Saturday, April 29, 2017

மிஸ்டர் கழுகு: “எனக்கு இல்லாதது உனக்கு எதற்கு?” - ஆட்சியைக் கவிழ்க்கிறார் தினகரன்!

மிஸ்டர் கழுகு: “எனக்கு இல்லாதது உனக்கு எதற்கு?” - ஆட்சியைக் கவிழ்க்கிறார் தினகரன்!

‘‘எடப்பாடி அரசு இன்னும் எத்தனை நாளைக்கோ?” - நாம் கேட்க நினைத்த கேள்வியை நம்மைப் பார்த்ததும் கழுகார் கேட்டார்.

‘‘எங்களைக் கேட்டால்..? நீர்தானே சொல்ல வேண்டும்?” என்றோம். தலையாட்டியவர் தொடர்ந்தார்.

‘‘இரட்டை இலையைக் கைப்பற்றுவதற்காக தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் தர முன்வந்த வழக்கில் கைதான தினகரன், கோபத்தின் விளிம்பில் இருப்பது பி.ஜே.பி-யைப் பார்த்து அல்ல. தனக்கு மத்திய அரசு நெருக்கடிக்கு மேல் நெருக்கடியைத் தந்து வருகிறது என்ற கோபத்தைவிட, நம்பிய அ.தி.மு.க-வினர் தன்னைக் கைவிட்டதுதான் அவரது கோபத்துக்குக் காரணம். ‘நன்றி உணர்ச்சியே இல்லாதவர் பன்னீர் மட்டும்தான் என்று நினைத்தேன். எடப்பாடி உள்பட யாருக்குமே நன்றி உணர்ச்சி இல்லை. நான் இல்லாவிட்டால் அன்றே எல்லோரும் பன்னீருடன் போயிருப்பார்கள். நான் இருக்கும் நம்பிக்கையில்தான் அனைத்து எம்.எல்.ஏ-க்களும் கூவத்தூரில் வந்து தங்கினார்கள். நான்தான் அவர்களைப் பாதுகாப்பாக வைத்து இருந்தேன். அந்த எண்ணமே இல்லாமல் பதவி கிடைத்ததும் ஆடுகிறார்கள். ‘தினகரன் குடும்ப ஆதிக்கத்தில் இருந்து கட்சியை மீட்போம்’ என்று பேட்டி தருகிறார்கள். எனது குடும்ப ஆதிக்கம் எப்படி இருக்கும் என்று நான் காட்டுகிறேன். எனக்கு இல்லாத பதவியில் எடப்பாடி எப்படி உட்கார்ந்திருப்பார் என்று காட்டுகிறேன்’ என கொந்தளித்தாராம் தினகரன். ‘என்னை ஒரு நெருக்கடியில் இருந்து காப்பாற்ற முடியாத ஆட்சி இருந்தால் என்ன, கலைந்தால்தான் என்ன’ என கர்ஜிக்கிறாராம் தினகரன்.”

‘‘எப்போது வேண்டுமானாலும் ஆட்சி கவிழலாம் என்பதுதான் நிலைமையா?”

‘‘ஆமாம்! ‘தினகரனுக்கு 87 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இருக்கிறது’ என்று தினகரன் வீட்டு வாசலில் நின்று நாஞ்சில் சம்பத் சொல்கிறார். தினகரனுக்கு 87 எம்.எல்.ஏ-க்கள் ஆதரவு இருக்கிறதோ இல்லையோ... கணிசமான ஆதரவு இருக்கலாம். மத்திய உளவுத்துறை அனுப்பியிருக்கும் ஒரு ரிப்போர்ட் படி 23 எம்.எல்.ஏ-க்கள், அவர் எது சொன்னாலும்  கேட்கும் நிலையில் இருக்கிறார்களாம். உல்டாவாகச் சொல்கிறேன்... எடப்பாடி ஆட்சிக்கு 122 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு இருந்தது. இதில் ஆறு பேர் குறைந்தாலே ஆட்சி கவிழ்ந்து போகும். அதுதான் இன்றைய நிலைமை!”

‘‘இதெல்லாம் எடப்பாடிக்குத் தெரியாதா என்ன?”

‘‘தெரியும். அதனால்தான் அவர் சுறுசுறுப்பாக கட்சிப் பணியாற்ற ஆரம்பித்துள்ளார். அ.தி.மு.க தலைமைக் கழகத்தில், தினமும் 16 மாவட்டச் செயலாளர்கள் வீதம், கட்சியின் முக்கியப் பிரமுகர்களை வைத்து எடப்பாடி கோஷ்டியினர் ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி வருகிறார்கள். இந்தக் கூட்டங்களில், யாரும் தினகரன் விவகாரத்தைப் பற்றி வாய் திறக்கவில்லை. இந்தக் கூட்டம் முடிந்ததும், தினமும் 20 எம்.எல்.ஏ-கள் வீதம் ஆலோசனைக் கூட்டத்தைக் கூட்ட எடப்பாடி கோஷ்டியினர் தயாராகிவிட்டார்கள். தினகரனுக்கு ஆதரவு இருப்பதாக ஜெயா டி.வி-யில் கட்சிக்காரர்களின் பேட்டிகள் அடிக்கடி ஒளிபரப்பாகின்றன. தினகரன் ஆதரவு நிலை எடுத்திருக்கும் வெற்றிவேல், தங்க.தமிழ்ச்செல்வன், பழனியப்பன், தோப்பு வெங்கடாசலம், செந்தில்பாலாஜி உள்ளிட்ட ஏழு எம்.எல்.ஏ-க்கள், தற்போது எந்த முடிவையும் எடுக்காமல் இருக்கிறார்கள். தினகரன் கைது செய்யப்பட்ட மறுநாள் காலை, இவர்கள் அனைவரும் விமானத்தில் மும்பை சென்று, தமிழக பொறுப்பு கவர்னர் வித்யாசாகர் ராவைச் சந்திக்கத் திட்டமிட்டிருந்தனர். எடப்பாடி முதல்வர் ஆவதற்காக கொடுத்த கடிதங்களை வாபஸ் பெறுவதுதான் திட்டம். இந்தத் தகவல் வெளியில் பரவியதும், அந்த எம்.எல்.ஏ-க்கள் அதை மறுத்தனர். இடையில் தினகரன் குடும்பத்துப் பிரமுகர் ஒருவர், அந்த  எம்.எல்.ஏ-க்களிடம் பேசி, திட்டத்தைக் கைவிடும்படி கேட்டுக்கொண்டாராம். ‘கொஞ்சம் பொறுங்கள். வருகிற ஜூன் மாதம் வரவுள்ள ஜனாதிபதி தேர்தல் வரைதான் இங்கே ஆட்சி நடக்க டெல்லி பி.ஜே.பி-யினர் விடுவார்கள். அதன்பிறகு, இவர்களுக்குள் கோஷ்டிபூசல்களைக் கிளறிவிட்டு ஆட்சியை சஸ்பெண்ட் செய்துவிடுவார்கள். ஆகஸ்ட் மாதம் கோட்டையில் கொடி ஏற்றப்போவது கவர்னர்தான்’ என்றாராம் அந்தப் பிரமுகர்.”

‘‘அதனால்தான் வேடிக்கை பார்க்கிறார்களோ?”

‘‘கூவத்தூரில் நடந்த குளிப்பாட்டுதலின்போது, ‘மூன்று மாதங்களுக்கு ஒரு தடவை 25 லகரம் தரப்படும்’ என எடப்பாடி தரப்பினர் சத்தியம் செய்தார்களாம். அதன்படி, கெடு நெருங்குகிறது. ‘எப்போது பணப் பட்டுவாடா?’ என்று நச்சரித்து வருகிறார்களாம் எம்.எல்.ஏ-க்கள். மணல், கிராவல் மண், மதுபான பிஸினஸ்... இப்படி ஒவ்வொன்றில் இருந்தும் மாதா மாதம் கப்பம் கட்டுவார்கள். கடந்த மூன்று மாதங்களாக யாரும் கப்பம் கட்டவில்லையாம். அவர்களைக் கூப்பிட்டு, ஜரூராக வசூல் வேட்டை நடக்கிறதாம். இது வந்து சேர்ந்தவுடன், எம்.எல்.ஏ-க்களுக்குக் கொடுத்த வாக்குக் காப்பாற்றப்படுமாம். அதேபோல, தற்போதுள்ள சுமார் 2,600 டாஸ்மாக் கடைகளின் பார்களை உள்ளூர் பிரமுகர்கள் வசம் ஏலம் விட்டுவிடலாமா என்கிற யோசனை, அரசின் பரிசீலனையில் இருக்கிறது. சட்டம் - ஒழுங்குப் பிரச்னைகளை அவர்கள் உள்ளூரில் பார்த்துக்கொள்வார்கள் என்று கணக்குப்போடுகிறார்கள் டாஸ்மாக்கின் உயர் அதிகாரிகள். இதிலும் எம்.எல்.ஏ-க்களுக்குக் கணிசமான கவனிப்பு உண்டாம்.”

‘‘இணைப்புப் பேச்சுவார்த்தைகள் என்னாச்சு?”

‘‘இந்தக் களேபரங்களுக்கு நடுவே, அ.தி.மு.க-வின் இரண்டு அணிகளுக்கு இடையே இணைப்பு பேச்சுவார்த்தை நடக்கிறது. டெல்லியில் தினகரன் கைது செய்யப்பட்ட செவ்வாய் இரவில், எழும்பூரில் உள்ள ஓட்டல் ஒன்றில் இரு தரப்பினரும் சந்தித்துப் பேசினர். எடப்பாடி அணியில் வைத்திலிங்கம், செங்கோட்டையன், ஓ.பி.எஸ் அணியில் கே.பி.முனுசாமி, நத்தம் விசுவநாதன் ஆகியோர் சந்தித்தனர். இவர்களுக்கு இடையே பூர்வாங்க பேச்சுவார்த்தை நடந்தது. அந்தச் சந்திப்பில் எடுத்த முடிவின்படிதான் அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் இருந்த சசிகலா படங்களை அகற்றினார்கள்.’’

‘‘ஆனாலும் அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை நடக்கவில்லையே?’’

‘‘ஓ.பி.எஸ் ஆட்கள் வரவில்லை என்பதால், மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை எடப்பாடி பழனிசாமி நடத்தினார். அதன்பிறகுதான் இரவில் முக்கிய நிர்வாகிகளின் ரகசிய சந்திப்பு நடந்தது. ஒரு பக்கம் பேச்சுவார்த்தைக்குத் தயார் போல எடப்பாடி பழனிசாமி அணி காட்டிக் கொண்டாலும், ஏதோ ஒரு ரகசிய திட்டத்தோடுதான் அவர்கள் செயல்படுவதாக ஓ.பி.எஸ் அணி சந்தேகப்படுகிறது.’’

‘‘என்ன சந்தேகம்..?’’

‘‘மூன்று நாள்கள் நடந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில், தேர்தல் ஆணையத்துக்குத் தாக்கல் செய்ய வேண்டிய பிரமாண பத்திரங்கள் குறித்து பேசி இருக்கிறார்கள். ‘முதல்வர் பதவி, பொதுச்செயலாளர் பதவி எதையும் ஓ.பி.எஸ் அணிக்குக் கொடுக்கக் கூடாது’ என்று சிலர் சொல்லி இருக்கிறார்கள். உள் அரங்கிற்குள் இதையெல்லாம் பேசி இருந்தாலும் அந்தச் செய்திகள் அனைத்தும் ஓ.பி.எஸ் அணி மூத்த நிர்வாகிகளின் காதுகளுக்கு உடனே சென்று விட்டது. ‘இணைப்புக்குத் தயார் என்று சொல்கிறார்கள். ஆனால், மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பிரமாணப் பத்திரத்தை, வரும் 5-ம் தேதிக்குள் வாங்கிவிடுங்கள் என எதற்குக் கேட்கிறார்கள்? அந்த பிரமாணப் பத்திரத்தில் சசிகலா, தினகரன், எடப்பாடி பழனிசாமி மூன்று பேர் பெயர்களும் அப்படியே உள்ளன. இதுதான் எங்களுக்கு இன்னும் சந்தேகமாக உள்ளது’ என ஓ.பி.எஸ் தரப்பு சொல்கிறது.”

‘‘எடப்பாடி அணிக்குள்ளும் ஏதோ கைகலப்பு என்றார்களே?”

‘‘ஆமாம்! இரண்டாம் நாள் கூட்டம் முடிந்து மாடியில் இருந்து அனைவரும் இறங்கி வந்துகொண்டிருந்தனர். அப்போது, அமைப்புச் செயலாளர் சிவகங்கை உமாதேவன், அவருக்கு முன்னால் படியில் இறங்கிக்கொண்டிருந்த வைத்திலிங்கத்தைப் பார்த்து திடீரென, ‘உன்னால்தான் கட்சிக்கே இந்த நிலைமை. நீ அம்மா இருக்கும்போதே கூழைக் கும்பிடு போட்டு விசுவாசிகளை எல்லாம் கட்சியை விட்டு வெளியேற்றினே. பல பேர் பதவியை காலி பண்ணினே. என்னையும் அப்படித்தான் செய்தே. சொந்த ஊர்லயே ஜெயிக்க முடியாத நீ எல்லாம் பஞ்சாயத்து பண்ண வந்துட்ட’ என்று எகிறி உள்ளார். கடுப்பான வைத்திலிங்கம், ‘என்னையே எதிர்த்துப் பேசுறியா’ என்று கையை ஓங்கியுள்ளார். கைகலப்பு ஏற்படும் சூழ்நிலை வந்தபோது, அருகில் நின்ற அமைச்சர் செங்கோட்டையனும் முன்னாள் அமைச்சர் சிவபதியும் இருவரையும் விலக்கிவிட்டுள்ளார்கள்.அதேநேரத்தில் எடப்பாடியும் மாடியில் இருந்து இறங்கினார். இந்த களேபரங்களை கண்டும் காணாதது போல, முகத்தை கர்ச்சீப்பால் துடைத்தபடி கீழே போய்விட்டாராம்.”

‘‘பன்னீருக்கே இந்த இணைப்பில் விருப்பம் இல்லை என்கிற மாதிரி செய்திகள் வருகின்றனவே?”

‘‘அதற்கு ஒரு காரணத்தைச் சொல்கிறார்கள். தமிழகம் முழுவதும் பன்னீர் தரப்பினரிடையே ரகசிய சர்வே நடத்தப்பட்டு உள்ளது. அவர்களில் 90 சதவிகிதம் பேர், இணைப்பை விரும்பவில்லையாம். காரணம், ‘ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் பணப் பட்டுவாடா; கூவத்தூரில் 122 எம்.எல்.ஏ-க்களுக்கு அர்ச்சனை செய்து குளிர்வித்தது; திறமையற்ற நிர்வாகம்; ஆட்சியில் ஊழல் செய்கிறவர்கள்... என்ற கோணத்தில்தான் எடப்பாடி கோஷ்டியினரை தமிழக மக்கள் பார்க்கிறார்கள். ஆக, இவர்களை மக்கள் அறவே வெறுக்கிறார்கள். எனவே, இவர்களுடன் இணைப்பு வேண்டாம். ஊழல்வாதிகளுடன் போனால், நம்மையும் மக்கள் விரட்டியடிப்பார்கள்’ என்று முடிவு கிடைத்ததாம். இதையடுத்து, பன்னீர் யோசிக்க ஆரம்பித்துவிட்டாராம். கொஞ்ச காலம் பொறுத்திருந்தால், எடப்பாடி கோஷ்டியினர் உள்குத்துகள் காரணமாகப் பிரிந்துவிடுவார்கள் என எதிர்பார்க்கிறார்கள் பன்னீர் கோஷ்டியினர்.”

‘‘சசிகலா குடும்பத்தினர் இவ்வளவையும் வேடிக்கை பார்த்துக்கொண்டா இருக்கிறார்கள்?”

‘‘சசிகலா குடும்பத்தினரை கட்சியில் இருந்தும், ஆட்சியில் இருந்தும் விரட்டியடிக்கவேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு செயல்பட்டவர்கள் எடப்பாடி கோஷ்டியைச் சேர்ந்த ஐவர். வேலுமணி, தங்கமணி, ஜெயக்குமார், வைத்திலிங்கம் மற்றும் சி.வி.சண்முகம் ஆகியோர்தான் அவர்கள். இவர்களுக்குத் தகுந்த சமயத்தில் பாடம் புகட்டுவோம் என்று சசிகலா குடும்பத்தினர் சூளுரைத்திருக்கிறார்கள். அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் சசிகலா, தினகரன் பேனர்களை பிய்த்து எறிய நாள், நட்சத்திரம் குறித்தவர்கள் வேலுமணியும் தங்கமணியும்.தினகரன் மட்டுமல்ல... திவாகரன், அவரது மகன் ஜெயானந்த், இளவரசி மகன் விவேக், டாக்டர் வெங்கடேஷ் உள்ளிட்ட சசிகலா குடும்பத்தினர் எவருமே கட்சிக்குள்ளேயும், ஆட்சியிலும் தலையிடமுடியாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்கிற அதிரடி முடிவும் சசிகலா காதுக்குப் போய்விட்டது. இதனால் சசிகலா குடும்பத்தினர் இவர்கள் மீது கடும் கோபத்தில் இருக்கிறார்கள்.”

‘‘ஓஹோ!”

‘‘முன்பே அந்த அமைச்சரைப் பற்றி உமக்குச் சொல்லி இருக்கிறேன். தினகரனுக்கு வெண்சாமரம் வீசிவந்த ஒரு அமைச்சர், மத்திய அரசையும், பிரதமர் மோடியையும் வித்தியாசமான முறையில் விமர்சனம் செய்திருக்கிறார். இந்தத் தகவலை எப்படியோ மத்திய உளவுத்துறையினர் மோப்பம் பிடித்து டெல்லி மேலிடத்துக்குச்  சொல்லிவிட்டனர். கடுப்பான மேலிடம், ‘ஏதாவது கேஸ் போட்டு அவரை உள்ளே தள்ளுங்கள்’ என்று உத்தரவு போட்டதாம். ஸ்கெட்ச் போட்டு, காத்திருந்தார்கள். இப்போது தினகரன் விவகாரம் சூடுபிடித்துள்ள நிலையில், இந்த விவகாரத்தில் தானாக வந்து மாட்டிக்கொண்டார் அந்த அமைச்சர். ஏற்கெனவே அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு நடந்தபோது அத்துமீறி நுழைந்து பிரச்னை பண்ணியதாக வருமானவரித்துறையினர் போலீஸில் புகார் செய்துள்ள அமைச்சர்கள் பட்டியலில் இவர் பெயரும் இருக்கிறது. அந்த வழக்கில் சென்னை போலீஸார், பெயிலில் விடக்கூடிய சாதாரண சட்டப் பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்திருப்பதைப் பார்த்து  வருமான வரித்துறையினர் டென்ஷன் ஆகிவிட்டார்கள்.  இந்த நிலையில், இந்த அமைச்சரின் சகோதரி கொச்சி அருகே வசிக்கிறார். சகோதரியின் கணவரிடம் ஏராளமான பணமூட்டைகள் பதுக்கி வைத்திருந்தார்களாம். ‘அதிலிருந்து ஒரு சிறு பகுதியைக் கிள்ளி தினகரன் விவகாரத்தில் பயன்படுத்தியிருக்கலாமோ’ என்கிற கோணத்திலும் விசாரிக்கிறார்கள். இந்த ரூட்டில்தான் பணம் ஹாவாலா முறையில் பரிமாற்றம் நடத்திருக்கலாம் என்கிற ரகசிய தகவல் கிடைத்ததை ‘உடும்பு’ப்பிடியாக பிடித்துக்கொண்டு விசாரிக்கிறார்களாம்”

‘‘அப்படியா?”

‘‘தினகரனை டெல்லி போலீஸார் சென்னைக்கு அழைத்து வந்திருக்கிறார்கள். ஐந்து அதிகாரிகள், கூடவே விசாரணைக்காக வந்திருக்கிறார்கள். இந்த நிலையில், சில அமைச்சர்களை விசாரிக்கப் போகிறார்கள், போலீஸ் அதிகாரிகளும் சிக்கப் போகிறார்கள்’ என வரிசைகட்டி தகவல்கள் பரவுகின்றன. டெல்லியில் இருக்கும் தமிழக அதிகாரிகள் சிலரும் விசாரணை வளையத்தில் கொண்டுவரப்படக்கூடும். தினகரனிடம் நடக்கும் விசாரணையின்போது இதையெல்லாம் சொல்லி, அவரின் ரியாக்‌ஷனை டெல்லி போலீஸ் கவனித்திருக்கிறது’’ என்ற கழுகார் பறந்தார்.

மிஸ்டர் கழுகு: “எனக்கு இல்லாதது உனக்கு எதற்கு?” - ஆட்சியைக் கவிழ்க்கிறார் தினகரன்!

தி.மு.க போடும் தூண்டில்!

அ.தி.மு.க-வில் நிலவும் நிச்சயமற்ற தன்மை தி.மு.க-வையும் பரபரப்பாக்கி இருக்கிறது. கடந்த 28-ம் தேதி வெள்ளிக்கிழமை காலை, தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் கூட்டம், சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்தது. ஏழு தீர்மானங்கள் இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. 

‘‘விவசாயிகள் பிரச்னைக்காக நாம் நடத்திய முழு அடைப்பு, பல புதிய கட்சிகளை நம்மோடு இணைத்துள்ளது. உள்ளாட்சித் தேர்தலுக்குள் இவர்களோடு ஒவ்வொரு மாவட்டத்திலும் இணக்கம் ஏற்படுத்திக்கொள்ளுங்கள். இதுதான் நம் எதிர்காலக் கூட்டணி’’ என மாவட்டச் செயலாளர்களுக்கு அட்வைஸ் செய்தாராம் ஸ்டாலின்.

இந்தக் கூட்டத்துக்குமுன், சீனியர் பிரமுகர்களோடு ஸ்டாலின் தனியாகப் பேசினாராம். ‘குழம்பிய அ.தி.மு.க குட்டையிலிருந்து சில மீன்களைப் பிடித்துவந்து ஆட்சி அதிகாரத்தை எட்டுவது சாத்தியமா?’ என்கிறரீதியில் இந்த ஆலோசனை நடந்தது. இதைத் தொடர்ந்து சில மாவட்டச் செயலாளர்கள் உற்சாகமாகக் கிளம்பிப் போயிருக்கிறார்கள்.

News2
News2

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a comment