Wednesday, April 26, 2017

மருந்து மாஃபியா... முடிவு கட்டுவாரா மோடி?

மருந்து மாஃபியா... முடிவு கட்டுவாரா மோடி?

தய நோயாளிகளுக்கு, ரத்த நாளங்களில் கொழுப்பு படிவதைத் தடுக்க ஸ்டேடின் என்ற மாத்திரை பரிந்துரைக்கப்படுகிறது. ஜெனரிக் என்றால் 35 ரூபாய்க்குக் கிடைக்கும். இதுவே, பிராண்ட் என்றால், 53 ரூபாய் ஆகிறது. இப்படி, ஏராளமான மருந்துகளின் விலையை தங்கள் இஷ்டம்போல் வைத்து விற்பனை செய்து லாபம் சம்பாதிக்கின்றன மருந்து கம்பெனிகள்.

அதிவேகத்தில் அதிக பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற மனப்பான்மைக்கு மருத்துவமும் விதிவிலக்கல்ல. மருந்து, மாத்திரைகளில் மிகப்பெரிய கொள்ளை நடந்துகொண்டிருக்கிறது. மருத்துவர் என்ன மருந்தை எழுத வேண்டும் என்பதை மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் முடிவு செய்கின்றன. இவர்கள் இருவருக்கும் இடையேயான கூட்டில், பாதிக்கப்படுவது நோயாளிதான். ஒரு ரூபாய் மருந்தை, 10 ரூபாய் கொடுத்து வாங்கிச் சாப்பிடும் நிலை இன்று நிலவுகிறது. 

இந்நிலையில், “நோயாளிகளுக்கான மருந்து சீட்டில், ஜெனரிக் எனப்படும் மருந்துகளின் பெயரை மட்டுமே பரிந்துரைக்கும் வகையில் சட்டம் இயற்றவும் மத்திய அரசு தயங்காது. இது குறித்து ஆலோசித்து வருகிறோம்” என்று பிரதமர் மோடி பேசியிருக்கிறார். உண்மையில் இது சாத்தியமா?

தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்கத் தலைவர் எஸ்.ராமச்சந்திரனிடம் பேசினோம். ‘‘பெரிய மருத்துவர்கள், மருத்துவமனைகள், மருந்து தயாரிப்பு நிறுவனங்கள், எப்படியாவது முட்டி மோதி இதைத் தவிர்க்கப் பார்ப்பார்கள். எனவே, இது எந்த அளவுக்குச் சாத்தியம் என்பது தெரியவில்லை. தங்கள் மருந்து விற்பனையை அதிகரிக்கச் செய்ய,  டாக்டர்களுக்கு கம்பெனிகள் பரிசுகள் கொடுக்கின்றன. இதைத் தவிர்க்க, பணமாகக் கொடுக்கக் கூடாது, டூர் அழைத்துச் செல்லக் கூடாது, பரிசுகள் கொடுக்கக் கூடாது என்று பல கட்டுப்பாடுகளை அரசு விதிக்கிறது. ஆனாலும், இது ஏதாவது ஒரு வடிவத்தில் நடக்கிறது. 

டாக்டர் எழுதிய மருந்தின் காம்பினேஷனில், ஜெனரிக் மருந்து எதுவாக இருந்தாலும் கொடுக்கலாம் என்று சட்ட திருத்தம் செய்தால்போதும். அப்படி செய்யும்போது, டாக்டர் எழுதியதில், குறைந்த விலையுள்ள மருந்தை மருந்தாளுநர் கொடுக்க முடியும். அப்போது, பிராண்ட் மருந்துகள் ஆதிக்கம் குறையும்” என்கிறார் தீர்மானமாக. 

சென்னையில் மருந்துக் கடை வைத்திருக்கும் நெடுஞ்செழியனிடம் பேசினோம். “எதற்கெடுத்தாலும் அமெரிக்கா, இங்கிலாந்தைப் பார்க்கிறோம். அங்கு எல்லாம் ‘இந்த பிராண்ட் மாத்திரை, மருந்தைத்தான் வாங்க வேண்டும்’ என்று நிர்பந்திக்க முடியாது. மருத்துவரும்கூட, மருந்தின் பொதுப்பெயரைத்தான் எழுத வேண்டும். அதில், எந்த பிராண்ட் மருந்தை வாங்குவது என்பதை நோயாளிதான் முடிவு செய்வார். 

ஆனால், இந்தியாவில் நிலைமை தலைகீழாக இருக்கிறது. தனக்கு ஸ்பான்சர் செய்யும் நிறுவனத்தினுடைய மருந்தின் பெயரைத்தான் டாக்டர் எழுதுவார். ஜெனரிக் பெயரை எழுத மாட்டார். அவர் எழுதிய மருந்து அவருடைய மருந்துக்கடை அல்லது அவர் பரிந்துரை செய்யும் மருந்துக்கடையில் மட்டும்தான் கிடைக்கும்.  இவர்களைக் கேள்வி கேட்க முடியாது. இதற்குப் பின்னால் இருப்பது மிகப்பெரிய மாஃபியா கேங்க்.

‘ஏன் காஸ்ட்லி மருந்தை எழுதுகின்றீர்கள்’ என்று யாராவது கேட்டால், ‘சரவண பவன் இட்லிக்கும், அம்மா உணவக இட்லிக்கும் வித்தியாசம் இல்லையா?’ என்று கேட்பார்கள். உணவில் வேண்டுமானால் தரம் இருக்கலாம். ஆனால், மருந்தில் அப்படி அல்ல... ஒரே ஃபார்முலாவைப் பயன் படுத்தித் தயாரிக்கப்படும் மருந்தில் ஒன்று எப்படி ஆற்றல் மிக்கதாகவும், மற்றொன்று ஆற்றல் குறைவாகவும் இருக்க முடியும்?

என்னதான் புதிய புதிய சட்டங்கள் போட்டாலும், குறுக்கு வழிகளை நிறுவனங்கள் கண்டுபிடித்துவிடும். மருந்து விலை கட்டுப்பாடு சட்டத்தில், பல மருந்துகளின் விலை குறைந்தது. ஆனால், தற்போது, இவற்றைப் பரிந்துரைப்பதை டாக்டர்கள் நிறுத்தத் தொடங்கியுள்ளனர். அதற்கு பதில், காம்பினேஷன் மருந்துகளை உருவாக்கி மருந்து கம்பெனிகள் அதிக லாபத்தில் விற்கின்றன. டாக்டர்களும் அதைத்தான் பரிந்துரைக்கின்றனர். உதாரணத்துக்கு, சாதாரண காய்ச்சலுக்கு பரிந்துரைக்கப்படும் பாராசிட்டமால் மாத்திரை ஒன்றின் விலை ஒரு ரூபாய். பிராண்ட் நிறுவனங்கள் லாபம் சம்பாதிக்க, ‘அசிக்லோஃபெனாக்’ என்ற மருந்தைச் சேர்த்து ‘அசிக்லோஃபெனாக் பாராசிட்டமால்’  (Aceclofenac paracetamol) என்று தயாரித்து, நான்கு ரூபாய்க்கு விற்கின்றன. இதேபோல்தான், ஒன்று, இரண்டு ரூபாய்க்குக் கிடைக்கும் வைட்டமின் மாத்திரையை, காம்பினேஷன் என்று சொல்லி, 200- 300 ரூபாய் வரைக்கும் விற்கும் அவலம் நடக்கிறது” என்று வேதனையோடு சொல்கிறார். 

பெயர் வெளியிட விரும்பாத மருந்து விற்பனைப் பிரதிநிதி ஒருவர், “டாக்டரிடம் வரும் நோயாளிகளின் எண்ணிக்கையைப் பொறுத்து மருந்து கம்பெனிகள் டீலிங் போடும். உதாரணத்துக்கு, குழந்தையின்மைக்கான சிகிச்சை எடுப்பவர்களுக்கு ஹார்மோன் ஊசி போடச் சொல்வார்கள். இது, குறிப்பிட்ட மருத்துவமனையைத் தவிர வேறு எங்கும் கிடைக்காது. 1,000 ரூபாய்க்கு வாங்கி, அதை 10 ஆயிரம் ரூபாய் வரைக்கும் விற்பார்கள். சிகிச்சை பெறுபவர்களும், வேறு வழியில்லை என்பதால் வாங்குவார்கள். டாக்டர்களுக்குப் பரிசுகள், வெளிநாட்டு டூர், பணம் உள்ளிட்டவை வழங்கப்படும். மருத்துவருக்கு மாத டார்கெட் இருக்கும். இப்படி பல டீலிங்குகள் நடக்கின்றன. ஜெனரிக் பெயரில் எழுதினால் இப்படிச் செய்ய முடியாது” என்று பின்னணி தகவல்கள் சொன்னார்.  

மருத்துவ மோசடிகளுக்கு எதிராகப் போராடிவரும் டாக்டர் புகழேந்தி, “அரசாங்கம் ஏன் தரமான, இலவசமான அல்லது விலை குறைந்த மருந்தைக் கொடுக்க முன்வருவதில்லை? அப்படி அளித்தால், டாக்டர்கள் ஏன் பிராண்ட் பெயரை எழுதப்போகிறார்கள்? இன்றைக்கு, சந்தையில் 50 சதவிகிதம் அளவுக்கு ஜெனரிக் மருந்துகள் கிடைப்பதாகத் தெரிவிக்கின்றனர். சிலர் 80 சதவிகிதம் என்கின்றனர். ஆனால், இதில் மூன்றில் ஒரு பங்கு போலி மருந்துகளாக இருக்கின்றன. இதைத் தவிர்க்க அரசு எந்த உறுதியான நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. மருந்துகளின் தரத்தை உறுதி செய்ய எந்தக் கட்டமைப்பு வசதியும் அரசாங்கத்திடம் இல்லை. இது எதையும் சரி செய்யாமல், டாக்டர்களை ஜெனரிக் பெயரை எழுதச் சொல்வதால் எதுவும் நடந்துவிடாது. 

என்ன சிகிச்சை பெறுவது என்பதை நோயாளி முடிவு செய்ய, சட்ட ரீதியான உரிமை இருக்கிறது. ஆனால், இங்கே டாக்டரிடம் ஏதாவது கேட்டால், ‘நீ டாக்டரா... நான் டாக்டரா?’ என்ற கேள்விதான் வரும். முடிவெடுக்கும் உரிமையும் அதிகாரமும், மருத்துவர்களிடமும்,மருந்து நிறுவனங்களிடமும்தான் இருக்கின்றன” என்றார்.

மருந்து மாஃபியா... முடிவு கட்டுவாரா மோடி?

சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்க பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத், “டாக்டர்கள் ஜெனரிக் பெயரைத்தான் எழுத வேண்டும் என்று சட்டம் போடுவதற்குப் பதில், இந்திய மருந்து நிறுவனங்கள் ஜெனரிக் பெயரில்தான் மருந்தைத் தயாரிக்க வேண்டும் என்று ஒரு சட்டத்தைப் போட்டால் எல்லாப் பிரச்னையும் சரியாகிவிடும். ஆனால், மருந்து நிறுவன முதலாளிகளைக் கட்டுப்படுத்த தைரியம் இல்லாத மோடி, பிராண்ட் பெயரை எழுதக்கூடாது என்று டாக்டர்களிடம் சொல்கிறார். இது, நுனி மரத்தில் உட்கார்ந்துகொண்டு, அடி மரத்தை வெட்டுவதைப் போன்றது. மருந்துகளை டிரேட் பெயரில் கம்பெனிகள்தான் தயாரிக்கின்றன. 20 ஆண்டு காப்புரிமை மற்றும் ராயல்டி வாங்குகிறார்கள். கொள்ளை கொள்ளையாகச் சம்பாதிக்கும் இத்தகைய போக்கைத் தடுக்க, ஜெனரிக் பெயரில்தான் மருந்து தயாரிக்க வேண்டும் என்று சட்டம் இயற்ற வேண்டும். இப்படிச் செய்தால், எல்லா மருந்துகளின் விலையும் மிகவும் குறைந்துவிடும்” என்றார்.

இது தொடர்பாக மருத்துவர் ஒருவர், “ஜெனரிக் பெயரைத்தான் எழுத வேண்டும் என்று அரசு உத்தரவைப் பிறப்பித்தால் பின்பற்றித்தான் ஆக வேண்டும். இன்றைக்கு மருத்துவர்கள் சேவை மனப்பான்மையுடன் இல்லை என்பதுதான் உண்மை. பல கோடி செலவு செய்து மருத்துவர் ஆனவர்களிடம் சேவையை எதிர்பார்ப்பது நியாயமில்லை. அதேநேரத்தில், இதுபோன்ற போக்கை வளர விடுவதும் நல்லதல்ல. மருத்துவக் கல்வியை அரசே ஏற்று மிகக் குறைந்த கட்டணத்தில் நடத்த வேண்டும். டொனேஷன், லஞ்சம், கொள்ளைக் கட்டணம் எனச் செலவழித்து படித்து முடித்து வெளியே வரும் மருத்துவருக்கு, பணம் சம்பாதிப்பது மட்டுமே குறிக்கோளாக இருக்கும். முதலில் அரசு இதை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

மோடியின் சொல், செயலாக மாற வேண்டும். 

பிராண்ட் Vs ஜெனரிக்

ஒரு நோய்க்கு புதிய மருந்தை கண்டுபிடிக்கும் போது, அந்த நிறுவனம் காப்புரிமை பெறும். அந்த நிறுவனம் மருந்தை தயாரிக்க செய்த ஆராய்ச்சி செலவு, பரிசோதனை போன்றவற்றை எல்லாம் பொறுத்து மருந்தின் விலை தீர்மானிக்கப் படும். இது பிராண்டட் மருந்து. இதன் காப்புரிமைக் காலம் முடிந்ததும், அந்த மருந்தின் ஃபார்மு லாவைப் பயன்படுத்தி மற்ற நிறுவனங்களும் அதைத் தயாரிக்க ஆரம்பிக்கும். இதனால் அதன் விலை குறைந்து, மக்களுக்கு நன்மை கிடைக்கும். பல நிறுவனங்கள் ஒரு குறிப்பிட்ட மருந்தைத் தயாரித்தாலும் அதன் மூலக்கூறு, ஃபார்முலா எல்லாம் ஒன்றுதான். அதனால், பெயர், வடிவம், நிறம் மாறலாமே தவிர, பலன் மாறாது. ஆனால், மருந்தின் ஜெனரிக் பெயரை வைக்காமல், ஒவ்வொரு நிறுவனமும் தங்கள் விருப்பத்துக்கு ஏற்ப பெயர் வைத்து, விலையை நிர்ணயம் செய்துகொள்வதுதான் பிரச்னை.

News2
News2

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

1 comment:

  1. ஜெனரிக் மருந்துகள் நமக்குக்கிடைத்த வரமே! அனைவரும் இதை பயன்படுத்திக்கொள்ள வேண்டியது அவசியம். ஜெனரிக் மருந்துகள் பற்றிய இன்னும் பல அவசியமான தகவல்களை goo.gl/oz1y8v ஐ கிளிக் செய்து நாம் தெரிந்து கொள்ள முடியும்!

    ReplyDelete