Saturday, May 06, 2017

பட்டினியும் வறுமையும் தீர்க்கமுடியாத நோய்களா?

பட்டினியும் வறுமையும் தீர்க்கமுடியாத நோய்களா?

ரண்டு நிமிடங்கள் தாண்டி ஓடக்கூடிய அந்தக் குறும்படம், பார்க்கும் எவர் நெஞ்சையும் நெகிழச் செய்துவிடும். ஓர் இளைஞன் ஹோட்டலில் சென்று உணவு ஆர்டர் செய்கிறான். காத்திருக்கும் நேரத்தில் கண்ணாடிச் சுவர் வழியே வெளியில் பார்க்கிறான். அழுக்கான ஏழைச்சிறுவன் ஒருவன் பசியின் ஏக்கத்தோடு அவனைப் பார்ப்பது தெரிகிறது. இதுபோன்ற சூழலில் பலரும் முகத்தைத் திருப்பிக்கொண்டு சாப்பாட்டில் கவனம் செலுத்துவார்கள்; அல்லது, சாப்பிட்டு முடித்து வெளியில் போனபிறகு சில்லரைகளைத் தூக்கி எறிவார்கள். ஆனால், இந்த இளைஞன் அப்படி எதையும் செய்யவில்லை. வெளியில் போய் அந்தச் சிறுவனை அழைத்து வந்து, தன் எதிரில் உட்கார வைக்கிறான். தான் வாங்கிய உணவை அவனுக்கு ஊட்டி விடுகிறான். சிறுவனின் பசி தீர்ந்த நிறைவில், இவனுக்கு வயிறு நிறைந்தது. பில் கேட்கிறான். வருகிறது. எடுத்துப் பார்த்தால், ‘மனிதாபிமானத்துக்கு நாங்கள் கட்டணம் வசூலிப்பதில்லை’ என்று இருக்கிறது. திரும்பிப் பார்த்தால், கேஷ் கவுன்ட்டரில் அமர்ந்திருப்பவர், புன்னகை பூக்கிறார்.  

இந்தியாவின் தேசிய நோய், பசி. எல்லா வளர்ச்சிகளும் வரிசை கட்டி வந்தாலும், இந்த நிலைமை மட்டும் மாறவில்லை. ‘சர்வதேச உணவுக்கொள்கை ஆராய்ச்சி நிலையம்’ (The International Food Policy Research Institute), ஒவ்வோர் ஆண்டும் பட்டினிக் குறியீட்டு எண் அடிப்படையில் உலக நாடுகளை வரிசைப்படுத்தும். கடந்த 2016-ம் ஆண்டுக்கான இந்தப் பட்டியலில், மொத்தம் இடம்பெற்ற 118 நாடுகளில் இந்தியாவின் இடம் 97. ஆப்பிரிக்காவில் உள்ள பஞ்சமும் கலவரமும் சூழ்ந்த எத்தியோப்பியா, சியாரா லியோன், சாட் போன்ற நாடுகளையும்விட மோசமான இடம் நம் நாட்டுக்கு. நம் அண்டை நாடுகளான இலங்கை, வங்க தேசம், நேபாளம், பாகிஸ்தான் என அனைத்துமே நம்மைவிட நல்ல நிலையில் இருக்கின்றன.  

பட்டினி பற்றியும், சத்துக் குறைபாடு பற்றியும், அதனால் நிகழும் குழந்தைகள் மரணம் எனும் துயரம் பற்றியும் எப்படி மருத்துவத்தின் கீழ் பேசுவது என்பதே கேள்விக்குரிய ஒன்றாகும். பசிக்கும், சத்து இன்மைக்கும், அகால மரணத்துக்கும் மருந்து என்ன? உணவு மட்டுமே. இதை மறந்துவிட்டு, பல அலங்காரத் திட்டங்கள் ஒவ்வோர் அரசாலும், புதிது புதிதாக வாரி வழங்கப்படுகின்றன. ஆனால், நின்ற இடத்திலேயேதான் நாம் நின்று கொண்டுள்ளோம்.

வறுமையும் பசியும் பட்டினியும் ஒரு மாயச்சுழலுக்குள் சமூகத்தை எப்போதும் வைத்திருக்கும். வறுமையால் சத்துக்குறைபாட்டோடு குழந்தைகள் பிறந்து வளர்கிறார்கள். இப்படி வளரும் பெண் குழந்தைகள், இளம் வயதிலேயே திருமணம் செய்து கொடுக்கப்படுகின்றனர். அவர்கள் தாய்மை அடையும்போது, கருவிலிருந்தே அந்தக் குழந்தைக்கு போதுமான ஊட்டச்சத்து கிடைப்பதில்லை. இந்தியாவில் பிறக்கும் மூன்று குழந்தைகளில் ஒன்று, குறை எடை கொண்டதாகப் பிறக்கிறது. இந்தக் குழந்தை எப்படி நம் பொன்னுலகக் கனவை நிறைவேற்றும்?

இந்தியாவில் ஐந்து வயதுக்குள் மரணத்தைச் சந்திக்க நேரும் பரிதாப ஜீவன்களில், 50 சதவிகிதக் குழந்தைகளின் மரணத்துக்குக் காரணம் ஊட்டச்சத்துக் குறைபாடுதான். இதை அம்மாக்களின் கருப்பையிலிருந்தே சரிசெய்ய வேண்டும். ஆனால், இந்தியப் பெண்கள் அந்த விஷயத்திலும் துரதிர்ஷ்டசாலிகள். இந்தியாவில் 15 வயது முதல் 49 வயது வரை இருக்கும் பெண்களில், சுமார் 55 சதவிகிதம் பேர் ரத்தசோகை பிரச்னையோடு இருக்கிறார்கள். இவர்களின் குழந்தைகளும் இதே பிரச்னையோடு பிறக்கின்றன. இளம் வயதில் கர்ப்பமுறும் பெண்கள், வளர்ச்சி குறைந்த குழந்தைகளைப் பெறுவதுடன், தொடர் பிரசவங்களால் ரத்தம் இழந்து, சத்து இழந்து போகின்றனர்.

‘தரமான வாழ்வு, சத்தான உணவு, உடல்நல வாழ்வு வழங்குவோம்’ என்று நமது அரசியல் சாசனம் 60 ஆண்டுகளுக்குமுன் வழங்கிய உறுதிமொழி, முடங்கி உறங்குகிறது. கருவுற்ற பெண்களுக்கு சத்துணவு, ஒன்றரைக் கோடி பள்ளிக் குழந்தைகளுக்கு மதிய உணவு, தூய்மை இந்தியா, மலிவு விலைப் பொது விநியோகத் திட்டம், ஒன்றரைக் கோடி அங்கன்வாடிகள், உணவுப்பாதுகாப்புச் சட்டம் என்று எத்தனையோ திட்டங்கள் வந்த பின்னும் எந்த மாற்றமும் இல்லையே! சுடுகாட்டுத் திட்டத்திலும் பணம் தின்னும் பேராசைக்காரர்கள் இருக்கும் இடத்தில், எந்தத் திட்டம் வெற்றி பெறும்? 

எடைக் குறைவு, வளர்ச்சிக் குறைவு, நுண்ணூட்டச் சத்துக் குறைவு என்பன எல்லாமே குழந்தைகள், பெண்களின் உடலை மட்டும் பாதிப்பதில்லை. அவர்களின் அறிவுத்திறனையும் செயற்திறனையும்  குறைக்கின்றன. இந்தியர்களால் நோபல் பரிசுகளை வெல்ல முடியாததற்கும், ஒலிம்பிக் வெற்றிகள் நமக்கு வெறும் ஏக்கமாகவே இருப்பதற்கும், இந்தச் சமூக அவலங்களே முதன்மையான காரணம். இப்பெரும் சமூக சாபக்கேட்டிலிருந்து மீளும் வழி குறித்து சிந்திக்க வேண்டும். 

தமிழகத்தின் மலைப்புற கிராமங்களில் அரசு மருத்துவமனைகள் எவ்விதம் செயல்படுகின்றன என்பதை ஆய்வு செய்ய சமீபத்தில் சென்றிருந்தோம். அழகழகான பெரிய கட்டடங்கள். அவற்றில் பல, பயன்பாடின்றி தூங்கிக் கொண்டிருந்தன. அலுவலர்கள் பலர் இல்லை. வனாந்திரக் காட்டில், ‘24 மணி நேரம் இயங்கும் மருத்துவமனை’ என்ற பலகை இருந்தது. இரவில் பணியாற்றும் பெண் ஊழியர்களுக்குப் பாதுகாப்பில்லை. அந்த மலைவாழ் மக்களில், மருத்துவம் படித்த இளைஞர் எவருமில்லை. ‘நீட்’ தேர்வுகள் நல்ல டாக்டர்களை அமெரிக்காவுக்கு உருவாக்கித் தரலாம். உள்ளூர் பயன்பெறுமா? இந்தச் சிந்தனை கொண்ட ஆட்சியாளர்கள் தேவை.

பட்டினியும் வறுமையும் தீர்க்கமுடியாத நோய்களா?

கர்நாடகாவின் ராய்ச்சூர் மற்றும் குல்பர்கா மாவட்டங்களில் உலக வங்கி உதவியோடு ஓர் ஊட்டச்சத்து திட்டம் பரிசோதனை அடிப்படையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. வெற்றிகரமான திட்டம் எனப் பெரும் பாராட்டு இதற்குக் கிடைத்திருக்கிறது. இதற்கு முக்கியமான காரணம், இது சுகாதாரத் துறையாலோ, சமூகநலத் துறையாலோ நடைமுறைப்படுத்தப்படவில்லை. கிராமப் பஞ்சாயத்து இதைச் செய்கிறது. அந்தக் கிராமத்திலேயே ஒரு பெண்ணுக்கு பயிற்சி தரப்பட்டு, அவரே இதைச் செயல்படுத்துகிறார். குழந்தைகள், பெண்களுக்கு வெறும் மருந்துகள் மட்டுமே தராமல், உள்ளூரில் கிடைக்கும் காய்கறிகள் மற்றும் பழங்கள் மூலம் ஊட்டச்சத்து பெறும் வழிகளைச் சொல்லிக்கொடுக்கிறார் அவர். அதோடு, தூய்மையான குடிநீரும், சுகாதாரமான கழிப்பறை வசதிகளும் செய்யப்படுகின்றன. இந்த இரண்டும் இல்லாமல் ஆரோக்கியமான வாழ்வு சாத்தியமில்லை. இப்படி உள்ளூர்ப் பெண்ணே டாக்டராக, செவிலியராக வந்து விட்டால், எப்படிக் கைகழுவுவது, எப்படிச் சாப்பிடுவது, எதைச் சாப்பிடுவது என்பதை மிகச் சரியாகச் சொல்லிக் கொடுத்து ஆரோக்கிய வாழ்வை உருவாக்கி விட முடியும். 

ஸ்டாக்ஹோமில் நடைபெற்ற முதல் உலகச் சுற்றுச்சூழல் மாநாட்டில் பங்கேற்ற இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி, ‘‘வறுமையே உலகின் அனைத்து மாசுபடலுக்கும் தாய்” என்றார். இது சத்துணவின்மை, நுண்ணூட்டச் சத்துக்குறைவு, எடை குறைவு, ரத்த சோகை, குழந்தைகள் மரணம் என அனைத்துக்கும் பொருந்தும். வறுமை ஒழிக்கும் சமத்துவமும், அறியாமை அழிக்கும் கல்வியும், மக்களின் தன்னாட்சி உணர்வுமே இந்நோய்களை ஒழிக்கும் உன்னத மருந்துகள். ‘மதிய உணவு சாப்பிடும் குழந்தைகளுக்கும் ஆதார் கட்டாயம்’ என்பது போன்ற நடைமுறைகள், நிச்சயம் எந்த மாற்றத்துக்கும் உதவாது.  

இந்தியா வறுமையில் உழல்வதன் மிக முக்கிய காரணம் கட்டுப்படுத்தப்படாத மக்கள்தொகை பெருக்கம். அதை சரிசெய்ய என்ன நடவடிக்கை எடுத்தாலும் அது இந்த கடவுளுக்கு எதிரானது, அந்த கடவுளுக்கு எதிரானது என்று ஒரு கும்பல் கிளம்பும். அந்த கூட்டத்தின் ஓட்டுக்கள் ஆட்சியில் இருக்கவும் ஆட்சியை பிடிக்கவும் முக்கியமாக இருக்கின்றன. இதற்கு அடுத்த முக்கிய காரணம், இந்திய மக்களின் சோம்பேறித்தனம். கடவுள் என்பவன் இவர்களது வேலையாள் மாதிரியும், இவர்கள் எந்த கெடுதலும் செய்யாமல் இருந்தாலே இவர்களை வளப்படுத்த வேண்டிய கடன் அவனுடையது என்றும் நினைக்கிறார்கள். 

News2
News2

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a comment