Sunday, April 30, 2017

ஆபரேஷன் சிலந்தி... சிக்கிய ‘டாட்டூ’ திருட்டுக் கும்பல்!

ஆபரேஷன் சிலந்தி... சிக்கிய ‘டாட்டூ’ திருட்டுக் கும்பல்!

“என் கடைசிப் பொண்ணுக்கு இப்பதான் 35 வயசுல வரன் அமைஞ்சது. சேட்டுகிட்ட அஞ்சு வட்டிக்கு 50 ஆயிர ரூபாய் வாங்கிட்டு... இந்தா இந்தப் பையிலதான் வச்சிக்கினு, கெட்டியமா இடுப்புல பிடிச்சிக்கினு இருந்தேன். ஆனா, பஸ்சுல இருந்து எறங்குறப்போ, யாரோ அடிச்சிக்கினு போய்ட்டாங்க. அய்யோ, இனி எம்மவ கல்யாணத்தை எப்படி நடத்துவேன்” என நெஞ்சைப் பிடித்தபடியே கதறி அழுத அந்த முதியவரின் ஓலம், அங்கிருந்த காக்கி இதயங்களை உலுக்கிவிட்டது.

இதில், குற்றவாளியைப் பிடிப்பதற்காக எஸ்.ஐ-கள் அருள்ராஜ், ராமச்சந்திரன், கான்ஸ்டபிள்கள் அசோக், ராஜ்குமார் உள்ளிட்டோர் கொண்ட தனிப்படையை அமைத்தார் துணை கமிஷனர் சரவணன். அந்த ஆபரேஷனுக்கு ‘சிலந்தி’ எனப் பெயரிடப்பட்டது. சில மாத தேடுதல், நீண்ட பயணம், காத்திருப்புக்குப் பின் ‘சிலந்தி’ டீமுக்கு ஒரு சின்ன க்ளூ கிடைத்தது. அதைக் கொண்டு விசாரணையில் இறங்கினார்கள். 20-க்கும் மேற்பட்ட ‘கேங்’குகளை வளைத்துப் பிடித்தனர். அவர்களிடம் இருந்து சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்புக்கு நகையும் பணமும் மீட்கப்பட்டு, பாதிக்கப்பட்ட 250 பேரிடம் ஒப்படைக்கப்பட்டன. சிலந்தி டீமுக்கு வாழ்த்துகள் சொல்லிவிட்டுப் பேசினோம்.

“மக்கள் பெரும் கூட்டமாகத் திரளும் வர்த்தக ஏரியா, ‘தியாகராய நகர்’. இங்கே பஸ்ஸுல, டிரெய்ன்ல, துணிக் கடையில என பணம், நகை உள்ளிட்ட பொருட்களைத் திருடர்களிடம் பறிகொடுத்தேன்னு, ஒரு நாளைக்கு சராசரியா எட்டு பேராவது புகார் தருவாங்க. பல லட்சம் பேர் கூடுற இடத்தில், திருடர்களைப் பிடிக்கிறது என்பது கடல்ல குண்டூசியைத் தேடுற மாதிரி. எங்க இணை கமிஷனர் அருண், சில வழிகாட்டல்களைக் கொடுக்க, துணை கமிஷனர் சரவணன், பழைய பிக்பாக்கெட் திருடர்களின் லிஸ்ட்டை எடுத்து விசாரித்தார். துப்புக் கிடைக்கல. அடுத்து, திருட்டு நடந்த இடங்களில் எல்லாம் ஆய்வு செய்தோம். அப்போது, வட பழனியில ஒரு பேருந்துல பணத்தை இழந்தவரை விசாரித்தபோது, ‘என் பக்கத்துல கைக்குழந்தையோட ஒரு அம்மா நின்னுட்டு இருந்துச்சு. கையில டாட்டூ கூட இருந்துச்சு’ என்றார். இதற்கு முன் விருகம்பாக்கத்தில் பணத்தை இழந்த ஒருவர், இதே அடையாளத்தைச் சொன்னார். அதையடுத்து, டாட்டூ போட்ட பெண்ணை பல இடங்களில் தேடினோம். அந்த முயற்சிக்குப் பலன் கிடைத்தது. எங்கள் இளைஞர் காவல் படையைச் சேர்ந்த ஒருவரின் கண்ணில் அந்தப் பெண் சிக்கினார். வடபழனி எஸ்.ஐ குழலியின் உதவியோடு டாட்டூ பெண்ணை ஃபாலோ செய்தோம். தன் கைக்குழந்தை விளையாடுவதை, பேருந்துப் பயணிகள் ரசிக்கும் அந்த இடைவெளியில் ஒரு பயணியின் செயினை லாகவமாக அறுத்தார். அப்போது, எங்கள் டீமிடம் கையும் களவுமாக அவர் சிக்கிக்கொண்டார்.

அவர்கொடுத்த தகவலின் அடிப்படையில், ஆந்திர மாநிலத்தில் இருக்கும் குப்பம் மற்றும் வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டைக்குப் பயணித்தோம். அங்கே, திருட்டுக் கும்பலைச் சேர்ந்த 20 பேரைக் கைது செய்தோம். அவர்கள், மிகப்பெரிய வீடுகளில் சொகுசாக வசித்ததைக் கண்டு வியந்துபோனோம். நடிகர், நடிகையர் பயன்படுத்துவதைப் போன்று சகல வசதிகளும் கொண்ட கேரவன் வாகனம் கூட அவர்கள் வைத்திருந்தனர்” என்றவர்கள், இந்த பிக் பாக்கெட் நெட்வொர்கை நம்மிடம் விவரிக்கத் தொடங்கினர்.

ஆபரேஷன் சிலந்தி... சிக்கிய ‘டாட்டூ’ திருட்டுக் கும்பல்!

“ஓர் ஆணுக்கு மூன்று மனைவிகள்கூட உண்டு. இவர்கள் ஒரு டீம். இவர்கள் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என பல மொழி தெரிந்தவர்கள். இப்படி டீம் டீமாக, கைக்குழந்தைகளோடு பொது இடங்களில் குடும்பம் போல வலம் வந்து, மக்கள் கவனத்தைத் திசைதிருப்பி பிக் பாக்கெட் அடிக்கின்றனர். சிறுவர், சிறுமிகளுக்கு பிக் பாக்கெட் அடிக்க குப்பத்தில் பயிற்சி கொடுக்கின்றனர். பயிற்சி பெற்ற இந்தச் சிறுவர், சிறுமிகளைக் கூட்டிக்கொண்டு, சென்னை, ஹைதராபாத், பெங்களூரு என பல நகரங்களுக்குக் கேரவனில் பயணிக்கின்றனர்.

ஒருவரின் உடல்மொழியைக் கொண்டே, அவர் உள்ளூரா, வெளியூரா என்பதைக் கண்டுபிடித்து விடுவார்கள். பெரிய பணக்காரர்களிடம் தங்கள் கை வரிசையை இவர்கள் காட்டுவதில்லை. ‘சூது கவ்வும்’ பாணியில் பிரச்னை வராத ஆட்களிடமே கைவரிசை காட்டுவார்கள். கடைசியில், ‘சிலந்தி’யின் வலைப்பின்னலில், சிக்கிக்கொண்டனர்” என்றனர்.

“எங்கள் கடமையைச் செய்தோம். அவர்கள், குழந்தைகளைக் கூட திருடர்களாக வளர்த்தெடுப்பதைக் கண்டு வருத்தமாக உள்ளது. அவர்களை நல்வழிப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளோம்” என்றார் துணை கமிஷனர் சரவணன்.

குற்றவாளிகளைப் பிடிப்பதோடு அல்லாமல், குற்றச்செயல்களுக்குக் காரணமான சமூக அமைப்பையும் மாற்றுவதே முக்கியம். 

News2
News2

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a comment