Tuesday, April 25, 2017

“என்னைப் பார்த்து பதில் சொல்லுங்கள்!” - கண்டிப்பு நீதிபதி... திணறிய தினகரன்!

“என்னைப் பார்த்து பதில் சொல்லுங்கள்!” - கண்டிப்பு நீதிபதி... திணறிய தினகரன்!

றவுகள்... தொண்டர்கள்... கட்சி... ஆட்சி அதிகாரம் என அனைத்து மட்டங்களிலும் தன் ஆதிக்கத்தை இழந்துவிட்டு, நிராயுதபாணியாக நிற்கிறார் டி.டி.வி.தினகரன். இந்த நிலையில், 23 ஆண்டுகளுக்கு முன்பு தினகரன் செய்த சிக்கலான சில வேலைகள், கழுத்தை இறுக்கும் வழக்குகளாக மாறி, அவரைத் துரத்தத் தொடங்கி உள்ளன. இப்போது, நீதிமன்றத்தின் படிக்கட்டுகளில் பரிதாபமாக ஏறி இறங்கிக் கொண்டிருக்கிறார் தினகரன். 

1997 முதல் 2017 வரை...

1991 - 96ம் ஆண்டு காலகட்டத்தில் இங்கிலாந்தைச் சேர்ந்த பார்க்லேஸ் வங்கியில், ஒரு கோடியே நான்கு லட்சத்து 93 ஆயிரத்து 313 அமெரிக்க டாலர் வரவு வைக்கப்பட்டது. அந்தத் தொகையை, வெர்ஜின் தீவுகளில் இருக்கும் டிப்பர் இன்வெஸ்ட்மென்ட் என்ற நிறுவனம் செலுத்தி இருந்தது. இந்த நிறுவனம், டி.டி.வி.தினகரனுக்குச் சொந்தமானது என்பது தெரியவந்தது.

இந்தப் பணப் பரிமாற்றத்துக்கு ரிசர்வ் வங்கியிடம் இருந்து முறையான அனுமதி பெறப்பட வில்லை. அதையடுத்து, 1994-ம் ஆண்டு, டி.டி.வி.தினகரன் மீது  அமலாக்கத் துறை வழக்குப்பதிவு செய்தது.  அந்த  விசாரணையின்போது, அயர்லாந்தில் உள்ள வெஸ்ட் பேங்க் லிமிடெட் என்ற நிறுவனத்திலும் தினகரன், 44 லட்சத்து 37 ஆயிரம் பவுண்டு மதிப்புள்ள தொகையை மாற்றியது கண்டுபிடிக்கப்பட்டது. 

இந்த வழக்குகள் எழும்பூர் பொருளாதாரக் குற்றவியல் நீதிமன்றத்தில் பல ஆண்டுகளாக நடந்துவந்தன. அப்போது இந்த வழக்குகளில் இருந்து தன்னை விடுவிக்கும்படி, தினகரன் எழும்பூர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அதை ஏற்று, கடந்த 2015-ம் ஆண்டு தினகரனை விடுவித்தது நீதிமன்றம். ஆனால், இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை மனுத்தாக்கல் செய்தது. இதில் சென்னை உயர் நீதிமன்றம், ‘தினகரனை விடுதலை செய்தது செல்லாது. அவர் மீது இருக்கும் வழக்கு களைத் தொடர்ந்து நடந்த வேண்டும்’ என்று உத்தரவிட்டது.

நிராயுதபாணியாக தினகரன்!

இதனையடுத்து பொருளாதாரக் குற்றவியல் நீதிமன்றத்தில், மாஜிஸ்திரேட் மலர்மதி முன்பு வழக்கு விசாரணை சூடுபிடித்தது. ஆர்.கே. நகர் தேர்தலைக் காரணம் காட்டி பல நாள்கள் தள்ளிப்போட்டுக் கொண்டு வந்த தினகரன், கடந்த 19-ம் தேதி காலை நீதிமன்றக்கு வந்தார். இரட்டை இலைச் சின்னத்தை இழந்து, ஆர்.கே. நகர் தேர்தலை இழந்து, குடும்ப உறவுகளைப் பிரிந்து, கட்சியையும் இழந்து, ஆட்சி அதிகாரத்தில் தனக்கிருந்த பிடியையும் இழந்து, தன் பின்னால் அணிவகுத்துக் கொண்டிருந்த தொண்டர் படையையும் இழந்து, அவர் நீதிமன்றத்துக்கு வந்தார். 

தினகரனின் வழக்கறிஞர் ஜீனசேனன், பி.குமார் மற்றும் அவர்களுடைய ஜூனியர் வழக்கறிஞர்கள் உள்ளிட்ட சிலர் மட்டும் உடன் வந்தனர். காலை 10.35 மணிக்கு மாஜிஸ்திரேட் மலர்மதி முன்பு விசாரணை தொடங்கியது. அப்போது வாதிட்ட தினகரனின் வழக்கறிஞர்கள் ஜீனசேனனும், பி.குமாரும், ‘‘இந்த வழக்குத் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு வழக்கு ஒன்று நிலுவையில் உள்ளது. இந்த நிலையில், இதை இங்கு அவசரமாக விசாரணை செய்வதற்கு என்ன காரணம்? இதற்கு வேறு ஏதாவது மறைமுக அழுத்தம் கொடுக்கப்படுகிறதா? உயர் நீதிமன்றங்களில் இருந்து இந்த வழக்கை உடனடியாக விசாரிக்க வேண்டும் என்று ஏதாவது நோட்டீஸ் வந்ததா?’’ என்று கேட்டனர். மாஜிஸ்திரேட் மலர்மதி, “எனக்கு உள்ள அதிகாரத்தின் அடிப்படையில், சட்டம் சொல்கிறபடி நான் இந்த வழக்கை நடத்துகிறேன். அவ்வளவுதான். மேலும், இங்கு நான்தான் கேள்விகேட்க வேண்டும். என்னை நீங்கள் கேள்வி கேட்கக் கூடாது” என்று கண்டிப்பு காட்டினார். உடனே ஜீனசேனன், “நாங்கள் இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றப் பதிவாளரிடம் முறையீடு செய்வோம்” என்றார். அதைக்கேட்ட மாஜிஸ்திரேட் மலர்மதி, “அது உங்கள் விருப்பம். நான் இந்த விசாரணையை மதியம் மூன்று மணிக்கு ஒத்திவைக்கிறேன்” என்றார்.

``உங்களுக்கு ஆங்கிலம் தெரியுமா?’’

மீண்டும் மதியம் மூன்று மணிக்கு வழக்கு, விசாரணைக்கு வந்தது. தினகரன், பத்து நிமிடங்கள் முன்பாகவே நீதிமன்றம் வந்து அமர்ந்திருந்தார். அவருடன் இந்தமுறை மூத்த வழக்கறிஞர்கள் பி.குமார், ஜீனசேனன் உள்ளிட்டவர்கள் வரவில்லை. மாஜிஸ்திரேட் மலர்மதி 3.10 மணிக்கு வந்தார். தினகரனிடம் விசாரணையை ஆரம்பித்த அவர், ‘‘உங்கள் பெயர் என்ன, உங்கள் தந்தையார் பெயர் என்ன?” என்ற கேள்விகளை எழுப்பினார். அதற்கு சன்னமான குரலில் பதில் சொன்ன தினகரன், இருள் படிந்த முகத்துடன் காணப்பட்டார். அப்போது குறுக்கிட்ட தினகரனின் வழக்கறிஞர் ஒருவர், ‘‘இந்த வழக்கை இவ்வளவு நாள்களுக்குப் பிறகு இவ்வளவு அவசரம் காட்டி விசாரிக்க வேண்டிய அவசியம் என்ன’’ என்று கேட்டார். டென்ஷன் ஆன மாஜிஸ்திரேட் மலர்மதி, “நீங்கள் யார்? காலையில் இங்கு என்ன நடந்தது என்பது தெரியாமல் இப்போது புதிதாக வந்து வாதம் செய்கிறீர்கள். பலமுறை அவருக்கு நோட்டீஸ் அனுப்பியாகிவிட்டது. அவர் இன்றுதான் ஆஜராகி உள்ளார். அதனால், இதில் மேலும் வாதிட எதுவும் இல்லை” என்று அந்த வழக்கறிஞரை உட்கார வைத்தார். 

அதன்பிறகு தினகரனிடம், “உங்களுக்கு ஆங்கிலம் தெரியுமா?” என்று கேட்டார். “தெரியும்” என்று தினகரன் பதில் சொன்னார். அதைப் பதிவுசெய்த மாஜிஸ்திரேட் மலர்மதி, “உங்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை உங்களுக்குப் புரியவைக்க வேண்டியது என் கடமை. அதனால்தான் உங்களுக்கு ஆங்கிலம் தெரியுமா என்று கேட்டேன்’’ என்றவர், “உங்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை ஒத்துக்கொள்கிறீர்களா?” என்று கேட்டு தினகரனைப் பார்த்தார்.

அப்போது, தனது வழக்கறிஞரை தினகரன் பார்த்தார். அதைக் கவனித்த மலர்மதி, “நான் கேள்வி கேட்டால், என்னைப் பார்த்து பதில் சொல்லுங்கள்” என்றார். உடனே தினகரன், “மறுக்கிறேன்” என்று பதில் சொன்னார். 

அதன்பிறகு, ‘‘அரசுத் தரப்பு சாட்சிகளை விசாரணை செய்ய வேண்டுமா’’ என்று தினகரனிடம் மலர்மதி கேட்டார். தினகரன், சரியாகக் கேட்காததுபோல் பாவனை செய்தார். உடனே, மலர்மதி, “நான் சொல்வது சரியாகக் கேட்கவில்லை என்றால், முன்னால் வந்து நில்லுங்கள்” என்றார். அதையடுத்து முன்னால் போன தினகரன், “அரசுத் தரப்பு சாட்சிகளைக் குறுக்கு விசாரணை செய்கிறேன்” என்றார். இதையடுத்து வழக்கை, மே 10-ம் தேதி ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

தினகரன் மீதான இன்னொரு வழக்கு மறுநாள் விசாரணைக்கு வந்தது. அது, வரும் 24-ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. தினம் ஒரு நெருக்கடி என தவித்துக்கொண்டிருக்கிறார் தினகரன்!

கைது ஆவாரா?

23 ஆண்டுகளுக்கு முன்பு தொடரப்பட்ட ஃபெரா வழக்குகள் மட்டும்தான் தினகரனின் கழுத்தை இதுவரை நெருக்கிக் கொண்டிருந்தன. இந்த நிலையில், இரட்டை இலைச் சின்னத்தை மீட்க தினகரன் லஞ்சம் கொடுத்தார் என்று ஒரு குற்றச்சாட்டைக் கூறி, தினகரன் மீது டெல்லி போலீஸ் புதிதாக ஒரு வழக்கைப் பதிவுசெய்துள்ளது. இதுவும் மிகப் பெரிய சிக்கலாக அவருக்கு மாறும். கடந்த 19-ம் தேதி டெல்லி போலீஸ் சென்னைக்கு நேரில் வந்து, தினகரனுக்கு சம்மனும் கொடுத்து விட்டது. அந்த விசாரணைக்காக வரும் 22-ம் தேதி காலை தினகரன் டெல்லி செல்கிறார்.

இதில், தினகரன் கைது செய்யப்பட வாய்ப்பு உள்ளதா என டெல்லி வட்டாரங்களில் பேசினோம். “இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள சுகேஷ் சந்திராவோடு தினகரன் தொலைபேசியில் பேசவில்லை. மேலும், நேரடியாக சுகேஷ் சந்திராவுக்குப் பணம் எதுவும் கொடுக்கவில்லை. அதோடு தற்போதைய அரசியல் சூழலில் இருந்து பின்வாங்கி, அ.தி.மு.க என்ற கட்சியில் இருந்து ஒதுங்கிக்கொள்வதாக தினகரன் அறிவித்துள்ளார். அதையும் கருத்தில் கொண்டால், தினகரன் டெல்லியில் கைதுசெய்யப்பட எந்த வாய்ப்பும் இல்லை” என்றனர்.

தினகரன் பின்வாங்கியதும் அதற்குத்தானே!

News2
News2

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a comment