Sunday, April 30, 2017

போன் போட்டது ஜனா... பணம் கொடுத்தது மல்லி

போன் போட்டது ஜனா... பணம் கொடுத்தது மல்லி

இரட்டை இலைச் சின்னத்தைப் பெற தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு 50 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்டதால், டி.டி.வி.தினகரனின் அரசியல் ஆசை நொறுக்கித் தள்ளப்பட்டிருக்கிறது. இந்த வழக்கில் தினகரன் பெயர் அடிபடுவதற்குக் காரணம் சுகேஷ் சந்திரா. இதில் தினகரன் வலுவாக சிக்கிக் கைதானதற்குக் காரணம், இரண்டு பேர். ஒருவர், தினகரனின் உதவியாளர் ஜனார்த்தனன் என்கிற ஜனா. இன்னொருவர், தினகரனின் நண்பர் மல்லிகார்ஜுனா என்கிற மல்லி. இவர்கள் யார்? தினகரனோடு இவர்களுக்கு எப்படிப் பழக்கம்? 

ஜனார்த்தனன் என்ற ஜனா! 

ஜெயா டி.வி, முன்பு ஜெ.ஜெ டி.வி-யாக இருந்தது. 1994-ம் ஆண்டு ஜெ.ஜெ டி.வி ஆரம்பிக்கப்பட்டபோது அதன் நிர்வாகத்தைப் பார்த்துக் கொண்டவர், சசிகலாவின் அக்கா வனிதாமணியின் இரண்டாவது மகன் பாஸ்கரன். இவர் தினகரனின் சகோதரர். ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டுக்குப் பக்கத்தில்தான் ஜெ.ஜெ டி.வி இயங்கி வந்தது. அங்கே தொலைபேசி ஆபரேட்டராக சேர்ந்தவர்தான் ஜனார்த்தனன் என்கிற ஜனா. 1997-ல் ஜெ.ஜெ டி.வி மூடப்பட்டபோது ஊழியர்கள் வீட்டுக்கு அனுப்பப்பட்டனர். ஆனால், ஜனார்த்தனன் மட்டும் தப்பினார். டெலிபோன் ஆபரேட்டர் வேலையையும், அந்தக் கட்டடத்தை பராமரிக்கும் பணிகளையும் தொடர்ந்து செய்து வந்தார். ஜெ.ஜெ டி.வி, ஜெயா டிவியாக 1999-ம் ஆண்டு வெளிவரத் தொடங்கியது. அதன் நிர்வாகப் பொறுப்பு, தினகரனின் மனைவி அனுராதாவிடம் (சசிகலாவின் அண்ணன் சுந்தரவதனனின் மகள்) ஒப்படைக்கப்பட்டது. அப்போது அனுராதாவுக்கு உதவியாளராக மாறினார் ஜனார்த்தனன். அதன்பிறகு ஜனார்த்தனனின் செல்வாக்கு அதிகரித்தது. புதிய ஆட்களை வேலைக்கு எடுப்பதில் தொடங்கி, ஒட்டுமொத்த நிர்வாகத்திலும் ஜனாவின் அதிகாரம் கொடி கட்டிப் பறந்தது. ஜெயா டி.வி-யின் செய்தி ஆசிரியராக இருந்த கே.பி.சுனிலுக்கும் அனுராதாவுக்கும் இடையில் உரசல் ஏற்பட்டது. சுனிலை அவமானப்படுத்தும் வேலைகளை ஜனார்த்தனன் மூலமே அனுராதா செய்தார். ஒருகட்டத்தில் சுனில் அங்கிருந்து விலகினார். 

போன் போட்டது ஜனா... பணம் கொடுத்தது மல்லி

அதன்பிறகு ஜெயா டி.வி-யில் தவிர்க்க முடியாத சக்தியாகிவிட்டார் ஜனா. அவரின் வளர்ச்சியைக் கண்டு பலரும் வாய் பிளந்தார்கள். 2011-ல் சசிகலாவின் குடும்பத்தை ஜெயலலிதா ஒதுக்கி வைத்த நேரத்தில், ஜனா பற்றியும் சர்ச்சைகள் எழுந்தன. கார்டனில் வைத்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அவரிடம் இருந்து கோடிக்கணக்கான மதிப்புள்ள ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக செய்திகள் கிளம்பின. முக்கியமான பேப்பர்களில் கையெழுத்து வாங்கிக்கொண்டு ஜனாவை துரத்திவிட்டனர். ஆனால், அனுராதாவும், தினகரனும் ஜனாவைக் கைவிடவில்லை. அவர்கள் வீட்டிலேயே வேலைக்கு வைத்துக்கொண்டனர். அதன்பிறகு அவர் முழுக்க முழுக்க தினகரனின் ரைட் ஹேண்டாக மாறினார். தினகரன் செய்த வேலைகள் எதுவும் ஜனாவுக்குத் தெரியாமலோ, ஜனாவின் பங்களிப்பு இல்லாமலோ, ஒருபோதும் நடந்தது இல்லை. இரட்டை இலை வழக்கில் சுகேஷ் சந்திராவை விசாரித்தபோது, அவர் ஜனாவின் செல்போன் வழியாகத்தான் தினகரனுடன் பேசியது தெரியவந்தது. இந்தத் தொலைபேசி உரையாடல்கள் எல்லாம் பக்காவாக ரெக்கார்டு செய்யப்பட்டு இருந்தன. அதைப் போட்டுக்காட்டி ஜனாவிடமும், தினகரனிடமும் டெல்லி போலீஸ் விசாரித்தபோது, அவர்களால் எதையும் மறைக்க முடியவில்லை. 

மல்லிகார்ஜுனா என்கிற மல்லி!

கர்நாடகாவின் சிக்மகளூரில் உள்ள பொறியியல் கல்லூரியில் டி.டி.வி.தினகரன் சேர்ந்து, படிப்பை பாதியிலேயே நிறுத்தினார். அங்கே அவருக்கு அறிமுகம் ஆனவர்தான் மல்லிகார்ஜுனா. ‘‘கர்நாடகாவைச் சேர்ந்தவர் என்றாலும், பல ஆண்டுகளாக சென்னையில்தான் அவரின் குடும்பம் இருக்கிறது. நண்பர்கள் வட்டாரத்தில் அவரை ‘மல்லி’ என்றே அழைப்பார்கள். மல்லியின் அப்பா பாண்டுரங்கன். உடன்பிறந்தவர்கள் ஆறு பேர். நடுத்தரக் குடும்பம்தான். 1991-ம் ஆண்டு வி.எஸ்.டி. மோட்டார் நிறுவனத்தில் மல்லிகார்ஜுனா பணியாற்றிக் கொண்டிருந்தபோது அவருக்கு சம்பளம் 4,500 ரூபாய். மனைவி கோமதி. அமர், ரகு என இரண்டு மகன்கள். தினகரனுடன் ஏற்பட்ட நட்பு, ஒரு கட்டத்தில் ரொம்ப நெருக்கம் ஆனது. வெற்றிவேல், தளவாய் சுந்தரம், கலைராஜன், நா.பாலகங்கா என, பலருக்கும் பதவி வாங்கிக்கொடுக்கும் அளவுக்கு மல்லிகார்ஜுனாவின் செல்வாக்குக் கூடியது. தினகரன் மூலம் பலருக்கும் சீட் வாங்கி கொடுத்தார். ஆரம்பத்தில் புரசைவாக்கம் ரித்தர்டன் ரோட்டில்தான் வாழ்ந்தார். பிறகு கீழ்பாக்கம் ஹாம்ஸ் ரோடு, முனியப்பா சாலை, பழைய மகாபலிபுரம் ரோடு என ஏரியாக்கள் மாறி வந்தார். இப்போது அண்ணா நகர் சாந்தி காலனியில் வசிக்கிறார். சென்னை அடையாறு, திருவண்ணாமலை, கொச்சி ஆகிய இடங்களில் எல்லாம் அவருக்குச் சொத்துகள் இருக்கின்றன. தெலுங்கு செட்டியரான மல்லிகார்ஜுனாவுக்கு பிசினஸ்தான் மூச்சு. அவருடைய பாஸ்போர்ட் பக்கங்கள் நிரம்பி வழியும் அளவுக்கு வெளிநாடுகளில் பறந்து கொண்டே இருப்பார்.

போன் போட்டது ஜனா... பணம் கொடுத்தது மல்லி

‘வனிதா கன்ஸ்ட்ரக்‌ஷன்ஸ்’ என்ற நிறுவனத்தை தினகரன், பெங்களூருவில் தொடங்கினார். அதன் முழு நிர்வாகத்தையும் மல்லிகார்ஜுனாதான் பார்த்துக் கொண்டார். தொழில் நன்றாக நடந்ததால், அதன்பிறகு பல பொறுப்புகளை அவரிடம் ஒப்படைத்தார் தினகரன். 1999-ம் ஆண்டு பெரியகுளம் எம்.பி தொகுதியில் தினகரன் போட்டியிட்டபோது, அவருக்காக கூடவே தங்கி உதவினார். தினகரனின் ரியல் எஸ்டேட் பிசினஸ்களையும் மல்லியே கவனித்துக்கொண்டார். 2011-ல் சசிகலா குடும்பத்தை ஜெயலலிதா ஒதுக்கிவைத்த பிறகு, தினகரனின் அரசியல் வாழ்வும் வனவாசம் ஆனது. ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு மீண்டும் தினகரன் அரசியலில் அடியெடுத்து வைத்தபோது மல்லிகார்ஜுனாவும் பரபரப்பானார். முடக்கப்பட்ட இரட்டை இலைச் சின்னத்தை மீட்பதற்கு தன்னுடைய வழக்கறிஞர் நண்பர்கள், ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள் கொடுத்த யோசனையை செயல்படுத்த மல்லிகார்ஜுனாவைத்தான் தினகரன் தேர்ந்தெடுத்தார். இதற்காக டெல்லி போன மல்லிகார்ஜுனா, சுகேஷ் சந்திராவுக்கு ஹவாலா மூலம் பணம் அனுப்பிவைத்த புரோக்கர்களோடு தொடர்பில் இருந்தார்’’ என மல்லிகார்ஜுனாவின் வரலாற்றைச்  சொல்கிறார்கள் டெல்லி போலீஸார். 

News2
News2

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a comment