Wednesday, April 26, 2017

தெர்மாகோல் விஞ்ஞானி!

தெர்மாகோல் விஞ்ஞானி!

சில மணி நேரங்களில் ‘தெர்மாகோல்’ என்பதை இந்தியா முழுக்க வைரல் வார்த்தையாக மாற்றிவிட்டார், கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு. வைகை அணையின் தண்ணீர், வெயிலின் தாக்கத்தால் ஆவியாகாமல் தடுக்க, தெர்மாகோல் ஷீட்டுகளை மிதக்க விட்டு, ‘தெர்மாகோல் விஞ்ஞானி’ என்ற பட்டத்தை தட்டிச்சென்றுவிட்டார் அவர்.

பொதுப்பணித் துறை பொறியாளர் ஒருவரின் யோசனை இது என்கிறார்கள். ‘பத்து சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட வைகை அணையை, 300 தெர்மாகோல் அட்டைகளைக் கொண்டு மூடிவிட முடியுமா?’ என்று கேள்வி எழுந்தது. பரிசல் மூலம் கொண்டுசென்று அணையின் மையப்பகுதியில்  மிதக்கவிடப்பட்ட தெர்மாகோல் அட்டைகள் எல்லாம், அந்தப் பரிசல் கரைக்குத் திரும்புவதற்குள் வேகமாகக் கரைக்கு வந்துவிட்டன.

இதைக் கிண்டல் செய்யும் வேகத்தில் இரண்டு விஷயங்களை மறந்துவிட்டோம். 

ஒன்று, வைகை அணைப் பாசன விவசாயிகள் சங்கத்தின் கோரிக்கை. இப்போது வைகை அணையின் மதகுப்பகுதியில் 17 அடி ஆழத்துக்குச் சேறும் சகதியும் தேங்கியுள்ளன. 2001-க்குப் பிறகு அணை தூர்வாரப்படவில்லை. தூர்வாருவதற்கு இதுதான் சரியான நேரம். இதற்காக பலமுறை அவர்கள் கோரிக்கை வைத்து ஓய்ந்துவிட்டார்கள். ‘குடிமராமத்து’ திட்டத்தை, பெரும் ஆரவாரத்தோடு ஆரம்பித்த தமிழக அரசு, அதை அக்கறையோடு செய்ய வேண்டிய இடமும் இதுதான், நேரமும் இதுதான் என்பதை உணரவில்லை. இப்போது தூர்வாரி ஆழப்படுத்தினால், மழைக்காலத்தில் அணையில் நிறைய தண்ணீர் தேங்கும். இதைச் செய்யாமல், தெர்மாகோல் தடுப்பு போடுவதில் பிஸியாக இறங்கினார்கள்.

இரண்டாவது, இதற்கு ஆன செலவு. ‘‘இந்தத் திட்டத்துக்கு, 10 லட்சம் ரூபாய் செலவு ஆனது என்று முதலில் சொன்னார்கள். திட்டம் ஃப்ளாப் ஆனதால், ‘எட்டாயிரம் ரூபாய் செலவானது’ என்று மாற்றிச் சொன்னார்கள். தெர்மாகோல் திட்டம் தோல்வி அடையாமல் இருந்திருந்தால், அதை வைத்து 10 கோடி ரூபாய்க்கு மெகா திட்டம் போடுவதற்கு ஐடியா வைத்திருந்தார்கள்” என்று மதுரை அரசியல்வாதிகள் சொல்கிறார்கள். 

அடுத்த முறை தெர்மாகோலை மரச்சட்டத்தில் இணைத்து மிதக்க விடக்கூடும். அமெரிக்காவில் ஏற்கெனவே ஒருமுறை செய்தது போல கருப்பு ரப்பர் பந்துகளை மிதக்கவிடக்கூடும். 

பிரச்னை தெர்மாகோலில் இல்லை. இதை ஒரு ஐடியாவாகச் சொன்ன பொதுப்பணித் துறை பொறியாளரிடமும் பிரச்னை இல்லை. கோடை நாட்களில், நீர்நிலைகளில் இருந்து தண்ணீர் ஆவியாகாமல் தடுக்க பல ஐடியாக்கள் உலகெங்கும் பரிசீலனையில் இருக்கின்றன. ஆச்சர்யமான விஷயம், தெர்மாகோலும் அதில் ஒன்று! ஏற்கெனவே இரண்டு முறை இதேபோன்ற சோதனைகள் இந்தியாவிலேயே செய்யப்பட்டுள்ளன. மத்திய நீர் ஆணையம், கடந்த 2006-ம் ஆண்டு இதைச் செய்து பார்த்தது. அவர்களுக்கு இதில் உதவிய, ராஜஸ்தான் வேளாண்மைப் பல்கலைக்கழகம், ‘‘கடுகு எண்ணெயை அடுத்து, தண்ணீர் ஆவியாகாமல் தடுக்கும் சிறந்த குணம் கொண்டது, தெர்மாகோல்தான்’’ என அறிவித்தது. இதற்காக அவர்கள், தாவர எண்ணெய், மெழுகு, கோதுமைத் தவிடு, வைக்கோல், மரத்தூள் என வேறுபல பொருட்களையும் தண்ணீரில் போட்டுப் பார்த்து சோதித்தனர்.

தெர்மாகோல் விஞ்ஞானி!

மகாராஷ்டிராவின் நாசிக் மாவட்டத்தில் ஒரு பண்ணைக்குட்டையில் இதே சோதனை,  கடந்த 2015-ம் ஆண்டு செய்யப்பட்டது. ‘‘எந்தத் தடுப்பும் இல்லாத நீர்நிலைகளில் தண்ணீர் ஆவியாவதைவிட, தெர்மாகோல் போட்ட நீர்நிலைகளில் தண்ணீர் ஆவியாவது 32 சதவிகிதம் குறைகிறது’’ என அந்த ஆராய்ச்சி முடிவு சொன்னது. ஆனால், ‘இதெல்லாம் சின்னச் சின்ன குளங்கள், குட்டைகளுக்கு மட்டுமே செட் ஆகும்’ என இந்த ஆராய்ச்சி முடிவுகள் சொன்னதைக் கவனிக்கத் தவறி, இப்போது தமிழ்நாட்டையே கேலிப்பொருள் ஆக்கிவிட்டார்கள்.

வெளிநாடுகளில் இன்னும் விதவிதமாக முயற்சிகள் தொடர்கின்றன. ஃப்ளோட்டிங் டிஸ்க் என்னும் வட்ட வடிவ பாலிப்ரோப்பலீன் தட்டுகளைத் தண்ணீரில் பரப்புகிறார்கள். ஆஸ்திரேலியாவில் மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக் மற்றும் டயர்களைப் பயன்படுத்துகிறார்கள். அணை நீரை மொத்தமாக மூடும் பெரிய விரிப்புகள் போடுகிறார்கள். தண்ணீரில் வளரும் சிலவகை செடிகளை வளர்த்து, தண்ணீரைப் பாதுகாக்கிறார்கள். ரப்பர் பந்துகள் போடுவதன் மூலமும் தண்ணீர் ஆவியாவதைக் குறைத்திருக்கிறார்கள்.

ஆனால், எல்லாவற்றுக்கும் முன்பாக அவர்கள் நீர்நிலைகளைப் பாதுகாப்பாக வைத்திருக்கிறார்கள். ஆறுகளையோ, குளங்களையோ, ஏரிகளையோ சூறையாடுவதில்லை. முறையாகத் தூர்வாரவும் தவறுவதில்லை. தண்ணீரின் மதிப்பை உணர்ந்திருக்கிறார்கள். நம் அரசியல்வாதிகள்தான் எல்லாவற்றையும் பண மதிப்பாகவே பார்க்கிறார்கள்.  

News2
News2

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a comment