Tuesday, April 25, 2017

மருத்துவம் நலமா? - நிஜமும் நிழலும் - 5

மருத்துவம் நலமா? - நிஜமும் நிழலும் - 5

நான் மருத்துவ மாணவனாக இருந்தபோது, எங்கள் கல்லூரி விழாவுக்குத் தந்தை பெரியாரை அழைக்க நினைத்தோம். அப்போது பொறுப்பு முதல்வராக இருந்த டாக்டர் சிவராஜன், ஒரு பிராமணர். அவர் அனுமதிப்பாரோ, இல்லையோ என்ற தயக்கத்துடன் அவரிடம் அனுமதி கேட்டோம். ஆனால் அவர் உடனடியாக, ‘‘எவ்வளவு பெரிய மனுஷர். அவர் வந்தா பெருமைதான்” என்று அனுமதி தந்ததுடன், பெரியாரை வாயிலில் வந்து வரவேற்று, விழாவுக்குத் தலைமையும் தாங்கினார்.

பெரியார் என்ன பேசுவாரோ என்று எங்களுக்கு மனதுக்குள் ஒரு சின்ன பயம். பெரியார் பேசத் துவங்கினார்... ‘‘எல்லாரும் என்னைக் கடவுளுக்கு எதிரானவன் என்று சொல்கிறார்கள். உண்மையில் கடவுளுக்கு முதல் எதிரி நீங்கதான், நான் இரண்டாவதுதான். முன்பு எத்தனை பேர் சின்ன வயசிலேயே செத்துப்போனாங்க. ஆனா, இன்னைக்கு 50, 60 வயசுக்கு மேலயும் வாழறாங்க. கடவுள் சாகடிக்க நினைச்சதை, நீங்கள் பிடிச்சு வச்சதுதான் காரணம். என்னையே எடுத்துக்குங்க, டாக்டருங்களும் மருந்தும் இல்லைன்னா, நான் எப்பவோ செத்துப் போயிருப்பேன். கடவுளுக்கு எதிராப் பேச என்னை வாழவச்சிருக்கிற நீங்கதானே கடவுளின் முதல் எதிரி” என்றார். டாக்டர் சிவராஜன் உட்பட அனைவரும் கைதட்டினர்.

டாக்டர்களையும், மருத்துவத்தையும் இவ்வளவு பெருமைப்படுத்தி வேறு யாராவது பேசியிருப்பார்களா என்பது தெரியவில்லை. ‘டாக்டர் சாகடிச்சுட்டார்’ என யாராவது, எப்போதாவது பேசுவதைக் கேட்கும்போது, பெரியார் நினைவு வரும். ‘காசுக்குத்தானே பாடம் நடத்தினார்’, ‘காசுக்குத்தானே ட்ரீட்மென்ட் கொடுத்தார்’ என நன்றி மறந்து காசுக் கணக்குப் பார்க்கும் சந்தை யுகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

மார்க்ஸ் தனது கம்யூனிஸ்ட் அறிக்கையில் தீர்க்கதரிசனத்தோடு எழுதியுள்ளார். ‘மனிதகுலம் இதுகாறும் போற்றிப் பாராட்டி, பணிவுக்கும், பக்திக்கும் உரியதாகக் கருதிய ஒவ்வொன்றையும் முதலாளித்துவம் மகிமை இழக்கச் செய்து விட்டது. மருத்துவரையும், வழக்கறிஞரையும், சமய குருக்களையும், கவிஞரையும், விஞ்ஞானியையும் அது தனது கூலித் தொழிலாளியாக்கிவிட்டது’ என்றார் மார்க்ஸ்.

எத்தனை சத்தியமான உண்மை! ஒரு காலத்தில் படித்து முடித்து வெளியே வரும் முன் அரசுப் பணி. அல்லது, ஒரு ஸ்டெதாஸ்கோப்பும் ஒரு டேபிள் சேரும் சில சிரிஞ்சுகளும் இருந்தால் போதும்... ஒரு கௌரவமான வாழ்க்கை வாழ்ந்து விட முடியும். இந்தச் சூழல் இன்றைய இளம் டாக்டர்களுக்குச் சுத்தமாக இல்லை. சின்ன க்ளினிக் வைக்க பயம். ஏதாவது மருத்துவமனைக்கு டியூட்டி டாக்டராகப் போனால், பெருமையுடன் வெளியே சொல்ல முடியாத சம்பளம். சூப்பர் ஸ்பெஷாலிட்டி படித்துவிட்டால், கார்ப்பரேட் மருத்துவமனையில் அவர்கள் கட்டளைப்படி மனசாட்சியை விட்டுவிட்டுத் தொழில் நடத்த வேண்டிய கொடுமை. வெளியே சொல்ல முடியாத மன இறுக்கத்திலேயே பெரும்பாலான இளம் டாக்டர்களின் வாழ்க்கை நடக்கிறது.

டாக்டர்கள் என்பவர்கள், அனைத்து நோய்களையும் குணப்படுத்தும் சர்வசஞ்சீவிகள் கிடையாது. ‘எங்க கிட்ட வாங்க. எல்லாத்தையும் சரி செய்யறோம்’ என அதீத நம்பிக்கை தரும் வியாபார விளம்பரங்கள் கூடாது. ‘இங்கே போனால், எங்கள் 80 வயது அப்பா சாகவே மாட்டார்’ எனும் அதீத நம்பிக்கை ஊட்டப்பட்டுச் செல்பவர்கள், நவீன ஐ.சி.யூ, ஃபாரின் மருந்துகள் என்று பெருந்தொகையைச் செலவு செய்த பின் ஆர்ப்பாட்டம், ரகளைகளில் ஈடுபடுகிறார்கள் என்றால், தவறு யார் மீது? 

காஸ்ட்லி மருத்துவமனையில், தன் பொருளாதார எல்லையைச் சற்றும் உணராது கொண்டு போய்ச் சேர்த்து, அதையும் இதையும் விற்றுச் செலவு செய்த பின் நிகழும் மரணத்தால் வரும் விரக்தி, கோபமாக, ஆத்திரமாக வெடித்துச் சிதறுகிறது. ‘விவசாயிகளின் தற்கொலைக்கு முக்கியக் காரணங்களில் ஒன்று மருத்துவச் செலவு’ என்பதைப் படிக்கும்போது வேதனைதான் எழுகிறது. யாரைக் குறை சொல்ல?

என் டாக்டர் நண்பர், ‘‘என்கிட்ட வர்ற அத்தனை பேரையும் காப்பாத்திவிடுவேன்னு சர்ட்டிஃபிகேட் வாங்கிட்டு நான் வரல” என்று நோயாளிகளிடம் வெளிப்படையாக முதலிலேயே சொல்லிவிடுவார். 

இத்தனைக்கும் அவர் குறைவான கட்டணம் வாங்கி, குறைவான மருந்துகள் எழுதும் நல்ல டாக்டர். மிக மோசமான நிலையில் வரும் வயதான நோயாளிகள் பற்றி, வீணான அதீத நம்பிக்கைகளைத் தந்து, அதிகச் செலவையும் வைக்கும்போதுதான் பெரும்பாலான வம்புகள் உண்டாகின்றன. இதை மருத்துவர்கள் உணர்ந்து, ‘‘எனது கடமை, தகுந்த மருந்து தருவது. நோயாளியின் நோய்நிலை, உடல்நிலைக்கேற்ற முன்னேற்றம் கிடைக்கும்” என்பதை உறவினர்களிடம் விளக்கிச் சொல்லிவிட வேண்டும்.

மற்றொரு பெரிய குறை... ரகசியம் காப்பது. மோசமான நிலையில் கொண்டுவரப்படும் நோயாளிகளை உறவினர்கள் யாரும் பார்க்கவே முடியாதபடி ஒரு பரமரகசியமான குளிரூட்டப்பட்ட அறையில் வைத்துக்கொண்டு, மாறி மாறி மருந்துச் சீட்டுக்களை மட்டும் எழுதித் தந்து, நின்றுகூடப் பேசாமல் டாக்டர்களும், நர்ஸ்களும் கடைசி வரை ஓடுவது என்பது குறைக்கப்படலாம். உறவினர்கள் யாராவது சில நிமிடங்கள் பார்த்துச் செல்ல அனுமதிக்கலாம். அவர்களிடம் நோயாளியின் நிலையைப் பற்றி விளக்கவும் டாக்டர்கள் நேரம் எடுத்துக்கொள்ள முயன்றால், பல அசம்பாவிதங்களைத் தவிர்க்கலாம். அன்புக்குரிய ஒருவரை இழக்கும் உணர்வு தரும் காயங்களை ஆற்றுவதற்கு, ஒரு டாக்டர் வெறும் டாக்டராக மட்டுமின்றி, கருணையும் அன்பும் கொண்ட நெறிகாட்டியாகவும் மாற வேண்டியது அவசியம். 

எனக்குத் தெரிந்த ஒரு டாக்டருக்கு நேர்ந்த துயரம் இது. அவரது மருத்துவமனைக்கு மிக மோசமான நிலையில் கொண்டுவரப்பட்ட  ஒரு நோயாளி இறந்தபோது, கூட இருந்த உறவினர்களே நிலைமை புரிந்து அமைதி காத்தனர். ஆனால், கிராமத்திலிருந்து புதிதாக வந்த சில முரடர்கள் மருத்துவமனையை உடைத்துச் சீர்குலைத்தனர். அந்த டாக்டர் மருத்துவமனையின் வரவேற்புக்கூடத்திலேயே விழுந்து இறந்துபோனார். எத்தனை கனவுகள், எத்தனை கடன்... அவரை மட்டுமே நம்பிய அக்குடும்பம் இனி எப்படி வாழும்? அநீதிகளைத் தட்டிக்கேட்கும் துணிவு கொண்டதாக சமூகம் இருப்பது வேறு; பலவீனமானவர்களிடம் வன்முறை காட்டுவது வேறு.

மருத்துவத்துறையும், மக்களும் மிக நெருக்கடியான சூழலை இன்று கடந்து கொண்டுள்ளனர். மரணம் தவிர்க்க முடியாமல் தினம் தினம் நாம் கடந்தாக வேண்டிய நிகழ்வு. அதை எந்த அளவு திட்டமிட்டு, கணக்கிட்டு, பொறுமையுடனும், நாகரிகத்துடனும் எதிர்கொள்ளப் போகிறோம் என்ற கேள்வி இருதரப்பின் முன்னும் உள்ளது. இந்திய மருத்துவ சங்கமும், எதிர்காலத் தலைமுறை மீது அக்கறை கொண்ட மூத்த மருத்துவர்களும் தமது வழிகாட்டுதலை வழங்கித் தீர்வு காண முன்வர வேண்டும்.

மருத்துவமனைகளின் செயல்பாடுகளை ஆய்வு செய்து தரவரிசைப்படுத்துதல், கட்டுப்பாடு நெறிமுறைகளை வழங்குதல் எனும் திட்டத்தை, மத்திய அரசின் தேசிய நலவாழ்வுக் கொள்கை 2017 முன்வைத்துள்ளது. இதன் மூலமாவது சிக்கல்கள் தீர வேண்டும். ‘மருத்துவர்களும் நம் பிள்ளைகள்தான்’ என்று மக்கள் உணர்வதும்... ‘நாம் வாழவும், வளரவும், வாழ்த்துகள் பெறவும் அடித்தளமானது இந்தச் சமூகமே’ என்ற அர்ப்பணிப்பு உணர்வை இளம் மருத்துவர்கள் பெறுவதும் கடமையாகும்.

(நலம் அறிவோம்)

வேண்டும் குடும்ப டாக்டர்!

முன்பெல்லாம் குடும்ப டாக்டர் முறை இருந்தது. அந்த டாக்டருக்கு, நம் குடும்பத்தில் இருக்கும் அத்தனை பேரையும் தெரிந்து இருக்கும். அவர்களின் பிரச்னைகளும் புரிந்து இருக்கும். நம் குடும்பச் சூழலும் தெரியும். தன்னால் குணப்படுத்த முடியாத சீரியஸான பிரச்னை வரும்போது, அந்த நபர் பற்றியும், குடும்பச் சூழல் பற்றியும் தெளிவாகத் தெரிந்த அந்த டாக்டர் நன்கு சிந்திப்பார். ‘இவரை எந்த ஸ்பெஷலிஸ்ட்டிடம் அனுப்புவது, எந்த மருத்துவமனைக்கு அனுப்புவது, அந்தச் சிகிச்சையை இவரது உடல் தாங்குமா, செலவை இந்தக் குடும்பம் தாங்குமா’ என்ற சிந்தனைக்குப் பிறகே முடிவு செய்வார். ஆனால், இன்று மக்கள் தாமாகவே ஸ்பெஷலிஸ்ட்களிடம் போகிறார்கள். இருப்பதிலேயே புகழ்பெற்ற மருத்துவமனைக்குச் சென்று ‘என்ன செலவானாலும் பரவாயில்லை’ என்று சொல்கின்றனர். 

புதிய புதிய சிறப்பு மருத்துவத்துறைகளில் பட்டம் பெற இங்கு ஏராளமான கல்லூரிகள் உள்ளன. ஆனால், ‘குடும்ப டாக்டர்’ எனும் நமது நாட்டின் சமூகப் பொருளாதார நிலைக்கு மிகவும் தேவையான உயர் கல்வி இங்கு இல்லை. இதற்கு அரசைத் தவிர வேறு யாரைக் குறைகூற முடியும்?

News2
News2

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a comment