Friday, May 12, 2017

டேக் ஆஃப் ஆகாத விமான சேவை... தரை இறங்கிய தமிழகம்! - ஜூ.வி ஸ்பெஷல் ஸ்டோரி

டேக் ஆஃப் ஆகாத விமான சேவை... தரை இறங்கிய தமிழகம்! - ஜூ.வி ஸ்பெஷல் ஸ்டோரி

‘இந்தியாவின் மூன்றாவது பிஸியான விமான நிலையம்’ என்ற பெருமையை இழந்து, நான்காவது இடத்துக்குத் தள்ளப்பட்டிருக்கிறது, சென்னை விமான நிலையம். பெங்களூரு மூன்றாவது இடத்தைப் பிடித்திருக்கிறது. சென்னை விமான நிலையத்தின் பயணிகள் எண்ணிக்கை எதிர்பார்த்த அளவுக்கு அதிகரிக்கவில்லை. சரக்குகள் கையாளும் திறனிலும் பெரிய முன்னேற்றம் இல்லை.  

தமிழகத்தில் உள்ள பிற விமான நிலையங்களின் நிலையும் இதுதான். தமிழகத்தில் சென்னை, கோவை, திருச்சி, மதுரை, தூத்துக்குடி, சேலம் என ஆறு விமான நிலையங்கள் உள்ளன. இதுதவிர, வேலூரில் ஒரு விமான நிலையம் கட்டப்பட்டுவருகிறது. ‘இந்திய விமான நிலைய ஏர் டிராஃபிக் நியூஸ்’ புள்ளிவிவரப்படி, 2016-17-ம் ஆண்டில் சென்னை விமான நிலையம் கையாண்ட பயணிகளின் எண்ணிக்கை 1,83,62,215. சென்னையைவிடக் கிட்டத்தட்ட 45 லட்சம் பயணிகளை அதிகமாகக் கையாண்டிருக்கிறது பெங்களூரு. இந்திய விமான நிலைய ஆணையம் அலட்சியம் காட்டுவது ஒருபக்கம் என்றால், தமிழக அரசு ஒத்துழைப்பு தராததும் இதற்குப் பிரதான காரணம் என்கிறார்கள்.

சென்னை விமான நிலையம் பின்தங்க என்ன காரணம் என்று ஏற்றுமதியாளர்களிடம் கேட்டோம். “இங்கு ஓடுபாதை, மிகப் பெரிய விமானங்கள் வந்து செல்லும் அளவுக்கு இல்லை. மேலும், விமானங்களைக் கையாள்வதற்கு ‘டேக்ஸி வே’ போதுமானதாக இல்லை. சிறிய விமானங்களை இயக்கும்போது, விமானப் போக்குவரத்து நிறுவனங்களுக்கு இயக்கச் செலவு அதிகமாகிறது. இதனால், சென்னையைவிடப் பெங்களூரு, ஹைதராபாத் விமான நிலையங்களையே விமான நிறுவனங்கள் விரும்புகின்றன.

டேக் ஆஃப் ஆகாத விமான சேவை... தரை இறங்கிய தமிழகம்! - ஜூ.வி ஸ்பெஷல் ஸ்டோரி

சென்னை விமானநிலையத்தில் ஓர் ஓடுதளமே பெரும்பாலும் பயன்பாட்டில் உள்ளது. இன்னொரு ஓடுதளம் அடையாறு ஆற்றின் மீது அமைக்கப்பட்டுள்ளதால் பாதுகாப்பு சந்தேகம் கருதி அதைப் பயன்படுத்துவது இல்லை. நாட்டிலேயே முதன்முறையாக, சென்னையில்தான் ஆற்றின் மீது பாலம் அமைத்து, விமான ஓடுபாதை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த ஓடுபாதையும் போதுமான நீளம் கொண்டதாக இல்லை. நீண்ட காலம் பயன்படுத்தாமலே இருக்கிறது இது. முதல் ஓடுபாதையில் பழுதுநீக்கம், வேறு ஏதேனும் பாதிப்பு இருந்தால் மட்டுமே இரண்டாவது ஓடுதளம் பயன்படுத்தப்படுகிறது.

சென்னை விமான நிலையம், இந்திய விமான நிலைய ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஆனால், பெங்களூரு, மும்பை, ஹைதராபாத் உள்ளிட்ட விமான நிலையங்களின் பராமரிப்பு தனியார் வசம் உள்ளது. இந்த நிறுவனங்கள் அதிக லாபம் ஈட்ட, இந்திய அளவிலும், சர்வதேச அளவிலும் மார்க்கெட்டிங் செய்கின்றன. தமிழகத்தில் இருந்து அதிக அளவில் விவசாயப் பொருட்கள் அதிகம் ஏற்றுமதியாகின்றன. ஆனால், சரக்குகள் கையாள்வதில் சென்னை விமான நிலையம் மிக மோசமாக இருக்கிறது. இதனால், ஏற்றுமதி செய்யப்படும் பொருட்கள் சேதம் அடைந்து, இழப்பு ஏற்படுகிறது. பெங்களூருவில் எல்லாம் நன்றாக இருப்பதால் அங்கு சென்றுவிடுகின்றனர்” என்றார்கள்.

சென்னை விமான நிலைய அதிகாரி ஒருவரிடம் பேசியபோது, “பயணிகள், சரக்குகள் கையாளும் திறனைக் கருத்தில் கொண்டு, 2013-ம் ஆண்டு ரூ.2,000 கோடி செலவில் விமான நிலையம் மேம்படுத்தப்பட்டது. இருப்பினும், எதிர்காலத் தேவைக்கு இது போதுமானதாக இல்லை என்று தொடர் குற்றச்சாட்டுகள் மத்திய அரசுக்குச் சென்றன. இதைத் தொடர்ந்து, சென்னை விமான நிலையத்தில் புதிய முனையம் கட்ட ரூ. 2,100 கோடி கடந்த ஆண்டு ஒதுக்கப்பட்டது. இந்தப் பணிகள் இன்னும் நான்கு ஆண்டுகளில் முடிக்கப்படும். 

சென்னை விமான நிலையத்தில் தொடர்ந்து கண்ணாடி, கிரானைட் கற்கள், சீலிங் விழுவது பற்றி ஆய்வுகள் மேற்கொண்டதில், போதுமான பராமரிப்பு இல்லாததுதான் காரணம் என்று தெரியவந்துள்ளது. இதற்கான தீர்வுகளையும் ஆணையத்திடம் அளித்துள்ளோம். மிக மோசமான, குறுகிய டேக்ஸிவே காரணமாக விமானங்கள் அதிக எரிபொருளைச் செலவிட வேண்டியுள்ளது. டெல்லி, மும்பை, பெங்களூரு, ஹைதராபாத் போன்ற தனியார் பராமரிக்கும் விமான நிலையங்கள், ரன்வே, டேக்ஸிவே போன்றவற்றில் அதிகக் கவனம் செலுத்தி வடிவமைத்துள்ளன. அதனால், அங்கு செல்வதையே விமான போக்குவரத்து நிறுவனங்கள் விரும்புகின்றன. 

சென்னை விமானநிலைய டேக்ஸிவேயை சரி செய்ய 40 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. பணிகள் நிறைவுபெற்றதும் இந்தப் பிரச்னையும் தீர்க்கப்படும். சென்னையில் க்ரீன் ஃபீல்டு விமானநிலையம் கட்டப்படும் என்பது வெறும் அறிவிப்பாகவே உள்ளது. நிலத்தைக் கையகப்படுத்தி அரசு அளித்தால், அதிநவீன, அழகிய விமானநிலையம் கட்டப்படும்” என்றார்.

டேக் ஆஃப் ஆகாத விமான சேவை... தரை இறங்கிய தமிழகம்! - ஜூ.வி ஸ்பெஷல் ஸ்டோரி

தமிழக விமான நிலையங்களின் நிலவரம் குறித்து, இந்திய விமானப் போக்குவரத்து ஆணையத்தின் தலைவர் குருபிரசாத் மொஹபத்ராவிடம் கேட்டோம். “தமிழகத்தில் இருக்கும் ஆறு விமான நிலையங்களில், சென்னை, கோவை மற்றும் திருச்சி ஆகிய மூன்றும் சர்வதேச விமான முனையங்களாக உள்ளன. மதுரை ஏர்போர்ட் ஓரளவு சர்வதேச விமானங்களை இயக்கிக்கொண்டிருக்கிறது. தமிழகத்திலுள்ள ஆறு விமான நிலையங்களில் அதிக லாபம் ஈட்டக்கூடியது சென்னை விமான நிலையம்தான்.

டிராஃபிக் டிமாண்ட், தேவையான அளவு நிலம், ஆப்ரேஷனல் வசதிகள் மற்றும் கட்டுப்பாட்டு ஆணையங்களின் ஒப்புதல்கள் ஆகியவற்றைப் பொறுத்தே விமானநிலைய மேம்பாட்டுச் செயல்பாடுகள் இருக்கும். தற்போது சென்னை விமான நிலையத்தில் புதிய டெர்மினல் பில்டிங் ஒன்றைக் கட்டுவதற்கான வேலைகள் நடந்து வருகின்றன. இதன்மூலம் ஆண்டுக்கு மூன்று கோடி பயணிகளைக் கையாளும் வகையில் அது மேம்பட இருக்கிறது. மேலும் திருச்சியில் புதிய டெர்மினல் பில்டிங் அமைக்கவும், கோவை விமான நிலையத்தை விரிவுபடுத்தவும் திட்டமிட்டு வருகிறோம். ஆனால், நிலம் கிடைக்காததால் இவை அனைத்தும் அடுத்தகட்ட நகர்வை நோக்கி நகர முடியாமல் முடங்கிக் கிடக்கின்றன.

ஸ்ரீபெரும்புதூரில் ஒரு கிரீன்ஃபீல்டு ஏர்போர்ட் கட்டுவதற்கான திட்டமும், நிலம் இல்லாததால் முடங்கிக் கிடக்கிறது. ஒரு நகரத்தில் விமான நிலையம் சிறப்பாகச் செயல்பட்டால் அங்கு உள்ள பல்வேறு துறைகளும் வளர்ச்சி அடைய வாய்ப்புள்ளது. அதை மனதில் வைத்து மாநில அரசு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்” என்றார்.

டேக் ஆஃப் ஆகுமா தமிழகம்?

இதுவா விஷன்?

2012-ம் ஆண்டு தமிழக அரசு வெளியிட்ட ‘விஷன் 2023’ ஆவணத்தில், ‘20 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் புதிய க்ரீன் ஃபீல்டு விமானநிலையம் கட்டப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டது. பல ஆண்டுகள் கழித்து ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் இடம் பார்த்தார்கள். அதுவும் ஆரம்ப கட்டத்திலேயே முடங்கி விட்டது. ‘‘நிலம் கையகப்படுத்துவதில் சிக்கல் உள்ளதால், விமான நிலையம் வருவதே சந்தேகமாக உள்ளது என்கின்றனர். அடுத்த ஐந்து, பத்தாண்டுகள் தேவையைக் கருத்தில் கொண்டே சென்னை விமான நிலைய விரிவாக்கம் நடக்கிறது. இது, நீண்ட கால பலனை அளிக்காது’’ என்கின்றனர் அதிகாரிகள்.

‘‘வேலூரில் வேண்டும்!’’

குறைந்த கட்டணத்தில் சிறு நகரங்களில் இருந்தும் விமான சேவையை சாத்தியமாக்க, ‘உதான்’ என்ற திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. இதற்காக மூன்று விமான நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் சேலம், நெய்வேலி மற்றும் ஓசூர் விமான நிலையங்களில் இருந்து இதன்படி சென்னைக்கு விமானங்கள் இயக்கப்படும். டிக்கெட் கட்டணம், 2,500 ரூபாய். இதற்கு, கடந்த செவ்வாய்க்கிழமை தமிழக அரசு ஒப்புதல் அளித்தது. அதிகபட்சமாக 72 பேர் வரை செல்ல முடிகிற சிறு விமானங்கள் இங்கிருந்து இயக்கப்படும். இதேபோல வேலூரில் இருந்தும் விமானங்களை இயக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. ‘‘கிட்டத்தட்ட இந்தியாவின் 37 சதவிகித தோல் பொருட்கள் வேலூர் மாவட்டத்தில் இருந்துதான் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இவர்கள் சென்னை அல்லது பெங்களூரு விமான நிலையம் வழியாக ஏற்றுமதி செய்கின்றனர். வேலூரில் விமான நிலையம் செயல்பட ஆரம்பித்தால், அங்கிருந்து ஏற்றுமதி செய்யும் சூழல் உருவாகும்’’ என்கின்றனர் தொழில்துறையினர்.

News 2
News 2

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a Comment