Wednesday, April 26, 2017

நிர்வாணமானது நாங்கள் அல்ல... மத்திய அரசுதான்!

நிர்வாணமானது நாங்கள் அல்ல... மத்திய அரசுதான்!

விவசாயக் கடன் தள்ளுபடி, நதிகள் இணைப்பு, காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தலைநகரை கிடுகிடுக்க வைத்தனர் தமிழக விவசாயிகள். எலிக்கறி தின்றும், பிச்சைப் பாத்திரம் ஏந்தியும், மொட்டை அடித்தும்... தினம் ஒரு போராட்டம் என டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியைத் திணற அடித்ததோடு, இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்தனர். தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் சார்பில், இந்தப் போராட்டத்தைத் தலைமையேற்று நடத்தியவர் அய்யாக்கண்ணு. அகில இந்திய அரசியல் தலைவர்கள் நேரில் வந்து ஆதரவு அளித்த போராட்டத்தின் உச்சகட்டமாக பிரதமர் அலுவலகம் முன்பு நிர்வாணப் போராட்டம் நடத்தினார்கள். தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, விவசாயிகளைச் சந்தித்துப் பேசியதை அடுத்து, 41 நாட்கள் நடத்திய போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைத்திருக்கிறார்கள். அய்யாக்கண்ணுவிடம் பேசினோம்.

‘‘உடலை வருத்திக்கொண்டு நீண்ட போராட்டம் நடத்தியிருக்கிறீர்கள்... இந்த வலிமை எங்கிருந்து வந்தது?’’

“ ‘அடக்குமுறை எங்கெல்லாம் தலைதூக்குகிறதோ அங்கெல்லாம் போராட்டம் எழுவதை யாராலும் தடுக்க முடியாது’ என்பது புரட்சியாளர்கள் பலரின் கருத்து.  விவசாயிகளை ஒடுக்கியதும், முற்றிலுமாக ஒதுக்கியதும்தான் இந்தப் போராட்டத்தை முன்னெடுக்க முக்கிய காரணம். இந்தியா முழுவதும் விவசாயிகளின் வீடுகளில்  வறுமை தலைவிரித்தாடுகிறது. விவசாயிகளுக்குக் கிடைக்க வேண்டிய உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளன. 20 ஏக்கர் வைத்திருந்தாலும் விவசாயியைப் பிச்சைக்காரனாகப் பார்க்கும் அவலநிலை தொடர்கிறது. தொடர்ந்து விவசாயிகள் கண்ணீர் சிந்திக் கொண்டிருந்தார்கள். வெள்ளாமை இல்லாமல் வெறுங்கையோடு வீடு திரும்பும் நிலை மிகக் கொடுமையானது. போராட்டத்தை யாரும் ஒருங்கிணைக்கவில்லை. நொந்துபோன ஒட்டுமொத்த விவசாயிகள்தான் ஒருங்கிணைந்தோம்.”

‘‘போராட்டத்துக்குத் தற்காலிக பிரேக் போட்டிருக்கிறீர்களே... என்ன காரணம்?’’

“சிறுநீரைக் குடித்து எங்க நிலைமையைச் சொல்லியும், மத்திய அரசு கண்டுகொள்ளாதது மிகுந்த கவலை அளிக்கிறது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, எங்களைச் சந்தித்து கோரிக்கைகளை நிறைவேற்றித்தருவதாக உறுதி அளித்துள்ளார். தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின், அனைத்துக்கட்சிக் கூட்டத்தைக் கூட்டி, முழு அடைப்பு நடத்தியிருக்கிறார். மற்ற அமைப்புகளும், அரசியல் கட்சித் தலைவர்களும், நடிகர்களும் எனப் பலரும் எங்கள் துயரத்தைப் பார்த்து ‘தமிழகம் திரும்புங்கள்’ எனக் கேட்டுக் கொண்டார்கள். அதற்கு மதிப்பளித்து போராட்டத்தை ஒத்தி வைத்தோம். கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என்றால், மே 25-ம் தேதிக்குப் பிறகு போராட்டத்தைத் தொடர்வோம்.” 

“போராட்டத்தைக்  கைவிடுமாறு அரசிடம் இருந்து  அழுத்தம் வந்ததா?’’

“நிர்வாணப் போராட்டம் நடத்தியபோது அதிர்ச்சி அடைந்த போலீசார், எங்களை போலீஸ் ஸ்டேஷன் அழைத்துச் சென்றனர். அப்போது துணை கமிஷனர் ஒருவர், ‘துணியை அணிந்து வாருங்கள்’ என்றார். ‘அணிய மாட்டோம்’ என்றோம். இப்படி உறுதியாக இருந்ததால், மத்திய அரசின் தூண்டுதலில் போலீசார் எங்களை மிரட்டினார்கள். ‘யாராவது ஒருவனைக் கழுத்தை அறுத்துத் தூக்கிவந்து இங்கே போட்டு விடுவோம். ஒழுங்காகக் கலைந்து செல்லுங்கள்’ என மிரட்டினார்கள். ‘கொலை  வழக்குப் பதிவு செய்து உங்களை மட்டும் கைது செய்து உள்ளே தள்ளி விட்டு, மற்றவர்களை இங்கிருந்து அப்புறப்படுத்தி விடுவோம்’ என்றார்கள். ஆனாலும், நாங்கள் உறுதியாக நின்று போராடினோம்.’’ 

‘‘விதவிதமாக போராடியும் மத்திய அரசு உங்களைக் கண்டுகொள்ளவில்லையே?’’ 

‘‘1970-களில் ஒரு டன் கரும்பு 90 ரூபாய். அப்போது ஆசிரியர்களுக்கு 90 ரூபாய் சம்பளம் வழங்கியது அரசு. தற்போது, அதே ஆசிரியர்களுக்கு மாதச் சம்பளம் 36 ஆயிரம் ரூபாய் தருகிறார்கள். அதாவது 400 மடங்கு சம்பளத்தை உயர்த்தி இருக்கிறது அரசு. ஆனால், ஒரு டன் கரும்புக்கு இப்போது 2,300 ரூபாயைத்தான் விலையாக நிர்ணயிக்கின்றன மத்திய - மாநில அரசுகள். ‘ஆசிரியர்களுக்குத் தருவதில் கால்பகுதியாவது எங்களுக்கும் கொடுங்கள்’ என்றுதான் கேட்கிறோம். விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலையை நிர்ணயம் செய்தால் அவர்களும் வரிக்கட்டுவார்கள்; பிச்சைக்காரர்கள் போல் ‘கடன் தள்ளுபடி செய்யுங்கள்’ எனக் கேட்க மாட்டார்கள். விவசாயிகளை இரண்டாந்தர குடிமக்களாகத்தான் மத்திய அரசு பார்க்கிறது. தேர்தல் நேரத்தில் விவசாயிகளை முதுகெலும்பாக வும், தேர்தல் முடிந்துவிட்டால் அடிமைகளா கவும் பார்க்கிறது அரசாங்கம். நிர்வாணப் போராட்டம் நடத்தியும் எங்களை கண்டுகொள்ளவில்லை. அதற்காக நாங்கள் கவலைப்படவில்லை. நிர்வாணம் ஆனது விவசாயிகள் அல்ல... மத்திய அரசின் ஆட்சிதான்.” 

‘‘ ‘விவசாயிகள் போராட்டம் உள்நோக்கமுடையது’ எனச் சொல்லப்படுகிறதே?’’

‘‘எங்கள் போராட்டத்துக்குப் பின்னணி யில் தீவிரவாதிகள் இருப்பதாகத் தொடங்கி என்னென்னவோ கட்டுக்கதைகளை எடுத்துவிட்டார்கள். இப்படி கதைகளை கட்டவிழ்த்து விடும் ஆளும் வர்க்கத்துக்கு எங்களின் வறுமையும் ஏழ்மையும் புரியவில்லை. இந்த இரண்டும்தான் போராட்டத்துக்குக் காரணம்.’’

மாட்டைக் காப்பாற்றுபவர்கள் மனிதர்களையும் காக்க வேண்டும்!

News2
News2

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a comment