Friday, May 19, 2017

ஐ.டி ஊழியர்களை மிரட்டும் ஆள்குறைப்பு! - என்ன நடக்கிறது... ஐ.டி துறையில்?

ஐ.டி ஊழியர்களை மிரட்டும் ஆள்குறைப்பு! - என்ன நடக்கிறது... ஐ.டி துறையில்?

ந்திய ஐ.டி துறைக்கு, இப்போது சோதனைக்காலம். பல காரணங்களால் இந்தியாவில் உள்ள பிரதான ஐ.டி நிறுவனங்கள் தீவிரமான ஆள்குறைப்பு நடவடிக்கைகளில் இறங்கியுள்ளன. இது மொத்த இண்டஸ்ட்ரியையும் கதிகலங்க வைத்திருக்கிறது. பல குடும்பங்களைப் பீதியில் ஆழ்த்தி இருக்கிறது.  

இந்தியாவின் முன்னணி ஐ.டி நிறுவனங்களில் ஒன்றான இன்ஃபோசிஸ் நிறுவனம், 1,000 ஊழியர்களை நீக்க முடிவுசெய்திருக்கிறது. அமெரிக்காவில் பணிபுரியும் இந்தியர்களை வீட்டுக்கு அனுப்பிவிட்டு, 10, 000 அமெரிக்கர்களைப் பணியில் அமர்த்தவும் திட்டமிட்டுள்ளது. இந்தியாவின் மூன்றாவது பெரிய ஐ.டி நிறுவனமான விப்ரோ, இந்த ஆண்டில் மட்டும் 1,000 முதல் 2,000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்ப முடிவுசெய்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. கேப் ஜெமினி நிறுவனம் 10, 000  ஊழியர்களையும், அமெரிக்க நிறுவனமான காக்னிசென்ட் 10,000 முதல் 15,000 ஆயிரம் ஊழியர்களையும், டெக் மகேந்திரா நிறுவனம் 1,500 முதல் 2,000 ஊழியர்களையும், டி.எக்ஸ்.சி டெக்னாலஜி நிறுவனம் 10,000 ஊழியர்களையும் பணி நீக்கம் செய்ய முடிவெடுத்துள்ளன.

உலக அளவில், தகவல் தொழில்நுட்ப மென்பொருள் ஏற்றுமதியில் முன்னணியில் இருக்கும் நாடு இந்தியா. நாஸ்காம் அறிக்கையின்படி, 1,000 எம்.என்.சி நிறுவனங்களையும் சேர்த்து சிறிதும் பெரிதுமாக 16 ஆயிரம் ஐ.டி நிறுவனங்கள் இந்தியாவில் செயல்படுகின்றன. சுமார் 38 லட்சம் இந்தியர்கள் இதில் பணிபுரிகிறார்கள். டாலர் மதிப்பில் சம்பளம், பிரமாண்ட அலுவலகங்கள், புதிய பணிச்சூழல், வெளிநாடுகளில் சென்று பணியாற்றும் ஆன்சைட் வசதி என ஐ.டி துறையில் கிடைக்கும் வண்ணமயமான வாய்ப்புகள் இளைஞர்களைப் பெரிதும் ஈர்த்தன. அதைக் குறிவைத்து ஐ.டி துறைக்கான ஊழியர்களை உருவாக்கும் தனியார் பொறியியல் கல்லூரிகள் முளைத்தன. பெங்களூரு, ஹைதராபாத், மும்பை, புனே வரிசையில் சென்னையும் முக்கிய ஐ.டி ஹப்பாக மாறியது. டைடல் பார்க், சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் எனப் பல்வேறு பெயர்களில் ஐ.டி நிறுவனங்களை வரவேற்று சலுகைகளை வாரி வழங்கின அரசுகள். மரபுசார்ந்த தொழில்களை மட்டுமே நம்பியிருந்த இந்திய மிடில் கிளாஸ் இளைஞர்களுக்கு, ஐ.டி துறை கற்பனைக்கு அப்பாற்பட்ட வாய்ப்புகளையும் வசதிகளையும் வழங்கியது. 

2008-ம் ஆண்டு அமெரிக்கா, பொருளாதார நெருக்கடியில் சிக்கியது. அந்்தப் பாதிப்பு, இன்றுவரை இந்திய ஐ.டி துறையில் நீடிக்கிறது. ஆனாலும், இன்றைய நிலையில், இந்திய ஐ.டி துறையின் வளர்ச்சியில் எந்தக் குறையும் இல்லை. 2016-17 நிதியாண்டில் மட்டும் 117 பில்லியன் டாலருக்கு மென்பொருள் ஏற்றுமதி நடந்துள்ளது. இதுதவிர, உள்நாட்டுப் பணியின் மூலம் 24 பில்லியன் டாலர் வருமானம் கிடைத்திருக்கிறது. இது 2015-2016 நிதியாண்டின் வருமானத்தைவிட 11.5 பில்லியன் டாலர் அதிகம்.

இந்திய ஐ.டி நிறுவனங்கள் செய்யும் 60 சதவிகித வேலைகள் அமெரிக்காவுக்கானது. ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இருந்தும் புராஜெக்ட்கள் வருகின்றன. அமெரிக்காவில் இருக்கும் 30 லட்சத்துக்கும் அதிகமான இந்தியர்களில் பாதி  பேர் ஆன்சைட் பணிகளுக்காக அங்கு சென்றவர்கள்.

ஐ.டி நிறுவனங்களில் ஆட்களைச் சேர்ப்பதும் குறைப்பதும் அவ்வப்போது நடக்கக்கூடியவைதான். ஆனால், 2008-ம் ஆண்டுக்குப் பிறகு, பெரிய அளவில் ஆள்குறைப்பு நடக்கவில்லை. 2014 டிசம்பரில், டி.சி.எஸ் நிறுவனம் மொத்தம் உள்ள 23 லட்சம் ஊழியர்களில் 10 சதவிகிதத்தினரைக் குறைக்க முயற்சித்தது. இந்தியா முழுவதும் எழுந்த கடும் எதிர்ப்பால் அந்த நடவடிக்கையைக் கைவிட்டது. ஆனால், இப்போது, `டாப் 10’ ஐ.டி நிறுவனங்கள் அனைத்தும் ஆள்குறைப்பில்  தீவிரமாக இறங்கியுள்ளன. அதையும் முறைப்படி செய்யாமல், `லே ஆஃப்’ என்ற பெயரில் செய்கிறார்கள். 10 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றிவரும், 35 வயதுக்கு மேற்பட்டவர்களாகப் பார்த்து தூக்குகிறார்கள். இதுதான் அதிர்ச்சியை உருவாக்கியிருக்கிறது.

“ஐ.டி நிறுவனங்களில் 100 பேர் நீக்கப்பட்டால், 150 பேர் சேர்க்கப்படுவார்கள். ஆனால், இப்போது கொத்துக் கொத்தாக ஆள்குறைப்பு நடக்கிறது. இது ஐ,டி. துறையை நம்பியிருக்கும் தொழிலாளர்களை அதிர வைத்திருக்கிறது” என்கிறார், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி-ஐ.டி ஊழியர் பிரிவின் அமைப்பாளர் கற்பகவினாயகம்.

‘‘கடந்த மாதம் வரை, `நிறுவனத்தின் தூண்’ எனக் கொண்டாடப்பட்டவர்கள், சிறந்த ஊழியருக்கான விருது பெற்றவர்களை, `உங்கள் பணித்திறன் சரியில்லை’ எனக் கூறி, ராஜினாமா கடிதம் கேட்கிறார்கள். அப்படி செய்ய மறுக்கும் ஊழியர்களை, `பிளாக் லிஸ்ட் செய்து எதிர்காலத்தைக் கெடுத்துவிடுவோம்’ என மிரட்டுகிறார்கள். ஐ.டி நிறுவனங்களில் எல்லாமே சீக்ரெட்தான். ஒருவர் எவ்வளவு சம்பளம் வாங்குகிறார் என்பதுகூட மற்றவருக்குத் தெரியாது. அதனால், நிறுவனத்தில் என்ன நடக்கிறது என்பதைப் பலரும் உணரவே இல்லை’’ என அதிர வைக்கிறார் அவர். 

ஐ.டி நிறுவனங்கள் இப்படி ஆள்களைக் குறைக்கக் காரணம் என்ன? “பல காரணங்கள் இருக்கின்றன. 2008-ம் ஆண்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின் தாக்கம் இன்னும் குறையவில்லை. அதே நேரத்தில் `ஆட்டோமேஷன்’ எனப்படும் இயந்திரப் பயன்பாடு அதிகமாகிவிட்டது. டெஸ்டிங் வேலைகள் பெரும்பாலும் ஆட்டோமேஷன் ஆகிவிட்டன. முன்பு 10 பேர் செய்த வேலையை இப்போது இரண்டு பேர் செய்கிறார்கள். அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பொறுப்பேற்ற பிறகு, அமெரிக்கா செல்வதற்கான ஹெச்1 -பி விசா பெறும் நடைமுறை கடினமாக்கப்பட்டுள்ளது. மேலும், ‘அமெரிக்காவில் நடக்கும் வேலைகளை அமெரிக்கர்களுக்கே வழங்க வேண்டும்’ என்ற மசோதா தாக்கல் ஆக இருக்கிறது. இதனால் அங்கு ஆன்சைட் பணியில் இருக்கும் லட்சக்கணக்கான இந்தியர்கள் நாடு திரும்பவேண்டிய நிலை உருவாகியுள்ளது. அமெரிக்கர்களை வேலைக்கு அமர்த்தும்பட்சத்தில் வரிச்சலுகை வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளதால், நிறுவனங்கள் அதிவேகத்தில் அமெரிக்கர்களை வேலைக்கு எடுக்கிறார்கள். ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, சிங்கப்பூர் போன்ற நாடுகளும் விசா நடைமுறைகளைக் கடுமையாக்கிவிட்டன. அங்கெல்லாம் ஐ.டி ஊழியர்களுக்குச் சிக்கல் தொடங்கியுள்ளது.

நாஸ்காம் அறிக்கைப்படி, 10 லட்சம் பொறியாளர்களையும் சேர்த்து, சுமார் 62 லட்சம் பேர் ஒவ்வோர் ஆண்டும் ஐ.டி துறையில் பணிபுரியும் தகுதியோடு உருவாகி வருகிறார்கள். ஆனால், கடந்த ஐந்து வருடங்களில் ஐ.டி துறையில் புதிதாக உருவான வேலைவாய்ப்புகள், வெறும் 11 லட்சம்தான். லட்சக்கணக்கானோருக்கு வேலை கிடைக்கவில்லை. 10 பேர் தேவைப்படும் நேர்காணல்களுக்கு 100 பேர் குவிகிறார்கள். இதனை நிறுவனங்கள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்கின்றன. 

10 ஆண்டுகளாகப் பணியாற்றும் ஒருவருக்கு ஒன்றரை லட்சம் ரூபாய் சம்பளம் கொடுப்பதற்குப் பதிலாக, அவரை அனுப்பிவிட்டு 25 ஆயிரம் ரூபாய்  சம்பளத்தில் ஆறு பேரைப் பணியமர்த்த நினைக்கிறார்கள். அதற்காகத்தான், இப்போது ஹையர் கிரேடில் இருக்கும் ஊழியர்களைத் தேர்வுசெய்து வெளியேற்றுகிறார்கள்.

தவிர, ஐ.டி நிறுவனங்கள் இப்போது முதலீட்டாளர்களின் கரங்களுக்குச் சென்றுவிட்டன. அவர்களுக்கு லாபத்தைத் தவிர வேறு எந்தக் குறிக்கோளும் இல்லை. காக்னிசென்ட் நிறுவனத்தின் ஐந்து சதவிகிதப் பங்குகளை அமெரிக்க நிதி முதலீட்டு நிறுவனமான `எலியட்’ (Elliot), 1.5 பில்லியன் டாலருக்கு வாங்கியது. வாங்கிய உடனே, காக்னிசென்ட் நிறுவனத்தின் இயல்பான மார்ஜின் 18.5 சதவிகிதத்தை 21 சதவிகிதமாக மாற்ற வேண்டும் என்று நிர்பந்தித்தது. அதன் தொடர்ச்சியாகத்தான் அந்த நிறுவனம் ஆள்குறைப்பில் இறங்கியிருக்கிறது.

`புராஜெக்ட்கள் குறைந்துவிட்டன, அவற்றுக்கான கட்டணமும் குறைந்துவிட்டது. கம்பெனிகளின் வளர்ச்சி குறைந்துவிட்டது’ என்று சொல்லப்படும் காரணங்களில் சிறிதும் உண்மையில்லை. கடந்த 10 ஆண்டுகளின் கணக்கைப் பார்த்தால், நிறுவனங்களின் இறுதி லாபம் வளர்ந்துகொண்டுதான் செல்கிறது. ஆள்குறைப்புக்குக் காரணம், மேலும் லாபத்தை அதிகரிப்பதுதான்” என்கிறார் கற்பகவினாயகம்.

`லே ஆஃப்’ என்ற பெயரில் ஓர் ஊழியரை நிரந்தரமாக வீட்டுக்கு அனுப்ப முடியுமா? ``நிச்சயமாக முடியாது” என்கிறார் வழக்கறிஞர் பர்வீன்பானு. ``லே ஆஃப் என்பது, ஒரு தற்காலிக ஏற்பாடு. போதிய அளவுக்கு வேலை இல்லை என்ற சூழலில் ஊழியரை ஒரு  வருடத்தில் 45 நாள்களுக்கு மட்டும் `லே ஆஃப்’ செய்யலாம். அந்தக் காலகட்டத்தில் அந்த ஊழியர், அலுவலகத்துக்கு வர வேண்டும். 50 சதவிகிதச் சம்பளமும், 50 சதவிகித அலவன்ஸும் அவருக்கு வழங்க வேண்டும். 45 நாள்களுக்குள் திரும்பவும் பணி வழங்க வேண்டும். `உற்பத்தி குறைந்துவிட்டது. இவ்வளவு ஊழியர்களுக்குச் சம்பளம் வழங்க முடியாது’ என்று நிறுவனம், `ரெட்ரென்ச்மென்ட்’ என்ற அடிப்படையில் ஆள்குறைப்பு செய்யலாம். ஆனால், இஷ்டத்துக்கு எல்லோரையும் நீக்க முடியாது. கடைசியாக நிறுவனத்தில் இணைந்தவர்கள் யாரோ, அவர்களிலிருந்துதான் ஆள்குறைப்பைத் தொடங்க வேண்டும். அதற்கும் அரசிடம் முறைப்படி தெரிவித்து அனுமதி பெறவேண்டும்.

ஒருவேளை கட்டாயப்படுத்தி டிஸ்மிஸ் செய்து ஊழியர்களை வெளியேற்றினால், அதற்கும் வழிமுறை இருக்கிறது. ஊழியருக்கு ஷோகாஸ் நோட்டீஸ் தரவேண்டும். அதற்கு, ஊழியர் தரும் விளக்கம் திருப்தி அளிக்காதபட்சத்தில், சார்ஜ் ஷீட் போட்டு நடவடிக்கை எடுக்கலாம். ஆனால், அதற்காகவும் வேலையைவிட்டு அனுப்ப முடியாது.

ஐ.டி ஊழியர்களை மிரட்டும் ஆள்குறைப்பு! - என்ன நடக்கிறது... ஐ.டி துறையில்?

தொழில் தாவா சட்டப்படி, ஐ.டி நிறுவனங்கள் மேற்கொள்ளும் ஆள்குறைப்பு நடவடிக்கைகள் சட்டவிரோதமானவை. `பணித்திறன் குறைவாக இருப்பதாக’ சொல்லி நீக்குவது சட்டத்துக்கு எதிரானது. `எந்தத் திறன் குறைவாக இருக்கிறதோ, அதைப் பயிற்றுவித்துத் தகுதிபெறச் செய்ய வேண்டும்’ என்கிறது சட்டம். ஆனால், ‘சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் இருப்பதால், எங்களுக்குத் தொழில் தாவா சட்டம் பொருந்தாது’ என்று நிறுவனங்கள் கூறுகின்றன. ஏற்கெனவே அரசின் தொழிலாளர் நலத் துறை,  `பிற துறைகளுக்குப் பொருந்தும் தொழிலாளர் சட்டங்கள் அனைத்தும் ஐ.டி துறைக்கும் பொருந்தும்’ என்று அறிவித்துள்ளது. மத்திய- மாநில அரசுகள், அதை வலுவாக சட்டபூர்வமாக அமல்படுத்த வேண்டும்” என்கிறார் பர்வீன் பானு.

சி.ஐ குளோபல் டெக்னாலஜி நிறுவனத்தின் சி.இ.ஓ-வும் ஐ.டி துறை பெண்களுக்கான மேம்பாட்டு அமைப்பின் தலைவருமான சாரதா ரமணியிடம் பேசினோம். “ஐ.டி நிறுவனங்களில் ஆள்குறைப்பு மிகவும் இயல்பானது. ஆள்குறைப்புக்கு அதிகமாகவே புதிதாக ஆட்கள் சேர்க்கப்படுகிறார்கள். எல்லா நிறுவனங்களுமே ஏறுமுகத்தில் இருந்தாலும் சர்வதேச விவகாரங்கள் இந்தத் துறையைப் பாதிக்கின்றன. அமெரிக்க விசா,  ஆட்டோமேஷன் ஆகியவை பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. 

தகவல் தொழில்நுட்பம் நாளுக்கு நாள் நவீனமாகிக்கொண்டிருக்கிறது. அப்டேட் செய்துகொள்பவர்களுக்குத்தான் இங்கே எதிர்காலம். 10 ஆண்டுகளாக தங்களைப் புதுப்பித்துக்கொள்ளாதவர்கள் தாக்குப்பிடிப்பது கடினம். எல்லா துறைகளிலும் புதியவர்கள் வரவே செய்வார்கள். புதிய தொழில்நுட்பங்களைக் கற்றுக்கொள்பவர்கள் எதற்காகவும் பயப்படத் தேவையில்லை” என்கிறார் அவர்.

பத்து ஆண்டுகள் ஒரு நிறுவனத்தில் பணியாற்றி, ஒரு உயர்ந்த நிலைக்குச் செல்வதற்குப் பின்னால் இருக்கும் உழைப்பு அபரிமிதமானது. குடும்ப நிலை, குழந்தைகளின் எதிர்காலம் என ஒருவரைச் சுற்றி பல எதிர்பார்ப்புகள் இருக்கின்றன. இரவு, பகல் பாராமல் உழைத்துத் தேய்ந்தவர்களைத் திடீரென `வேலையைவிட்டு வெளியேறு’ எனச் சொல்வது எந்தவிதத்திலும் அறமாகாது. அரசு இதனை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கக் கூடாது.  

வேலை போய்விடும் என்ற பயம் இருக்கிறது!

வெளியிலிருந்து பார்க்க வண்ணமயமாகக் காட்சியளிக்கும் ஐ.டி துறை ஊழியர்களின் வாழ்க்கை, கடும் இருட்டில்தான் இருக்கிறது. ‘சொந்த வீடு, கார் என வசதியாக வாழ்ந்தாலும், பிற துறை ஊழியர்களுக்கு இல்லாத அளவுக்கு, மன அழுத்தம் இவர்களுக்கு இருக்கிறது’ என்கிறது, அசோசெம் அமைப்பின் ஆய்வு. ஐ.டி நிறுவனங்களின் தற்போதைய ஆள்குறைப்பு மற்றும் பெஞ்ச் நடவடிக்கைகள், ஊழியர்களை எந்த அளவு பாதித்திருக்கிறது? அமெரிக்க அதிபர் ட்ரம்பின் நடவடிக்கைகள் பற்றி என்ன நினைக்கிறார்கள்? ‘எப்போதும் வேலை போய்விடும்’ என்ற சூழல் என்ன மாதிரியான அழுத்தங்களை உருவாக்கி இருக்கிறது? 

vikatan.com இணையதளத்தில் நடத்தப்பட்ட விரிவான சர்வேயில் 1,872 ஐ.டி ஊழியர்கள் பங்கேற்று பதில் அளித்தார்கள். அந்த சர்வே முடிவுகள் இங்கே (சதவிகிதத்தில்)...

ஐ.டி ஊழியர்களை மிரட்டும் ஆள்குறைப்பு! - என்ன நடக்கிறது... ஐ.டி துறையில்?
ஐ.டி ஊழியர்களை மிரட்டும் ஆள்குறைப்பு! - என்ன நடக்கிறது... ஐ.டி துறையில்?
ஐ.டி ஊழியர்களை மிரட்டும் ஆள்குறைப்பு! - என்ன நடக்கிறது... ஐ.டி துறையில்?
ஐ.டி ஊழியர்களை மிரட்டும் ஆள்குறைப்பு! - என்ன நடக்கிறது... ஐ.டி துறையில்?

News2
News2

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a comment