Wednesday, April 26, 2017

கொடநாடு கொலை... கொள்ளை போகும் ஜெ. சொத்துகள்!

கொடநாடு கொலை... கொள்ளை போகும் ஜெ. சொத்துகள்!

விதிகளை மீறிக் கட்டப்பட்டு இருப்பதாகப் புகார் எழுந்தபோது அரசு அதிகாரிகளே நுழைய முடியவில்லை. காவல்துறை தலைவரே சென்றாலும் கொடநாடு கேட்டை கடந்து செல்வதற்கு பிரத்யேக அனுமதி தேவை. ஜெயலலிதா இருந்தவரை யாரும் நுழைய முடியாத கோட்டையான கொடநாடு எஸ்டேட்டில்தான், இப்போது கொலையும் கொள்ளையும் நடந்துள்ளன.

நீலகிரி மாவட்டத்தில் கோத்தகிரி அருகே உள்ள கொடநாட்டுக்கு, தமிழக அரசியல் வரலாற்றில் முக்கிய இடம் உண்டு. ஜெயலலிதாவின் விருப்பமான இடங்களில், இதற்குத்தான் முதல் இடம். 1991-ம் ஆண்டு முதன்முறையாக ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தபோது, நிறைய இடங்களை ஜெயலலிதா, சசிகலா தரப்பு வாங்கியது. அவற்றில் மிக முக்கியமான இடம், கொடநாடு எஸ்டேட். ஜெயலலிதாவின் அனைத்து ரகசியங்களும் கொடநாட்டில் இருப்பதாகச் சொல்லப்படும் அளவுக்கு, முக்கியத்துவம் வாய்ந்தது இந்த எஸ்டேட்.

சுமார் 900 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டமாய் அமைந்துள்ள இந்த எஸ்டேட்டில் மூன்று தேயிலைத் தொழிற்சாலைகள் உள்ளன. ஜெயலலிதா வந்தால் தங்குவதற்கு இரண்டு சொகுசு பங்களாக்கள் உள்ளன. ஆரம்ப நாட்களில், எஸ்டேட்டின் கீழ்ப் பகுதியில் உள்ள பங்களாவில்தான் ஜெயலலிதா தங்கினார். பின்னர், எஸ்டேட்டின் மேல் பகுதியில் பிரமாண்டமான பங்களா கட்டப்பட்டது. வெளியில் இருந்து பார்க்கக்கூட முடியாத அளவுக்கு, மிகப்பெரிய சுற்றுச்சுவரைக் கொண்டிருக்கிறது இந்த பங்களா.

உச்சபட்சப் பாதுகாப்புடன் இருந்த இந்த எஸ்டேட்டுக்கு மொத்தம் 13 கேட்கள். அவ்வளவு எளிதில் யாரும் எஸ்டேட்டின் உள்ளே நுழைந்து விட முடியாது. 8, 9 மற்றும் 10-வது கேட்களில் பாதுகாப்பு மிக அதிகமாக இருக்கும். இந்த கேட்கள் வழியாகத்தான் ஜெயலலிதா, சசிகலா ஆகியோர் பங்களாவுக்குச் செல்வார்கள். ஒரு சிலர் மட்டுமே பங்களா பகுதிக்குள் செல்ல முடியும். ஜெயலலிதா இருந்தவரை, அங்கு போலீஸ் பாதுகாப்பு அதிகமாக இருந்தது. அவர் இறந்த பின்னர், போலீஸ் பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டது. காவலாளிகள்தான் எஸ்டேட்டை பாதுகாத்து வந்தனர். இந்தச் சூழலில்தான், கொலை மற்றும் கொள்ளைச் சம்பவங்கள் அரங்கேறி உள்ளன.

எஸ்டேட்டின் அனைத்து கேட்களிலும் நேபாளி காவலர்கள்தான் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு, 9, 10-வது கேட்களில் கிருஷ்ண பகதூர், ஓம் பகதூர் ஆகியோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். நள்ளிரவு 12 மணிக்குப் பின்னர் இந்த கேட்களின் அருகே இரண்டு பொலிரோ ஜீப்கள் வந்துள்ளன. அவற்றில் வந்தவர்கள் உள்ளே நுழைய முயன்றனர். அவர்களை ஓம் பகதூர், கிருஷ்ண பகதூர் ஆகியோர் தடுத்துள்ளனர். உடனே, மயக்க மருந்து ஸ்பிரேவை அடித்து, இந்த இருவரின் கழுத்தை மர்ம நபர்கள் நெரித்துள்ளனர். அதில், ஓம் பகதூர் மரணம் அடைந்தார். அவரை அருகே ஒரு மரத்தில் தலைகீழாகக் கட்டி தொங்க விட்ட மர்ம நபர்கள், காயமடைந்த கிருஷ்ண பகதூரை அங்கிருந்த லாரி ஒன்றில் தூக்கி வீசி விட்டு பங்களாவை நோக்கிச் சென்றுள்ளனர்.

தொடர்ந்து பங்களாவின் ஜன்னல் கண்ணாடியை உடைத்து உள்ளே நுழைந்தவர்கள், அங்கிருந்த சில அறைகளை உடைக்க முயன்றிருக்கிறார்கள். சில நிமிடங்களுக்குப் பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பி விட்டனர். லாரியில் தூக்கி வீசப்பட்ட கிருஷ்ண பகதூரின் சத்தம் கேட்டு,  அவரை தொழிலாளர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். போலீஸாருக்குத் தகவல் தெரிந்து, அதிகாலையில் ஓம் பகதூரின் உடல் மீட்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 

இந்தச் சம்பவத்தை அடுத்து, கொடநாடு எஸ்டேட் முழுக்க போலீஸார் குவிக்கப்பட்டனர். மேற்கு மண்டல டி.ஐ.ஜி தீபக் தாமோதர், நேரில் சென்று விசாரணை நடத்தினார். ‘இது ஒரு கொள்ளை முயற்சி’ என போலீஸாரால் சொல்லப்பட்டாலும், இதில் பல சந்தேகங்கள் உள்ளன.

கொடநாடு கொலை... கொள்ளை போகும் ஜெ. சொத்துகள்!

‘கொடநாடு பங்களாவில்தான், ஜெயலலிதாவின் சிகிச்சை தொடர்பான விவரங்களும், சொத்துகள் தொடர்பான ஆவணங்களும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன’ எனத் தகவல்கள் கசிந்தன. ஏராளமான அறைகள் கொண்ட கொடநாடு பங்களாவில் இரண்டு அறைகள் மட்டும் உடைக்கப்பட்டுள்ளன. ஒன்று, ஜெயலலிதா தங்கும் அறை. மற்றொன்று, சசிகலா தங்கும் அறை. இது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக மீடியாக்களிடம் பேச போலீஸ் அதிகாரிகள் யாரும் முன்வரவில்லை. எஸ்டேட்டுக்கு அருகே மீடியாவினரையும் அனுமதிக்கவில்லை. ‘‘ஐந்து தனிப்படைகள் அமைத்து விசாரித்து வருகிறோம்’’ என்று மட்டுமே போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

“இரு காவலாளிகளுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் இந்தக் கொலை நடந்திருக்கலாம். ஒரு காவலாளி இன்னொரு காவலாளியைக் கொன்றுவிட்டு நாடகமாடி இருக்கலாம் என முதலில் சந்தேகப்பட்டோம். அல்லது இந்தப் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு இதில் தொடர்பு இருக்கலாம் எனச் சந்தேகித்தோம். ஆனால், அப்படி எதுவும் இல்லை என்பது உறுதியாகி இருக்கிறது. வந்தவர்கள், எதற்காக வந்தார்கள், ஏன் இந்தக் கொள்ளை முயற்சி என்பது தெரியவில்லை” என்றார் போலீஸ் அதிகாரி ஒருவர்.

ஜெயலலிதா உயிரோடு இருந்தவரை, கொடநாடு எஸ்டேட் முழுக்க சி.சி.டி.வி கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தன. குறிப்பாக, பங்களாவுக்குச் செல்லும் 8, 9 மற்றும் 10-வது கேட்களில் சி.சி.டி.வி கேமராக்கள் அதிகமாக இருக்கும். ஆனால், ‘இப்போது சி.சி.டி.வி கேமராக்கள் அகற்றப்பட்டிருப்பது ஏன்’ என்பதும் மர்மமாக உள்ளது.

கொடநாடு கொலை... கொள்ளை போகும் ஜெ. சொத்துகள்!

“பங்களாவைப்பற்றி நன்கு அறிந்தவர்கள்தான் இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டிருக்க முடியும். அதனால்தான்  பாதுகாப்பு     தளர்த்தப்பட்டிருக்கிறதோ என்ற சந்தேகம் எழுகிறது. ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகு இதேபோல ஒரு சம்பவம் நடந்தது. காவலாளி தாக்கப்பட்டார். அது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அப்போது அலட்சியமாக விட்டதால், இப்போது கொலை நடந்திருக்கிறது” என்கிறார்கள் அப்பகுதியினர்.

அரசியல் வட்டாரத்திலும் இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. சம்பவம் நடந்த கொடநாடு பங்களா, சொத்துக் குவிப்பு வழக்கில் நீதிமன்றத்தால் பறிமுதல் செய்யப்பட வேண்டிய சொத்து. ‘ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் ஊழல் செய்து சேர்க்கப்பட்ட சொத்துகள் அனைத்தும் பறிமுதல் செய்யப்படும்’ என கர்நாடக சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா தீர்ப்பளித்திருந்தார். தற்போதைய சூழலில் இந்த சொத்து,  சசிகலா குடும்பத்தினரால் பராமரிக்கப்பட்டு வருகிறது. கொடநாடு மேலாளர் நடராஜன் என்பவர் மூலம் சசிகலா குடும்பத்தினர்தான் இந்த சொத்தை நிர்வகித்து வருகிறார்கள். கொடநாடு பங்களாவைப்பற்றி முழுமையாக அறிந்தவர்களில் முக்கியமானவர், மேலாளர் நடராஜன். இந்தச் சம்பவத்தில் நடராஜன் மீதுதான் பலரின் சந்தேகப் பார்வையும் விழுந்திருக்கிறது. 

விலை உயர்ந்த ஆபரணங்கள் மற்றும் பணத்தைக் குறிவைத்து இந்தச் சம்பவம் நடந்ததா, அல்லது சொத்து குறித்த ஆவணங்களைக் கொள்ளையடிக்க வந்தார்களா என இரு சந்தேகங்கள் முன்வைக்கப்படுகின்றன. அண்மையில் ஜெயலலிதாவின் சிறுதாவூர் பங்களாவில் தீ விபத்து நடந்தது. அது ஆவணங்களை அழிக்கும் முயற்சி எனச் சொல்லப்பட்டது. இப்போது ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட்டில் கொலையும், கொள்ளையும் நடந்திருக்கிறது. 

மர்ம முடிச்சுகள் அடுத்தடுத்து விழுந்து கொண்டே இருக்கின்றன.

“எங்களுக்குப் பாதுகாப்பே இல்லை!” - கதறும் ஊழியர்கள்

கொடநாடு எஸ்டேட் ஊழியர்கள் சிலரிடம் பேசினோம். “எஸ்டேட்டில் அனைத்து கேட்களிலும் நேபாளத்தைச் சேர்ந்தவர்களே பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள். மாலை ஆறு மணிக்கு வந்தால், அடுத்த நாள் காலை ஏழு மணிக்குத்தான் வீட்டுக்குத் திரும்ப முடியும். அதுவரை டீ கூட எஸ்டேட் தரப்பிலிருந்து தரமாட்டார்கள். காட்டெருமை அடிக்கடி வரும். நாங்க வேலை பார்க்கிற எந்த கேட்டிலும் லைட் வசதிகள்கூட கிடையாது. இருட்டில் டார்ச் லைட் மட்டும்தான் துணை. ‘லைட் போட்டுக் கொடுங்க, இருட்டுல நிற்கவே பயமா இருக்கு’ன்னு பல தடவை சொல்லியிருப்போம். எஸ்டேட்காரங்க அதைக் கண்டுக்கவே இல்லை. இரவு முழுவதும் நடுங்கும் குளிரில் நின்று எஸ்டேட்டை காவல் காக்்கணும். இதில் ஏதாவது சின்ன குறை இருந்தாகூட, உடனே வேலையை விட்டு தூக்கிடுவாங்க. ஒருநாள் லீவ் கிடைப்பதே ரொம்ப சிரமம். 

எங்களுக்கு ஏதாவது பிரச்னைன்னா மேனேஜரோட உதவியாளரைத்தான் கேட்கணும். அவர் பார்த்து மேனேஜர் கிட்ட சொன்னாதான் உண்டு. ஒன்பதாம் கேட்டில் ஓம் பகதூரை கொலை பண்ணிட்டாங்கன்னு காலை ஐந்து மணிக்கே தகவல் வந்தது. ஆனால், ‘ஏழு மணி வரைக்கும் வேலை செஞ்சுட்டு ஷிப்ட் முடிஞ்சதுக்கு அப்புறம் போய் பாதுக்கோங்க’ன்னு எஸ்டேட்காரங்க சொன்னாங்க. இவ்வளவுதாங்க எங்களுக்கு பாதுகாப்பும், உரிமையும்” என்றனர்.

ஓம் பகதூரின் மாமா தில் பகதூர் தாபாவிடம் பேசினோம். “நானும் பல வருடமா கொடநாடு எஸ்டேட்ல வேலை பார்த்துட்டுதான் இருந்தேன். ஜெயலலிதாவும், சசிகலாவும் ஒண்ணாதான் வருவாங்க. எங்களுக்கு இருக்கும் குறைகளை அவங்ககிட்ட சொல்லலாம்னு போனா, மேனேஜர் நெருங்கவே விட மாட்டார். ஜெயலலிதா இறந்த பிறகு நிறைய பேர் வேலைல இருந்து நின்னுட்டாங்க. ஓம் பகதூர் அடிக்கடி செல்போன்ல பேசுவான். மூன்று நாட்களுக்கு முன்பு கூட போன் செய்தான். காட்டெருமை அடிக்கடி வருதுன்னு சொன்னான். அதுதான், அவன் கடைசியா என்கிட்டே பேசுனது. இன்னைக்கு காலைல செத்துட்டான்னு போன் வந்தது” என்றார் சோகமாக.

News2
News2

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a comment