Wednesday, May 03, 2017

எப்போது மெட்ரோ ரயில் ஓடும்? - ஜூ.வி ஸ்பெஷல் ஸ்டோரி - 4

எப்போது மெட்ரோ ரயில் ஓடும்? - ஜூ.வி ஸ்பெஷல் ஸ்டோரி - 4

டந்த 2009-ல் தொடங்கப்பட்ட சென்னை மெட்ரோ ரயில் திட்டப் பணிகள், 2016-ல் முழுமை அடைந்திருக்க வேண்டும். ஆனால், இன்னும் ஜவ்வாக இழுத்துக் கொண்டிருக்கிறது. திட்டமிடப்பட்ட எல்லாப் பாதைகளிலும் ரயில்களை இயக்குவதற்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் ஆகும் என்று சொல்லப்படுகின்றது.இந்தத் தாமதத்துக்குப் பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன. அதில் முக்கியமானது, இந்தப் பணிகளைச் செய்துகொடுக்க ஒப்பந்தம் பெற்றிருந்த ‘கேமன் இந்தியா நிறுவன’த்துக்கும், மெட்ரோ ரயில் நிர்வாகத்துக்கும் ஏற்பட்ட மோதல். இதனால் அண்ணா சாலையில் ஓர் ஆண்டுக்கும் மேலாக மெட்ரோ ரயில் பணிகள் பாதிக்கப்பட்டன. 

இதுகுறித்து ‘கேமன் இந்தியா நிறுவன’த் தரப்பிடம் கேட்டோம். “கேமன் இந்தியா, ரஷ்யாவின் மாஸ்மெட்ரோ ஆகிய இரண்டு நிறுவனங்களுக்கும் இரண்டு பேக்கேஜ் டெண்டர் தரப்பட்டிருந்தன. ஒரு பேக்கேஜில் 99 சதவிகிதம் சுரங்கப்பணிகள் முடிந்துவிட்டன. ரயில் நிலையத்தின் கட்டுமானப்பணிகள் மட்டும் நிலுவையில் இருந்தன. இன்னொரு பேக்கேஜில், 70 சதவிகிதம் சுரங்கம் தோண்டும் பணிகள் முடிந்துவிட்டன. இந்த பேக்கேஜில்தான் அண்ணா சாலை வருகிறது. 

அண்ணா சாலையில் சுரங்கம் தோண்டும் பணிக்கு டெண்டர் விடப்பட்டபோது, மெட்ரோ ரயில் நிறுவனம் சார்பில் எங்களுக்கு வழங்கிய மண் பரிசோதனை குறித்த ஆவணத்தில் பாறைகள் இருப்பதாகக் குறிப்பிடப்படவில்லை. எனவே, குறைந்த விலைப்புள்ளியில்தான் டெண்டர் எடுத்திருந்தோம். ஆனால், நாங்கள் சுரங்கம் தோண்டும்போது, ஆயிரம் விளக்குப் பகுதியில் 2 மீட்டருக்குக் கீழேயே பாறைகள் இருந்தன. இதனால், எங்கள் நிறுவனத்தின் சார்பில் மீண்டும் மண் பரிசோதனை செய்தோம். ஆயிரம் விளக்கு முதல் நந்தனம் வரை பாறைகள் இருப்பது தெரியவந்தது. 

எனவே, மாஸ்மெட்ரோ நிறுவனம் ரஷ்யாவில் இருந்து போரிங் கருவிகளைக் கொண்டு வந்தது. ஆயிரம் விளக்கில் சுரங்கம் தோண்டும் பணிகளின் போது, போரிங் மெஷின் கட்டர்கள் அடிக்கடி பழுதடைந்தன. கட்டர்கள் மாற்றுவதற்கும், அதிக ஆட்களை நியமிப்பதற்கும் கூடுதல் செலவானது. நேரமும் அதிகமானது. எனவே, மெட்ரோ ரயில் நிறுவனத்திடம் கூடுதலாக அவகாசம் கேட்டோம். ஆனால், அவர்கள் ஒப்புக்கொள்ளவில்லை. 

ஒரு கட்டத்தில் சுரங்கம் தோண்டும்போது, போரிங் மெஷின் பழுதாகி நின்றுவிட்டது. மாஸ்மெட்ரோ நிறுவனத்தால் செலவுகளைக் கட்டுப்படுத்த முடியவில்லை. பலரிடம் பொருள்கள் வாங்கிய வகையில், 10 கோடி ரூபாய் வரை பணம் கொடுக்க வேண்டியிருந்தது. இந்த நெருக்கடியான சூழலில் மாஸ்மெட்ரோவின் நிர்வாக இயக்குநர் ரோமன் ஓடிவிட்டார்.  

அந்தச் சமயத்தில், ‘வேறு ஒரு நிறுவனத்தைச் சேர்த்துக்கொண்டு பணிகளை முடியுங்கள்’ என்று மெட்ரோ நிர்வாகம் சார்பில் எங்களிடம் சொன்னார்கள். எனவே, இத்தாலி நிறுவனம் ஒன்றுடன் ஒப்பந்தம் செய்துகொண்டு பணிகளில் ஈடுபட்டோம். ஆனால், அந்த இத்தாலி நிறுவனத்துக்கு மெட்ரோ ரயில் நிர்வாகம் முறைப்படியான அனுமதி கொடுக்கவில்லை. இதன் பின்னர் நாங்கள் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தோம். மெட்ரோ ரயில் நிர்வாகத்துக்கு எதிராகத் தடை உத்தரவு வாங்கினோம். ஆனால், அதற்குள் எங்கள் பணிகளை நிறுத்தச் சொல்லிவிட்டு, எல் அண்ட் டி நிறுவனத்திடம் பணிகளை ஒப்படைத்தனர். இப்போது நீதிமன்ற வழக்கு, சமரசத் தீர்வு மையத்துக்குச் சென்றிருக்கிறது.  

எங்களைப் போலவே, இப்போது பணியில் ஈடுபட்டுவரும் பல ஒப்பந்ததாரர்களும், மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கு எதிராகக் கூடுதல் தொகை கேட்டு வழக்குத் தொடுத்திருக்கின்றனர். மெட்ரோ ரயில் நிறுவனம், நிர்வாகச் சிக்கலில் இருக்கிறது. அதுதான் இத்தனை குளறுபடிக்கும் காரணம்” என்றனர். 

இதுகுறித்து சென்னை சிவில் இன்ஜினீயர்கள் அசோசியேஷன் செயலாளர் தயாநிதியிடம் பேசினோம். “மாஸ்மெட்ரோ நிறுவனம்தான் சுரங்கம் தோண்டியிருக்கிறது. ஓர் இடத்தில் திட்டமிட்ட இலக்குக்கு முன்பே சுரங்கப் பணிகளை முடித்து விட்டனர். அண்ணா சாலையில் மட்டும்தான் அவர்களுக்குப் பிரச்னை இருந்திருக்கிறது. மெட்ரோ ரயில் பணிகளைத் தொடங்கும் முன்பு மண் பரிசோதனை செய்யப்பட்டிருக்கிறது. இதில் ‘என் வேல்யூ’ ( N-VALUE) என்பதைத்தான் முக்கியமாகக் கவனத்தில் கொள்ள வேண்டும். அதாவது, மண் அடுக்குகளின் எண்ணிக்கை என்று இதைச் சொல்லலாம். அந்த மண் அடுக்குகள் பாறையாக இருக்கின்றனவா, மணலாக இருக்கின்றனவா என்பது இதில் தெரிந்து விடும். அது கட்டுமானத்தைத் தாங்குமா என்பதையெல்லாம் பார்த்துவிட்டுத்தான் செயல்பட வேண்டும்” என்றார்.

எப்போது மெட்ரோ ரயில் ஓடும்? - ஜூ.வி ஸ்பெஷல் ஸ்டோரி - 4

மெட்ரோ ரயில் தலைமைப் பொதுமேலாளர் (சுரங்கப் பணிகள்)வி.கே.சிங், மேற்சொன்னவற்றையெல்லாம் மறுத்தார். “மெட்ரோ ரயில் நிறுவனம் சார்பில், விதிமுறைப்படி எந்தெந்த இடங்களில் எல்லாம் மண் பரிசோதனை செய்ய வேண்டுமோ, அந்த இடங்களில் எல்லாம் செய்தோம். டெண்டர் ஆவணத்தில் எப்போதுமே மண் பரிசோதனை முடிவுகளை உத்தேசமாகத்தான் குறிப்பிட்டிருப்போம். ஒப்பந்ததாரர்தான், பணி மேற்கொள்ளப்போகும் வழித்தடத்தில் மண் பரிசோதனை செய்ய வேண்டும். அண்ணா சாலையில், ஆயிரம் விளக்கு முதல் நந்தனம் சேமியர்ஸ் சாலை வரை பூமிக்குக் கீழே பாறை இருக்கிறது என்று சொல்வதில் உண்மை இல்லை. மெட்ரோ நிர்வாகம்தான் சேமியர்ஸ் சாலையில் பாறையைக் கொண்டு வந்து வைத்தது என்றுகூட சொல்வார்கள். நாங்கள் செய்த மண் பரிசோதனைக்கும், ஒப்பந்ததாரர்கள் செய்ததற்கும் எந்த வித்தியாசமும் இல்லை. 

அண்ணா சாலையில் முன்பு பணி மேற்கொண்ட ரஷ்ய நிறுவனத்தின் உயர் அதிகாரி, திடீரென ஒரு நாள் இரவு நாட்டை விட்டு ஓடிவிட்டார். பணி மேற்கொண்ட இரண்டு நிறுவனங்களுக்கும் இடையே முறையான ஒருங்கிணைப்பு இல்லை. தாமதத்துக்கு இதெல்லாம்தான் காரணம். சுரங்கப் பாதையில் பாறை இருந்தது காரணம் அல்ல. எனவே, அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்வதைத் தவிர எங்களுக்கு வேறு வழி இல்லை. அவர்கள் சுரங்கம் தோண்டும் மெஷினை முறையாகப் பராமரிக்கவில்லை. எனவேதான், அதன் கட்டர்கள் அடிக்கடி சேதம் அடைந்தன. மற்றபடி, பாறை இருந்ததால் கட்டர்கள் சேதம் அடைந்தன என்று சொல்வதில் உண்மை இல்லை” என்றார். 

“மெட்ரோ ரயில் பணிகள் எப்போது முடிவடையும்?’’ எனக் கேட்டோம். ‘‘அண்ணா சாலையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் அடுத்த ஆண்டு மத்தியில் முடிவடையும். அப்போதே மெட்ரோ ரயில் பணிகள் அனைத்தும் முடிவுக்கு வரும். வண்ணாரப்பேட்டையில் இருந்து விம்கோ நகர் வரை மேற்கொள்ளப்படும் விரிவாக்கப் பணிகள், அதன் பின்னர் இரண்டு ஆண்டுகள் கழித்து முடிவடையும்” என்றார் அவர்.

எப்போது மெட்ரோ ரயில் ஓடும்? - ஜூ.வி ஸ்பெஷல் ஸ்டோரி - 4

“அதிகக் கட்டணத்துக்கு சூழல்தான் காரணம்’’

மெட்ரோ ரயில் பற்றி கடந்த மூன்று இதழ்களில் மக்களும் நிபுணர்களும் எழுப்பிய பல கேள்விகளுக்கு மெட்ரோ ரயில் தலைமைப் பொதுமேலாளர் (சுரங்கப் பணிகள்) வி.கே.சிங், பதில் தந்தார்.

‘‘அண்ணா சாலையில் பள்ளம் விழுந்தது பற்றி...?’’ 

“உரிய வகையில் மண் பரிசோதனை செய்துவிட்டுத்தான் சுரங்கம் தோண்டப்படுகிறது. குறிப்பாக, அண்ணா சாலையில் பள்ளம் ஏற்பட்ட பகுதியில், இலகுவான மண்தான் இருந்தது. அந்த இடத்தில் போரிங் மெஷின் மூலம் சுரங்கம் தோண்டும்போது, அழுத்தம் காரணமாக சாலையில் பள்ளம் ஏற்பட்டிருக் கிறது. அதை மிக விரைவாக சரிசெய்தோம். பிரச்னை ஏற்பட்ட 14 மணி நேரத்துக்குள் சாலை சரி செய்யப்பட்டு, மீண்டும் போக்குவரத்துத் தொடங்கியது.”

‘‘சுரங்கம் தோண்டும்போது பல இடங்களில் சாலையில் திடீரென மணல் வெளியேறியது ஏன்?’’ 

“தரை மட்டத்திலிருந்து 16 மீட்டருக்குக் கீழே தோண்டும்போது அழுத்தம் ஏற்படுகிறது. பூமிக்குள் கவனிக்காமல் விடப்பட்ட போர்வெல் குழாய்கள் இருந்தால், சுரங்கம் தோண்டும் மெஷின் அந்த போர்வெல் குழாயை சேதப்படுத்தும். அந்தக் குழாய் வழியே மண் வெளியேறும். சுரங்கம் தோண்டும் பணிக்கு முன்பாக போர்வெல்களை மாற்றி அமைக்கும்படி மக்களிடம் வேண்டுகோள் விடுத்தோம். பலர் எங்கள் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு மாற்றினர். ஆனால், சிலர் மாற்றவில்லை. அதனால்தான் மண் வெளியேறியது. இதில் அச்சப்படுவதற்கு ஒன்றும் இல்லை.”

‘‘பிற நகரங்களைவிட சென்னை மெட்ரோ ரயில் கட்டணம் அதிகமாக இருக்கிறதே...?”  

“சென்னை மெட்ரோ ரயில் திட்டத்துக்கான செலவு மிக அதிகம். டெல்லியில் அதிக தூரத்துக்கு மெட்ரோ ரயில் இயக்கப்படுகிறது. அதுபோல சென்னையில் இல்லை. இதர நகரங்களில் மெட்ரோ ரயில் போக்குவரத்தின் சூழல்கள் வேறு; இங்கு இருக்கும் சூழல் வேறு. சென்னையின் சூழலுக்கு ஏற்ப கட்டணம் நிர்ணயித்திருக்கிறோம். அனைத்து வழித்தடங்களிலும் ரயில் இயக்கப்பட்டபிறகு, மக்களிடம் வரவேற்பைப் பெறும் என்று நம்பிக்கை இருக்கிறது.”

விபத்துகள்... உயிரிழப்புகள்!

கடந்த 2012-ம் ஆண்டு ஆகஸ்ட் 9-ம் தேதி பச்சையப்பன் கல்லூரி அருகே ராட்சத கிரேன் முறிந்து விழுந்ததில், சிந்து (20) என்ற பீகாரைச் சேர்ந்த தொழிலாளி உயிரிழந்தார். 

2013-ம் ஆண்டு ஜனவரி 11-ம் தேதி ஆலந்தூரில் ராட்சத இரும்புப் பாலம் விழுந்ததில், பீகாரைச் சேர்ந்த டிம்பால் (24) என்ற தொழிலாளி இறந்தார். 

2015 ஜனவரி 10-ம் தேதி சைதாப்பேட்டை பஸ் நிலையம் அருகே, மெட்ரோ ரயில் பணியின்போது ராட்சத கிரேன் முறிந்து விழுந்தது. ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ரஞ்சித் பாஸ்வான் (20) என்ற தொழிலாளி பலியானார்.  

2015 ஜூன் 16-ம் தேதி பரங்கிமலை-மீனம்பாக்கம் இடையே துரைப்பாக்கத்தைச் சேர்ந்த ராஜ்குமார் காரில் செல்லும்போது, மெட்ரோ பணிக்கான சாரம் கட்டும் கம்பி அவரது கார் மீது விழுந்தது. இதில் கார் சேதம் அடைந்தது. இந்தச் சம்பவம் நடந்த அடுத்த நாள் காலை, சுமார் 100 கிலோ எடையுள்ள ஒரு கம்பி, சாரத்தில் இருந்து கழன்று, சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்ற மடிப்பாக்கத்தைச் சேர்ந்த கிரிதரன் (30) தலையில் விழுந்ததில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

Unknown
Unknown

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a Comment