Sunday, April 30, 2017

நிரந்தர கவர்னர் பெறும் தகுதி தமிழகத்துக்கு இல்லையா?

நிரந்தர கவர்னர் பெறும் தகுதி தமிழகத்துக்கு இல்லையா?

ன்று... தமிழகத்தின் அரசியல் சூழல் இயல்பானதாக இருந்தது. ஆனாலும்கூட, அன்றைய கவர்னர் ரோசய்யா பரபரப்பாகச் சுற்றிக்கொண்டிருந்தார். இன்று... தமிழகத்தின் அரசியல் சூழல் நொடிக்கு நொடி கொந்தளித்துக்கொண்டிருக்கிறது. இந்தச் சூழ்நிலையில் இன்றைய கவர்னர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவ், தமிழகம் என்ற ஒரு மாநிலம் இருப்பதையே மறந்துவிட்டவராக மகாராஷ்டிராவில் இருக்கிறார். எட்டு மாதங்களாக தமிழகத்துக்கு நிரந்தர கவர்னர் நியமிக்கப்படவில்லை. இதனால், தமிழகத்தின் அரசியலில், ஆட்சி நிர்வாகத்தில், கல்வித்துறையில் பல சிக்கல்கள் நிலவுகின்றன. இவற்றைச் சுட்டிக்காட்டி, ‘தமிழகத்துக்கு நிரந்தர கவர்னர் வேண்டும்’ என சென்னை உயர் நீதிமன்றத்தில் அன்பழகன் என்பவர் பொதுநல மனுவைத் தாக்கல் தாக்கல் செய்திருந்தார். ஆனால், ‘வித்யாசாகர் ராவை தமிழகத்தின் நிரந்தர கவர்ன ராகவே கருத வேண்டும்’ என்று சொல்லி, அந்த மனுவைத் தள்ளுபடி செய்திருக்கிறது நீதிமன்றம்.

இந்திய அரசியல் சாசனத்தின்படி, ‘ஒரு மாநிலத்தின் கவர்னரே அந்த மாநில ஆட்சியின் தலைவராகக் கருதப்படுகிறார்.’ அவருடைய ஆலோசனை மற்றும் வழிகாட்டுதல்களைப் பெற்றே, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசு செயல்படுகிறது. இரண்டு பெரிய மாநிலங்களுக்கு கவர்னராக இருந்தபடி, இப்படிப்பட்ட அதிகாரங்களை ஒருவர் நிறைவேற்ற முடியுமா? அரசியல் சாசனத்தின் 153-வது பிரிவு, ‘ஒருவரையே இரண்டு அல்லது அதற்கும் மேற்பட்ட மாநிலங்களுக்கு கவர்னராக நியமிக்கலாம்’ என்று மத்திய அரசுக்குச் சுதந்திரம் கொடுத்திருக்கிறது. அதற்காக, எத்தனை காலம் வித்யாசாகர் ராவ் மகாராஷ்டிராவின் நிரந்தர கவர்னராகவும், தமிழகத்தின் பொறுப்பு கவர்னராகவும் செயல்பட முடியும்? இந்தக் கேள்விகளின் விளைவுதான், அந்த வழக்கு.

ரோசய்யா to வித்யாசாகர் ராவ்

கடந்த 2011-ம் ஆண்டு ஆகஸ்ட் 31-ம் தேதி, ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த முன்னாள் முதல்வர் ரோசய்யா தமிழக கவர்னராக நியமிக்கப்பட்டார். அவருடைய பதவிக்காலம், 2016-ம் ஆண்டு ஆகஸ்ட் 30-ம் தேதி முடிந்துவிட்டது. அதன்பிறகு, தமிழகத்துக்கு இதுவரை நிரந்தர கவர்னர் நியமிக்கப்படவில்லை. மாறாக, மகாராஷ்டிரா கவர்னராக உள்ள வித்யாசாகர் ராவ், 2016-ம் ஆண்டு செப்டம்பர் 2-ம் தேதி, தமிழகத்தின் பொறுப்பு கவர்னராக நியமிக்கப்பட்டார். 

பொதுவாக, ஒரு மாநிலத்துக்குப் பொறுப்பு கவர்னராக, பக்கத்து மாநில கவர்னர்களை நியமிப்பதே மரபு. அப்படிப் பார்த்தால், தமிழகத்துக்குப் பொறுப்பு கவர்னராக, ஆந்திரா, கேரளா, கர்நாடகா போன்ற ஏதோ ஒரு மாநிலத்தின் கவர்னரையே நியமித்து இருக்க வேண்டும். அப்போதுதான் இரண்டு மாநிலங்களையும் அவரால் சரியாக நிர்வாகம் செய்யமுடியும். மகாராஷ்டிரா மாநிலம், தமிழகத்தில் இருந்து வெகுதொலைவில் உள்ளது. அதனால், தமிழகத்தில் தனக்கு உள்ள பொறுப்புகளை, வித்யாசாகர் ராவ் சரிவர நிறைவேற்ற முடியவில்லை. அரிதாகவே அவர் சென்னை வருகிறார். 

முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது அவரைப் பார்க்க வந்தது, ஜெயலலிதாவின் இறுதிச் சடங்கு, ஓ.பன்னீர்செல்வத்துக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தது, தமிழகத்தின் தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தது உள்ளிட்ட சில நிகழ்வுகளில் மட்டுமே கலந்து கொண்டுள்ளார். 

என்ன செய்தார் வித்யாசாகர் ராவ்? 

தமிழகத்தில் பல வேலைகள் தேங்கிக் கிடக்கின்றன. பல புகார் மனுக்கள் தீர்வு காணப்படாமல் இருக்கின்றன. கவர்னர் மாளிகையில் பெறப்படும் மனுக்களை ஃபைல் செய்துவைக்கும் வேலை மட்டும்தான் நடக்கிறது. மாறாக, அவற்றுக்குத் தீர்வு காண எந்த முயற்சியும் நடக்கவில்லை. தகவல் அறியும்  உரிமைச்சட்டத்தில் கேட்கப்பட்ட பல கேள்விகளுக்கு, கவர்னர் மாளிகையில் இருந்து இதுவரை பதில் இல்லை. பல மாதங்களாக அவை கோப்புகளுக்குள் சிறைபட்டுக் கிடக்கின்றன. 

தமிழகத்தில் கடந்த 8 மாதங்களாக நிர்வாகம் தேக்கமடைந்து நிற்கிறது. இவற்றையெல்லாம்விட, தமிழகத்தில் தற்போது நிலவும் சிக்கலான அரசியல் சூழலை தற்போதைய பொறுப்பு கவர்னர் திறம்படக் கையாளவில்லை என்பது மிக முக்கியமான குறைபாடு. பெரும்பாலான நாட்களில் அவர் மகாராஷ்டிராவிலேயே இருக்கிறார். பொதுமக்கள், கவர்னரிடம் நேரில் தங்கள் புகார்களைக் கொடுக்க முடியவில்லை. இதுபோன்ற காரணங்களால் கவர்னர் மாளிகை ஊழியர்கள் பலரும் தங்கள் வேலைகளை முழு அக்கறையோடு செய்வதில்லை. அதோடு தற்போதைய அரசியல் சூழல் குறித்த தேவையில்லாத வதந்திகள், கவர்னர் மாளிகையில் இருந்து புறப்படுகின்றன. குறிப்பாக தமிழக அரசைக் கலைப்பது, ஜனாதிபதி ஆட்சியை ஏற்படுத்துவது போன்ற வதந்திகள் அங்கிருந்தே வருகின்றன. 

நிரந்தர கவர்னர் பெறும் தகுதி தமிழகத்துக்கு இல்லையா?

வதந்தி... வதந்தி... வதந்தி!

இன்னொரு பக்கம், ‘தமிழகத்தின் புதிய கவர்னராக குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த ஆனந்திபென் படேல் வரப்போகிறார்’, ‘கர்நாடகத்தைச் சேர்ந்த அனந்தமூர்த்தி என்பவர் வரப்போகிறார்’, ‘முன்னாள் சட்ட அமைச்சர் பரத்வாஜ் வருகிறார்’ என்பதுபோன்ற வதந்திகளும் 2016 நவம்பர் மாதம் முதல் சுற்றிக் கொண்டிருக்கின்றன. ஆனால், இதுவரை அப்படி ஒன்றும் நடக்கவில்லை. 

நிரந்தர கவர்னர் இல்லாததால், அரசுத் துறைகளிலும் பல நிர்வாகச் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. சென்னை பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம், டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் உள்ளிட்ட முக்கியமான பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் பதவி காலியாக இருக்கிறது. சமீபத்தில் தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் நியமனம் மட்டுமே நடந்தது. அதுவும் சர்ச்சைக்குள்ளானது.

‘மாநில மனித உரிமை ஆணையம், பெண்கள் ஆணையம், குழந்தைகள் நல ஆணையம், சிறுபான்மையினர் ஆணையங்களில் சேர்மன் பதவி காலியாக உள்ளன. வஃக்பு வாரியத்துக்கு செயல் அதிகாரி நியமிக்கப்படவில்லை. இந்த நியமனங்கள் எல்லாம் கவர்னர் மூலம் செய்யப்பட வேண்டியவை. மாநிலத்தில் முக்கியமான கடமைகளையும் கண்காணிப்பையும் மேற்கொள்ளவேண்டிய இந்த ஆணையங்களின் பதவி இடங்கள் காலியாக உள்ளதால், அவற்றால் திறம்படச் செயல்பட முடியவில்லை. அவை, இருந்தும் இல்லாத நிலையில் உள்ளன’ என நீதிமன்றத்தில் போட்ட வழக்கில் குறிப்பிட்டிருக்கிறார்கள். 

‘முக்கியமான பணி இடங்களை நிரப்புவதற்கு, பொறுப்பு கவர்னர் வித்யாசாகர் ராவ் எந்த முனைப்பும் காட்டவில்லை. தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்கு,இந்த நியமனங்களை நிரப்புவது தொடர்பாக ஒரு கடிதம்கூட அவர் எழுதவில்லை. இது அரசியல் சாசனத்துக்கே எதிரானது. இது தொடர்பாக மத்திய அரசுக்கும், ஜனாதி பதிக்கும் கடிதம் எழுதியும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. வேறு ஒரு மாநிலத்தில் கவர்னராக இருப்பவரால், மற்றொரு மாநிலத்துக்கு வந்துபோகிறவராக இருந்து கொண்டு அந்த மாநிலத்தின் நிர்வாகத்தை நடத்த முடியாது. தினம்தோறும் சந்திப்புகள், குறைகேட்புகள், ஆலோசனைகள், நியமனங்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகளை அப்படிச் செய்ய முடியாது. இதனால், அரசு இயந்திரமும், மாநில நலனும், வளர்ச்சியும் பாதிக்கப்படுகிறது. எனவே, தகுதியான நபரை உடனடியாக தமிழகத்தின் நிரந்தர கவர்னராக நியமிக்க உத்தரவிட வேண்டும்’ என வழக்கு போட்ட மனுதாரர் கேட்டார். இந்த வழக்கில், மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் குமாரதேவன் ஆஜரானார். 

மத்திய அரசு சார்பில், “இந்திய அரசியல் சாசனம் 153-வது பிரிவு, ‘ஒருவரையே இரண்டு அல்லது அதற்கும் மேற்பட்ட மாநிலங்களுக்கு கவர்னராக நியமிக்கலாம்’  எனக் குறிப்பிட்டுள்ளது. அதனால், வித்யாசாகர் ராவை தமிழகத்தின் கவர்னராகத்தான் கருதவேண்டும்” என்று பதில் மனு தாக்கல் செய்தது. சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு இதை ஏற்றுக்கொண்டது. ‘வித்யாசாகர் ராவ் தமிழகத்தின் பொறுப்பு கவர்னராக நியமிக்கப்பட்டு இருந்தாலும், அவரை நிரந்தர கவர்னராகத்தான் கருத வேண்டும். சட்டத்தில் அதற்கு இடம் உள்ளது’ என்று கூறி மனுவைத் தள்ளுபடி செய்தது. 

‘தமிழகத்துக்கு நிரந்தர கவர்னர் வேண்டும்’ எனக் கேட்ட கோரிக்கை, தற்காலிகமாக தள்ளுபடி செய்யப்பட்டது.

Unknown
Unknown

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a Comment