Saturday, May 13, 2017

“ஆளும் கட்சிக்குத் துதிபாடும் ஜமாலுதீனுக்குப் பதவி நீட்டிப்பா?”

“ஆளும் கட்சிக்குத் துதிபாடும் ஜமாலுதீனுக்குப் பதவி நீட்டிப்பா?”

ட்டமன்றம் மட்டுமல்ல... அதன் செயலாளர்களும் சர்ச்சைகளில் சிக்குவார்கள்! தமிழக சட்டமன்ற செயலாளர் ஜமாலுதீன், 2012-ம் ஆண்டு மே மாதம் ஓய்வுபெற்று  வீட்டுக்குப் போக வேண்டியவர். ஐந்தாண்டுகள் பதவி நீட்டிப்பு கொடுத்து, அவரை ஆட்சிக்கு வேண்டப்பட்டவராக்கி விட்டார் ஜெயலலிதா. அது, இந்த மாதத்தோடு முடிகிறது. மீண்டும் அவருக்குப் பதவி நீட்டிப்பு கொடுக்கப் போவதாகச் செய்திகள் றெக்கை கட்ட... எதிர்க்கட்சிகளைத் தாண்டி சட்டமன்ற செயலகத்துக்குள்ளேயே எதிர்ப்புகள் கிளம்பியிருக்கின்றன. சட்டமன்ற ஊழியர்களிடம் பேசியபோது, ஜமாலுதீன் மீது வரிசையாக  புகார்களை அடுக்கினார்கள். அவர்கள் சொன்ன புகார்கள் என்னென்ன?

எடப்பாடி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில், தகராறு ஏற்பட்டபோது ஆளும்கட்சிக்கு ஆதரவாக ஜமாலுதீன் செயல்பட்டார். தனது இருக்கையில் இருந்து எழுந்து சென்று சபாநாயகர் தனபாலுக்கு ஜமாலுதீன் யோசனைகள் சொன்னார். இதை தி.மு.க எம்.எல்.ஏ   ஜெ.அன்பழகன் கண்டித்தார். இதற்கு ஜமாலுதீன் எதிர்ப்பு தெரிவித்து ஜெ.அன்பழகனைக் கண்டித்தார். எம்.எல்.ஏ. ஒருவரை சட்டமன்ற செயலாளர் கண்டிப்பது எல்லாம் இதுவரை நடந்ததே இல்லை.அப்போது எதிர்க்கட்சி துணைத்தலைவர் துரைமுருகன், ‘‘சபாநாயகர் முடிவெடுக்க சில நேரம் செயலாளர் உறுதுணையாக இருக்கலாம். ஆனால் கெட்டுப்போவதற்கு வழி சொல்லக்கூடாது’’ என்றார். தி.மு.க உறுப்பினர்கள் கூண்டோடு வெளியேற்றப்பட்டதை எதிர்த்து ஸ்டாலின் தொடர்ந்த வழக்கில், ‘ரகசிய வாக்கெடுப்பு நடத்த விதிகளில் இடமில்லை’ என அரசுக்கு ஆதரவாக நீதிமன்றத்தில் சொன்னவர் ஜமாலுதீன். சட்டசபை நிகழ்ச்சிகளை நேரடி ஒளிபரப்பு செய்வது தொடங்கி உறுப்பினர்கள் பிரச்னை வரையில் ஆளும்கட்சிக்கு ஆதரவாக அவர் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.

  ‘சட்ட மேலவை தேவையில்லை’ என்பதுதான் அ.தி.மு.க-வின் நிலைப்பாடு. இதற்காக எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறார்கள். தி.மு.க ஆட்சியில் மேலவையைக் கொண்டு வர முயன்றபோது, அதற்கு சிறப்புப் பணி அதிகாரியாக இருந்தவர்தான் ஜமாலுதீன். இதற்காக கருணாநிதிக்கு அவர் நன்றி சொன்னார். இப்படி தி.மு.க அபிமானியாக இருந்த ஜமாலுதீன்தான், பதவி நீட்டிப்புக்காக
அ.தி.மு.க முகாமுக்குத் தாவினார்.

சட்டமன்ற செயலாளருக்குப் பதவி நீட்டிப்பு தருவதால், அவருக்குக் கீழே இருப்பவர்கள் அனைவரும் பாதிக்கப்படுகிறார்கள். அவர்களுக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய புரொமோஷன் கிடைப்பதில்லை. இந்த நிலையில் ஜமாலுதீனுக்கு மீண்டும் பதவி நீட்டிப்பு கொடுத்தால், சட்டமன்ற ஊழியர்கள் புரொமோஷன் இல்லாமலே ஓய்வு பெற வேண்டிய நிலை ஏற்படும். அமிர்தவள்ளிக்குத்தான் செயலாளர் பதவி கிடைத்திருக்க வேண்டும். ஜமாலுதீன் பதவி நீட்டிப்பு வாங்கிக் கொண்டதால், அவருக்குக் கிடைக்காமல் போனது. அவருக்குக் கூடுதல் செயலாளர் பதவியே பெரும்பாடுபட்டுதான் கிடைத்தது.

கூடுதல் செயலாளர் தொடங்கி உயர் அதிகாரிகளின் அறைகளுக்கு ஏ.சி வசதிகூட செய்து தராமல் தடுக்கிறார். வீரராகவன், காயத்ரி ஆகியோர் இதில் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். சொந்த செலவில் ஏ.சி போட்டுக்கொள்ள அனுமதி அளித்துவிட்டு, பிறகு ‘எப்படிப் போடலாம்’ என வீரராகவனிடம் ஜமாலுதீன் விளக்கம் கேட்டார். இதற்காக வீரராகவன் முறையிட்டதால் அவருக்குக் கிடைக்க வேண்டிய பென்ஷன், ஒரு வருடம் ஆகியும் கிடைக்கவில்லை. பதவி ஓய்வு சலுகைகளும் கிடைக்காமல் நிறுத்தி வைத்திருக்கிறார். 

துணைச் செயலாளர் வீர ராஜேந்திரன் பத்து வருடங்கள் போராடியும் அவருக்கு புரொமோஷன் கிடைக்காமல், நீதிமன்றம் சென்றுதான் நிவாரணம் தேடினார். அவரைவிட ஜுனியர்களுக்கு எல்லாம் பதவி உயர்வு தந்தார்கள். தேன்மொழி என்பவருக்குக் கிடைக்க வேண்டிய கமிட்டி ஆபீஸர் போஸ்ட் கிடைக்கவிடாமல் பழி வாங்கிவிட்டார்.

வெளிநாட்டில் உடல்நலக்குறைவால் இருக்கும் அப்பாவைப் பார்ப்பதற்காக விடுப்பு வாங்கிக் கொண்டு போனார், சட்டமன்ற ஊழியர் விமலா. அவர் திரும்பி வந்தபிறகு முறையான அனுமதியில்லாமல் போனதாக  மெமோ அளித்து டார்ச்சர் கொடுத்தார் ஜமாலுதீன். வேறுவழியில்லாமல் விமலா நீதிமன்றத்தில் முறையிட்டிருக்கிறார்.

வகுணவள்ளி என்கிற ஊழியர், சட்டமன்ற உறுப்பினர்களின் உரைகளைச் சரியாகப் பதிவு செய்யவில்லை எனச் சொல்லி, ‘ஏன் சஸ்பெண்ட் செய்யக்கூடாது’ என்று விளக்கம் கேட்டார். அந்த மன உளைச்சலோடு அவர் டூ வீலரில் செல்லும்போது கீழே விழுந்து கை எலும்பு முறிந்தது.

பாடிக்குப்பத்தில் ஜமாலுதீனுக்கு வீடு இருந்த நிலையில், அதை மறைத்து ஒக்கியம் துரைப்பாக்கத்தில் இன்னொரு வீடு வாங்கினார். ஊழல் தடுப்பு கண்காணிப்பு இயக்குநரகம் இதனை விசாரித்து, அவர் மீது குற்றச்சாட்டு எழுப்பி இருக்கிறது. 

தி.மு.க ஆட்சியில் சட்டமன்ற செயலாளராக இருந்த செல்வராஜ் மீது அ.தி.மு.க ஆட்சியில் ஊழல் புகார் சொல்லி,  அவர் வீட்டில் ரெய்டு நடத்தப்பட்டது. அந்த வழக்கில் சட்டமன்ற அலுவலர்கள் சிங்காரவேலு, பாலகிருஷ்ணன், இந்திரா ஆகியோர் சேர்க்கப்பட்டனர். இதில் ஜமாலுதீனுக்கு முக்கியப் பங்கு உண்டு. தன் பதவிக்கு ஆபத்து வந்துவிடக்கூடாது என்பதற்காக இவர்களைப் பழிவாங்கினார். சிங்காரவேலு ஓய்வுபெற்ற அன்று சஸ்பெண்ட் செய்யப்பட்டார். 

சட்டமன்றத்தில் 34 பிரிவுகள் இருக்கின்றன. இதில் நிருபர் பிரிவில் 27 பேர் இருக்கிறார்கள். இவர்களுக்கு 16 பேரை மேற்பார்வையாளர்களாகப் போட்டிருக்கிறார்கள். 27 பேரைக் கண்காணிக்க 16 பேரா? அரசின் நிதி விரயமாக்கப்படுகிறது.

“ஆளும் கட்சிக்குத் துதிபாடும் ஜமாலுதீனுக்குப் பதவி நீட்டிப்பா?”

ஜமாலுதீன் என்ன சொல்கிறார்?

‘‘பதவி நீட்டிப்பு என்பதை எனக்கு மட்டுமே தரவில்லை. எனக்கு முன்பு செயலாளராக இருந்த ஜானகிராமன், செல்வராஜ் போன்றவர்களுக்கும் தரப்பட்டது. அப்போது நான் உட்பட பலரும் பாதிக்கப்பட்டோம். எனக்குப் பதவி நீட்டிப்பு தந்ததால் எனக்குக் கீழே இருப்பவர்கள் பாதிக்கப்பட்டார்கள் எனச் சொல்வதில் எந்த உண்மையும் இல்லை. மீண்டும் பதவி நீட்டிப்புக்காக முயற்சி செய்கிறேன் என்பதில் உண்மை கிடையாது. மே மாத இறுதியில் ஓய்வுபெற்று, வீட்டுக்குச் செல்வதற்குத் தயாராக இருக்கிறேன். எனக்குக் கிடைக்க வேண்டிய பென்ஷன் மற்றும் பணிக்கொடைகளுக்கான ஆர்டர்களை எல்லாம் மார்ச் மாதமே வாங்கிவிட்டேன். பதவி நீட்டிப்பு பெற நினைத்திருந்தால், இதை ஏன் செய்ய வேண்டும்? 
ஏ.சி வசதி செய்து தருவது என் கட்டுப்பாட்டில் இல்லை. பொதுப்பணித் துறைதான் அதைச் செய்யும். வகுணவள்ளி, காது கேட்காத பிரச்னையால்தான் சட்டமன்ற பேச்சுகளைப் பதிவு செய்ய முடியவில்லை எனச் சொல்லி, செக்‌ஷன் மாறினார். செல்வராஜ் மீது ஊழல் புகார் எழுந்தபோது சிங்காரவேலுவும் மற்றவர்களும் சேர்க்கப்பட்டனர். போலீஸ் நடவடிக்கையில் சட்டமன்றச் செயலகம் தலையிட முடியாது. சிங்காரவேலு ரிட்டயர் ஆனபோது  அவருக்குத் தரவேண்டிய சலுகைகளைத் தரலாம் என நான் சொன்னேன். ஆனால் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை அதை ஏற்காமல், அவரை சஸ்பெண்ட் செய்தது. இதில் என் பங்கு எதுவும் இல்லை. புரொமோஷன் தருவது எல்லாம் நிர்வாகம் சம்பந்தப்பட்டது. இதில் நான் தலையிட முடியாது. 

அப்பாவைப் பார்க்கச் சென்ற விமலா, சாதாரண விடுமுறை கேட்டுத்தான் லீவு எடுத்தார். விசா, டிக்கெட், தடையில்லா சான்றிதழ் எல்லாம் தயாராக எடுத்து வைத்துக் கொண்டு கிளம்பிவிட்டார். லீவு அனுமதி கிடைத்தபிறகுதான் இந்தச் சம்பிரதாயங்களை அவர் செய்திருக்க வேண்டும். அதை செய்யாததால் அவரிடம் விளக்கம் கேட்கப்பட்டது. ஒக்கியம் துரைப்பாக்கத்தில் வீடு வாங்கிய விவகாரத்தில் துளிக்கூட உண்மையில்லை. அப்படியொரு புகார் இருந்தால் பென்ஷன் மற்றும் ஓய்வு போன்ற ஆர்டர்கள் எனக்கு எப்படி தந்திருப்பார்கள்? ஊழல் புகார் இருந்திருந்தால் ‘என் மீது எந்தப் புகாரும் இல்லை’ என சபாநாயகர் எப்படி என்.ஓ.சி கொடுத்திருப்பார்” என்று கேட்கிறார் ஜமாலுதீன்.  

சட்டமன்ற கலாட்டாக்களைவிட இந்த மோதல் விறுவிறுப்பாக இருக்கிறது!

News2
News2

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a comment