Saturday, May 13, 2017

சசிகலா ஜாதகம் - 40 - எம்.ஜி.ஆர் நடிப்பு... சதிகள் முறியடிப்பு!

சசிகலா ஜாதகம் - 40 - எம்.ஜி.ஆர் நடிப்பு... சதிகள் முறியடிப்பு!

தனக்கு எதிரான சதியை எம்.ஜி.ஆர் எப்படி முறியடித்தார்?

‘‘படுத்துக் கொண்டே ஜெயிப்பேன்’’ எனக்  காமராஜர் சொன்னாலும், அதை சாதித்துக் காட்டியவர் எம்.ஜி.ஆர் மட்டும்தான். அமெரிக்காவில் சிகிச்சையில் இருந்துகொண்டே மீண்டும் ஆட்சியைப் பிடித்தார் எம்.ஜி.ஆர்.  அந்த நேரத்தில் தமிழகத்தில் நடந்த சதிகள் பற்றிய தகவல்கள் அவருக்கு வந்து சேர்ந்தன. 

1984 டிசம்பர் 24-ம் தேதி தமிழகத்தில் தேர்தல் நடைபெற்றது. ஆனால், பதவியேற்பு நடைபெற்றது, 1985 பிப்ரவரி 10-ம் தேதி. கிட்டத்தட்ட ஒன்றரை மாதங்கள் கழித்துதான் பதவியேற்பு விழாவே நடைபெற்றது? ஏன் இந்தத் தாமதம்? 

தேர்தலில் வென்று அ.தி.மு.க மீண்டும் ஆட்சியைப் பிடித்ததாலும், முதல்வராகப் பதவியேற்க வேண்டிய எம்.ஜி.ஆர், அமெரிக்கா மருத்துவமனையில் இருந்தார். அப்போது தமிழகத்தின் கவர்னராக இருந்தவர் குரானா. அவர் அமெரிக்காவுக்குச் சென்று பதவிப் பிரமாணம் செய்து வைப்பார் என்றெல்லாம் செய்திகள் கிளம்பின. அன்றைக்கு சீனியர் அமைச்சராக இருந்த நெடுஞ்செழியனும், தமிழகத் தலைமைச் செயலாளர் சொக்கலிங்கமும் அமெரிக்காவுக்குப் போய் எம்.ஜி.ஆரிடம் ஆலோசனை நடத்திவிட்டு வந்தார்கள். ஆனாலும் ஆட்சி அமைப்பதில் காலதாமதம் ஏற்பட்டுக் கொண்டிருந்தது. கவர்னர் மாளிகைக்குப் போவதும் டெல்லிக்குப் பறப்பதுமாக இருந்தார்கள் அ.தி.மு.க  சீனியர்கள். ஒரு கட்டத்தில் ‘‘சட்டமன்ற கட்சித் தலைவராக ஒருவரைத் தற்காலிகமாகத் தேர்வு செய்யுங்கள். அவருக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறேன். எம்.ஜி.ஆர் திரும்பியதும் மற்ற விஷயங்களைப் பார்த்துக்கொள்ளலாம்’’ என குரானா ஐடியா கொடுத்தார். 

‘தேர்தல் முடிந்து, பதவிப் பிரமாணம் செய்து வைக்காமல் மத்திய காங்கிரஸ் ஆட்சி பொம்மலாட்டம் நடத்திக் கொண்டிருக்கிறது’ என காட்டமாக அறிக்கை விட்டார், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி. எம்.ஜி.ஆர் மருத்துவமனையில் இருக்கும் நிலையை வைத்து, தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்க நினைக்கிறது எனக் குற்றச்சாட்டுகள் கிளம்பின. இத்தனைக்கும் அ.தி.மு.க-வும் காங்கிரஸும் கூட்டணி வைத்துதான் தேர்தலைச் சந்தித்தன. இத்தனைக்கும் காரணம், எம்.ஜி.ஆரின் உடல்நிலையை வைத்துத் தமிழகத்தில் பின்னப்பட்டிருந்த சதிகள்தான். 

கவர்னர் குரானாவுக்கு, ‘பிப்ரவரி முதல் வாரம் சென்னை திரும்புகிறேன். பதவியேற்பு தேதியை அப்போது முடிவு செய்துகொள்ளலாம்’ என எம். ஜி.ஆர் கடிதம் அனுப்பினார். ஆனால் குரானா அதை ஏற்கவில்லை. எம்.ஜி.ஆர் பதவியேற்பதற்கான கால அவகாசத்தைக் குரானா கொடுக்கவில்லை. ஒரு கட்டத்தில், ‘‘முதல்வர் பதவியை ஏற்றுக்கொள்ளும் வகையில் எம்.ஜி.ஆர் உடல் தகுதி பெற்றுவிட்டார் என ப்ரூக்ளின் மருத்துவமனையில் இருந்து சர்டிபிகேட் வாங்கி வாருங்கள்’’ என அடுத்த அதிரடி அஸ்திரத்தை வீசினார் குரானா. 

சிகிச்சையில் இருந்தபோது எம்.ஜி.ஆரை போட்டோ மற்றும் வீடியோ எடுக்கவே ப்ரூக்ளின் மருத்துவமனை அனுமதிக்கவில்லை. இந்திய அரசு அமெரிக்க அரசோடு பேசி அனுமதி வாங்கித்தான் படங்கள் எடுக்கப்பட்டன. அவை தேர்தல் பிரசாரத்தில் பயன்படுத்தப்பட்டன. படங்கள் எடுக்கவே அனுமதி தராத மருத்துவமனை, ‘எம்.ஜி.ஆர் தேறிவிட்டார்’ என எப்படி சர்டிபிகேட் தரும்? ‘முடியாது’ எனக் கையை விரித்துவிட்டது. வேறு வழியின்றி, எம்.ஜி.ஆரை வீடியோ படம் எடுத்து வந்து காட்டினார்கள். ‘‘பேச முடியாத, முழுமையாகச் செயல்பட முடியாத ஒருவருக்கு எப்படி பதவிப் பிரமாணம் செய்துவைக்க முடியும்?’’ என  மறுத்துவிட்டார் குரானா.

சசிகலா ஜாதகம் - 40 - எம்.ஜி.ஆர் நடிப்பு... சதிகள் முறியடிப்பு!

கடைசியில் எம்.ஜி.ஆர் இந்தியா திரும்பிய பிறகு குரானாவைச் சந்தித்தார். ‘‘மனதளவிலும் உடல் அளவிலும் எம்.ஜி.ஆர். தேறிவிட்டார்். அதனால் பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறேன்’’ என்றார் குரானா. 

இப்படி 40 நாட்கள் கழித்து எம்.ஜி.ஆர் பதவி ஏற்றதற்குப் பின்னணி இருக்கிறது. அமெரிக்காவில் இருந்து வந்த தகவல்களை எல்லாம் வைத்து ‘எம்.ஜி.ஆரின் உடல்நிலையில் முன்னேற்றம் இல்லை’ என நினைத்தார் நடராசன். அதை வைத்து ஜெயலலிதாவும் ஒரு கணக்குப் போட்டார். தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு, ராஜீவ் காந்தியை ஜெயலலிதா சந்தித்தார். ‘எனது வளர்ச்சி எம்.ஜி.ஆருக்குப் பிடிக்கவில்லை. அ.தி.மு.க-வுக்கு நான் தலைமை ஏற்க உதவ வேண்டும்’ என ஜெயலலிதா ஏற்கெனவே ராஜீவ் காந்தியிடம் வலியுறுத்தி வந்த நிலையில்தான் இந்தச் சந்திப்பு நடைபெற்றது. அப்போது ராஜீவ் காந்தி, ‘‘எம்.ஜி.ஆர் நலமுடன் இருக்கிறார். விரைவில் நாடு திரும்புவார்’’ எனச் சொன்ன செய்தியைக் கேட்டு ஜெயலலிதா அதிர்ச்சி அடைந்தார். எம்.ஜி.ஆர் உடல்நிலையை காரணமாக வைத்து ஜெயலலிதாவை முதல்வர் நாற்காலியில் உட்கார வைத்துவிட நடந்த சதிகளை, தன் நடிப்பால் தகர்த்தெறிந்தார் எம்.ஜி.ஆர்.

சதிகள் தொடர்ந்தன!

(தொடரும்)

Unknown
Unknown

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a Comment