Saturday, May 13, 2017

அடுத்த ஜனாதிபதி! - எதிர்க்கட்சிகளை ஒன்று சேர்க்குமா குடியரசுத் தலைவர் தேர்தல்?

அடுத்த ஜனாதிபதி! - எதிர்க்கட்சிகளை ஒன்று சேர்க்குமா குடியரசுத் தலைவர் தேர்தல்?

ந்தியாவின் முதல் குடிமகன் பதவியில், ஜன சங்க பாரம்பர்யமுள்ள, இந்துத்துவக் கருத்தியலை நம்பும் ஒருவரை அமர வைக்கும் வாய்ப்பு முதல்முறையாக பி.ஜே.பி-க்குக் கிடைத்திருக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி அதைச் செய்வாரா? கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பி.ஜே.பி-க்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளும் அணி சேர ஆரம்பித்துள்ளன. இ்தற்கு ஆதாரமாக இருப்பது, ஜனாதிபதி தேர்தல். இதை முன்வைத்து உருவாகும் எதிர்க்கட்சிக் கூட்டணி அடுத்த நாடாளுமன்றத் தேர்தல் வரை தொடர்ந்தால், அது பி.ஜே.பி-க்கு பெரும் நெருக்கடியைத் தரக்கூடும். மோடி அதைத் தடுப்பாரா? இந்தக் கேள்விகளோடு நெருங்குகிறது, இந்தியாவின் குடியரசுத் தலைவர் தேர்தல்.

ஜூலை 24-ம் தேதியோடு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் முடிகிறது. அதற்கு இரண்டு மாதங்கள் முன்பாகவே அடுத்த ஜனாதிபதியைத் தேர்வு செய்யும் நடைமுறைகள் ஆரம்பித்துவிடும். ‘அலங்காரப் பதவி’, ‘ரப்பர் ஸ்டாம்ப் பதவி’ என வர்ணிக்கப்பட்டாலும், அரசியல் நெருக்கடி ஏற்படும் ஒரு சூழலில், ஜனாதிபதியின் முடிவு முக்கியமானதாக இருக்கும். ராஜீவ் காந்தி பிரதமராக இருந்த காலத்தில், அவருக்கும், அப்போதைய ஜனாதிபதி ஜெயில் சிங்குக்கும் நிகழ்ந்த மோதல்கள் அரசியல் அரங்கில் வெகு பிரபலம். ஒரு கட்டத்தில், ராஜீவ் காந்தியைப் பதவிநீக்கம் செய்ய ஜெயில் சிங் தயாரானதாகவும் தகவல்கள் பரவின. வாஜ்பாய் பிரதமராக இருந்த காலத்தில் நிகழ்ந்த குஜராத் கலவரங்கள் தொடர்பாகவும், அரசின் சில முடிவுகள் தொடர்பாகவும் அப்போதைய ஜனாதிபதி கே.ஆர்.நாராயணன் வெளிப்படையாகக் கருத்து தெரிவித்து பரபரப்பு ஏற்படுத்தினார்.

எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாமல் தொங்கு நாடாளுமன்றம் அமையும்போது, ஜனாதிபதியின் முடிவு முக்கியமானதாக ஆகிவிடும். எனவே, விசுவாசமான நபரை ஜனாதிபதி ஆக்குவதை காங்கிரஸ் கட்சி வழக்கமாக வைத்திருந்தது. இந்தியாவின் முதல் ஜனாதிபதியான ராஜேந்திர பிரசாத் மட்டுமே இரண்டு முறை அந்தப் பதவியில் இருந்தார். காங்கிரஸ் அல்லாத எதிர்க்கட்சிகளின் சார்பில் நிறுத்தப்பட்டு ஜனாதிபதி ஆனவர்கள் இரண்டு பேர் மட்டுமே! 1977-ம் ஆண்டு ஜனதா ஆட்சியில் நீலம் சஞ்சீவ ரெட்டி ஜனாதிபதி ஆனார். அவருக்கும் பிரதமர் மொரார்ஜி தேசாய்க்கும் எப்போதும் கருத்து வேறுபாடுகள் இருந்தன. மொரார்ஜியின் ஆட்சி கவிழ்ந்தது, சரண்சிங் பிரதமர் பதவியேற்க அனுமதித்தது என பல விஷயங்களில் அவரின் முடிவுகள் சர்ச்சைக்குள்ளாகின. 2002-ம் ஆண்டு வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது, காங்கிரஸ் அல்லாத ஜனாதிபதியைத் தேர்வு செய்யும் வாய்ப்பு கிடைத்தது. ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அப்போது தேசிய ஜனநாயகக் கூட்டணியின் அமைப்பாளர். அவர் அப்துல் கலாம் பெயரை முன்மொழிந்தார். காங்கிரஸும் ஏற்றுக்கொண்ட ஒரு வேட்பாளராக அவர் இருந்ததால், கலாம் ஜனாதிபதி ஆவது சுலபமானது. அப்போது பி.ஜே.பி பெரும் செல்வாக்கோடு இல்லை. மத்திய அரசில் தனிப் பெரும்பான்மை இல்லாமல், பல மாநிலங்களில் ஆட்சியிலும் இல்லாமல், கூட்டணிக் கட்சிகள் சொல்வதைக் கேட்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருந்தது பி.ஜே.பி. அதனால், கலாமை அவர்கள் ஜனாதிபதி ஆக்கினர். இன்று அப்படி இல்லை. தற்போது பி.ஜே.பி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மொத்த வாக்கு மதிப்பு, 5,32,037. இதில் பி.ஜே.பி மட்டுமே 4,42,117 வாக்கு மதிப்பு வைத்துள்ளது. கூட்டணியில் இருக்கும் கட்சிகள் அப்படியே ஆதரிக்கும் பட்சத்தில், தேவைப்படும் 5,49,442 வாக்குகளில் 5,32,037 வாக்குகள் கிடைத்து விடும். இதுதவிர 17,405 வாக்குகள் மட்டுமே பி.ஜே.பி-க்கு தேவைப்படும். தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி, அ.தி.மு.க., பிஜு ஜனதா தளம் என ஏதாவது ஒரு கட்சியின் ஆதரவு இருந்தாலே போதுமானது. சமீபத்தில் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி, கிட்டத்தட்ட பி.ஜே.பி வேட்பாளருக்கு ஆதரவு தருவதை உறுதி செய்திருக்கிறது. எனவே, இதைவிட தாங்கள் விரும்பும் ஒருவரைக் குடியரசுத் தலைவர் மாளிகையில் குடியமர்த்த பொருத்தமான தருணம் பி.ஜே.பி-க்குக் கிடைக்காது.

‘ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்தை ஜனாதிபதி ஆக்க வேண்டும்’ என சிவசேனா கட்சி விவாதத்தை ஆரம்பித்து வைத்தது. மோகன் பகவத், தனக்கு அந்தப் பதவியில் ஆர்வம் இல்லை என்று சொன்னாலும், சிவசேனா தொடர்ந்து அதை வலியுறுத்தி வருகிறது. ஆனால், மோடியின் சாய்ஸ் யார் என்பது சஸ்பென்ஸாக இருக்கிறது. இறுதி நிமிடத்தில் ஏதாவது சர்ப்ரைஸ் தருவது மோடியின் ஸ்டைல். அப்படி இம்முறையும் ஏதாவது செய்வார் எனக் கணிப்புகள் டெல்லியில் பரபரக்கின்றன.

அடுத்த ஜனாதிபதி! - எதிர்க்கட்சிகளை ஒன்று சேர்க்குமா குடியரசுத் தலைவர் தேர்தல்?
அடுத்த ஜனாதிபதி! - எதிர்க்கட்சிகளை ஒன்று சேர்க்குமா குடியரசுத் தலைவர் தேர்தல்?
அடுத்த ஜனாதிபதி! - எதிர்க்கட்சிகளை ஒன்று சேர்க்குமா குடியரசுத் தலைவர் தேர்தல்?

கணிப்புகள் என்னென்ன? 

‘பிரணாப் முகர்ஜி எனக்கு மூத்த சகோதரர் மாதிரி இருந்து வழிகாட்டுகிறார்’ என மோடி ஏற்கெனவே சொல்லி இருக்கிறார். ‘பிரணாப்பே இன்னொருமுறை ஜனாதிபதியாகத் தொடரட்டும்’ என மோடி சொல்லக்கூடும். இதன்மூலம் மோடியின் மதிப்பும் உயரும். காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்வதும் முறியடிக்கப்படும். பிரணாப்பின் சொந்த மாநிலமான மேற்கு வங்காளத்தில் பி.ஜே.பி-யை வளர்ப்பதும் சாத்தியமாகும்.

இதுவரை உத்தரப்பிரதேசத்தில் இருந்து யாரும் ஜனாதிபதியாக வந்ததில்லை. பெரும்பாலும் பிரதமர்கள் அந்த மாநிலத்தில் இருந்தே தேர்ந்தெடுக்கப்பட்டு வந்ததால், இதை உ.பி.காரர்கள் பெரிதாகவும் எடுத்துக்கொண்டதில்லை. (மோடியும்கூட உ.பி-யின் எம்.பி-யாகத் தேர்வாகியே பிரதமர் பதவிக்கு வந்திருக்கிறார்.) அடுத்த முறை பி.ஜே.பி மீண்டும் ஆட்சிக்கு வர, உ.பி-யில் ஜெயிப்பது முக்கியம். அதனால் உ.பி-யைச் சேர்ந்த ஒருவரை ஜனாதிபதி வேட்பாளர் ஆக்கக்கூடும். அப்போது சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் போன்ற கட்சிகளும் வேறு வழியின்றி, அவரை ஆதரிக்க வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தலாம். பெரிய சிரமம் இல்லாமல் ஜெயிக்க முடியும்.

ஜார்கண்ட் கவர்னராக இருக்கும் திரௌபதி முர்முவை ஜனாதிபதி ஆக்க மோடி முடிவெடுத்து இருக்கிறார். ஒடிசாவைச் சேர்ந்த பழங்குடி இனத் தலைவர் இவர். ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் முழு ஆசியும் இவருக்கு இருக்கிறது. பழங்குடி இனத்திலிருந்து இதுவரை யாரும் ஜனாதிபதி ஆனதில்லை. இந்தப் பெண்மணியை வேட்பாளர் ஆக்கினால், ஒடிசா ஆளுங்கட்சியான பிஜு ஜனதா தளம் தானாகவே முன்வந்து ஆதரவு தரும். பகுஜன் சமாஜ் கட்சியும் ஆதரிக்கலாம். சிரமமே இல்லாமல் ஜெயிக்க முடியும். 

இப்படி கணிப்புகள் ஆளும் தரப்பில் இருக்க, பி.ஜே.பி-க்கு எதிராக பொது வேட்பாளரை நிறுத்துவது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பேச்சைத் துவங்கி விட்டார். தேசியவாத காங்கிரஸ், சமாஜ்வாடி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிரிய ஜனதா தளம் என பல கட்சிகள் இதற்கான கூட்டணியில் சேர்ந்துள்ளன. மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி போன்றவர்களிடமும் ஆலோசனை நடக்கிறது. தொடர்ச்சியாக பி.ஜே.பி பெறும் வெற்றிகள், பல கட்சிகளையும் காங்கிரஸ் பக்கம் சேர்க்கின்றன.

அடுத்த ஜனாதிபதி! - எதிர்க்கட்சிகளை ஒன்று சேர்க்குமா குடியரசுத் தலைவர் தேர்தல்?

எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் யார்? முதலில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் பெயர் பேசப்பட்டது. பி.ஜே.பி கூட்டணியில் அங்கம் வகிக்கும் சிவசேனா, கடந்த இரு தேர்தல்களில் காங்கிரஸ் கூட்டணி நிறுத்திய வேட்பாளர்களை ஆதரித்தே வாக்களித்தது. இந்தமுறை சரத் பவாரை நிறுத்தினால் மராட்டியர் எனும் முறையில் அவரை சிவசேனா ஆதரிக்கக் கூடும் என்று எதிர்பார்ப்பு இருந்தது. ஒருவேளை அப்படி நிகழ்ந்தால், பி.ஜே.பி தன் அணியில் இருந்து 25 ஆயிரம் வாக்குகளை இழக்க நேரிடும். இது பி.ஜே.பி.க்கு மிகப்பெரிய சிக்கல். ஆனால், ‘‘நான் இந்தப் போட்டியில் இல்லை’’ என சரத் பவார் வெளிப்படையாகச் சொல்லிவிட்டார். முன்னாள் சபாநாயகர் மீரா குமாரை நிறுத்த காங்கிரஸ் யோசிக்கிறது. ஆனால், அவரை எல்லோரும் ஏற்பார்களா என்பது சந்தேகம்தான். ஐக்கிய ஜனதா தள தலைவர் சரத் யாதவ், மகாத்மா காந்தியின் பேரனான கோபால கிருஷ்ண காந்தி ஆகியோரில் யாரேனும் ஒருவர் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் ஆகக்கூடும் என இப்போது சொல்கிறார்கள். ஆனால், அந்தப் பொது வேட்பாளரை ஜெயிக்க வைப்பது அவ்வளவு சாதாரண வேலை இல்லை.

ஜனாதிபதி தேர்தலைப் பொறுத்தவரை, எப்போதுமே ஆளுங்கட்சிதான் முதலில் முடிவெடுத்து அறிவிப்பு செய்யும். ஆனால், இம்முறை எதிர்க்கட்சிகள் பரபரப்பாகி இருக்கின்றன. பி.ஜே.பி அதை அமைதியாக வேடிக்கை பார்க்கிறது.

அ.தி.மு.க என்ன செய்யும்?

‘‘ஜனாதிபதி தேர்தலில் அ.தி.மு.க-வின் நிலை பற்றி முதல்வர் எடப்பாடி பழனிசாமி முடிவெடுப்பார்” என்று சமீபத்தில் தம்பிதுரை தெரிவித்துள்ளார். இரண்டு அணிகளாகப் பிரிந்திருக்கும் அ.தி.மு.க-வின் மொத்த வாக்கு மதிப்பு, 59,224. இ்து மொத்தமாக விழுந்தால், பி.ஜே.பி வேறு யாரிடமும் ஆதரவு கேட்க வேண்டிய அவசியமே இல்லை. சொல்லப் போனால், கூட்டணியில் இருக்கும் சிறுசிறு கட்சிகள் ஏதாவது காலை வாரினால், அ.தி.மு.க-வை தாஜா செய்து ஆதரவு கேட்க வேண்டிய அவசியத்துக்கு பி.ஜே.பி உள்ளாகும். ஆனாலும், ‘ஜனாதிபதி தேர்தல் வரைதான் தமிழகத்தில் ஆட்சி இருக்கும். அதன்பிறகு கவிழ்ந்துவிடும்’ என்பது போன்ற தகவல்கள் பரவுகின்றன. 

நிஜமான நிலைமை என்னவென்றால், எந்த மாநில ஆட்சியையும் மத்திய அரசு எடுத்ததுமே கவிழ்க்க முடியாது. கடந்த கால உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகள் இதை அனுமதிக்கவில்லை. சட்டசபையை முடக்கி வைக்கலாம். அப்படி முடக்கி வைத்தாலும், எம்.எல்.ஏ-க்கள் ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க முடியும். சட்டசபை முடக்கப்பட்ட நிலையில், கடந்த 1967 ஜனாதிபதி தேர்தலில் ராஜஸ்தான் எம்.எல்.ஏ-க்களும், 1969 தேர்தலில் பீகார் எம்.எல்.ஏ-க்களும் வாக்களித்து இருக்கிறார்கள்.

ஜனாதிபதி தேர்தல் நடப்பது இப்படித்தான்!

தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் மட்டுமே ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க முடியும். நியமன எம்.பி-க்கள், எம்.எல்.ஏ-க்கள் மற்றும் எம்.எல்.சி-க்களுக்கு வாக்குரிமை இல்லை. (உதாரணமாக, சச்சின் டெண்டுல்கர் மாநிலங்களவையில் நியமன எம்.பி-யாக இருக்கிறார். அவரால் வாக்களிக்க முடியாது!)

இந்தியா முழுவதும் 4,114 எம்.எல்.ஏ-க்கள் மற்றும் 776 எம்.பி-க்கள் குடியரசுத்தலைவர் தேர்தலில் வாக்களிக்கலாம். 1971-ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி எம்.பி-க்கள் மற்றும் எம்.எல்.ஏ-க்களின் வாக்குகளுக்கு மதிப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன்படி ஒரு எம்.பி-யின் வாக்கு மதிப்பு 708 ஆகும். எம்.எல்.ஏ-க்களின் வாக்கு மதிப்பு, அந்தந்த மாநிலங்களின் மக்கள்தொகைக்கு ஏற்ப மாறும். உத்தரப்பிரதேச எம்.எல்.ஏ-வின் வாக்கு மதிப்பே மிக அதிகம். அது, 208 ஆக உள்ளது. சிக்கிம் மாநில எம்.எல்.ஏ-வின் வாக்குமதிப்பு மிகக்குறைவு. அதன் மதிப்பு, 7. தமிழக எம்.எல்.ஏ-வின் வாக்கு மதிப்பு, 176. 

இதன்படி 776 எம்.பி-க்களின் வாக்கு மதிப்பு 5,49,408. 4,114 எம்.எல்.ஏ-க்களின் வாக்கு மதிப்பு 5,49,474. ஏறத்தாழ இரண்டுமே சமமாக இருக்கும். 50 சதவிகிதத்துக்கும் மேலான வாக்குகளைப் பெற்றவரே வெற்றி பெற்றவராகக் கருதப்படுவார். அதன்படி 10,98,882 வாக்கு மதிப்பில் 5,49,442 மதிப்பு வாக்குகளைப் பெற்றவர் ஜனாதிபதி ஆகலாம். ஒருவேளை இரண்டு பேருக்கும் அதிகமானவர்கள் போட்டியிட்டால், வாக்களிப்பவர்கள் விருப்ப அடிப்படையில் வேட்பாளரைத் தேர்வு செய்யலாம். ஆனால், அப்படி ஒரு சூழல் இதுவரை ஏற்படவில்லை.

News2
News2

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a comment