Wednesday, May 03, 2017

மூடப்பட்ட மணல் குவாரிகள்... வசூல் வேட்டைக்காக அரசு நடத்தும் தந்திரமா?

மூடப்பட்ட மணல் குவாரிகள்... வசூல் வேட்டைக்காக அரசு நடத்தும் தந்திரமா?

மிழகத்தில் ஒரே நாள் இரவில் மணல் குவாரிகள் திடீரென மூடப்பட்டிருக் கின்றன. மணல் கிடைக்காமல் தமிழகம் முழுவதும் கட்டுமானப்பணிகள் முடங்கி உள்ளன. அரசு சார்பில் மேற்கொள்ளப்படும் கட்டுமானப்பணிகளும் அப்படியே நிற்கின்றன. ‘இதற்குத் தமிழக அரசின் அலட்சியமும், பேராசையோடு நடக்கும் வசூல் வேட்டையுமே காரணம்’ எனப் பலரும் குற்றம் சாட்டுகிறார்கள். 

கடந்த சில ஆண்டுகளாகத் தமிழகத்தில் 38 மணல் குவாரிகள் செயல்பட்டன. அதில் 9 குவாரிகள் மட்டுமே தொடர்ந்து இயங்கி வந்தன. அந்த குவாரிகளும் கடந்த ஏப்ரல் 29-ம் தேதியோடு மூடப்பட்டுவிட்டன. இதனால் தமிழகம் முழுவதும் மணலுக்குக் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தமிழகத்துக்கு நாள் ஒன்றுக்கு சராசரியாக 25 ஆயிரம் லோடுகள் மணல் தேவை. தமிழகத்தில் எல்லா குவாரிகளும் செயல்பட்டபோது, ஒரு யூனிட் மணல் 4 ஆயிரம் ரூபாய் என்ற அளவில் விற்பனையாகிக் கொண்டிருந்தது. இப்போது எல்லா குவாரிகளும் மூடப்பட்டிருக்க, நான்கு யூனிட் கொண்ட ஒரு லோடு மணல் விலை 40 ஆயிரம் ரூபாய் வரை விற்கப்படுகிறது. அவசரமாக முடிக்க வேண்டிய கட்டுமானப்பணிகளில் மட்டும், இந்தக் கூடுதல் விலை கொடுத்து மணலை வாங்கி நிறைவு செய்கிறார்கள். இன்னும் சில நாட்களில் தமிழகத்தில் மணலே கிடைக்காது என்பதுதான் நிலைமை. மணல் குவாரிகள் மட்டுமின்றி, லீஸ் முடிவுற்ற கிரானைட், கிராஃபைட் உள்ளிட்ட கனிமச் சுரங்கங்களும் மூடப்பட்டுள்ளன. இதனால் கனிமம் சார்ந்த தொழிலில் இயங்கும் 5 லட்சம் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.  

வசூல் வேட்டை ஜரூர்! 

‘என்னதான் பிரச்னை?’ எனத் தமிழ்நாடு கனிம நிறுவன ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் விஜயனிடம் கேட்டோம். “கடந்த 2015-ம் ஆண்டு ஜனவரி 13-ம் தேதி தேசியப் பசுமைத் தீர்ப்பாயம் ஓர் உத்தரவு போட்டது. ‘இயற்கை வளங்களைப் பாதுகாப்பதற்காக, சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீட்டுக்கான அதிகாரம் படைத்த குழுக்களை மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் அமைக்க வேண்டும்’ என்பதே அது. இதன் தொடர்ச்சியாக சுரங்கங்கள் மற்றும் கனிமங்களை முறைப்படுத்தும் சட்டத்தைக் கடந்த 2015 டிசம்பர் மாதம் மத்திய அரசு கொண்டு வந்தது. இந்தச் சட்டத்தின்படி மணல் குவாரிகள், கிரானைட் குவாரிகள் உள்ளிட்டவை அமைக்க வேண்டும் என்றால், மாநில அளவிலான, மாவட்ட அளவிலான இந்தக் குழுக்களிடம் அனுமதி பெற வேண்டும். 

மூடப்பட்ட மணல் குவாரிகள்... வசூல் வேட்டைக்காக அரசு நடத்தும் தந்திரமா?

அதன்படி தமிழகத்தில் சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீட்டுக்கான அதிகாரம் படைத்த குழு அமைக்கப்பட்டது. இதன் தலைவராக ஓய்வுபெற்ற வனத்துறை அதிகாரி கல்யாணசுந்தரம் ஐ.எஃப்.எஸ் நியமிக்கப்பட்டார். கடந்த டிசம்பர் மாதம் சேகர் ரெட்டி, மணல் ராமச்சந்திரன், ரத்தினம் ஆகியோரின் அலுவலகங்கள், வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது. (காண்க: பெட்டிச் செய்தி) அப்போது கல்யாணசுந்தரத்தின் கோடம்பாக்கம் வீட்டிலும் சோதனை நடந்தது. இதில் அவர் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாகத் தெரிய வந்தது. இதனால், கல்யாணசுந்தரம் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அதன்பின் மாநிலக்குழு செயலிழந்தது. மாவட்ட அளவில் குழுக்களை அமைக்கவே இல்லை.

இந்தச் சூழலில்தான் பெரும்பாலான கிரானைட் குவாரிகள், மணல் குவாரிகளுக்கான லீஸ் முடிந்து போனது. அரசு நடத்தி வரும் மணல் குவாரிகள், கனிம நிறுவனங்களின் குவாரி உரிமங்களும் முடியும் நிலையில் இருந்தன. எனவே, ‘காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும்’ என்று தேசியப் பசுமைத் தீர்ப்பாயத்தில், தமிழக அரசு வாதிட்டது. ஆனால், ‘காலக்கெடு தர முடியாது’ என்று பசுமைத் தீர்ப்பாயம் சொல்லிவிட்டது. இதனால் லீஸ் முடிவடைந்த மணல் குவாரிகளும் பல்வேறு கனிம குவாரிகளும் மூடப்பட்டன. அரசு நினைத்திருந்தால், முன்கூட்டியே குழுவின் தலைவரை நியமித்திருக்கலாம். அரசு வேண்டும் என்றேதான் இப்படிச் செய்கிறது. இப்போது குவாரி உரிமையாளர்கள் பலரும் சீக்கிரம் இந்தக் குழுவுக்குத் தலைவரை நியமிக்க வேண்டும் என்று சொல்கின்றனர். அவர்களிடம் எல்லாம் வசூல் செய்யும் வேலைகளில் சிலர் ஈடுபட்டிருப்பதாகவும் சொல்கிறார்கள். அதனால்தான் வேண்டும் என்றே அரசு தாமதம் செய்கிறது. குவாரிகள் மூடப்பட்டிருப்பதால் 5 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார். 

மணல் கடத்தல்! 

மணல் குவாரிகள் மூடப்பட்டிருப்பது குறித்து தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் பன்னீர்செல்வத்திடம் பேசினோம். “எங்குமே மணல் கிடைக்கவில்லை. சென்னைக்கு மட்டுமே ஒரு நாளைக்கு 5 ஆயிரம் லோடு அடிப்போம். தமிழகம் முழுவதும் 25 ஆயிரம் லோடு மணல் அடிக்கப்படும். எல்லாமே நின்றுவிட்டது. மணல் தட்டுப்பாட்டைப் பயன்படுத்திக்கொண்டு ஆந்திராவில் இருந்து கும்மிடிப் பூண்டி, ஆரப்பாக்கம் செக்போஸ்ட் வழியாக உப்பு மணல் கொண்டு வருகின்றனர். இந்த மணலைப் பயன்படுத்தக்கூடாது. இதனால் பெரும் பாதிப்புகள் ஏற்படும். இது தவிர தட்டுப்பாட்டைப் பயன்படுத்தி தமிழகத்தில் உள்ள பெரும்பாலான ஆறுகளில் ஒரு நாளைக்கு 1,500 லோடு மணல் கடத்தப்படுகிறது.  எனவே, மணல் தட்டுப்பாடு இன்றி கிடைக்க அரசு உதவ வேண்டும். பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மணல் குவாரிகள் இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மணல் கடத்தலையும் தடுக்க வேண்டும்” என்றார். 

மூடப்பட்ட மணல் குவாரிகள்... வசூல் வேட்டைக்காக அரசு நடத்தும் தந்திரமா?

மணலுக்குப் பதிலாக மாற்று! 

ரியல் எஸ்டேட் சங்கங்கள் கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் குமாரிடம் பேசினோம். “மணல் கிடைக்காமல் கட்டுமானப்பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. சென்னையில் 40 சதவிகிதக் கட்டுமானப்பணிகள் நிறுத்தப்பட்டிருக்கின்றன. கட்டுமான நிறுவனங்களை நம்பியிருக்கும் பல ஆயிரம் தொழிலாளர்கள் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர். கட்டடத் தொழில் முடங்கி உள்ளது. மணல் குவாரிகளைத் திறக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மணல் குவாரிகள் தொடர்பான பிரச்னைகள் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து வருகிறது. மணலுக்குப் பதிலாக மாற்றுப் பொருள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். குறிப்பாக M-SAND எனச் சொல்லப்படும் மாற்று மணலை அதிக அளவு உற்பத்தி செய்ய அரசு அனுமதி அளிக்க வேண்டும். கல்லில் இருந்து மணலை உற்பத்தி செய்து அதைப் பயன்படுத்தினால், கட்டடம் வலுவாக இருக்கும். இந்தத் தொழிலுக்கு அரசு அங்கீகாரம் அளித்து ஊக்குவிக்க வேண்டும்” என்கிறார்.

கடத்தலைத் தடுக்க நடவடிக்கை! 

பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் ஒருவரிடம் பேசினோம். “சுற்றுச்சூழல் அனுமதி பெறுவதற்காக தலைவரை நியமிக்கும் பணியில் அரசு ஈடுபட்டுள்ளது. மணல் தட்டுப்பாட்டைப் பயன்படுத்தி மணல் கடத்தல் எதுவும் நடக்கவில்லை. மணல் கடத்தலைத் தடுக்க, வருவாய்த்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகளுடன் இணைந்து நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம். மாட்டு வண்டிகள் மற்றும் லாரிகளில் மணல் கடத்தல் நடைபெறுவதாக எங்களுக்குத் தகவல் வரும். அப்போது உடனடியாக நடவடிக்கை எடுத்து கடத்தலைத் தடுத்து நிறுத்தி வருகிறோம்” என்றார். 

‘நாங்கள் இல்லாமல் மணல் அள்ள முடியாது!’

அரெஸ்ட் ஆகும்வரை, தமிழகத்தில் மணல் பிசினஸ் சேகர் ரெட்டியின் கட்டுப்பாட்டில்தான் இருந்தது. அதன்பின் ராமச்சந்திரன் நிர்வாகத்தில் இதைக் கொடுத்து வைத்திருந்தார்கள். ராமச்சந்திரன் உள்ளிட்ட ஏழு பேர் நெட்வொர்க்தான் மணல் வியாபாரத்தைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. ‘எந்தக் குழு போட்டாலும், எங்களை விட்டால் யாராலும் ஒரு லோடு மணலைக்கூட எந்த ஆற்றிலிருந்தும் வெளியில் எடுத்துப்போக முடியாது’ எனச் சவால் விடுகிறார்களாம் இவர்கள். தமிழகம் முழுக்க எதைக் கொடுத்து எப்படி வளைக்க வேண்டும் என்ற தந்திரம் தெரிந்தவர்கள் இவர்களே! 

தமிழ்நாட்டுக்கு மணல் கொடுப்பதைவிட, இவர்கள் கர்நாடகா, கேரளா போன்ற வெளிமாநிலங்களுக்கு மணல் கடத்துவதில்தான் ஆர்வம் காட்டுவார்கள். எல்லை செக்போஸ்ட்டைத் தாண்டிவிட்டால், மணலின் விலை இரண்டு மடங்காக உயர்ந்துவிடும். இப்போது அந்த மாநிலங்களிலும் மணல் தட்டுப்பாடு வந்துவிட்டது. எனவே, சீக்கிரமே குழு போட்டு மணல் அள்ள அனுமதி கொடுத்துவிடுவார்கள். அப்போதும் இதே பழைய ஆட்களே மணல் பிசினஸை தங்கள் கைக்குள் வைத்திருப்பார்கள்.

News2
News2

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a comment