Saturday, May 13, 2017

புதுச்சேரி இப்போது கொலைச்சேரி! - நான்கு மாதங்களில் 20 படுகொலைகள்

புதுச்சேரி இப்போது கொலைச்சேரி! - நான்கு மாதங்களில் 20 படுகொலைகள்

ன்மிகத்துக்கு அடையாளமாகத் திகழ்ந்த புதுச்சேரி, இப்போது கொலைச்சேரி! பழிக்குப் பழி, அரசியல் பகை என அன்றாடம் நடக்கும் படுகொலைகளால் நகரின் வீதிகள் அனைத்தும் ரத்த சகதியில் மிதக்கின்றன. சாமானிய மக்கள் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு நடமாடி வருகிறார்கள்.  

கடந்த ஜனவரி மாதம் முன்னாள் அமைச்சர் வி.எம்.சி.சிவக்குமார், துப்பாக்கி ஏந்திய போலீஸ் முன்னிலையிலேயே வெடிகுண்டு வீசியும் அரிவாளால் வெட்டியும் கொலை செய்யப்பட்டார். ஏப்ரல் மாதம் 3-ம் தேதி, அமைச்சர் கந்தசாமியின் உதவியாளர், தனது இருசக்கர வாகனத்தில் ரெட்டிச்சாவடியை கடக்கும்போது நடு ரோட்டிலேயே வெட்டிக் கொல்லப்பட்டார். இப்படி கடந்த நான்கு மாதங்களில் மட்டும் சுமார் 20 படுகொலைகள் பொதுமக்கள் கூடுமிடத்தில் பகிரங்கமாக நிகழ்த்தப் பட்டிருக்கின்றன. ஆனால்,முதல்வர் நாராயணசாமி, ‘‘தொழில் போட்டியில்தான் கொலைகள் நடந்துள்ளன. பொதுமக்களுக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை’’ என்று பேட்டி கொடுக்கிறார். பொது இடத்தில் கொலைகள் நடந்தால் அது பொதுமக்களுக்கான அச்சுறுத்தல் இல்லையா என்பது அந்த நாராயணனுக்கே வெளிச்சம்!

“ரங்கசாமியின் ஆட்சியில் கொலைக் குற்றங்கள் பெருகிவிட்டன. தொடர் கொலைகளால் மக்கள் பீதியடைந்துள்ளனர். புதுச்சேரியில் யாருக்கும் பாதுகாப்பில்லை. முதல்வர் ரங்கசாமி, வழக்குகளை மூடி மறைக்கிறார்” என கடந்த 2014-ம் ஆண்டு, குற்றம்சாட்டிய நாராயணசாமியிடம்தான் தற்போது காவல்துறை இருக்கின்றது. ஆனால், ரங்கசாமி இருந்த இடத்தில் இப்போது நாராயணசாமி இருப்பதைத்தவிர வேறு மாற்றம் நிகழ்ந்துவிடவில்லை. 

பெரும்பாலான கொலைகளுக்குச் சிறையில் இருந்துதான் திட்டங்கள் தீட்டப்படுகின்றன என்பது காவல் துறையினருக்கே நன்றாகத் தெரியும். சிறையில் இருக்கும் கைதிகளுக்கு அங்கிருக்கும் காவலர்களே செல்போன் கொடுத்து உதவி செய்வது தொடர்கதையாகி வருகின்றது. அதைத் தடுக்க முடியாமல் சிறையில் ஜாமர் கருவி பொருத்தியிருக்கிறார்கள். 

பாகூரில் சுவேதன் என்ற வாலிபரைக் கொலைசெய்து தலையைத் துண்டித்து, எந்தப் பதற்றமும் இல்லாமல் காவல்நிலையத்தில் தூக்கிப் போட்டுவிட்டுச் செல்கிறது ஒரு கொலைக்கும்பல். அந்த அளவுக்குக் குற்றவாளிகளுக்கு ஜுரம் விட்டுப்போய்விட்டது. ‘‘சர்வ சாதாரணமாக போலீஸுடன் தொடர்புகொண்டு கட்டப்பஞ்சாயத்து செய்கிறார்கள் ரவுடிகள். வெறும் ஐயாயிரம் ரூபாய்க்குக் கொலை செய்யும் அளவுக்குக் கூலிப்படைகள் வளர்ந்துவிட்டன. 

2012-ம் ஆண்டு பலத்த போலீஸ் பாதுகாப்போடு அழைத்துச் செல்லப்பட்டார் கைதி ஜெகன். கூலிப்படை கும்பல் ஒன்று, நடுரோட்டில் போலீஸ் வாகனத்தில் ஏறி, போலீஸாரின் கண் முன்னாலேயே ஜெகனைப் படுகொலை செய்து விட்டுப்போனது. இந்தச் சம்பவத்தில் 27 பேர் மீது வழக்குப் பதிவுசெய்தது போலீஸ். ஆனால், ‘குற்றம் நிரூபிக்கப்படவில்லை’ என்று அனைவரையும் விடுதலை செய்துவிட்டது நீதிமன்றம். போலீஸ் கண் முன்னால் நடந்த கொலையையே நிரூபிக்க முடியாமல் போன இவர்களைப் பார்த்துக் குற்றவாளிகள் எப்படி பயப்படுவார்கள்? 

2014-ம் ஆண்டு, நாகை மாவட்ட வன்னியர் சங்கத் துணைத் தலைவர் அகோரம் கொலைக்குக் கூலிப்படையை அனுப்பியதாகப் புதுச்சேரி முன்னாள் எம்.எல்.ஏ மீது வழக்குப்பதிவு செய்தது தமிழக அரசு. ஜாமீனில் வெளியேவந்த அவர், இப்போது காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ. புதுச்சேரி போலீஸுக்கு மட்டுமல்ல... அரசியல்வாதிகளுக்கும் ரவுடிகளுடன் அப்படி ஒரு பிணைப்பு. எந்தக் கொலையாக இருந்தாலும் மூன்று மாதங்களில் ஜாமீனில் வெளியே வந்துவிடலாம். பணம் கொடுத்தால் சிறையில், ஏதோ லாட்ஜில் தங்க வந்தது போல சுதந்திரமாக இருக்கலாம் என்ற எண்ணம் வேரூன்றி விட்டது. கொலை செய்து மாட்டிக்கொண்டால் தண்டிக்கப்படுவோம் என்ற பயம் சுத்தமாகப் போய்விட்டது’’ என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

புதுச்சேரி இப்போது கொலைச்சேரி! - நான்கு மாதங்களில் 20 படுகொலைகள்

இந்தக் கொலைகள் எளிய மனிதர்கள் மனதில் விஷத்தை விதைக்கின்றன. தொழிலதிபர் விவேக் பிரசாத் என்பவரை, அவரது நண்பரே கொன்று பிணத்தைப் புதைத்தார். குடும்பத் தகராறில் செல்வராஜ் என்ற முதியவரையும், பரத்குமார் என்ற சிறுவனையும் 17 துண்டுகளாக வெட்டிக் கொன்று, சாக்குமூட்டையில் தூக்கிப் போட்டனர். இத்தனை கொடூரமாக அடுத்தடுத்து கொலைகள் நடப்பது, புதுச்சேரிக்கு புதுசு!

தங்கள் மீது கொலை வழக்குகள் உள்ள ரவுடிகள், தைரியமாக முதல்வர், அமைச்சர்கள் போட்டோவுடன் தங்கள் போட்டோவைப் போட்டு பிறந்தநாள் வாழ்த்து பேனர் வைக்கிறார்கள். இதைப் பார்க்கும் பொதுமக்கள் மனநிலை எப்படி இருக்கும்!  

 சில தினங்களுக்கு முன்பு, சிறையில் இருந்தே தொழிலதிபர்களை மிரட்டி பணம் கேட்ட பெரிய ரவுடியை விசாரிக்க, தங்கள் கஸ்டடியில் எடுத்திருக்கிறது போலீஸ். அதற்கு சிறைத்துறையின் உயர் அதிகாரி ஒருவர், “இவர் மீது எத்தனைப் பொய் வழக்குகள்தான் போடுவீர்கள்” என்று அந்த ரவுடிக்கு ஆதரவாகப் பேசியிருக்கிறார். இைதக் கேட்டு அதிர்ந்து போயிருக்கிறார் சம்பந்தப்பட்ட இன்ஸ்பெக்டர்.

ரோந்து வாகனங்கள் அனைத்தும் உயர் அதிகாரிகளின் வீடுகளுக்குக் காய்கறிகளைச் சுமந்து கொண்டிருக்கின்றன.

News2
News2

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a comment