Tuesday, April 25, 2017

சசிகலா ஜாதகம் - 34 - ஜெயலலிதாவுக்குப் பின்னால் சசிகலா... சசிகலாவுக்குப் பின்னால் நடராசன்!

சசிகலா ஜாதகம் - 34 - ஜெயலலிதாவுக்குப் பின்னால் சசிகலா... சசிகலாவுக்குப் பின்னால் நடராசன்!

‘உன்னைக் கரம் பிடித்தேன் வாழ்க்கை
ஒளி மயமானதடி!
பொன்னை மணந்ததனால் சபையில்
புகழும் வளர்ந்ததடி!’ 

சசிகலாவைக் கரம் பிடித்த நடராசனுக்கு கண்ணதாசனின் இந்தப் பாடல் ரொம்பவே பொருந்தும். 

ஜெயலலிதாவுக்கு சசிகலா நேரடியாக அறிமுகம் ஆகிவிடவில்லை. அதற்கான விதையைப் போட்டவர் நடராசன். சசிகலா, ஜெயலலிதாவின் தோழியாகி, பிறகு உடன்பிறவா சகோதரியாக வார்த்தெடுக்கப் பட்டதில் நடராசன் காட்டிய வித்தைகளும் சூழ்ச்சிகளும் சூதுமதிகளும் காய் நகர்த்தல்களும் அதுவரை தமிழக அரசியலில் எழுதப்படாத புது தியரி.

ஜெயலலிதாவை அரசியலில் வளர்த்தெடுக்க எம்.ஜி.ஆர் முயற்சி செய்து கொண்டிருந்த நேரம். அப்போது நடராசன், ‘மக்கள் தொடர்பு அதிகாரி’ (பி.ஆர்.ஓ) என்கிற அரசுப் பணியில் இருந்தார். சசிகலா வீடியோ கடை நடத்திக்கொண்டிருந்தார். இந்த முக்கோணக் கோடுகள்... ஒரு கட்டத்தில் நேர்க்கோடாக மாறின. அரசியல், ஆட்சி சூழல் எல்லாம் அதிகார போதையை நடராசனுக்குக் கண்ணில் காட்டியது. ஜெயலலிதாவை அரசியலுக்கு அழைத்து வந்த எம்.ஜி.ஆரே, ஜெயலலிதாவின் வளர்ச்சியைக் கண்டு கலங்க ஆரம்பித்த நேரத்தில்தான், போயஸ் கார்டனுக்குள் போய் வந்து கொண்டிருந்த சசிகலாவை ‘உளவாளி’ ஆக்கினார். சசிகலாவின் கணவர் அரசுப் பணியில் இருந்ததால் அது சாத்தியமானது. ஜெயலலிதாவுக்கும் எம்.ஜி.ஆருக்கும் இடையே நடராசன் நடத்திய லீலைகள் நிறைய! ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு கட்சியைக் கைப்பற்றி, ‘‘ஆம்... குடும்ப ஆட்சியைத்தான் நடத்துவோம்’’ என வீராவேசம் பேசும் அளவுக்கு நடராசன் ரோல் வகிக்கிறார். 

ஜெயலலிதாவுக்குப் பின்னால் சசிகலா இருந்தார். சசிகலாவுக்குப் பின்னால் நடராசன் இருந்தார். இந்த நடராசன் யார்? எப்படி வந்தார்? 

“தஞ்சாவூர்க்காரன் புத்தி வேறு எவனுக்கும் கிடையாதுப்பா...” - நெருக்கமான நண்பர்களிடம் பெருமையுடன் அடிக்கடி நடராசன் உச்சரிக்கும் வார்த்தைகள் இவை.  அந்தப் புத்தியை வைத்து அவர் நடத்திய காரியங்கள் ஏராளம். நடராசனும் சசிகலாவும் நெருங்கிய உறவுகள் அல்ல. ஆனால், ஒரே மாவட்டத்துக்காரர்கள். நெருங்கிய ஊர்க்காரர்கள். மன்னார்குடிக்குப் பக்கத்தில் இருக்கிற விளார் கிராமத்தைச் சேர்ந்த நடராசன், சசிகலாவைக் கரம் பிடித்தபிறகு உச்சத்துக்குப் போனார். மருதப்பா ஏழை விவசாயி. கூரை வீடும் கூழும்தான் அவருக்கு வாழ்க்கை. அவரது மகனான நடராசனுக்குப் படிப்பில் ஆர்வம். தஞ்சாவூர் தூய அந்தோணியார் பள்ளியில் படித்தார். பள்ளிப் பருவத்திலேயே ‘‘நான் கலெக்டர் ஆவேன்’’ என நண்பர்களிடமும் உறவினர்களிடம் சொல்லிக் கொண்டிருந்தார். ‘‘எல்லோரும் டாக்டருக்கு் இன்ஜினீயருக்குப் படிப்பாங்க... நீ ‘கலெக்டருக்குப் படிக்கப் போறே’னு சொல்லுறே’’ என அவர்கள் கேட்டபோது, ‘‘மினிஸ்டர்களுக்கு கார் கதவைத் திறந்துவிட்டு சல்யூட் அடிக்கற கலெக்டர்னா நினைச்சீங்க? நான் கலெக்டர் ஆனா, மினிஸ்டருங்க எல்லாம் என்னைப் பார்த்து சல்யூட் அடிப்பாங்க’’ என மாணவனாக இருந்தபோதே பதிலடி கொடுத்தார். 

அரசியல் மீது சிறுவயதிலேயே பார்வையைப் பதித்தார். தஞ்சாவூர் சரபோஜி கல்லூரியில் பி.ஏ படிக்கப் போனபோது அது துளிர்விட ஆரம்பித்தது. அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் எம்.ஏ கற்கப் போனபோது ‘இந்தி எதிர்ப்பு’ போராட்டத்தில் குதிக்கும் அளவுக்குப் போனது.  

நடராசனுக்குப் படிப்பில் வெகு ஆர்வம். கிட்டத்தட்ட முதல் ரேங்கை எட்டிப் பிடித்து விடுவார். பாடத்தில் என்ன சந்தேகம் வந்தாலும் அதற்கான விளக்கத்தை ஆசிரியர்களிடம் நடராசன் நேரடியாகக் கேட்க மாட்டார். அவருக்காக, பக்கத்தில் இருக்கிற மாணவர்கள்தான் கேட்பார்கள். சக மாணவர்களை விட்டு சந்தேகங்களைக், கேட்கச் சொல்லித் தெளிவு பெறுவதுதான் நடராசன் ஸ்டைல். நடராசனின் இந்த அணுகுமுறைதான் இன்று வரையில் தொடர்கிறது. அடிதடிக்கு ஒருவர், ஆர்ப்பரிக்க ஒருவர், ஆங்கிலத்தில் பேச ஒருவர், அழகாக எழுத ஒருவர் எனக் கல்லூரியில் நடராசனைச் சுற்றி ஒரு கூட்டம் இருக்கும். காலேஜையே கலக்கிக் கொண்டிருப்பார் நடராசன். அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் படிக்கும் காலத்திலேயே தி.மு.க அனுதாபியாக மாறியிருந்தார்.  அப்போது தி.மு.க-வில் இருந்த எல்.கணேசன், எஸ்.டி.சோமசுந்தரம் (எஸ்.டி.எஸ்.) இருவரையும் அடிக்கடி சந்தித்துப் பேசுவார். எல்.கணேசனிடம் காட்டிய நெருக்கம், நடராசனுக்கு அரசுப் பதவியைத் தேடிக்கொடுத்தது. கருணாநிதி முதன்முறையாக முதல்வரான நேரத்தில்தான் செய்தித் துறையில் மக்கள்தொடர்பு பதவி, நடராசனுக்குக் கிடைத்தது.

உத்யோகம் கிடைத்துவிட்டது. அடுத்த புருஷ லட்சணம் வந்து சேர்ந்தது. மன்னை நாராயணசாமியின் உறவினர் மகளான சசிகலாவைத் திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்குத் தலைமை தாங்கி நடத்தி வைத்தவர், அன்றைய முதல்வர் கருணாநிதி.

(தொடரும்)

News2
News2

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a comment