Wednesday, May 03, 2017

கைது ஆவாரா அமைச்சர் காமராஜ்?

கைது ஆவாரா அமைச்சர் காமராஜ்?

அ.தி.மு.க-வுக்கு இது இலையுதிர் காலம். 

கட்சி நிர்வாகிகள் ஒவ்வொருவராக வழக்குகளில் சிக்கிக் கொண்டிருக்கிறார்கள். இந்த வரிசையில், மோசடிப் புகார் வம்பில் சிக்கியிருக்கிறார் உணவுத்துறை அமைச்சர் காமராஜ். 

‘வீட்டை காலி செய்து தருவதாகக் கூறி பணம் வாங்கி மோசடி செய்தார். ஆள் வைத்து கொலை மிரட்டல் விடுகிறார்’ என அமைச்சர் காமராஜுக்கு எதிராக 2015-ம் ஆண்டில் எழுந்த புகார் இப்போது விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. இதுதொடர்பாக 2015-ல் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொழிலதிபர் எஸ்.வி.எஸ்.குமார் வழக்கு தொடர்ந்தார். 22.4.2015 தேதியிட்ட ஜூ.வி. இதழில், இதுபற்றி விரிவாக எழுதியிருந்தோம். இந்த நிலையில் இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்துக்குப் போயிருக்கிறது. ‘காமராஜ் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டும்’ என உத்தரவிட்டிருக்கிறது உச்ச நீதிமன்றம்.

மன்னார்குடி அருகேயுள்ள நீடாமங்கலத்தைச் சேர்ந்த எஸ்.வி.எஸ்.குமாரிடம் பேசினோம். ‘‘நான் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தேன். சென்னை மந்தைவெளி, சிருங்கேரி மடம் சாலையிலுள்ள சுப்புலட்சுமி என்பவரின் வீட்டை 2010-ம் ஆண்டு 60 லட்சம் ரூபாய்க்கு விற்பதற்காக பவர் வாங்கினேன். சுப்புலட்சுமி, வீட்டை காலி செய்யாமல் இழுத்தடித்தார். தென்னரசு என்பவரிடம் விஷயத்தைச் சொன்னேன். அவர், ‘காமராஜின் மைத்துனர் ராமகிருஷ்ணனிடம் சொன்னால், உடனே முடித்துக்கொடுப்பார்’ எனச் சொல்லி, அவரை அறிமுகப்படுத்தினார். ராமகிருஷ்ணன், ‘நான் எல்லாத்தையும் பார்த்துக்கிறேன்’ எனச் சொல்லி, 2010-ல் 10 லட்சம் ரூபாய் அட்வான்ஸ் வாங்கிக்கொண்டார். மறுபடி சந்தித்தபோது, ‘மயிலாப்பூர் ஏ.சி-யை வெச்சு முடிச்சிடுவோம்’ என மேலும் ஐந்து லட்சம் வாங்கிக்கொண்டார். வீட்டை காலிசெய்து கொடுப்பார் என்று நம்பி, வட்டிக்கு பணம் வாங்கிக் கொடுத்தேன். 

ஒருநாள் சுப்புலட்சுமியையும் என்னையும் மன்னார்குடிக்கு வரச் சொல்லி, கட்சி ஆபீஸிலும், காமராஜ் வீட்டிலும் வைத்துப் பேசினார்கள். அப்போது, காமராஜ் என்னைத் தனியாக அழைத்து, ‘மாப்பிள்ளைகிட்ட (ராமகிருஷ்ணன்) பேசிட்டேன். இன்னொரு 10 லட்சம் கொடுத்தாத்தான் விஷயம் முடியும்’ என்றார். காமராஜ் கேட்டபடி 10 லட்ச ரூபாய் கொடுத்தேன். என்னிடம் அவர்கள் பணம் வாங்கியதற்கும் பேச்சுவார்த்தை நடத்தியதற்கும் ஆதாரம் இருக்கிறது.

2011 சட்டசபைத் தேர்தல் நேரம். ‘எலெக்‌ஷன் செலவுக்காக 20 லட்சம் கடனா கொடு. திருப்பிக் கொடுத்துவிடுகிறோம். ஜெயிச்சு ஆட்சிக்கு வந்தா எல்லாத்தையும் சரி பண்ணிடலாம்’ எனச் சொன்னார் ராமகிருஷ்ணன். கடன் வாங்கி மறுபடியும் 20 லட்சம் கொடுத்தேன். தேர்தலில் வெற்றியும் பெற்றார். இப்போது 2016-ல் ஜெயித்து இரண்டாவது முறையாக அமைச்சர் ஆகிவிட்டார். இதுவரை என் பணத்தையும் கொடுக்கவில்லை. வீட்டையும் காலி செய்துதரவில்லை. 

கைது ஆவாரா அமைச்சர் காமராஜ்?

ராமகிருஷ்ணனிடம் போய்ப் பணம் கேட்டபோது, என்னை ஆள்வைத்து அடித்து, ‘பணம் வாங்கவில்லை’ என எழுதி வாங்கினார். இனிமேல் பணம் கொடுக்க மாட்டார்கள் எனத் தெரிந்து, திருவாரூர் எஸ்.பி. மற்றும் கலெக்டரிடம் புகார் மனு கொடுத்தேன். மன்னார்குடி டி.எஸ்.பி அலுவலகத்தில் விசாரிப்பதற்காக அழைத்த காவல் துறையினர், ‘மனுவை வாபஸ் வாங்கிக்கொண்டு, ஓடிப்போய் விடு’ என விரட்டி அடித்துவிட்டார்கள். அதன்பிறகுதான் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன்.

இந்த நிலையில் ‘அமைச்சர் பணத்தைத் திருப்பித் தந்திடுவார். நீ வழக்கை வாபஸ் வாங்கு’ என வலங்கைமானைச் சேர்ந்த இளங்கோவன் என்பவர் மிரட்டினார். கொல்வதற்கும் சதித்திட்டம் தீட்டினார். வழக்கு போட்டு இரண்டு வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டன. ‘2016 தேர்தல் முடிஞ்சு தருவார்’, ‘ஜெயலலிதா இறந்ததால் பிஸியாக இருக்கிறார்’ எனத் தட்டிக் கழித்தபடி இருந்தார்கள். இதற்கிடையே ‘வழக்கில் முகாந்திரம் இருக்கிறது, இதை விசாரியுங்கள்’ என மன்னார்குடி டி.எஸ்.பி-க்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஏற்கெனவே மன்னார்குடி காவல்துறையில் ஏற்பட்ட அனுபவத்தால் நான் அங்கு செல்லவில்லை. பிறகு, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு போட்டேன். இனிமேலும், பணத்தைக் கொடுக்கவில்லை என்றால், சி.பி.ஐ-க்கு வழக்கை மாற்றச் சொல்லி வழக்கு போடுவேன். இப்போது உயிருக்கு பயந்து தலைமறைவாக வாழ்ந்து வருகிறேன். என் உயிருக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டால் அதற்கு அமைச்சர் காமராஜும் அவருடைய உறவினர்களும்தான் பொறுப்பு’’ என்றார்.

காமராஜின் மைத்துனர் ராமகிருஷ்ணன் இப்போது தலைமைச் செயலக செய்தித் துறையில் ஏ.பி.ஆர்.ஓ-வாகப் பணிபுரிகிறார். அவரிடம் பேசினோம். ‘‘நான் பணம் வாங்கவில்லை. எனக்கு அவரை யார் என்றே தெரியாது. நிறையப் பேரிடம் இது மாதிரி பொய் வழக்குபோட்டு ஏமாற்றி உள்ளார். அவர் மீது நிறைய வழக்குகள் இருக்கின்றன’’ என்று முடித்துக் கொண்டார்.

அமைச்சர் காமராஜிடம் விளக்கம் கேட்பதற்காக போனில் பலமுறை தொடர்புகொண்டோம். ‘அண்ணன் மீட்டிங்கில் இருக்கிறார், வெளியில் செல்வதற்கு ரெடி ஆகிட்டு இருக்கிறார்’ என்று உதவியாளர் பதில் சொன்னார். அமைச்சர் கடைசிவரை பேசவில்லை.

‘காமராஜ் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டும்’ என உத்தரவிட்டிருக்கும் உச்ச நீதிமன்றம், ‘செய்யத் தவறினால் சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிடப்படும்’ என எச்சரித்திருக்கிறது. அமைச்சர் காமராஜ் மீது தமிழக போலீஸ் வழக்குப் பதிவு செய்யுமா, அவர் கைது செய்யப்படுவாரா என்பது விரைவில் தெரிந்துவிடும். 

News2
News2

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a comment