Wednesday, April 26, 2017

ஹைட்ரோ கார்பன் போராட்டத்துக்கு நிர்வாண தண்டனை!

ஹைட்ரோ கார்பன் போராட்டத்துக்கு நிர்வாண தண்டனை!

ங்களைக் கைதுசெய்து சிறையில் அடைச்சாங்க. சிறைக்கு வந்த முதல்நாள், சிறைக் காவலர்கள் அஞ்சு பேர் வந்து, எங்க டிரஸ்ஸை கழற்றச் சொன்னாங்க. நாங்க எதிர்த்தோம். டென்ஷனான சிறைக் காவலர்கள், ‘ஒழுங்கா, டிரஸ்ஸைக் கழட்டுறீங்களா... இல்ல வேற ட்ரீட்மென்ட் வேணுமா’னு மிரட்டினாங்க. அசிங்கமா திட்டினாங்க. அதுக்குப் பிறகு நிர்வாணமாக்கிச் சோதனை செஞ்சாங்க. பீரியட்ஸ் நேரத்துக்கு அவசியமான நாப்கினைக் கூட தரலை. இரண்டாவது நாள், எங்களை ஆறு முறை நிர்வாணப்படுத்தினாங்க” - ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிராகப் போராடிவரும் இரண்டு மாணவிகள்தான் இப்படி நம்மை அதிர வைத்தார்கள்.

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில், ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிரான போராட்டம் மீண்டும் தீவிரமாகியிருக்கிறது. இந்த நிலையில், எம்.ஏ இதழியல் படிக்கும் வளர்மதி, கண் மருத்துவ மாணவி சுவாதி, மாணவர்கள் தினேஷ்குமார், கார்த்திக் உள்ளிட்ட ஏழு மாணவர்கள், நெடுவாசல் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக, கோவையில் இருந்து ஏப்ரல் 15-ம் தேதி புறப்பட்டனர். ரயிலில் சென்றுகொண்டிருந்த அவர்களை, குளித்தலையில் போலீஸார் கைதுசெய்தனர். திருச்சி பெண்கள் சிறையில் அடைக்கப்பட்ட இரண்டு மாணவிகளை, சிறைக் காவலர்கள் நிர்வாணப்படுத்தி சித்ரவதை செய்ததாக வெளியான தகவல் பலரை அதிர்ச்சி அடைய வைத்தது. வழக்கறிஞர் மூலம் மாணவிகள் வளர்மதி, சுவாதி ஆகியோரைத் தொடர்புகொண்டோம்.

“நாங்கள் அனைவரும் வெவ்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள். ‘பொது நல மாணவ எழுச்சி இயக்கம்’ என்ற பெயரில், சமூக அவலங்களுக்கு எதிராகச் செயல்பட்டு வருகிறோம். நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக நடந்த போராட்டத்தில் கடந்த மாதம் கலந்துகொண்டோம். தற்போது, நெடுவாசல் மக்கள் மீண்டும் போராட்டத்தைத் தொடங்கி இருக்கிறார்கள். அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கவும், உதவி செய்யவும் திட்டமிட்டோம். அதற்காக, கோவையில் இருந்து கடந்த 15-ம் தேதி ரயிலில் கிளம்பினோம். ரயிலில், பறையை இசைத்தபடி, ஹைட்ரோ கார்பன் திட்டம் குறித்து விழிப்பு உணர்வு ஏற்படுத்திக்கொண்டே வந்தோம்.

ஈரோட்டில் ரயிலில் ஏறிய போலீஸார், எங்களைத் தடுத்து தொந்தரவு செய்தார்கள். கரூரில் ரயில் நிலையத்தில் எங்களை இறக்க நினைத்தனர். தகவலறிந்து அங்கு பத்திரிகையாளர்கள் வந்துவிட்டதால், எங்களைக் குளித்தலை ரயில் நிலையத்தில் இறக்கினார்கள். குளித்தலை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்று விசாரித்தார்கள்.

மத்திய அரசுக்கு எதிரான வாசகங்களைக் கொண்ட இரண்டு துண்டறிக்கைகளைக் காண்பித்து விசாரித்தார்கள். அந்தத் துண்டறிக்கைகளை நாங்கள் வைத்திருந்ததாகவும், கலவரத்தைத் தூண்டும்படி நடந்துகொண்டதாகவும் வழக்குப்பதிவு செய்தனர். தப்படிக்கும் குச்சியைத் தவிர வேறு எதுவும் எங்களிடம் இல்லை. ஆனால், நாங்கள் ஆயுதம் வைத்திருந்தோம் என்றும், நக்சலைட்களுடன் எங்களுக்குத் தொடர்பு உள்ளதாகவும் தகவல் பரப்பினார்கள். எங்களுடன் வந்த மாணவர்களை, திருச்சி மற்றும் அரியலூர் சிறைகளில் அடைத்துள்ளனர்.

சிறையில் முதல் நாள், எங்களை நிர்வாணப்படுத்தி சோதனை செய்தார்கள். சிலநாள் கழித்து எங்களை, ‘ஹாஸ்பிட்டல் பிளாக்’ என்ற தனிமைச் சிறையில் தனித்தனியாக அடைத்தனர். சிறைக் காவலர்களின் நடவடிக்கைகளைப் பார்க்கும்போது, சிறைக் காவலர்களை மேலிருந்து ‘யாரோ’ இயக்குகிறார்கள் எனத் தெரிகிறது.

‘நெடுவாசலில் விவசாயம் அழியப்போகிறதே...’ என்ற கவலையில்தான் போராட வந்தோம். அரசுக்கு எதிராகப் போராடினால் இப்படிப்பட்ட சித்ரவதைகளுக்கு ஆளாக வேண்டும் என்ற என்ற அச்சத்தை மற்றவர்களுக்கு ஏற்படுத்த அரசு நினைக்கிறது. ஜனநாயக முறையில் போராடுபவர்களை இப்படி மோசமாக நடத்தலாமா? இதனால் நாங்கள் பயந்துவிட மாட்டோம். சிறையில் இருந்து வெளியே வந்ததும், நெடுவாசலுக்காகப் போராடுவோம்” என்றார்கள் உறுதியுடன்.

இதுபற்றி குளித்தலை இன்ஸ்பெக்டர் குருநாதனிடம் பேசினோம். ‘‘அவர்கள் ஏழு பேரையும் கைது செய்த அன்றே சிறைக்கு அனுப்பிவிட்டோம். மிரட்டவும் இல்லை. துன்புறுத்தவும் இல்லை. சட்டப்படி அவர்கள்மீது என்ன குற்றச்சாட்டு இருந்ததோ, அந்தப் பிரிவுகளில்தான் வழக்குப்போட்டிருக்கிறோம்” என்றார்.

திருச்சி பெண்கள் சிறைக் கண்காணிப்பாளர் கோமளா, ‘‘இந்த இரண்டு மாணவிகளையும் நாங்கள் திட்டமிட்டு நிர்வாணப்படுத்தவில்லை. இங்கு வழக்கமாக இருக்கும் நடைமுறைதான்” என்று சொல்லி அதிர வைத்தார். ‘‘பிளேடு, கஞ்சா, செல்போன் என பெண் கைதிகள் மறைத்து எடுத்து வருகிறார்கள். நிர்வாணமாக்கி சோதனை செய்தால்தான் இதையெல்லாம் கண்டுபிடிக்க முடியும். அதனால்தான் இப்படிச் செய்கிறோம். இவர்களையும் அப்படித்தான் பரிசோதனை செய்தோம்’’ என்றார் சாதாரணமாக.

மனித உரிமைகளையும் பெண்ணுரிமைகளையும் காலில் போட்டு மிதிப்பதில் தமிழகத்துக்கு இணையில்லை! 

News2
News2

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a comment