Wednesday, April 26, 2017

மூன்று நாள் விசாரணை... முகம் சோர்ந்த தினகரன்!

மூன்று நாள் விசாரணை... முகம் சோர்ந்த தினகரன்!

டெல்லி சாணக்யபுரியில், நேரு பிளானட்டோரியம் எதிரே உள்ள தீன் மூர்த்தி காவலர் குடியிருப்பு வளாகம். மிகச் சாதாரணமாகக் காணப்படும் அந்தக் குடியிருப்புப் பகுதிக்குள், டெல்லி க்ரைம் பிராஞ்ச் அலுவலகம் ஒன்று இருப்பதே பல செய்தியாளர்களுக்குத் தெரியாது. குறிப்பாக, முதல் நாள் அந்த இடத்தைக் கண்டுபிடிப்பதே பெரும்பாடாகிவிட்டது. மாநிலங்களுக்கு இடையேயான குற்றங்களை விசாரிக்கும் ‘இன்டர் ஸ்டேட் செல்’ அலுவலகம் இங்கு இருக்கிறது. இரட்டை இலைச் சின்னத்தை மீண்டும் பெறுவதற்காக, தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில், இங்குதான் தினகரனிடம் தொடர்விசாரணையை நடத்தினார்கள், டெல்லி போலீஸ் அதிகாரிகள். கடந்த 22-ம் தேதி சனிக்கிழமை காலை 30 நிமிட இடைவெளியில் தினகரன், தம்பிதுரை ஆகியோர் தனித்தனி விமானங்களில் டெல்லி வந்து இறங்கினர். விமானம் தரையிறங்கிய ஒரு மணி நேரத்துக்குப் பின்னர்தான் தினகரன் வெளியே வந்தார். முன்னதாக வெளியே வந்த தம்பிதுரையிடம், ‘‘தினகரனுடன் விமான நிலைய லவுஞ்சில் பேசிக்கொண்டிருந்தீர்களா?” என்று செய்தியாளர்கள் கேட்டபோது, நிதானமாக மறுத்தார்.

சாம்ராட் ஹோட்டலில் மதிய உணவு சாப்பிட்ட பிறகு, க்ரைம் பிராஞ்ச் அலுவலகத்துக்கு மாலை 3.15 மணிக்கு இன்னோவா காரில் வந்து சேர்ந்தார் தினகரன். அவருடன் உதவியாளர் ஜனார்த்தனன், நண்பர் மல்லிகார்ஜுனா ஆகியோரும் விசாரணைக்கு அழைக்கப் பட்டிருந்தனர். ‘தினகரனை விசாரிக்கும்போது தாங்களும் உடன் இருக்க வேண்டும்’ என அவரோடு வந்த வழக்கறிஞர்கள் வாதிட்டனர். ஆனால், அவர்களை அலுவலகத்துக்கு உள்ளேயே போலீஸ் அனுமதிக்கவில்லை. 

தினகரன் உள்ளிட்டவர்களிடமிருந்து முதலில் மொபைல் போன்கள் வாங்கப்பட்டன. மூவரையும் நீண்ட நேரம் தனித்தனியாக உட்காரவைத்தனர். சில கேள்விகள் அடங்கிய தாள்கள் தினகரனுக்குக் கொடுக்கப்பட்டன. தீவிர யோசனைகளுக்குப் பின்னர், கேள்விகளுக்குச் சில வரிகளில் மட்டும் பதில் அளித்தார் தினகரன். மற்றவர்களிடமும் தனித்தனியாக இதேபோல விசாரணை தொடர்ந்தது. 

இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர், பக்கத்து அறையில்தான் உட்கார வைக்கப் பட்டிருந்தார். தினகரன் கைது செய்யப்படக்கூடும் என்ற பயத்தில், இந்தி தெரிந்த டெல்லி வழக்கறிஞர் ஒருவர், மூன்று தமிழ் வழக்கறிஞர்கள் என நான்கு பேர் வந்து காத்திருந்தனர். இரவு 10 மணி அளவில் முதல்நாள் விசாரணையை முடித்து அனைவரையும் அனுப்பிவைத்தது போலீஸ்.

மறுநாள் ஞாயிற்றுக்கிழமை அதே அலுவலகத்தில், பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் விசாரணை. முதல் நாள் விசாரணை நடத்திய உதவி காவல்துறை ஆணையர் சஞ்சய் சராவத் மட்டுமல்லாமல் துணை ஆணையர் மதூர் வர்மாவும் காத்திருந்தார். மூன்று பேரும் ஒன்றாகவும், தனித்தனியாகவும் விசாரிக்கப்பட்டனர். முதல் நாள் தினகரன் அளித்த எழுத்துபூர்வமான பதிலுக்கு துணை ஆணையர் மதூர் வர்மா அதிருப்தி தெரிவித்ததோடு, அவரும் விசாரணையில் இறங்கினார்.

 தினகரன் விசாரிக்கப்பட்ட அறைக்கு, திடீரென சுகேஷைக் கூட்டிவந்த போலீஸார், தினகரனின் ரியாக்‌ஷனைக் கவனித்தனர். இருவரிடமும் பல கேள்விகள் கேட்கப்பட்டு, பதில்கள் பதிவு செய்யப்பட்டன. ‘சென்னை, கொச்சி, பெங்களூரு ‘ஹவாலா ரூட்’ மூலம் 10 கோடி ரூபாய் எப்படி டெல்லிக்கு அனுப்பப்பட்டது... யார் யார் இந்தத் திட்டத்தில் உதவினர்?’ என்கிற விசாரணைகள் தொடர்ந்தன. 

இந்த நெட்வொர்க்கில் சுமார் 17 பேர் ஈடுபட்டதாக சுகேஷ் தந்த தகவலை வைத்துக்கொண்டு தினகரனைக் கேள்விகளால் துளைத்தனர். தேர்தல் ஆணைய அதிகாரிகள் இருவரின் பெயர்களைக் குறிப்பிட்டு, ‘அவர்களிடம் என்ன பேசினீர்கள்?’ என்றும் விசாரித்தனர். எதிர்பார்த்ததைவிட மிகத் தாமதமாக, நள்ளிரவு ஒரு மணிக்குத்தான் விசாரணை முடிந்தது. பின்னர், 45 நிமிடங்கள் அந்த அலுவலகத்திலேயே வழக்கறிஞர்களுடன் பேசிவிட்டு, அதிகாலை 1.45 மணிக்கு வெளியே வந்தார் தினகரன். முகம் சோர்ந்து போயிருந்தது. 

மூன்றாம் நாளான திங்கள்கிழமை, கைது பீதியோடு விசாரணை தொடங்கியது. தினகரனுக்காக வழக்குகளில் ஆஜராகும் ஒரு வழக்கறிஞர், சுகேஷுக்கும் ஒரு மோசடி வழக்கில் வாதாடி இருக்கிறாராம். அவர் மூலமாக நிகழ்ந்த பேச்சுவார்த்தைகள் பற்றியும் கேள்விகள் கேட்கப்பட்டன என்கிறார்கள். ‘‘ஆரம்பத்தில் சுகேஷைப் பார்த்ததே இல்லை என மறுத்த தினகரன், ஒரு கட்டத்தில் ஒப்புக்கொண்டார். சில உரையாடல்கள் கிடைத்திருக்கின்றன. வேறு நபர்களின் போன் மூலமாகவும், வாட்ஸ்அப் அழைப்புகள் மூலமாகவும் இருவரும் பேசியதால், அந்த விவரங்களைத் திரட்டுவது கடினமாக இருக்கிறது’’ என டெல்லி போலீஸ் தரப்பில் சொல்லப்படுகிறது.

தேர்தல் ஆணையத்துக்கே லஞ்சம் வழங்க முயற்சி செய்த வழக்கு என்பதால், டெல்லி மீடியாக்களும் வழக்கைப் பரபரப்பாகக் கவனிக்கின்றன. இந்த வழக்கின் போக்குதான், தினகரனின் அரசியல் எதிர்காலத்தையே தீர்மானிக்கப்போகிறது.

News2
News2

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a comment