Saturday, May 06, 2017

எய்ம்ஸ் மருத்துவமனையைத் தடுக்கிறதா சசிகலா குடும்பம்?

எய்ம்ஸ் மருத்துவமனையைத் தடுக்கிறதா சசிகலா குடும்பம்?

ல்லிக்கட்டுப் போராட்டத்துக்குப் பிறகு, மற்றொரு மிகப் பெரிய போராட்டத்துக்குத் தயாராகி வருகிறார்கள் மதுரை மக்கள். மதுரை மாவட்டத்தில் மத்திய அரசு அமைக்க இருந்த எய்ம்ஸ் மருத்துவமனை தஞ்சாவூருக்குச் செல்ல இருப்பதாகவும், இதன் பின்னணியில் சசிகலா குடும்பம் இருப்பதாகவும் வெளியாகியுள்ள தகவலால் மதுரை தகிக்கிறது.

மதுரையில் செயல்பட்டுவரும் அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு நாள்தோறும் பல ஆயிரக்கணக்கான மக்கள் சிகிச்சைக்கு வந்து செல்கிறார்கள். தனியார் மருத்துவமனைகள் பல இருந்தபோதிலும், நடுத்தர மற்றும் ஏழை மக்கள் செல்லக்கூடிய  இடமாக இருப்பது அந்த மருத்துவமனைதான். இதைத் தாண்டிய உயர்சிகிச்சைக்காக சென்னை, கோவை, திருவனந்தபுரம் போன்ற நகரங்களுக்கு அலைய வேண்டிய நிலையில் தென் மாவட்ட மக்கள் இருக்கிறார்கள். எனவே, எய்ம்ஸ் போன்ற உயர்சிகிச்சை மருத்துவமனையை மதுரையில் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாகவே எழுப்பப்பட்டு வந்தது. 

இந்த நிலையில், தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனையை அமைப்பதற்கான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டது. அதையடுத்து, தமிழகத்தில் சில நகரங்களுக்கு வந்து ஆய்வுசெய்த மத்தியக் குழுவினர், மதுரைக்்கும் வந்தனர். மதுரை அருகே தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான இடம் தேர்வுசெய்யப்பட்டது. அந்த இடம், நான்கு வழிச்சாலைக்கு மிக அருகில் உள்ளது. ஐந்து கி.மீ தொலைவில் விமான நிலையம் உள்ளது. தென்மாவட்டங்கள், மேற்கு மாவட்டங்கள், மத்திய மாவட்டங்களில் இருந்து ஐந்து மணி நேரத்துக்குள் வரக்கூடிய இடமாகவும் தோப்பூர் உள்ளது. எனவே, எய்ம்ஸ் மருத்துவமனை மதுரைக்கு வரப்போகிறது என்று மிகுந்த எதிர்பார்ப்புடன் மதுரை மக்கள் இருந்தனர். 

ஆனால், கடந்த பிப்ரவரி மாதம் பிரதமர் மோடியைச் சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி,  ‘தஞ்சையில் எய்ம்ஸ் மருத்துவமனையை அமைக்க வேண்டும்’ என்ற கோரிக்கையை வைத்தார். இதன் பின்னணியில் சசிகலா இருப்பதாகச் சொல்லப்படுகிறது. தஞ்சாவூர் பகுதிக்குப் பெரிய திட்டங்களைக் கொண்டுவர வேண்டும் என்று அவர் அமைச்சர்களிடம் பேசியிருக்கிறார். சசிகலா குடும்பத்தின் தீவிர விசுவாசியான சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், ‘எய்ம்ஸ் மருத்துவமனையைத் தஞ்சாவூருக்கு மாற்றிவிடலாம். டெல்டா மாவட்ட மக்கள் காலம் முழுதும் உங்களைப் போற்றுவார்கள்’ என்று சொல்லியிருக்கிறார். டெல்டா பகுதி மக்களிடையே தங்கள் குடும்பச் செல்வாக்கை அதிகரிக்க வேண்டும் என்பதோடு, எய்ம்ஸ் மருத்துவமனை வந்தால் அங்கு நிலங்களின் மதிப்பு பல மடங்கு அதிகரிக்கும் என்பதும் சசிகலா குடும்பத்தின் கணக்கு என்று சொல்லப்படுகிறது.

எய்ம்ஸ் மருத்துவமனையைத் தடுக்கிறதா சசிகலா குடும்பம்?

சசிகலா குடும்பம் தந்த அழுத்தத்தைத் தொடர்ந்தே இப்படி ஒரு முடிவை தமிழக அரசு எடுத்ததாகச் சொல்லப்படுகிறது. இதை எதிர்த்து அ.தி.மு.க தவிர அனைத்துக் கட்சியினரும் இணைந்து போராட்டம் நடத்திவருகின்றனர்.

“மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையைக் கொண்டுவர வேண்டும் என்று நீண்டகாலமாக வலியுறுத்தி வருகிறோம். இதுதொடர்பாக, மறைந்த முன்னாள் எம்.பி-யான மோகன், நாடாளுமன்றத்தில் பலமுறை பேசியிருக்கிறார். இவ்வளவு காலத்துக்குப் பிறகு, இங்கு எய்ம்ஸ் வரப்போகிறது என்ற மகிழ்ச்சியில் இருந்தோம். ஆனால், இதை தஞ்சாவூருக்குக் கொண்டு போகிறார்கள் என்ற தகவல் அதிர்ச்சி அளிக்கிறது. தஞ்சாவூருக்கும் எய்ம்ஸ் கொண்டு வரட்டும், வேண்டாமென்று சொல்லவில்லை. மத்திய அரசு நினைத்தால் ஒரே மாநிலத்தில் இரண்டு, மூன்று எய்ம்ஸ் மருத்துவமனைகளை அமைக்கலாம். ஆனால், முதன்முதலில் இடம் தேர்வுசெய்யப்பட்ட மதுரைக்கு முதலில் எய்ம்ஸ் வரட்டும். மத்திய அரசின் குழு தமிழகத்தில் சில நகரங்களைப் பார்வையிட்டு சாதக பாதகங்களை ஆய்வு செய்தது. மற்ற நகரங்களைவிட மதுரையே சிறந்த இடம் என்று முடிவு செய்தது. இப்போது, அரசியல் காரணங்களுக்காக அதை மாற்றப்போவதாகச் சொல்கிறார்கள். இதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம்” என்றார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ அண்ணாதுரை.

எய்ம்ஸ் மருத்துவமனையைத் தடுக்கிறதா சசிகலா குடும்பம்?

மதுரை மத்திய தொகுதி எம்.எல்.ஏ-வான பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், “மதுரையில் எய்ம்ஸ் கொண்டுவரவே மத்திய அரசு விரும்புகிறது என்று டெல்லியில் இருந்து எங்களுக்குத் தகவல் கிடைத்தது. தோப்பூரில் எரிவாயுக் குழாய் பூமிக்கடியில் செல்கிறது என்று ஒரு பிரச்னையை சிலர் கிளப்பினார்கள். அதனால், எய்ம்ஸ் கட்டுமானத்துக்கு எந்த பாதிப்பும் வராது. ஒருவேளை, அது ஒரு பிரச்னையாகத் தெரிந்தால், மாவட்ட நிர்வாகம் வேறு இடத்தைத் தேர்வு செய்யலாம். தற்போது எய்ம்ஸை விரைவாக மதுரையில் அமைக்க தமிழக அரசுதான் முயற்சிசெய்ய வேண்டும், ஆனால், இந்த ஆட்சி இருக்கும்வரை அதற்கு வாய்ப்பில்லை. ஒட்டுமொத்த தென்மாவட்ட மக்களும் இதற்காகக் குரல் எழுப்ப வேண்டும்” என்றார்.

மதுரை மாவட்ட குறுந்தொழில் மற்றும் சிறுதொழில்கள் சங்கமான ‘மடீட்சியா’ தலைவர் முராரி, செயலர் முருகன், துணைத் தலைவர் முருகானந்தம் ஆகியோரைக் கொண்ட ‘எய்ம்ஸ் மருத்துவமனைக்கான மக்கள் இயக்கத்தினர்’, சமீபத்தில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி.நட்டாவை சந்தித்துக் கோரிக்கை மனு அளித்தனர். அதன் தலைமை ஒருங்கிணைப் பாளர் மணிமாறனிடம் பேசினோம். “மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்பட்டால், தமிழகத்தின் 18 மாவட்டங்களில் உள்ள 2.8 கோடி மக்கள் பயனடைவர் என்பதையும், மதுரையில் உள்ள போக்குவரத்து வசதிகள் உள்ளிட்ட விவரங்களையும் எடுத்துச் சொன்னோம். அதைக்கேட்டுத் திருப்தி அடைந்த அவர், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையை அமைக்க உதவுவதாக உறுதியளித்தார். அதனால், எங்களுக்கு நம்பிக்கை உள்ளது. மதுரையில் எய்ம்ஸைக் கொண்டுவர தமிழக அரசு உதவவேண்டும்” என்றார்.

மதுரையில் வலுவாகக் காலூன்றியுள்ள சில கார்ப்பரேட் மருத்துவமனை அதிபர்கள், இங்கு எய்ம்ஸ் வந்துவிடக்கூடாது என்று லாபி செய்து வருகிறார்களாம். இந்தத் தகவல்களை அறிந்து கொந்தளிப்பில் இருக்கிறார்கள் மதுரை மக்கள்.

‘எய்ம்ஸ் மருத்துவமனையை மதுரையில்தான் அமைக்க வேண்டும்’ என்று மதுரை காளவாசலில் மிகப் பெரிய அளவில் பட்டினிப் போராட்டத்தை சமீபத்தில் நடத்தினர்.மேலும் தொடர் போராட்டங்களை மக்கள் முன்னெடுத்து வருகிறார்கள். தமிழக அரசியலின் குழப்பமான இப்போதைய சூழலில், தங்கள் கோரிக்கைக்கு தெளிவான நியாயம் கிடைக்கும் என்று நம்புகிறார்கள் மதுரை மக்கள்.

இலவச சிகிச்சை - கட்டண சிகிச்சை!

வெளி நோயாளியாக சிகிச்சைபெற ஆண்டுப் பதிவுக் கட்டணம் 10 ரூபாய். உள்நோயாளிகளுக்கு ஒருமுறை மட்டும் நுழைவுக் கட்டணம் 25 ரூபாய். ஒரு நாள் பெட் வாடகை 35 ரூபாய். வசதியுள்ளவர்கள் ரூ.2,000 செலுத்தி பி கிளாஸிலும், ரூ.3,000 செலுத்தி ஏ கிளாஸிலும் ஏ.சி வசதியுடன் சிகிச்சைபெறலாம். வழக்கமான பரிசோதனைகளும் சிகிச்சைகளும் இதில் அடங்கிவிடும். டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் ஆண்டுக்கு ஒரு லட்சத்துப் பத்தாயிரம் பேர் இதய சிகிச்சைப் பெறுகின்றனர். 4,600 பேர் இதய அறுவை சிகிச்சை செய்துகொள்கின்றனர். பிரைவேட் வார்டில் ஹார்ட் ஆபரேஷனுக்கு ஒரு லட்சத்து 47 ஆயிரம் ரூபாய் வாங்குகிறார்கள். அதேநேரம், ஏழை நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சை முழுக்க இலவசம்தான். இப்படி, வசதியானவர்களும் வசதியற்றவர்களும் பயன்பெறும் வகையில், எய்ம்ஸ் மருத்துவமனையின் செயல்பாடு இருக்கும்.

News 2
News 2

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a Comment