Friday, May 12, 2017

மின் மிகை மாநிலமா... மின் கொள்ளை மாநிலமா? - ஜூ.வி லென்ஸ்

மின் மிகை மாநிலமா... மின் கொள்ளை மாநிலமா? - ஜூ.வி லென்ஸ்

வ்வொரு கோடையிலும் அடிக்கடி மின்வெட்டு ஏற்பட்டு, இருட்டிலும் புழுக்கத்திலும் தமிழகமே தவிக்கும். இந்த ஆண்டு அப்படி ஒரு மோசமான நிலைமை இல்லை. சென்னையில் ஒரே ஒரு நாள் இரவு மின்வெட்டு ஏற்பட்டதில் மக்கள் ரொம்பவே தவித்துப் போயினர். ஆனால், சில மணி நேரங்களில் அதுவும் சரி செய்யப்பட்டு விட்டது. 2013-ம் ஆண்டுக்கு முன்பு இருந்தது போன்ற மோசமான மின்வெட்டு இப்போது இல்லை. சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற மாநில மின்துறை அமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்ற தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணி, ‘‘தமிழகத்தில் கூடுதலாக உற்பத்தியாகும் பசுமை மின்சாரத்தை வெளிமாநிலங்களுக்கு எடுத்துச் சென்று விற்பதற்கு ஏற்பாடு செய்து தர வேண்டும்’’ என கோரிக்கை வைத்து, எல்லோரையும் திகைக்கச் செய்திருக்கிறார். 

தேவையைவிட அதிகமாக மின்சாரம் உற்பத்தியாகி, ‘மின்மிகை மாநிலமாக தமிழகம் இருக்கிறது’ என்கிறது அரசு. இது உண்மையா என்று விசாரித்தால், ‘மின் பற்றாக்குறையைப் போக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகளுக்கு அரசு கொடுத்த விலை கொஞ்ச நஞ்சம் அல்ல’ என்று பதில் வருகிறது. ‘‘மின் மிகை மாநிலம் என்றால் தனியாரிடம் மின்சாரம் வாங்குவது என்று அர்த்தம் அல்ல. யாரையும் சாராமல் அரசே தன்னிறைவாக இருந்தால்தான் மின் மிகை மாநிலம்.

கோடைக்காலத்தில் தமிழகத்தின் தினசரி மின் தேவை 14,500 மெகாவாட் முதல் 15,500 மெகாவாட் வரை. எனவே, வழக்கத்தைவிட கூடுதலாக இப்போது தினமும் 3,189 மெகாவாட் மின்சாரத்தை 13 தனியார் நிறுவனங்களிடமிருந்து வாங்குகிறது அரசு. ‘‘இப்போது மட்டுமில்லை... பல ஆண்டுகளாக கோடிக்கணக்கில் பணத்தைக்கொட்டி, தனியாரிடம் மின்சாரக் கொள்முதல் செய்திருக்கின்றனர். இதில் பல்லாயிரம் கோடிக்கு ஊழல்கள் நடந்துள்ளன’’ எனக் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. 

இதுபற்றி விசாரிக்க ஆரம்பித்தோம். நம்மிடம் பல தகவல்களைப் பகிர்ந்துகொண்டார், மின்வாரிய அமைப்புப் பொறியாளர் சங்கத்தின் தலைவர் சா.காந்தி. “மின்வெட்டைத் தவிர்ப்பதற்காக நீண்ட காலக் கொள்முதல் என்ற பெயரில், தனியாரிடம் இருந்து மின்சாரம் வாங்குவதற்கு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (டேன்ஜெட்கோ) 2013-ல் திட்டமிட்டது. தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி கொடுத்தால்தான் மின்சாரம் வாங்க முடியும். முதலில், ‘நிலைமை சீரடையும் வரை தினசரி 1,000 மெகாவாட் மின்சாரத்தை ஐந்து ஆண்டுகளுக்கு வாங்க அனுமதி கொடுங்கள்’ என்று கேட்கப்பட்டது. அது பரிசீலனையில் இருந்தபோதே, ‘ஐந்து ஆண்டுகள் என்பதை 15 ஆண்டுகள் என்று அனுமதி கொடுங்கள்’ என்று கேட் டனர். அதற்கும் அனுமதி தரப்பட்டது. 

அப்போது மின்சாரம் வழங்குவதாக 12 நிறுவனங்கள் டெண்டருக்கு விண்ணப்பம் செய்தன. அதில் ஒரு நிறுவனம் யூனிட்டுக்கு 9 ரூபாய் கேட்டதால், அந்த நிறுவனத்தைத் தவிர்த்து மற்ற 11 நிறுவனங்களிடம் இருந்து மட்டும் மின்சாரம் வாங்கப்பட்டது. முதலில் 1,208 மெகாவாட் மின்சாரம் வாங்கினர். அடுத்த கட்டமாக ‘கூடுதலாக 2,100 மெகாவாட் மின்சாரம் வாங்க வேண்டும்’ என ஒழுங்குமுறை ஆணையத்தில் அனுமதி கேட்டனர். அதற்கு 2016 ஜூலையில் அனுமதி கொடுக்கப்பட்டது. இப்படி வாங்கும் 3,308 மெகாவாட் மின்சாரத்துக்கு, யூனிட் ஒன்றுக்கு ரூ.4.91 என்று விலை நிர்ணயித்தனர். 

மின் மிகை மாநிலமா... மின் கொள்ளை மாநிலமா? - ஜூ.வி லென்ஸ்

இதில் வேதனை என்னவென்றால், அந்த நேரத்தில் ஒரு யூனிட் மின்சாரத்தை மூன்று ரூபாய்க்கும் குறைவாகத்தான் மற்ற மாநிலங்கள் வாங்கிக்கொண்டிருந்தன. இதைவிட வேதனை என்னவென்றால், அவர்கள் திட்டமிட்டது போல, 3,300 மெகாவாட் மின்சாரத்தையும் முழுமையாக வாங்கவும் இல்லை. ஆனால், அந்த மின்சாரத்துக்கான பணம் மட்டும் தனியார் நிறுவனங்களுக்குப் பட்டுவாடா செய்யப்பட்டது. காரணம், ‘வாங்கினாலும் வாங்காவிட்டாலும் முழுமையான அளவுக்குப் பணம் தர வேண்டும்’ என்று ஒப்பந்தத்தில் இருக்கிறது என்பதுதான். 

மத்திய அரசுக்குச் சொந்தமான, வட சென்னை வல்லூர் மின் நிலையத்தில் 1,500 மெகாவாட் மின்சாரம் தினமும் உற்பத்தி செய்யப் படுகிறது. அதில் 1,068.45 மெகாவாட், தமிழகத்துக்கு வழங்கப்படுகிறது. அந்த மின் நிலையத்தை முழுமையாக தமிழக அரசே எடுத்துக்கொள்ளலாம். அல்லது, அங்கு உற்பத்தியாகும் முழு மின்சாரத்தையும் வாங்கிக்கொள்ளவும் நமக்கு உரிமை உண்டு. ஆனால், ஓர் அரசு நிறுவனத்தில் பணம் கொடுத்து மின்சாரம் வாங்குவதற்கு தமிழக அரசு ஏன் மறுக்கிறது?” என்று கேட்கிறார் காந்தி.

“மின்சாரக் கொள்முதல் குறித்த தகவல்களை, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் கேட்டால், தகவல் தர டேன்ஜெட்கோ மறுக்கிறது” என்று குமுறுகிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

“சூரிய சக்தி மின்சாரத்தின் தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக, ஆண்டுக்கு ஆண்டு உற்பத்திச் செலவு குறைகிறது. ஆனால், அதிக விலைக்குத் தனியாரிடம் இருந்து மின்சாரம் வாங்குகின்றனர். இது, ஊழலுக்கான ஏற்பாடு என்பது தெளிவாகத் தெரிகிறது. 1991-ல் தமிழ்நாடு மின் வாரியம் நல்ல நிலையில் இருந்தது. டேன்ஜெட்கோ என பெயர் மாற்றம் பெற்றுவிட்ட மின்வாரியம், இப்போது நஷ்டத்தில் திணறுகிறது. ஒருபக்கம் தொழிலகங்களுக்கு மானிய விலையில் மின்சாரம் தருகின்றனர். இன்னொரு பக்கம், தனியாரிடம் இருந்து அதிக விலைக்குக் கொள்முதல் செய்கின்றனர். இதனால் தனியாருக்கு இரட்டைச் சலுகை கிடைக்கிறது. உற்பத்தி, விநியோகம் எல்லாவற்றிலும் தனியார்மயத்தை அனுமதிக்கின்றனர். இதனால் கடனில் மூழ்குகிறது டேன்ஜெட்கோ’’ என்கிறார், தமிழ் தேசிய பேரியக்கத்தின் பொதுச்செயலாளர் வெங்கட்ராமன். 

‘‘மகாராஷ்ட்ரா, மத்தியப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் ஒரு யூனிட் மின்சாரத்துக்கு ரூ.2.97 முதல் ரூ.3.30 ரூபாய் வரை மட்டுமே கொடுக்கின்றனர். ஆனால், தமிழ்நாட்டில் அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்குகிறார்கள். குறிப்பாக, அதானி நிறுவனத்தில் இருந்து ஒரு யூனிட்டுக்கு ஏழு ரூபாய் கொடுத்து மின்சாரம் வாங்குகின்றனர். இதனால், அரசுக்கு பெரும் நஷ்டம் ஏற்படுகிறது. கடந்த 20 ஆண்டுகளில் 2,000 கோடி ரூபாய் அளவுக்கு நஷ்டம்  ஏற்பட்டிருக்கிறது” என்றார், தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் தலைவர் எஸ்.எஸ்.சுப்பிரமணியன்.

மின் மிகை மாநிலமா... மின் கொள்ளை மாநிலமா? - ஜூ.வி லென்ஸ்

நாகை மாவட்டம் பிள்ளைபெருமாள் நல்லூரில் தனியார் மின் உற்பத்தி நிலையம் ஒன்று இருக்கிறது. அங்கிருந்து மின்சாரம் வாங்க நிரந்தரக் கட்டணம் என்ற பெயரில் ஒப்பந்தம் செய்திருக்கின்றனர். நிரந்தரக் கட்டணம் என்றால், அந்த நிறுவனத்தில் இருந்து மின்சாரம் வாங்கினாலும், வாங்காவிட்டாலும் பணம் கொடுக்க வேண்டும் என்பது விதிமுறை. இதனால் அரசுக்கு நஷ்டம் ஏற்படுகிறது என்ற சர்ச்சை எழுந்தது. 

இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக டேன்ஜெட்கோ தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் சாய்குமாரிடம் கேட்டோம். “நாங்கள், அதிக விலைக்கு மின்சாரம் வாங்கவில்லை. 3,300 மெகாவாட் மின்சாரத்தை ரூ.2.65 முதல் ரூ.4.20 வரைதான் வாங்கியுள்ளோம். அது, தள்ளுபடி விலைதான். 1,600 மெகாவாட் சூரிய ஒளி மின்சாரம் வாங்குகிறோம். இப்போது, அதானி நிறுவனத்திடம் இருந்து ஒரு யூனிட் ரூ. 5.10-க்கு வாங்கியுள்ளோம். ரூ. 4.30-க்கு எல்லாம் வாங்கினோம். அண்மையில் முடிவுசெய்யப்பட்ட டெண்டரின்படி, ரூ. 4.40-க்குத்தான் வாங்குகிறோம்.

பிள்ளைபெருமாள் நல்லூர் தனியார் மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் இப்போது வாங்கவில்லை. அவர்கள் 12 ரூபாய் என்று சொன்னார்கள். எனவே, அவர்களிடம் வாங்குவதை நிறுத்தி விட்டோம். ஊழல் என்ற குற்றச்சாட்டில் உண்மை இல்லை” என்றார்.

மின்துறையில் வெளிப்படைத்தன்மை அவசியம். அதுவே, ஊழலைத் தடுக்க வழி!  

மின் மிகை மாநிலமா... மின் கொள்ளை மாநிலமா? - ஜூ.வி லென்ஸ்

பேங்கிங் சிஸ்டம்... நஷ்டம்!

“காற்றாலை மின்சாரத்தை, ‘பேங்கிங் சிஸ்டம்’ என்ற முறையில் கொள்முதல் செய்கின்றனர். தூத்துக்குடியில் காற்றாலை வைத்து மின் உற்பத்தி செய்யும் ஒரு நிறுவனம், சென்னையில் உயர் அழுத்த மின்சாரம் பயன்படுத்தும் நுகர்வோராக இருக்கும். மூன்று ரூபாய்க்கு காற்றாலை மின்சாரத்தை அங்கு அவர் தருவார். எட்டு ரூபாய்க்கு சென்னையில் அதே அளவு மின்சாரத்தை வாங்கிக்கொள்வார். ஆனால், மின்சாரத்தின் விலை குறைவாக இருக்கும் சீசனில் அவர் கொடுத்துவிட்டு, தட்டுப்பாடு ஏற்படும் கோடையில் இங்கு வாங்குவார். பேங்கிங் சிஸ்டத்தில் மின்சாரம் கொடுக்கும் ஒருவர், அடுத்த ஓராண்டுக்குள் மின்சாரத்தை வாங்கிக்கொள்ளலாம் என விதி இருக்கிறது. இதை மாற்றி, காற்றாலை மின்சாரம் வாங்கப்பட்ட ஒரு மாதத்துக்குள் அவருக்கு உயர் அழுத்த மின்சாரம் கொடுக்கப்பட வேண்டும் என்று விதிமுறைகளைத் திருத்த வேண்டும். 70-க்கும் மேற்பட்டவர்களிடம் இருந்து பேங்கிங் முறைப்படி மின்சாரம் வாங்குகிறார்கள். இதனால், பல கோடி ரூபாய் அளவுக்கு மின்வாரியத்துக்கு நஷ்டம் ஏற்படுகிறது” என்கிறார் மின் ஊழியர் மத்திய அமைப்பின் தலைவர் எஸ்.எஸ்.சுப்பிரமணியன்.  

இந்திய காற்றாலை மின்சார அசோசியேஷன் தலைவர் கஸ்தூரி ரங்கையனிடம் பேசினோம். “தமிழகத்தில் கடந்த நிதி ஆண்டில் 22.3 மில்லியன் யூனிட் அளவுக்கு காற்றாலை மின்சாரத்தை விற்பனை செய்திருக்கிறோம். அதில் 50 சதவிகிதம் வரை பேங்கிங் முறைப்படி விற்கப்பட்டுள்ளது. காற்று அதிகம் வீசும் ஜூன் மாதம் முதல் செப்டம்பர் வரை விற்பனை செய்திருக்கிறோம். நாங்கள் 3.05 ரூபாய்க்கு விற்கும் மின்சாரத்தை டேன்ஜெட்கோ, தனது நுகர்வோர்களுக்கு 4.85 ரூபாய்க்கு விற்கிறது. அதிலேயே 1.80 ரூபாய் லாபம் பார்க்கின்றனர். தவிர, பேங்கிங் முறைப்படி நாங்கள் டேன்ஜெட்கோவிடம் வாங்கும் மின்சாரத்துக்கு யூனிட் ஒன்றுக்கு 1.49 ரூபாய் கொடுக்கிறோம். எனவே, எங்களால் நஷ்டம் ஏற்படுகிறது என்று சொல்வதில் உண்மையில்லை. பேங்கிங் முறைக்கான காலக்கெடு ஓர் ஆண்டாக இருந்தால்தான் நல்லது. கர்நாடகா, ஆந்திராவிலும் அப்படித்தான் சிஸ்டம் இருக்கிறது” என்றார் அவர்.

டேன்ஜெட்கோ தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் சாய்குமார், ‘‘பேங்கிங் முறைக் காலக்கெடுவை ஓர் ஆண்டில் இருந்து ஒரு மாதமாகக் குறைக்க வேண்டும் என்று மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் கேட்டோம். ஆனால், அவர்களிடம் இருந்து அனுமதி கிடைக்கவில்லை’’ என்கிறார்.

Unknown
Unknown

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a Comment