Wednesday, May 03, 2017

மிஸ்டர் கழுகு: கார்டன் சுவர்கள்... காட்டன் கவர்கள்!

மிஸ்டர் கழுகு: கார்டன் சுவர்கள்... காட்டன் கவர்கள்!

‘‘‘பாகுபலி பார்ட்-2’ பார்த்தேன். ‘தமிழ்நாடு பார்ட்-2’ மாதிரி இருந்தது’’ என்றபடி அமர்ந்தார் கழுகார். சினிமா கதையையும் நாட்டு நிலவரத்தையும் ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ளும்படி சொல்லிவிட்டு, செய்திகளுக்குத் தாவினார்.

‘‘இரட்டை இலைக்கு விலை பேசிய வழக்கில் டெல்லி போலீஸிடம் சிக்கிய தினகரன், சென்னைக்கும் டெல்லிக்கும் இழுத்தடிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார். சென்னையில் இருந்தபோது அவரது அடையாறு வீட்டுக்கு அழைத்துச் சென்றனர். மற்றபடி மூன்று நாட்களும் அவர் பெசன்ட் நகர் ராஜாஜி பவனில்தான் உட்கார வைக்கப் பட்டிருந்தார். சென்னை வந்த டெல்லி போலீஸிடம், தினகரன் பற்றிய பல விவரங்களை நிறையப் பேர் கொடுத்துள்ளனர். எனவே, தினகரனுடைய தொடர்புகள், அவருடைய நண்பர்கள், போயஸ் கார்டன் ரகசியங்கள் எனத் தகவல் வேட்டையோடுதான் டெல்லி போலீஸ் திரும்பியிருக்கிறது.’’

‘‘ம்...’’

‘‘விசாரணையின்போது தினகரனின் உதவியாளர் ஜனார்த்தனனும், நண்பர் மல்லிகார்ஜுனாவும், பலருடைய பெயர்களை ஒப்பித்தனர். அவர்களுக்கு எல்லாம் சம்மன் போயிருக்கிறது. தினகரனுக்கு ஆதரவான அமைச்சர் ஒருவரின் உறவினர் கேரளாவில் இருக்கிறார். அவர் உதவியோடுதான், பணம் டெல்லிக்குப் போய் உள்ளது. அவர்களையும் இந்த வழக்கில் சேர்ப்பதற்காகவே டெல்லி போலீஸாரின் சென்னை விசிட் இருந்ததாம். இந்தச் சமயத்தில்தான் தினகரனுக்கும், சுகேஷ் சந்திரசேகருக்கும் இடையில் ஹவாலா பணப் பரிமாற்றத்துக்கு உதவிய நரேஷ் என்பவரை டெல்லி போலீஸ் வளைத்தது. ஏற்கெனவே டெல்லி போலீஸ் கைது செய்த இன்னொரு ஹவாலா ஏஜென்ட்டான ஷா ஃபைசல் மற்றும் இந்த நரேஷ் தவிர, சென்னையின் பெரம்பூர், செளகார்பேட்டை, மண்ணடி, பிராட்வே போன்ற பகுதிகளைச் சேர்ந்த பல ஹவாலா ஏஜென்ட்களும் இந்த விவகாரத்தில் தலையிட்டுள்ளது தெரிய வந்திருக்கிறது. சென்னை வந்த டெல்லி போலீஸ், செளகார்பேட்டை நரேந்திர ஜெயின், ஆதம்பாக்கம் மோகனரங்கம், கொளப்பாக்கம் ஃபெலிக்ஸ் டேனியல், திருவேற்காடு வழக்கறிஞர் கோபிநாத் உள்ளிட்டவர்களுக்கு நேரடியாக சம்மன் கொடுத்துள்ளனர்.’’

‘‘வழக்கில் இவர்களுக்கு என்ன தொடர்பு?’’

‘‘தினகரனுக்கு நெருக்கமான அமைச்சர் உதவியுடன் கொச்சி தொடர்புகள் ஹவாலா பரிமாற்றத்துக்குக் கிடைத்து விட்டன. ஆனால், சென்னையில் இருந்து கொச்சிக்குப் பணத்தை அனுப்ப நம்பிக்கையான ஆட்கள் தேவைப்பட்டுள்ளனர். அந்த அடிப்படையில் சீனுக்கு வந்தவர்தான் நரேந்திர ஜெயின். ஆதம்பாக்கம் மோகனரங்கம், வீட்டு வசதி வாரியத்தில் வேலை பார்த்துக்கொண்டிருக்கிறார். இன்னும் ஒன்பது மாதங்கள் அவருக்கு சர்வீஸ் இருக்கிறது. மன்னார்குடியைச் சேர்ந்தவர். தினகரன் துணைப் பொதுச்செயலாளரான பிறகு பல வேலைகளுக்கு இவர் ஆலோசகராகச் செயல்பட்டுள்ளார். குறிப்பாக, தினகரனுக்கு ஆதரவான ‘இன்னோவா புகழ்’ நட்சத்திரப் பேச்சாளருக்கு ஒரே நாளில் வீடு ஒதுக்கப்பட்ட விவகாரத்தில் இவருடைய ஆலோசனை இருந்ததாம். தினகரன் ஆர்.கே. நகர் தேர்தலில் வெற்றிபெற்று கோட்டைக்குள் காலடி வைத்திருந்தால், மோகனரங்கம்தான் அவருடைய பி.ஏ-வாக இருந்திருப்பார். ஆனால், அதற்குள் கதை தலைகீழாகிவிட்டது. தினகரனின் தொலைபேசி உரையாடல்களில் மோகனரங்கத்தின் பெயர் அடிக்கடி உச்சரிக்கப்பட்டிருக்கிறது. அதனால்தான் அவரையும் விசாரிக்க சம்மன் கொடுத்திருக்கிறார்கள். ஃபெலிக்ஸ் டேனியல் ஜனார்த்தனனை அடிக்கடி தொடர்புகொண்டு பேசியிருக்கிறார். அதனால், அவரும் விசாரணை வளையத்தில் இருக்கிறார்.’’

‘‘16 பேருக்கு சம்மன் போனதாகச் செய்திகள் வந்தனவே..?’’ 

‘‘சொத்துக் குவிப்பு வழக்கில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.குமாரிடம் ஏற்கெனவே விசாரணையை முடித்துவிட்டார்கள். பி.குமாரின் ஜூனியராக இருந்த துரையையும் விசாரணைக்கு அழைத்திருக்கிறார்கள். நாமக்கல்லைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர், ரியல் எஸ்டேட் தொழிலில் புகழ்பெற்ற ஓர் அதிகாரி என சம்மன் பட்டியல் நீள்கிறது. ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி மற்றும் நீதிபதிகள் பெயரும் அடிபடுவதால், அந்த ஆபரேஷன்கள் சீக்ரெட்டாக வைக்கப் பட்டுள்ளன. அத்துடன், யாருக்கும் கிடைக்காத சில தகவல்களும் கிடைத்துள்ளன.”

‘‘என்னவாம்?”

‘‘ஜெயலலிதா இறந்து, அவருடைய உடல் ராஜாஜி ஹாலுக்கு கொண்டுசெல்லப்பட்ட பிறகு, போயஸ் கார்டனில் இருந்து நிறைய ஆவணங்கள் ‘காட்டன்’ கவர்களில் வைத்து எடுத்துச் செல்லப்பட்டுள்ளன. அதேபோல சசிகலா சிறைக்குச் சென்றதற்குப் பிறகும் நான்கு ‘காட்டன்’ கவர்களில் வைத்து நிறைய ஆவணங்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளன. அவை என்ன ஆவணங்கள், யாருடைய கட்டுப்பாட்டுக்குக் கொண்டு செல்லப்பட்டன என்பது மர்மமாக உள்ளது. அந்த ஆவணங்களை இடமாற்றியவர்கள், போயஸ் கார்டனில் வேலை பார்த்த ஒரு பெண்ணும், கட்சி சேனலில் வரவு செலவுகளைப் பார்த்துக்கொள்ளும் அவரின் கணவருந்தான். அந்த ஆவணங்கள் அனைத்தும் சென்னை தி.நகரில் நகைக்கடை மற்றும் துணிக்கடை வைத்திருக்கும் இருவரின் கட்டுப்பாட்டில்தான் இருந்தன. ஆனால், அதன்பிறகு அங்கிருந்து தற்போது வேறு இடத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளன. இரட்டை இலை விவகாரத்துக்கு சற்றும் சம்பந்தம் இல்லாத இந்த விவரங்களை டெல்லி போலீஸ் கவனமாகக் குறித்துக்கொண்டது. அது தங்கள் விசாரணைக்குப் பயன்படவில்லை என்றாலும், வேறு துறைகளின் விசாரணைக்குப் பயன்படும் என்று சம்பந்தப்பட்டவர்களுக்கு இதைத் தனியாக ரிப்போர்ட் போட்டும் அனுப்பிவிட்டார்கள். அதில் இளவரசியின் மகன் விவேக் பெயர் அடிக்கடி அடிபட்டதாம். டெல்லியில் இருந்து கிடைக்கும் சிக்னலைப் பொறுத்து அவர் மீது ஆக்‌ஷன்கள் பாயலாம்’’ என்ற கழுகார், நடராசன் மேட்டருக்குத் தாவினார்.

‘‘சசிகலாவின் அண்ணன் மகன் மகாதேவனின் படத்திறப்பு நிகழ்ச்சி தஞ்சை அருளானந்த நகரில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை திவாகரன்தான் செய்தார். அமைச்சர்கள் ஓ.எஸ்.மணியன், காமராஜ், துரைக்கண்ணு ஆகியோர் கலந்துகொண்டனர். மகாதேவன் படத்தை நடராசன்தான் திறந்து வைத்தார். ‘மகாதேவன் மறைவு மொத்த குடும்பத்தையும் சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. உங்களிடம் அதிகம் பேச விருப்பமில்லை. ஸ்டாலினுடன் பேசத் தயார்; அதற்கு ஏற்பாடு செய்யுங்கள்’ என மீடியாவிடம் திரியைக் கொளுத்திப்போட்டார் நடராசன். எதற்காக இதைச் சொன்னார் என அருகில் நின்ற உறவு களுக்கும் அமைச்சர்களுக்கும் புரியவில்லை...’’

மிஸ்டர் கழுகு: கார்டன் சுவர்கள்... காட்டன் கவர்கள்!

“நடராசன் என்றாலே புதிர்தானோ?”

‘‘மகாதேவன் வீட்டின் அருகேதான் நடராசன் வீடும் இருக்கிறது. படத்திறப்பு நிகழ்ச்சியை முடித்துவிட்டு அங்கே சென்ற திவாகரனும், பாஸ்கரனும், நடராசனிடம் மூன்று மணி நேரத்துக்கு மேல் பேசினார்களாம். ‘ஓ.பி.எஸ் அணியைவிட தினகரன் அணியினர்தான் நமக்குப் பிரச்னையாக இருக்கிறார்கள்’ என ஒருவருக்கொருவர் கருத்துச் சொல்லி இருக்கிறார்கள். ‘குடும்பத்தில் யாராவது ஒருவர் தலைமையேற்று நடத்தினால்தான் கட்சியைக் காப்பாற்ற முடியும்’ என்று திவாகரனும், நடராசனும் நினைக்கிறார்கள். ஆனால், அதற்குள் ‘டாக்டர் வெங்கடேஷ் தலைமை ஏற்க வேண்டும்’ என்று ஒட்டப்பட்டுள்ள போஸ்டர், இருவரையும் டென்ஷன் ஆக்கியது.’’

‘‘டாக்டர் வெங்கடேஷின் மாமனார் ஏதோ கூட்டம் போட்டாராமே?”

‘‘ஆமாம். வெங்கடேஷின் மாமனார் பாஸ்கரன், மே 1-ம் தேதி பட்டுக்கோட்டை எஸ்.ஆர். திருமண மஹாலில் ஆலோசனைக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தார். ‘டாக்டர் வெங்கடேஷை அ.தி.மு.க பொதுச்செயலர் ஆக்க வேண்டும்’ என அந்தக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றவும் ஏற்பாடு செய்திருந்தார்கள். இது, மாவட்டச் செயலாளரான வைத்திலிங்கத்துக்குத் தெரியாமலேயே ஏற்பாடு செய்யப்பட்டு, பின்னர்தான் அவர் கவனத்துக்குச் சென்றதாம். பிறகு என்ன நடந்ததோ... கூட்டத்தை ரத்து செய்துவிட்டாராம் பாஸ்கரன்.’’

‘‘ஓஹோ.” 

‘‘சசிகலா குடும்பத்துக்கு நெருக்கடிகள் அதிகமாகிவரும் நேரத்தில், அவர்கள் குடும்பத்தில் ஒரு நல்ல காரியமும் விரைவில் நடக்க உள்ளது. பாஸ்கரனும், திவாகரனும் சம்பந்தி ஆகப்போகிறார்களாம். பாஸ்கரனின் மகள் டாக்டருக்கு படித்து வருகிறாராம். இந்த ஆண்டு படிப்பு முடிந்ததும், திவாகரன் மகன் ஜெயானந்துக்கும் அவருக்கும் திருமண ஏற்பாடு நடத்த இருக்கிறார்களாம்’’ என்றபடி பறந்தார் கழுகார். 

மிஸ்டர் கழுகு: கார்டன் சுவர்கள்... காட்டன் கவர்கள்!

எடப்பாடிக்கு பக்... தலித் எம்.எல்.ஏ-க்கள் செக்!

அ.தி.மு.க-வில் தலித் இனத்தைச் சேர்ந்த 33 எம்.எல்.ஏ-க்கள் உள்ளனர். இவர்களில் மூன்று எம்.எல்.ஏ-க்கள் ஓ.பி.எஸ். அணியில் உள்ளனர். மற்ற 30 பேர் எடப்பாடி அணியில் இருக்கிறார்கள். இந்த நிலையில்தான் சென்னையில் ஒரு ஹோட்டலில் பெரம்பலூர் எம்.எல்.ஏ இளம்பை தமிழ்ச்செல்வன் தலைமையில் சில தலித் எம்.எல்.ஏ-க்கள் கூடியிருக்கிறார்கள். ‘‘மாற்று சமுதாயத்தினர் பலரும் தங்கள் சாதி பலத்தைக் காட்டிப் பெரிய இடத்துக்கு வந்துவிட்டார்கள். நாமும் பலத்தைக் காட்ட இதுதான் சரியான நேரம்’’ எனச் சொல்லியிருக்கிறார், தமிழ்ச்செல்வன். இதுவரை அவருக்கு 16 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு கிடைத்துள்ளதாம். கூட்டத்துக்கு வராதவர்களிடமும் பேசி வருகிறார்களாம். ‘இரு அணிகளும் ஒன்றாக இணையும்போது, தலித் எம்.எல்.ஏ-க்களுக்கு அமைச்சரவையில் உரிய பிரதிநிதித்துவம் தர வேண்டும்’ என இவர்கள் எடப்பாடியிடம் அழுத்தம் கொடுக்கப்போகிறார்களாம்.

மிஸ்டர் கழுகு: கார்டன் சுவர்கள்... காட்டன் கவர்கள்!

‘‘திகார் ஜெயிலில் ஒரே அறை ஒதுக்க வேண்டும்!’’

சென்னையில் விசாரணை முடிந்து டெல்லிக்கு அழைத்துச் செல்லப்பட்ட தினகரனை, இரண்டு நாட்கள் க்ரைம் பிராஞ்ச் அலுவலக அறையிலேயே வைத்திருந்தனர். பின்னர், திங்கள்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். மீண்டும் காவலில் எடுத்து விசாரிக்க கோரிக்கை எதுவும் போலீஸ் வைக்கவில்லை. மே 15-ம் தேதி வரை நீதிமன்றக் காவலுக்கு உத்தரவிட்டார் நீதிபதி. ‘திகார் சிறையிலிருந்து நீதிமன்றத்துக்கு தினகரனைக் கூட்டிவருவதில் பாதுகாப்புச் சிக்கல்கள் இருப்பதால், அடுத்த விசாரணையை வீடியோ கான்ஃபரன்ஸிங் மூலம் நடத்த வேண்டும்’ என போலீஸ் கோரிக்கை வைக்க, அதனை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது. அதே நேரத்தில் தினகரன் தரப்பினர், ‘திகார் சிறையில் தினகரனுக்கும், மல்லிகார்ஜுனாவுக்கும் ஒரே அறை ஒதுக்க வேண்டும். அவர்களுக்கு தமிழ் மட்டுமே தெரியும். இந்தி தெரியாது’ என்றார்கள். அதனை நிராகரித்த நீதிபதி, ‘சிறை அதிகாரிகளிடம் முறையிடுங்கள்’ என்றார். திகார் சிறையின் ஏழாவது பிளாக்கில் தினகரன் அடைக்கப்பட்டார். அவருடைய வழக்கறிஞர்கள் அன்று ஜாமீன் மனு போடவில்லை என்பது ஆச்சர்யம்!

News2
News2

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a comment