Wednesday, May 03, 2017

கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!

‘ரஜினி, அரசியலுக்கு லாயக்கு இல்லை’ என்கிறாரே சுப்பிரமணியன் சுவாமி?

அமித் ஷாவிடம் சொல்லச் சொல்லுங்கள்!

ஜெ.தீபாவின் எதிர்காலம் இனி எப்படி அமையும்?

அ.தி.மு.க-வின் எதிர்காலத்தையே கணிக்க முடியாதபோது, தீபாவின் எதிர்காலம் பற்றி என்ன சொல்ல முடியும்? இன்று காலையில், தீபா பேரவை அலுவலகம் வழியாக வந்தேன். கதவு பூட்டப்பட்டுக் கிடக்கிறது. நான்கு பேர் வெளியில் உட்கார்ந்து இருக்கிறார்கள். அவ்வளவுதான்! நீங்களே கணித்துக்கொள்ளுங்கள்.

பணத்தால் எதையும் சாதித்துவிட முடியும் என்று எண்ணிச் செயல்பட்ட தினகரனுக்கு ஏற்பட்ட கதி குறித்து?

வருமானத்துக்கு அதிகமாக 66 கோடி ரூபாய் சொத்து சேர்த்த வழக்கில் இருந்து விடுபடுவதற்காக, அதைவிட பத்து மடங்கு  அதிகமாக செலவழித்தது தெரிந்துமா இன்னும் இவர்கள் திருந்தவில்லை?

சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூரு நீதிமன்றத்தில் குன்ஹா தீர்ப்புத் தருவதற்கு மூன்று நாட்களுக்கு முன்னால், ‘விடுதலை நிச்சயம். தீர்ப்பின் நகலை நான் பார்த்துவிட்டேன்’ என்று சொல்லி ஏமாற்றி ஒருவர் ஆறு கோடி ரூபாய் வாங்கிய கொடுமை நடந்ததாக ஒரு செய்தி உண்டு. இப்போது யாரென்றே தெரியாத ஒருவரிடம் 50 கோடிக்கு பேரம் நடந்து, 10 கோடி ரூபாய் முன்பணமாகத் தரப்பட்டதாக வழக்குப் பதிவாகி உள்ளது.

‘பணத்தால் எதையும் சாதிக்கலாம்’ என்ற நோக்கம் மட்டும் இதில் தெரியவில்லை. அபரிமிதமாக கொட்டிக் கிடக்கும் பணத்தை எப்படிச் செலவு செய்வது என்று தெரியாமல் ஊதாரித்தனமாக அள்ளி வீசுகிறார்கள் என்பதையும் உணர முடிகிறது. தினகரனின் வாழ்க்கை என்பது... முதலில் பணம் எண்ணுதல். இப்போது கம்பி எண்ணுதல்.

‘இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரை, இந்தியாவுக்கு எதிராக நடந்த போர் போலவே கருதி, நாங்கள் கேட்காமலேயே இலங்கை அரசுக்கு இந்தியா உதவி செய்தது’ என்று அந்த நாட்டின் முன்னாள் அதிபர் ராஜபக்சே சொல்லி இருக்கிறாரே?

ராஜபக்‌சே உண்மையைத்தான் சொல்லி இருக்கிறார். இலங்கையின் உள்நாட்டுப் போருக்கு அன்றைய காங்கிரஸ் அரசாங்கம் முழுமையான ராணுவ உதவிகளை, கண்காணிப்பு உதவிகளைச் செய்து கொடுத்தது. அதற்கு அவர்கள் சொன்ன காரணம், ‘நாம் இந்த உதவிகளை இலங்கைக்குச் செய்து தராவிட்டால் சீனா செய்யும்’ என்பது. இந்தியாவைக் காட்டி சீனாவிடமும், சீனாவைக் காட்டி இந்தியாவிடமும் சாமர்த்தியமாக உதவி பெற்றது இலங்கை. இன்று சீனாவின் ராணுவ மையமாக இலங்கை மாறிக்கொண்டு இருக்கிறது. இந்தியா என்ன செய்யப் போகிறது?

தொடர்ச்சியாக மனித உரிமை விசாரணைகளில் இலங்கையை நாம் காப்பாற்றிக்கொண்டேதான் இருக்கப் போகிறோம். தமிழ் மக்களின் தலையெழுத்து அப்படி இருந்தால் என்ன செய்ய முடியும்?

அ.தி.மு.க-வின் இரு அணிகளும் ஒரே அணியாக மாறினால், ஜெயலலிதாவின் மரணம் என்ன ஆகும்?

ஜெயலலிதாவா, அவர் யார்? எம்.ஜி.ஆருடன் படத்தில் நடித்தாரே, அவரா? இறந்துவிட்டாரா அவர்? பாவம், வயதான நிலையில் உடல்நலமில்லாமல் இறந்துபோய் விட்டாரா? ஆழ்ந்த அஞ்சலிகள்!

சூதாடச் சென்றுவிட்டு, ‘தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்’ என்று தத்துவம் பேசுகிறார்களே?

சூப்பர்! நெத்தியடி! பாவம் செய்தவர்கள் பயன்படுத்தும் பழமொழியாக இது மாறிப் போனது!

எம்.ஜி.ஆரின் இரட்டை இலைச் சின்னத்துக்கு ஐம்பது கோடி ரூபாய் என்று விலை வைத்துவிட்டாரே தினகரன்?

புரோக்கர்களின் கைகளுக்குக் கட்சி போனால், விலைதானே வைப்பார்கள்? 

கழுகார் பதில்கள்!

டெல்லியில் போராட்டம் நடத்திய விவசாயிகளை நேரில் சந்திப்பதில் பிரதமருக்கு என்ன சிக்கல்?

‘போராட்டம் நடத்துபவர்களை பிரதமர் சென்று சந்திப்பது மரபு அல்ல’ என்கிறார் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன். இந்த நாட்டில், பிரதமர் படத்தைத் தனியார் நிறுவனம் தனது விளம்பரத்துக்குப் பயன்படுத்துகிறது. அவர்களுக்கு 500 ரூபாய் அபராதம் போடுகிறார்கள். அரசு முறைப் பயணமாக வெளிநாடு செல்லும் பிரதமருடன், தனியார் தொழிலதிபர் செல்கிறார். நாடாளுமன்றம் நடந்துகொண்டு இருக்கும்போது, அமைச்சர்கள் வெளிநிகழ்ச்சிகளில் பங்கெடுத்து அறிவிப்புகளைச் செய்யக்கூடாது. ஆனால், பிரதமர் வெளிநாட்டுக்கே போய்விடுகிறார். மரபுகள் காப்பாற்றப்படுகின்றன. மரபுகளைக் காப்போம். மரபுகள்தான் முக்கியம்!

ஊழலை ஒழிப்பதற்காகவே அவதாரம் எடுத்ததாகக் கூறிக்கொள்ளும் சுப்பிரமணியன் சுவாமி, தொடர்ச்சியாக சசிகலா, தினகரன் ஆகியோரை ஆதரித்துக் கருத்துச் சொன்னது புரியவில்லையே?

‘பொன்’மலையில் இருந்துமா புரியவில்லை!

கழுகார் பதில்கள்!

வி.ஐ.பி கேள்வி! சத்யராஜ்  நடிகர்

நல்லகண்ணு ஐயா போன்ற நேர்மையான அரசியல்வாதிகள் பின்னால், தனித்து ஆட்சியைப் பிடிக்கும் அளவுக்கு மக்கள் ஏன் அணி திரள்வதில்லை?

நல்லகண்ணு கோவை நாடாளுமன்றத் தொகுதியில், போட்டியிட்டபோது அத்தொகுதி மக்களே அவரைத் தோற்கடித்தார்கள். பெரும்பாலும் ‘கம்யூனிஸ்டுகளின் கோட்டை’ என்று சொல்லப்படும், மிகுதியாகத் தொழிலாளர்கள் வாழும் கோவைத் தொகுதியிலேயே இந்த கதி என்றால், மற்றத் தொகுதிகளைப் பற்றி நாம் சொல்லத் தேவையில்லை.  

தி.மு.க, அ.தி.மு.க-வுக்கு மாற்றாக கடந்த சட்டமன்றத் தேர்தலில், மக்கள் நலக் கூட்டணி அமைக்கப்பட்டது. அதில், ம.தி.மு.க, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் பங்கேற்றன. அப்போது, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், ‘நல்லகண்ணுவை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும்’ எனக் கோரிக்கை வைத்தார். கூட்டணியின் மற்ற தலைவர்கள் எதுவும் சொல்லவில்லை. இவர்களை நல்லகண்ணுவுக்கு எதிரிகள் என்று நாம் எடுத்துக்கொள்ள முடியுமா?

இன்றைய அரசியல் பணமயமானது; வணிகமயமானது; ஜாதிமயமானது; மதமயமானது. இத்தகைய காலகட்டத்தில், வெல்லும் குறியீடாக நல்லகண்ணு போன்றவர்களை மக்களும் நினைக்கவில்லை, அரசியல் கட்சிகளும் நினைக்கவில்லை. ‘மாற்றம் வேண்டும்’ என்று சொல்லக்கூடிய மாற்று அரசியலை முன்னெடுக்கக்கூடிய இயக்கங்களும் அங்கீகரிக்கவில்லை. 

மக்கள் தங்கள் தகுதிக்கேற்ற தலைவரைத் தேர்ந்தெடுக்கிறார்கள்’ என்று பெரியார் சொன்னது காலம் கடந்தும், நின்று நிலைக்கிறது! ஒரு நல்லகண்ணு இருந்தால், ஒதுக்கப்படுவார். ஆனால், ஓராயிரம் நல்லகண்ணுகள் உருவாகும்போது ஒதுக்கமுடியாது.

News2
News2

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a comment