Tuesday, April 25, 2017

விஜய் மல்லையா வருவார்... பணம் வருமா?

விஜய் மல்லையா வருவார்... பணம் வருமா?

மோடி அரசின் முகத்தில் விழுந்த மிகப் பெரிய கறை, விஜய் மல்லையா. `செல்லாக்காசு’ அறிவிப்பு என்றாலும், வங்கிகள் மினிமம் பேலன்ஸை வலியுறுத்தினாலும், விவசாயிகள் மீது ஜப்தி நடவடிக்கை எடுத்தாலும், விமர்சகர்கள் எழுப்புகிற முதல் கேள்வி... ‘‘விஜய் மல்லையாவை என்ன செய்தீர்கள்?” என்பது தான். அதனாலேயே, விஜய் மல்லையா லண்டனில் கைது செய்யப்பட்டபோது, அதை மோடி அரசின் மிகப் பெரிய வெற்றியாக சித்திரிக்க, பெரும் முயற்சி நடந்தது. சில மணி நேரங்களில் மல்லையா ஜாமீனில் விடப்பட்டார். அவரை இந்தியாவுக்கு நாடு கடத்தும்படி நம் அரசு விடுத்திருக்கும் கோரிக்கைக்கு முடிவு கிடைக்க சில மாதங்களோ, ஆண்டுகளோகூட ஆகலாம். ஆனால், அவர் ஏமாற்றிய பணம் திரும்பக் கிடைக்குமா?

2016-ம் ஆண்டு மார்ச் 2-ம் தேதி மல்லையா, லண்டனுக்குத் தப்பிச் சென்றார். வங்கிகளில் அவர் வாங்கிவிட்டு, திருப்பிக் கட்டாமல் விட்ட கடன் ரூ.8,191 கோடி. இந்தியாவில் இருக்கும் அவருடைய சொத்துகளை ஏலம் விட்டாலும், இந்தக் கடனை ஈடுசெய்ய முடியாது. `அவரை இந்தியாவுக்கு நாடு கடத்தி அழைத்துவந்து, வெளிநாடுகளில் இருக்கும் சொத்துகளையும் பறிமுதல் செய்ய வேண்டும்’ என கோரிக்கை எழுந்தது. மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி சில மாதங் களுக்கு முன்பு பிரிட்டன் சென்றபோது, இதுபற்றிப் பேசினார். மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்தும்படி, இந்தியா சார்பில் கடந்த 2017 பிப்ரவரி 8-ம் தேதி முறைப்படி கோரிக்கை வைக்கப்பட்டது. இந்தச் சூழ்நிலையில்தான் ஏப்ரல் 18-ம் தேதி லண்டனில் அவர் கைது செய்யப்பட்டார். 

மல்லையாவை போலீஸ் தேடிப் போய்க் கைது செய்யவில்லை. அவரை நாடு கடத்துமாறு இந்திய அரசு விடுத்த கோரிக்கையை ஏற்று, ஸ்காட்லாந்து யார்டு போலீஸ் வழக்குப் பதிவு செய்தது. இந்தத் தகவலை அறிந்ததும், அவராகவே வந்து போலீஸ் ஸ்டேஷனில் சரணடைந்தார். போலீஸ் அவரை கோர்ட்டில் ஆஜர் செய்தது. நிதிக் குற்றங்களுக்கு பிரிட்டன் நீதிமன்றங்கள் உடனடியாக ஜாமீன் வழங்கிவிடும். அந்த வழக்கப்படி அவருக்கு ஜாமீன் கொடுத்துவிட்டார்கள்.

அவர் 8,191 கோடி ரூபாய் கடன் வாங்கி ஏமாற்றியதற்காகக் கைது செய்யப்படவில்லை. நமக்கு இது தேசத்தையே உலுக்கும் பிரச்னையாக இருக்கலாம். ஆனால், பிரிட்டன் நீதிமன்றங்களுக்கு இது பெரிய விஷயமே இல்லை. இதுபோன்ற சிவில் விஷயங்களை அங்கு வழக்காகப் போட்டு நாம் நீதி கேட்க முடியாது. 

மல்லையாவை வேறு மூன்று வழக்குகளுக்காகத் தான் நாம் நாடு கடத்துமாறு கேட்டிருக்கிறோம். கடந்த 2012-ம் ஆண்டில் கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனம், சேவை வரி செலுத்தவில்லை. சுமார் 32 கோடி ரூபாய் வரி கட்டாமல் ஏமாற்றியதற்காக மும்பை நீதிமன்றம் ஒன்றில் வழக்கு போடப் பட்டது. இதில், விஜய் மல்லையாவுக்கு ஜாமீனில் வர முடியாத வாரன்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஐ.டி.பி.ஐ வங்கியில் 1,300 கோடி ரூபாய் கடன் வாங்கினார் மல்லையா. விதிமுறைகளை மீறி முறைகேடாக மல்லையாவுக்குக் கடன் கொடுக்கப் பட்டதாக சி.பி.ஐ வழக்குப்பதிவு செய்தது. மல்லையாவுக்குக் கடன் கொடுத்த வங்கி அதிகாரிகளும் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் விஜய் மல்லையாவை ‘தேடப்படும் குற்றவாளி’யாக சி.பி.ஐ நீதிமன்றம், கடந்த ஜனவரி 24-ம் தேதி அறிவித்தது. இவை தவிர, அமலாக்கப்பிரிவு வழக்கு ஒன்றும் இருக்கிறது. இவற்றைக் காட்டியே, நாம் மல்லையாவை இந்தியாவுக்குத் திருப்பி அனுப்புமாறு கேட்டிருக்கிறோம்.

பிரிட்டன் நீதித்துறை ரொம்பவே கடுமையானது. அவர்கள் கேட்கும் விஷயங்களை ஆதாரங்களோடு நிரூபித்தால்தான் மல்லையாவை இந்தியாவுக்கு அழைத்துவர முடியும். மல்லையா மோசடி செய்திருக்கிறார் என்பதை அமலாக்கப் பிரிவினரும் சி.பி.ஐ அதிகாரிகளும் தகுந்த ஆதாரங்களோடு நிரூபிக்க வேண்டும். அவர்மீதான மூன்று வழக்குகளிலும் இந்தியாவில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுவிட்டது என்பதில் பிரிட்டிஷ் நீதிபதிகளுக்கு நம்பிக்கை வர வேண்டும். மல்லையாவை நாடு கடத்துமாறு கேட்பதில் அரசியல் உள்நோக்கம் ஏதுமில்லை என பிரிட்டன் நீதிமன்றம் நம்ப வேண்டும். 

இந்தியாவுக்கும் பிரிட்டனுக்கும் குற்றவாளி களை நாடு கடத்தும் ஒப்பந்தம் போடப்பட்டு 23 ஆண்டுகள் ஆகிறது. இத்தனை ஆண்டுகளில் இதுவரை ஒரே ஒருவரைத்தான் இந்தியாவுக்கு நாடு கடத்தி கூட்டிவர முடிந்திருக்கிறது. அந்த அளவுக்குக் கடுமையாக விதிகளைப் பின்பற்றும் தேசம் அது. மல்லையாவை நாடு கடத்தும் கோரிக்கை தொடர்பான வழக்கு முடிய, ஓராண்டுகூட ஆகலாம். அதன்பின் பிரிட்டிஷ் சுப்ரீம் கோர்ட்டில் அவர் அப்பீல் செய்ய முடியும். 

இப்போது மல்லையா கைதானதில் ஒரே ஒரு நன்மை... அவர் அங்கிருந்து வேறு எங்கும் தப்பிச் செல்ல முடியாது. அவரது பாஸ்போர்ட்டை ஸ்காட்லாந்து யார்டு பறிமுதல் செய்துவிட்டது. 24 மணி நேரமும் அவர் தனது செல்போனை ஆஃப் செய்யாமல் வைத்திருக்க வேண்டும். அதை வைத்து, அவரைக் கண்காணித்துக்கொண்டே இருப்பார்கள். வழக்கு முடிந்து, இந்தியாவுக்கு நாடு கடத்தப் படுவதற்குள் அவர் தன்னுடைய வெளிநாட்டு சொத்துகளை விற்காமல் இருக்க வேண்டும். அதுதான் முக்கியம்.

News2
News2

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a comment