப் பெற்றிருந்தனர். ஜெயலலிதாவின் உடல்நலத்தை டாக்டர் சிவகுமார் கண்காணித்து வந்தார். ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனை யில் இருந்தபோது, அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் குழுவை சிவகுமார்தான் ஒருங்கிணைத்தார். ஆனால், ஜெயலலிதா இறுதி அஞ்சலி முடிந்ததும் சிவகுமார் அமைதியாகிவிட்டார். அதன்பிறகு எங்கும் சிவகுமார் தலை தெரியவில்லை. அப்போலோ மருத்துவமனையில் சீனியர் பிளாஸ்டிக் சர்ஜனாக இருக்கும் சிவக்குமார், இப்போதும் அதே வேலையை அமைதியாகப் பார்த்துக்கொண்டிருக்கிறார்.  2011-க்குப் பிறகு ஜெயலலிதா வாங்கிய பல சொத்துகளில் சிவகுமார் முக்கியமான பொறுப்பில் இருக்கிறார். 

சசிகலா குடும்பத்தார் இப்போது... - ஜூ.வி லென்ஸ்

டாக்டர் வெங்கடேஷ்

சசிகலாவின் அண்ணன் சுந்தரவதனனின் மகன்தான் டாக்டர் வெங்கடேஷ். இவருடைய சகோதரிகளான அனுராதாவை தினகரனும், பிரபாவை டாக்டர் சிவகுமாரும் திருமணம் முடித்துள்ளனர். ஓ.பன்னீர்செல்வத்தை ராஜினாமா செய்ய வைத்ததில் இவர் ‘கை’ இருந்தது, கட்சி வட்டாரத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டது. சசிகலா சிறைக்குப் போகும் முன், கட்சியில் உறுப்பினர் களாக சேர்த்துக்கொண்ட குடும்ப உறுப்பினர்கள் இரண்டு பேரில் இவரும் ஒருவர். தினகரனை துணைப் பொதுச் செயலாளராக அறிவித்தாலும், வெங்கடேஷுக்கு எந்தப் பொறுப்பும் தரவில்லை. அதன்பின் நடந்த களேபரங்களில் மிரண்டு ஒதுங்கினார். அமைச்சர் விஜயபாஸ்கரின் வீட்டில் ரெய்டு நடந்தபோது, வெங்கடேஷ்தான் வருமானவரித் துறையின் அடுத்த குறி என்று பேசப்பட்டது. சென்னையில் உள்ள ஒரு ஸ்கேன் சென்டர் வெங்கடேஷுக்குச் சொந்தமானது. இப்போது அங்கு மட்டும் வந்து போய்க்கொண்டிருக்கிறார். 

சசிகலா குடும்பத்தார் இப்போது... - ஜூ.வி லென்ஸ்

விவேக்

சசிகலா குடும்ப உறவுகளிலே இப்போது அனைவராலும் உற்று நோக்கப் படும் நபராக விவேக் உள்ளார். இளவரசி-ஜெயராமன் தம்பதியின் கடைக்குட்டிதான் விவேக். போயஸ்கார்டனில் ஜெயலலிதாவின் கண்காணிப் பிலும், அவருடைய அரவணைப்பிலும் சிறுவயது முதல் வளர்ந்தவர் என்பதே இவருக்குத் தனிபட்ட அடையாளம்தான். ஜெயலலிதா, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நேரத்தில், இவர் சுவிட்சர்லாந்தில் தேனிலவு கொண்டாட்டத்தில் இருந்தார். தேனிலவை உடனே முடித்துக்கொண்டு சென்னை வந்தவர், ஜெயலலிதா மரணம் வரை அப்போலோவில் சசிகலாவுக்குத் துணையாக இருந்தார். 

சசிகலாவும் இளவரசியும் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்ட பின், சிறையில் அவர்களுக்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் பெங்களூரில் இருந்து செய்து கொண்டிருக்கிறார். பெங்களூரு-ஓசூர் சாலையில் ஒரு வீட்டை வாடகைக்குப் பிடித்து, சென்னைக்கும் பெங்களுருக்கும் வாரம்தோறும் பறந்துகொண்டிருக்கிறார். ஜாஸ் சினிமா நிறுவனத்தின் இயக்குநர் பணிகளோடு, தற்போது ஜெயா டி.வி நிர்வாகத்தையும், ‘நமது எம்.ஜி.ஆர்’ பத்திரிகையும் பார்த்துவருகிறார். தினகரன் இடத்துக்கு எதிர்காலத்தில் விவேக் வருவதற்கு வாய்ப்பு உண்டு என்ற பேச்சு, அம்மா அணியில் இப்போது கேட்கிறது. 

சசிகலா குடும்பத்தார் இப்போது... - ஜூ.வி லென்ஸ்

ஜெயானந்த்

தினகரனை ஒதுக்கிவைக்கும் அறிவிப்பை அமைச்சர் ஜெயக்குமார் வெளியிட்டபோது, அதை வரவேற்று ட்விட்டரில் பதிவிட்டுப் பரபரப்பை ஏற்படுத்தியவர்தான் ஜெயானந்த். சசிகலா குடும்பத்தில் வெளிப்படையாகப் பேசும் வித்தியாச மனிதரான ஜெயானந்த், திவாகரனின் ஒரே மகன். லயோலா கல்லூரியில் படிப்பை முடித்துவிட்டு வாரத்தில் இரண்டு நாள்கள் சென்னை, ஐந்து நாள்கள் மன்னார்குடி எனப் பறந்து கொண்டிருக் கிறார். அப்பாவின் நிர்பந்தம் காரணமாக, கல்லூரி நிர்வாகத்தை இப்போது கவனித்து வருகிறார். பாஸ்கரனின் மகளைக் காதல் திருமணம் செய்து, விரைவில் புதுமாப்பிளையாக வலம்வர உள்ளார். ‘அப்பாவின் செல்வாக்கை வைத்து அ.தி.மு.க-வில் எதிர்காலத்தில் ஒரு ரவுண்டு வரமுடியும்’ என்ற நம்பிக்கையோடு சென்னையில் அவ்வப்போது முகாமிட்டு வருகிறார்.

சசிகலா குடும்பத்தார் இப்போது... - ஜூ.வி லென்ஸ்

மகாதேவன்

சசிகலாவின் அண்ணன் விநோதகனின் மகன் தான் மகாதேவன். மன்னார்குடி குடும்ப உறவுகளிலே அதிரடியாக எதையும் செய்யக்கூடிய மகாதேவனின் மரணம், அவர்களின் குடும்பத் தினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கடந்த சில ஆண்டுகளாக அ.தி.மு.க பக்கமே தலைகாட்டாமல் இருந்த மகாதேவனை, ஜெயலலிதா மரணத்தின் போது நீண்ட நாட்களுக்குப் பிறகு பலரும் பார்த்தார்கள். பக்திப்பழமான மகாதேவன், தஞ்சாவூரில் பஸ் டிராவல்ஸ் கம்பெனி உட்பட, சில நிறுவனங்களையும் நடத்திவந்தார். இவருக்கு தங்கமணி என்ற தம்பி இருக்கிறார். இவருக்கு அண்ணன் மகாதேவன் மீது அதீதப் பாசம். இவர்தான், மகாதேவன் நடத்தி வந்த நிறுவனங்களை இப்போது பார்த்துக்கொள்கிறார். ‘அண்ணனுக்கு நேர்மாறாக, அமைதியான சுபாவம் கொண்டவர் தங்கமணி’ என்கிறார்கள் டெல்டா மாவட்ட அ.தி.மு.க-வினர். 

News2
News2

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a comment