Saturday, May 13, 2017

ஒரு வரி... ஒரு நெறி! - 11 - “பண்டலைப் பாருங்கள்... வக்கீலைப் பார்க்காதீர்கள்!”

ஒரு வரி... ஒரு நெறி! - 11 - “பண்டலைப் பாருங்கள்... வக்கீலைப் பார்க்காதீர்கள்!”

ங்கள் பக்கம் நியாயம் இருக்கிறதோ, இல்லையோ... பிரபலமா, சீனியரான வழக்கறிஞர்களை நியமித்தால் வழக்கில் ஜெயித்து விடலாம் என்கிற எண்ணம் பலருக்கு இருக்கிறது. பல நேரங்களில் அது உண்மையாகவும் ஆகி விடுகிறது. வழக்கறிஞராக இருந்த காலத்தில், இது என்னை விரக்தி அடையச் செய்திருந்தது. அப்படியான ஒரு காலகட்டத்தில்தான் எனக்கு இந்தப் படிப்பினை கிடைத்தது.   

மறைந்த உயர் நீதிமன்ற நீதிபதி கே.எஸ்.பக்தவத்சலம் ஓய்வுபெற்றபோது, நீதிமன்ற வளாகத்தில் அவருக்குப் பிரிவு உபசார விழா நடந்தது. ஏற்புரை ஆற்றிய பக்தவத்சலம், “நான் நீதிபதியாக இருந்த காலம் முழுவதும் ஒரு கொள்கையைச் சமரசமே இல்லாமல் கடைப்பிடித்தேன். என்னிடம் வரும் வழக்குகளில் எந்த வழக்கறிஞர் ஆஜராகிறார் என்று பார்ப்பதேயில்லை. கேஸ் பண்டலும் அதன் பின்னால் இருக்கிற கண்ணீரும்தான் என் பார்வையில் தெரியும். என் தீர்ப்புகள் அனைத்துமே கேஸ் பண்டல் அடிப்படையில் வழங்கப்பட்டதுதான். நீதிபதிகளுக்கு நான் சொல்ல விரும்புவது, ‘பண்டலைப் பாருங்கள்... வக்கீலைப் பார்க்காதீர்கள்’ என்பதுதான்” என்றார். அவர் இறுதியாகச் சொன்ன இந்த வரி, என் மனதில் அழுத்தமாகப் பதிந்து விட்டது.

நான் நீதிபதியாகி அந்த இருக்கையில் அமர்ந்தபோது, இந்த வரிதான் எனக்கான வேதவாக்காக இருந்தது. எந்தச் சூழலிலும், ‘வழக்கறிஞர் யார்’ என்று நான் பார்த்ததேயில்லை. கேஸ் பண்டல்தான் எனக்கு எல்லாம். வீட்டிலேயே பண்டலைப் பிரித்துப் படித்து விட்டுத்தான் வருவேன். நீதிமன்றத்தில் வழக்கு வந்ததும் வழக்கறிஞரை நிமிர்ந்தே பார்ப்பதில்லை. நேரடியாக விஷயத்துக்கு வந்து விடுவேன்.

பொதுவாக, வக்கீல்களும் சரி, நீதிபதிகளும் சரி... ‘நீதிமன்றம் தங்களுக்கானது’ என்று நினைக்கிறார்கள். நீதி கேட்டு வருபவர்களைத் தங்களுக்குக் கீழானவர்களாக நினைக்கிறார்கள். உண்மையில், நீதிமன்றம் மக்களுக்கானது. அவர்களுக்கு நீதி சொல்வதற்குத்தான் இந்த அமைப்பே இருக்கிறது. அந்த அமைப்பில் இருவருமே கூலிகள். வழக்கை எடுத்து உரைப்பது வக்கீலின் வேலை; அதை விசாரித்துத் தீர்ப்பு சொல்வது நீதிபதியின் வேலை. இரண்டு தரப்புக்குமே எஜமானர்கள், மக்கள்தான். வழக்காட வருபவர் வழக்கறிஞரை வைத்துக் கொள்வதும், தானே ஆஜராகி வாதாடுவதும் அவரது விருப்பம். அவர் விரும்பாவிட்டால் அங்கே  வழக்கறிஞருக்கு வேலையில்லை. வழக்குகளே வராவிட்டால் நீதிபதிக்கு வேலையில்லை. இதைப் புரிந்துகொண்டால், பண்டலைப் பார்த்துத் தீர்ப்பு வழங்குவதுச் சாத்தியமாகி விடும். 

அண்மையில், டாக்டர் கிருஷ்ணசாமி தொடர்பான ஒரு வழக்கு. வழக்கறிஞர் வைத்துக்கொள்ளாமல் அவரே வாதிடத் திட்டமிட்டு, நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களுக்கான இருக்கையில் அமர்ந்திருக்கிறார். வழக்கறிஞர் களுக்கான இடத்தில் அவர் அமர்ந்திருப்பதைப் பார்த்த நீதிபதி, கடுமையான வார்த்தைகளால் கண்டித்து அவரை வெளியேற்றுகிறார். கிருஷ்ணசாமி இதுகுறித்து புகார் செய்தது வேறு கதை. 

ஒரு பிரபலமான வழக்கறிஞர். ஒரு பிரதானக் கட்சியில் இருக்கிறார். அடிக்கடி தொலைக்காட்சி யில் எல்லாம் வருகிறார். அவருக்கும், அவரிடம் வழக்குக் கொடுத்த ஒரு பெண்ணுக்கும் ஏதோ பிரச்னை போலிருக்கிறது. குடும்ப நல நீதிமன்ற மாடியில் இருந்து கடுமையாக அந்தப் பெண்ணை தாக்கிக்கொண்டே கீழே இறங்குகிறார். ‘எங்கள் வீட்டுப் பிள்ளை’யில் எம்.ஜி.ஆர் பெல்ட்டால் அடிப்பாரே... அந்த மாதிரி. அந்த அம்மா கதறி அழுகிறார். அப்போது, கீழே லேபர் கோர்ட்டில் நின்றுகொண்டிருந்த தொழிற்சங்கத் தலைவர் பார்த்தசாரதி, வழக்கறிஞரைப் போய்த் தடுக்கிறார். உடனே, எல்லா வழக்கறிஞர்களும் சேர்ந்து விட்டார்கள். ‘ஒரு வழக்கறிஞரிடம் எப்படிக் கேள்வி எழுப்பலாம்’ என்று பார்த்தசாரதியைத் தாக்கியதோடு, அவர் தங்களைத் தாக்கியதாகப் புகார் கொடுத்துச் சிறையிலும் வைத்து விட்டார்கள். இத்தனைக்கும் அந்தத் தொழிற்சங்க தலைவரின் வயது 75. உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்த ஏ.பி.ஷா தலையிட்ட பிறகுதான் அவரை வெளியில் விட்டார்கள். 

கிருஷ்ணசாமியை இருக்கையை விட்டு எழுப்பிய நீதிபதியின் மனோபாவத்துக்கும், தன்னிடம் வழக்குக் கொடுத்த பெண்ணைக் கண்மூடித்தனமாகத் தாக்கிய வழக்கறிஞரின் மனோபாவத்துக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. இதுபோன்ற காரணங்களால்தான் நீதிமன்றத்துக்கு வர மக்கள் விரும்புவதே இல்லை. கடைசி நம்பிக்கையாகத்தான் அதை வைத்திருக்கிறார்கள். ஜாதகம் பார்க்கிறார்கள்... கோயிலுக்குப் போகிறார்கள்... அரசியல் தலைவர்களைப் பார்க்கிறார்கள்... அதிகாரிகளைப் பார்க்கிறார்கள்... எதுவுமே ஆகாதபட்சத்தில்தான் நீதிமன்றத்துக்கு வருகிறார்கள். யாரும் விருப்பத்தோடு நீதிமன்றத்துக்கு வருவதில்லை. 

நீதிபதி கே.எஸ்.பக்தவத்சலம் சொன்ன அந்த வரி, என் போக்கில் நிறையத் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஒரு வழக்கறிஞனாக, நீதிபதியாக, நான் கேஸ் பண்டலைத் தொடும்போதெல்லாம் அந்த வரி எனக்குள் ஒலிக்கிறது. என் அனுபவத்தில் இருந்து இளம் வழக்கறிஞர்களுக்கும், நீதிபதிகளுக்கும் நான் சொல்ல விரும்புவது அந்த வரியைத்தான்!

News2
News2

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a comment