Wednesday, April 26, 2017

மருத்துவம் நலமா? - நிஜமும் நிழலும் - 6

மருத்துவம் நலமா? - நிஜமும் நிழலும் - 6

நாம் ‘மருத்துவம்’ என்ற பெயரில் இப்போது செய்துகொண்டிருப்பது, நோய் வந்தபின் குணப்படுத்தும் செயலைத்தான். ‘அலோபதி’ எனும் மேலை மருத்துவம், பெரும்பாலும் வந்த நோய்களைச் சிறப்பாகவும் விரைவாகவும் குணப்படுத்துவதையே லட்சியமாகக் கொண்டது. வரும்முன் காக்கும் நோய்த் தடுப்பு ஊசிகள், சொட்டு மருந்துகள் போன்றவை இதன் பாராட்டத்தக்க அம்சங்கள் எனலாம்.

‘மாற்று மருத்துவம்’ எனப்படும் சித்தா, ஆயுர்வேதா, ஹோமியோபதி, யுனானி போன்றவை, நோய் வராமல் தடுக்க, பிறவி முதலே பின்பற்ற வேண்டிய வாழ்வுமுறை மருத்துவங்களே. இவை மெல்ல குணப்படுத்தும். அதுவரைக் காத்திருக்கும் பெரும் பொறுமை தேவை. விரைவு ரயில், விரைவு உணவு உலகில் அதற்கு இடமுண்டா?

1901-ம் ஆண்டில், பிரிட்டிஷ் அரசு எடுத்த வாழ்நாள் பற்றிய கணக்கெடுப்பில், ஒரு இந்தியரின் சராசரி ஆயுள் 24 வயதுக்கும் குறைவாகவே இருந்தது என்பது அதிர்ச்சி தரும் உண்மை. ஆனால், 2016-ல் இந்தியரின் சராசரி வாழ்நாள் 67 வயது. இதை எட்டியதில் பெரும்பங்குப் பெருமை அலோபதி மருத்துவத்துக்கு உண்டு. கல்வி, வருமானம், விழிப்பு உணர்வு, பாதுகாப்பான பிரசவம், சத்துணவு, பாதுகாக்கப்பட்ட குடிநீர், சுகாதாரம் போன்றவை மேல்தட்டு மக்களை எட்டியுள்ளதே இதற்குக் காரணம் என வாதிடலாம். ஆனால், அலோபதி மருத்துவத்தின் பங்கை மறுத்துவிட முடியாது.

‘எப்படி இருக்கீங்க?’ என்ற நல விசாரிப்புக்கு ‘நல்லா இருக்கேன்’ என்கிறோம். ‘உடல்நலம்’ என்றால், ‘எந்த நோயும் இல்லாமல் ஆரோக்கியமாக இருப்பதுதான்’ என நினைக்கிறோம். ஆனால், ஐ.நா-வின் உலக சுகாதார நிறுவனம் அப்படிச் சொல்வதில்லை. ‘உடல்நலம் என்பது நோயை குணமாக்குவதும், நோய் வராமல் தடுப்பதும் மட்டுமல்ல... மகிழ்ச்சியாக, ஆரோக்கியமாக சமூக வாழ்வு வாழ்பவர்களே உடல்நலத்தோடு இருப்பவர்கள்’ என்கிறது, உலக சுகாதார நிறுவனம். 

சத்தான உணவு என்பது, ஆரோக்கியமான வாழ்வுக்கு அடிப்படைத் தேவை. தினசரி ஒரு மனிதனுக்கு 2,100 முதல் 2,400 கலோரி உணவுச்சத்து தேவை. உலகில் 140 கோடி மக்கள், நாளொன்றுக்கு 65 ரூபாய்க்கும் கீழான வருமானத்தில் வாழ்கின்றனர். இவர்கள் நலவாழ்வு பெற முடியுமா? உலக மக்களில் வெறும் 2 சதவிகிதம் பேரே பெரும் செல்வந்தர்கள். மீதி 98 சதவிகிதம் பேர், அம்பானிக்கனவுடன் வாழ்ந்து முடிப்பவர்கள். 110 கோடி பேருக்கு குடிநீர், கழிப்பிடம், வாழ்விடம் எதுவுமில்லை. ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளில் பிறக்கும் 1,000 குழந்தைகளில் 60 குழந்தைகள், வளர ஆரம்பிக்கும்போதே இறந்துவிடுகின்றன. இதற்கு முக்கியமான காரணம், பாதுகாப்பான குடிநீர் இல்லாததுதான். வயிற்றுப் போக்கால் 18 லட்சம் குழந்தைகள் ஒவ்வொரு ஆண்டும் இறக்கின்றன. 

77 சதவிகித இந்தியர்கள், தினம் வெறும் 20 ரூபாய் வருமானத்தில் வாழ்கிறார்கள் என்பது உலகுக்குக் கேவலமாகக் காட்டிவிடும் என்பதால், வறுமைக் கோட்டு வருமானத்தை ரூ.15 ஆக்கி, ஏழைகளைக் குறைத்துக் காட்டுகிறது அரசு. செருப்புக்கு ஏற்றபடி காலை வெட்டும் செயல்.

மனிதர்களுக்கு ஏற்படும் நோய்களில், வெறும் 10 சதவிகித நோய்களுக்கு மட்டுமே அதிநவீன மருத்துவ சிகிச்சை தேவை. மீதமுள்ள 90 சதவிகித நோய்களைத் தடுக்கவும் தீர்க்கவும் சீனாவின் ‘வெறும்கால் மருத்துவர்’களே போதும்.

அது என்ன ‘வெறும்கால் மருத்துவர்’கள்? 

சீனாவில் கம்யூனிச அரசு கடந்த 1949-ம் ஆண்டு அமைந்தது. அப்போது நகரங்களில் மட்டுமே டாக்டர்கள் இருந்தார்கள். கிராமப்புற மக்களுக்கு ஏதாவது பிரச்னை என்றால், பல கிலோமீட்டர் தூரம் பயணம் செய்து வர வேண்டும். எல்லா கிராமங்களிலும் நியமிக்கும் அளவுக்கு டாக்டர்களும் அப்போது இல்லை. இருப்பவர்களும், கிராமங்களுக்கு வரத் தயாராக இல்லை. எனவே, கிராம மக்களில் ஓரளவு படிப்பறிவு உள்ளவர்களுக்கு, சில அடிப்படைப் பயிற்சிகளைத் தந்து, மருத்துவச் சேவை செய்ய அனுமதிக்கலாம் என்று அரசு முடிவெடுத்தது. விவசாயிகள், நெசவாளர்கள், மாணவர்கள் என்று பலரும் இந்தப் பயிற்சிகளை எடுத்துக் கொள்ள முன் வந்தனர். சாதாரண நோய்களுக்கான சிகிச்சை, தடுப்பு மருந்து தருவது, சுகாதாரக் கல்வி அளிப்பது, குடும்பக் கட்டுப்பாடு சிகிச்சை என ஆறு மாதங்களுக்குப் பயிற்சி எடுத்துக்கொண்டு, இவர்கள் தங்கள் கிராமங்களில் சிகிச்சை தந்தனர். நெல் வயல்களின் நடுவே, செருப்பு அணியாத வெற்றுக்கால்களோடு நடந்து திரிந்து மக்களைக் காப்பாற்றிய இவர்களுக்கு, ‘வெறும்கால் மருத்துவர்கள்’ என்று பெயர் வந்தது. சீனாவின் கிராமப்புற மக்களுக்கு மிகக் குறைந்த செலவில், உயர்தரமான சிகிச்சை கிடைக்க இந்த மருத்துவ முறை காரணமாக இருந்தது. உலகமே சீனாவிட மிருந்து இந்த முன்மாதிரியைக் கற்றுக்கொள்ள வந்தது. ‘கிராமப்புறங்களில் மருத்துவச் சேவை தர இதைவிட சிறந்த வழி வேறு கிடையாது’ என உலக சுகாதார நிறுவனம் சொன்னது. ஆனால், உலகமயமாக்கல் காரணமாக, சீனா இந்த ‘வெறும்கால் மருத்துவர்கள்’ முறையைக் கைகழுவி விட்டது.

பாதுகாக்கப்பட்ட குடிநீர், சத்தான உணவு, ஆரோக்கியமான வாழ்விடம், சுத்தமான கழிப்பிடம்... இவற்றைத் தந்துவிட்டால் போதும், இந்திய மக்கள் நோயின்றி வாழ வழி செய்து விடலாம். ஆனால், ராணுவத்துக்கு மூன்றில் ஒரு பகுதி வருமானத்தை ஒதுக்கி வல்லரசாகக் கனவு காணும் நம் ஆட்சியாளர்கள், 4.5 சதவிகிதத் தொகைக்கு அதிகமாக மருத்துவத் துறைக்கு ஒதுக்கத் தயங்குகின்றனர்.

மேலை நாடுகளில், முதுமை ஒரு பெரும் நோயாகிப் போகிறது. இந்தியா போன்ற கீழை நாடுகளிலோ, இளமையே பெரும் அச்சுறுத்தலுக்கு ஆளாகப் போகிறது. புகை, மது, எய்ட்ஸ், சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், விபத்து, வன்முறை, இயற்கைப் பேரழிவுகள் போன்ற பலவும் அவர்களைக் கொல்லும் பெரும் கொலையாளிகளாக ஆகப் போகின்றன. இதற்கெல்லாம் மருத்துவர் தேவையா? 

தொற்று அல்லாத நோய்களே பெரும் உயிர் கொல்லிகளாக இனி இருக்கப் போகின்றன. சர்க்கரை நோய், மது போதைக்கு அடிமை ஆவது, விபத்து, பேரழிவு, புகை, ஊட்டச்சத்து இல்லாதது போன்றவற்றைப் பற்றி நமது மருத்துவக் கல்வியில் போதுமான பாடங்கள் இல்லை என்பது வேதனை. நம் கல்லூரிகள், மேலை நாடுகளுக்கு வெள்ளைக் கோட்டு கூலிகளை ஏற்றுமதி செய்யும் தளங்களாகவே இருக்கின்றன. 

அலோபதி என்பது மட்டுமே மருத்துவம் என கருதுவதும், பிற அனைத்து முறைகளும் ‘மாற்று மருத்துவம்’ என்று நினைப்பதும் அடிப்படைக் கோளாறு. ‘அலோ’ என்றால் ‘மாற்று’, ‘பதி’ என்றால் ‘மருத்துவம்’. எனவே, நவீன மருத்துவமே மாற்று மருத்துவம். முன் இருந்த மருத்துவ முறைகளுக்கு மாற்றாக வந்த நவீன அறிவியல். அலோபதி, வேறு மருத்துவ முறைகளுக்கு எதிரல்ல; நவீன மாற்று. பூனை கருப்பானால் என்ன... வெளுப்பானால் என்ன? எலியைப் பிடித்தால் சரி.

‘நோய் வருவதைத் தடுப்பதா... நோய் வந்தபின் குணப்படுத்துவதா?’ ‘அலோபதியா... திருப்பதியா’ என்பதல்ல கேள்வி. எல்லா மருத்துவ முறைகளுமே, மனிதனும், உயிரினங்களும், உலகும் நலவாழ்வு நோக்கிப் பயணிக்க உதவும் பல்வேறு பாதைகளே என்பதை உணர்வோம்.

(நலம் அறிவோம்)

உயிரின் அமிர்தம்!

‘நீரின்றி அமையாது உலகு’ மட்டுமல்ல... உடலும் கூடத்தான்! பூமியில் மூன்றில் இரண்டு பகுதி நீர், ஒரு பகுதியே நிலம். இது உடலுக்கும் பொருந்தும். நம் உடலில் 80 சதவிகிதம் தண்ணீர் இருக்கிறது. நீரே முதல் பூதம்.

‘நீர் ஒரு சத்தா?’ எனும் கேள்வி எழலாம். ஆனால், நீர்தான் நம் உடலுக்கு முதற்சத்து. சொல்லப்போனால், நீரே மூலச்சத்து. நீர்ச்சத்து இல்லாது போய் நிகழும் மரணங்களே ஏராளம். உணவின்றிப் பல நாட்கள் வாழலாம். நீரின்றி..?

வயிற்றுப் போக்கு, குழந்தைகளைக் கொல்லும் பெரிய நோய். வயிற்றுப் போக்கால் உடலில் உள்ள நீர் வெளியேறி, உடல் வறட்சியைச் சந்திக்க நேரிடுகிறது. நீரற்ற உடல் என்பது, இன்றைய மேட்டூர் அணைதான். அணையிருந்து என்ன பயன்? நீரற்ற நிலம் போல உடலும் வறண்டு வெடித்து, உயிரற்றுப் போகிறது.

வயிற்றுப் போக்கால் நீர் குறைந்து வாடும் உடலுக்கு நீரே மருந்து. வேறு மருந்துகள் ஏதும் தேவையில்லை. ஒரு டம்ளர் தண்ணீர், ஒரு சிட்டிகை உப்பு, ஒரு ஸ்பூன் நாட்டுச் சர்க்கரை... இதன் மதிப்பு என்ன? பல கோடி என்றால் யார் ஏற்பார்கள். ஓ.ஆர்.எஸ் கரைசல் எனப்படும் இது, மரணத்தைத் தடுக்கும் மருந்து. வயிற்றுப் போக்கால் மரணத்தை நோக்கிச் செல்லும், வறிய நாடுகளின் மக்களைக் காக்கும் மலிவான ‘டாக்டர் இல்லாத மருத்துவம்’ இது. ‘கடந்த 150 ஆண்டுகளில் கண்டறியப்பட்ட மிகச் சிறந்த மருத்துவ ஆலோசனை’ என பிரிட்டிஷ் மெடிக்கல் ஜர்னல் பட்டியலிட்ட விஷயங்களில் இதற்கு இரண்டாம் இடம் கிடைத்தது. இதுவரை சுமார் ஒரு கோடி பேரை, மரணத்தைத் தழுவவிடாமல் இது காப்பாற்றி இருக்கிறது. 

இதனால்தானோ என்னவோ, நீரை ‘உயிரின் அமிர்தம்’ (Elixer) என்றார்கள். மாசுபட்ட நீரே, உலக மக்களைக் கொல்லும் முதன்மை எதிரி.

இலவசமாக எங்கும் கிடைத்த நீர், சிலரின் பணத்தாசையால் மாசுபடுத்தப்பட்டு, பாட்டில் தண்ணீர் லிட்டர் 20 ரூபாய்க்கு விற்கிறது. தண்ணீர் விற்க அமெரிக்காக்காரன் வருகிறான். தண்ணீரை விற்பது பாவம் என்கிறது நமது மரபு. தமிழ்நாட்டில்  இருந்த 48,000 நீர் நிலைகளைத் தூர்த்து பிளாட் போட்ட தலைமுறை, தண்ணீருக்கு விலை கொடுக்கிறது.

இது கோடைக்காலம். உடலின் நீர், வியர்வையாக வெளியேறுகிறது. சிறுநீர் வெளியேறுவது குறைகிறது. நீர்க் குறைவால் வறட்சி, தலைவலி, சிறுநீர்க் கழிப்பில் எரிச்சல், மயக்கம் போன்றவற்றோடு உயிரிழப்பும் நேரலாம். ‘வெப்பத் தாக்குதலால் இவ்வாண்டின் உயிரிழப்புகள் அதிகமாகலாம்’ என எச்சரிக்கிறது அரசு. மரமின்றி நிர்வாணமாக நீளும் தங்க நாற்கரச் சாலைகளில் பயணம் செய்யும்போது, மரத்தின் அருமை தெரிகிறது. தண்ணீர் அதிகம் குடியுங்கள். தண்ணீர் பாட்டிலுடன் வெளியே செல்லுங்கள். உச்சி வெயிலில் பயணத்தைத் தவிர்த்துவிடுங்கள். நீர் நாம் உயிர்த்து, வளர்ந்த முதல் தாய்மடி. நீர் வீணாவதைத் தடுப்பதும், தண்ணீர் மாசுபடுவதை எதிர்ப்பதும் நம் இயல்பில் இருக்க வேண்டிய பண்புகள். ஓடும் நீரை நடக்கச் செய்து, நடக்கும் நீரை நிற்கச் செய்து, நிற்கும் நீரை நிலத்துள் இறக்குவது நம் கடமை.

News2
News2

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a comment