Saturday, May 13, 2017

ஊரெல்லாம் கறுப்புக் கொடி... உச்ச நீதிமன்றத்துக்கு எதிர்ப்புக் கொடி!

ஊரெல்லாம் கறுப்புக் கொடி... உச்ச நீதிமன்றத்துக்கு எதிர்ப்புக் கொடி!

காபாரத கர்ணனை தாய் குந்தி நிராகரித்தாள். நீதிபதி கர்ணனை உச்ச நீதிமன்றம் நிராகரித்திருக்கிறது. கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்துகொண்டு தினம் ஒரு சர்ச்சை, நீதிபதிகளுக்கே தண்டனை விதித்து அதிரடி உத்தரவுகள், சக நீதிபதிகள் மீது மோசமான புகார்கள் என உச்ச நீதிமன்றத்துக்கு எதிராகக் கொடி பிடித்த கர்ணனை இப்போது போலீஸ் தேடுகிறது. அவருக்கு மனநலப் பரிசோதனை நடத்த முதலில் உத்தரவிட்டதோடு, ஆறு மாத சிறைத்தண்டனை விதித்து இப்போது கைது செய்யவும் சொல்லியிருக்கிறது, உச்ச நீதிமன்றம். சென்னைக்கு வந்த கர்ணன் எங்கு இருக்கிறார் என்று தெரியாமல், அவரைக் கைது செய்ய வந்த மேற்கு வங்காள போலீஸார் அல்லாடிக்கொண்டிருந்த நேரத்தில், தண்டனையைத் திரும்பப் பெறவேண்டி கர்ணன் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் முறையிடப்பட்டுள்ளது.

ஏராளமான சர்ச்சைகளுக்குக் காரணமாகி விட்ட கர்ணனைப் பற்றி அவருடைய கிராம மக்கள் என்ன நினைக்கிறார்கள்? கர்ணனின் சொந்த ஊரான, கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகேயுள்ள கர்ணத்தம் கிராமத்துக்குச் சென்றோம். கிராமத்தின் பெரும்பாலான வீடுகளில் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து கறுப்புக் கொடி ஏற்றப்பட்டிருந்தது. கர்ணனின் சொந்த வீடும் ஒரு கறுப்புக் கொடியோடு காட்சி அளித்தது. 50 வருடங்களுக்கு முன் கட்டிய எளிமையான மாடி வீடு. விவசாயக் குடும்பம். 

‘‘ஆசிரியரான அப்பா சுவாமிநாதன் பெரியாரின் தீவிரக் கொள்கைப் பற்றாளர். அப்போதே பல சுயமரியாதைத் திருமணங்களை நடத்தி வைத்திருக்கிறார். அந்த வழியில் வந்த கருணாநிதியின் பெயரைத்தான் தன் மகனுக்கும் சூட்டினார். அதை நியூமராலஜிபடி, கடந்த 1991-ம் ஆண்டு அரசு கெஜட்டில், கர்ணன் என்று மாற்றிக்கொண்டார்.

கர்ணனின் உடன் பிறந்தவர்கள் நான்கு பேர். அண்ணன் மனுநீதி, என்.எல்.சி-யில் சூப்பர்வைசராக இருந்து பணி ஓய்வுபெற்றவர். ஒரு தம்பி தெய்வநீதி, சென்னை உயர் நீதிமன்றத்தில் சீனியர் வழக்கறிஞர். இன்னொரு தம்பி திருவள்ளுவர், தமிழ்நாடு சிறப்புக் காவல் படையில் எஸ்.ஐ. இன்னொருவர், அறிவுடைநம்பி. விருத்தாசலம் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக உள்ளார். நீதிபதி கர்ணனின் மனைவி சரஸ்வதி, சென்னை மாநிலக் கல்லூரியில் பேராசிரியராக உள்ளார். கமல்நாத், சுகன் என இரண்டு மகன்கள்.

ஊரெல்லாம் கறுப்புக் கொடி... உச்ச நீதிமன்றத்துக்கு எதிர்ப்புக் கொடி!

ஆரம்பக் கல்வியை கர்ணத்தம் பள்ளியில் தொடங்கி, பி.யூ.சி-யை விருத்தாசலம் கல்லூரியில் படித்தார். கல்வியில் கவனம் செலுத்த முடியாமல் பி.யூ.சி-யில் தேர்ச்சி பெறாமல் போனார். அதன்பின் திருச்சி சென்று அதனை முடித்து, பின்னர் சென்னை புதுக்கல்லூரியில் பி.எஸ்.சி. முடித்து, அம்பேத்கர் சட்டக்கல்லூரியில் பி.எல் முடித்தார்’’ என அவரைப் பற்றிய பின்னணித் தகவல்கள் ஊரில் உள்ள பலருக்கும் தெரிந்திருக்கிறது.

கர்ணத்தம் கிராமத்தைச் சேர்ந்த செல்வராஜ், ‘‘விடுமுறை கிடைக்கும்போது ஊருக்கு வருவார். அப்போது நீதிபதி என்ற தோரணையே இருக்காது.  எளிமையாகவே பழகுவார். சித்தப்பா, அண்ணன், தம்பி என்று உறவு சொல்லி அழைத்து, மிக எளிமையாக தரையில் உட்கார்ந்து பேசுவார். ஆடம்பரம் இல்லாமல் பூர்வீக வீடான இந்த வீட்டில்தான் தங்குவார். மாணவர்களை அழைத்து, ‘தேர்வில் ஃபெயிலானால் நெறையபேர் தற்கொலை செஞ்சுக்குறாங்க. நீங்க அப்படியிருக்கக் கூடாது. மீண்டும் முயற்சி செய்யணும். நானே ஃபெயிலானவன்தான்’ என்று அறிவுரை சொல்வார். அவர் வழக்கறிஞராக இருந்தபோது இங்கு ஒரு சாதிக் கலவரம். அதில் பலபேர்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அந்த வழக்கை அவர் இலவசமாக நடத்திக்கொடுத்தார்” என்றார்.

ஊரெல்லாம் கறுப்புக் கொடி... உச்ச நீதிமன்றத்துக்கு எதிர்ப்புக் கொடி!

நீதிபதி கர்ணனின் சகோதரர் அறிவுடைநம்பி, “இந்திய அரசியல் அமைப்பு சட்டப்படி, உயர் பதவிகளில் உள்ளவர்கள் மீது எந்தவித குற்றச்சாட்டுகள் வந்தாலும் அவர்களைப் பதவி நீக்கம் செய்ய நாடாளுமன்றத்துக்குத்தான் அதிகாரம் உண்டு. உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க, அரசியலமைப்பு சட்டத்தில் இடம் கிடையாது. ஊழல் நீதிபதிகளின் பெயரை வெளியிட்டதற்காக நீதிமன்ற அவமதிப்பு எனச் சொல்லி,  நீதிபதி கர்ணனுக்குத் தண்டனை வழங்கியிருப்பது இந்திய அரசியல் சட்டத்துக்கு விரோதமானது. இவர் தலித் என்பதால் இவரை பலமுறை அவமானப்படுத்தியிருக்கிறார்கள். அதை உச்ச நீதிமன்றத்தில் சுட்டிக் காட்டியிருக்கிறார். உச்ச நீதிமன்றம் விதித்த தீர்ப்பை திரும்பப்பெறும் வரை கிராம மக்கள் அனைவரும் திரண்டு ஜனாதிபதியிடம் மனுகொடுக்கும் போராட்டம் நடத்தவுள்ளோம்” என்றார்.

சொந்த ஊராரின் பாசம் சொல்லி மாளவில்லை!

News2
News2

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a comment