Saturday, April 29, 2017

புழல் சிறையில் இருந்து மதிமுக தலைவர் வைகோவின் Exclusive பேட்டி

புழல் சிறையில் இருந்து மதிமுக தலைவர் வைகோவின் Exclusive பேட்டி

புழல் சிறையில் 1,875 கைதிகள் அடைக்கப்பட்டு இருக்கிறார்கள். மற்றவர்கள் இருப்பது எல்லாம் சொந்தப் பிரச்னைக்காக. வைகோ அடைக்கப்பட்டிருப்பது தமிழ் இனப் பிரச்னைக்காக!

‘இந்திய இறையாண்மைக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் பேசினார்’ என்பதற்காகச் சிறை வைக்கப்பட்டுள்ள வைகோவுக்கு , அவருடைய வழக்கறிஞர் மூலமாக சில கேள்விகளை அனுப்பினோம். அவர் அனுப்பிய பதில்கள் இதோ...

“இந்திய இறையாண்மைக்குக் குந்தகம் ஏற்படுத்துவது மாதிரி என்ன பேசினீர்கள்?”

“இதைத்தான் நான் நீதிமன்றத்திலும் மக்கள் மன்றத்திலும் கேட்கிறேன். இந்திய இறையாண்மைக்குக் குந்தகம் ஏற்படுத்துவது மாதிரி நான் என்ன வார்த்தைகளைப் பேசினேன் என தமிழக அரசு சொல்லட்டும். 2009-ம் ஆண்டு ஈழத்தில் இனப்படுகொலை நடந்தபோது, சிங்கள சித்ரவதை அரசாங்கத்துக்கு ஆயுத உதவிகளைச் செய்தது, அன்று மத்தியில் ஆண்ட காங்கிரஸ் அரசு. அந்த ஆட்சிக்கு முட்டுக்கொடுத்துக்கொண்டு இருந்தன தி.மு.க-வும் பா.ம.க-வும். இன்று ஈழத்தமிழர்களுக்காக நீலிக்கண்ணீர் வடிக்கும் இவர்கள், அன்று கொலைகள் நடந்தபோது பதவியை அனுபவித்துக்கொண்டிருந்தார்கள். தமிழ்நாட்டில் முதலமைச்சர் நாற்காலியைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டிருந்தார் கருணாநிதி. மத்திய காங்கிரஸ் அரசாங்கத்தையும், மாநில தி.மு.க அரசாங்கத்தையும் விமர்சித்துப் பேசினேன். ‘ஈழத்தில் நடந்த பச்சைப் படுகொலைகளுக்கு இவர்கள்தான் காரணம்’ என்று குற்றம் சாட்டினேன். ஓர் அரசாங்கத்தை விமர்சிப்பதே தேசத்துரோகமா? அது தேசத்துரோகம் என்றால், நான் தேசத்துரோகிதான்.”

“உங்கள் பேச்சில் இந்திய இறையாண்மைக்கு விரோதமான இடங்கள் என்று ஏதாவது சுட்டிக்காட்டப்பட்டுள்ளனவா?”

“இல்லை. 15.7.2009 அன்று நான் பேசிய மொத்தப் பேச்சையும் எடுத்துப்போட்டு, இந்திய தண்டனைச் சட்டம் 124 A மற்றும் 153 A ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதியப்பட்டு உள்ளது. அப்போது பிரதமராக இருந்த மன்மோகன் சிங்குக்கு நான் எழுதிய கடிதங்களை, ‘நான் குற்றம் சாட்டுகிறேன்’ என்று புத்தகமாகத் தொடுத்தேன். அதன் வெளியீட்டு விழாதான் அது.

எனக்கு எழுதிய ஒரு கடிதத்தில், ‘இலங்கையின் ஒருமைப்பாட்டைக் காப்பதற்காக, இந்தியா ராணுவ உதவி செய்கிறது’ என்று பிரதமர் மன்மோகன் சிங் குறிப்பிட்டு இருந்தார். இதுதான் என்னை எரிமலை ஆக்கிய வாசகம். இதை அந்தக் கூட்டத்தில் சொல்லி விட்டு, ‘இலங்கையின் ஒருமைப்பாட்டைக் காப்பாற்ற நீ யார்? நீங்கள் யார்? இந்தியாவுக்கு என்ன உரிமை? இலங்கையின் ஒருமைப்பாட்டைக் காப்பாற்றுவதற்கு நீங்கள் ஆயுதம் கொடுக்க முன்வந்தால், அந்த ஒருமைப்பாட்டை உடைப்பதற்கு, தமிழ் ஈழம் மலர்வதற்கு, தன்மானம் உள்ள தமிழன் ஒவ்வொருவரும் தன்னையே தருவான். This is our stand. உலகத்திலே இருக்கின்ற ஒவ்வொரு நிலப்பரப்பும் ஒன்றாக இருக்க வேண்டுமென்று உபதேசிக்கும் இடத்தில் நீங்கள் இருக்கிறீர்களா? இந்த பூமிப்பந்துக்கே நீங்கள் காவல்காரனா?’ என்று கேட்டேன். இதில் எந்தச் சொல் இந்திய இறையாண்மைக்கு விரோதமானது?”

“நீங்களாக வலியவந்து சிறைக்குள் சிக்கிக்கொண்டீர்கள் என்கிறார்களே?”

‘‘ஆட்சியில் இருந்தவர்களின் இனத் துரோகத்தை விமர்சித்த காரணத்துக்காக அநியாயமாக ஒரு வழக்கைப் போட்டு பத்து,  பதினைந்து ஆண்டுகள் இழுத்தடிப்பார்கள், இதை சகித்துக்கொண்டு தலையாட்டிப் பொம்மையாக வாழ வேண்டுமா? நான் வலியப் போய் மாட்டவில்லை. வலிந்து திணிக்கப்பட்டது இந்தச் சிறை வாழ்க்கை.

இப்படி ஒரு வழக்கைப் பதிவுசெய்துவிட்டு, ஏழு ஆண்டுகளாக எனக்கு சம்மனே அனுப்பவில்லை. என் பேத்திகளைப் பார்ப்பதற்காக வெளிநாடு செல்ல என் பாஸ்போர்ட்டைக் கேட்டு விண்ணப்பித்தேன். அப்போது, இந்த வழக்கால் சிக்கல் வந்தது. இந்த வழக்கு நிலுவையில் இருப்பதால், நீதிமன்றத்திலிருந்து தடையின்மை உத்தரவு பெற்றால்தான் பாஸ்போர்ட் வழங்க முடியும் என்றார்கள். கடந்த ஏப்ரல் 3-ம் நாள் எழும்பூர் நீதிமன்றம் சென்றேன். எனது கோரிக்கையை வைத்தேன். 17-ம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். நான் ஜாமீனில் சென்று விடுவேன் என்று நினைத்திருப்பார்கள். இந்த வழக்கே போலியான, அநியாயமான வழக்கு. அதையே எதிர்க்காமல் ஜாமீன் வாங்கி வெளியில் இருக்க வேண்டுமா? ‘நிரூபியுங்கள், அதுவரை சிறையில் இருக்கிறேன்’ என்று வந்துவிட்டேன். ஜாமீன் என்பது எல்லாக் கைதிகளுக்குமான சலுகை. அதற்காக அதைப் பயன்படுத்த வேண்டும் என்பது அவசியம் இல்லை.”

“ஜாமீனில் வர மறுத்து சிறைக்குச் சென்றது ஏன்?”

“இன்றைய இளைய சமுதாயத்துக்கு 2008-09 காலகட்டத்தில், ஈழத்தில் நடந்த இனப்பேரழிவை உணர்த்துவதற்காகத்தான் நான் ஜாமீன் போடவில்லை. ‘ஏன் வைகோ உள்ளே இருக்கிறார்’ என்ற கேள்விக்கு இளைய சமுதாயம் விடை தேடட்டும். கொத்துக் குண்டுகளையும், வெள்ளை பாஸ்பரஸையும் போட்டு ஓர் இனத்தையே கொன்றுகுவித்தது சிங்கள அரசு. அதற்கு எல்லா ராணுவ உதவிகளையும் செய்தது அன்றைய காங்கிரஸ் அரசு. அந்த அரசை தி.மு.க ஆதரித்தது. பா.ம.க ஆதரித்தது. தமிழினத் தலைவர்களும், தமிழினப் போராளிகளும் பதவி வேட்டையில், பண வேட்டையில் திளைத்துக்கொண்டிருந்தபோது, தமிழன் கொல்லப்பட்டான். இன அழிவு விசாரணை வேண்டும் என்று இன்று அவர்கள் சென்னையில் கொடி பிடிக்கலாம். ஜெனீவாவில் பேசலாம். ஆனால், அன்று வாய்மூடி மவுனிகளாக இருந்தார்கள். இதை உணர்த்துவதற்கு, இந்தச் சிறை வாழ்க்கை பயன்படட்டும் என்று வந்துவிட்டேன்!”

“தமிழ்நாட்டு அரசியல் நிலைமைகளைக் கவனிக்கிறீர்களா? உங்கள் நிலைப்பாடு என்ன?”

“ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, கருணாநிதியின் திடீர் உடல் நலக் குறைவுக்குப் பிறகு, தமிழ்நாட்டு அரசியல் குழப்பமான சூழ்நிலையில் இருக்கிறது. அ.தி.மு.க இரண்டாகப் பிளவுபட்டுள்ளது. நாங்கள் எந்தத் தரப்புக்கும் ஆதரவும் இல்லை; எதிர்ப்பும் இல்லை.

முப்பதாண்டு காலம் அண்ணன் கலைஞரோடு இருந்தவன் நான். அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் இருக்கிறார் என்று தெரிந்ததும், உடனே சென்றேன். கற்களையும், செருப்புகளையும் எறிந்தும், என் அம்மாவை அசிங்கமாகத் திட்டியும், திட்டமிட்டு ஒரு கொடூரத்தை அரங்கேற்றும் அளவுக்குப் ‘பரந்த மனப்பான்மை’ உள்ளவர் அந்தக் கட்சியின் செயல் தலைவர் ஆகி விட்டார்.

ஊழலில், லஞ்ச லாவண்யத்தில், அராஜகத்தில், அதிகார துஷ்பிரயோகத்தில், தன்முனைப்பில், தனிமனித துதியில், அ.தி.மு.க-வுக்கும் தி.மு.க-வுக்கும் எந்த வித்தியாசமும் கிடையாது.”

“தமிழக அரசியலே தி.மு.க-வுக்கும் அ.தி.மு.க-வுக்குமான அரசியல்தானே?”

“அப்படிச் சொல்லாதீர்கள். இது 4,000 ரூபாய்க்கும் 2,000 ரூபாய்க்கும் நடக்கும் அரசியல். திருமங்கலத்தில் தி.மு.க தொடங்கி வைத்ததை ஆர்.கே. நகரில் அ.தி.மு.க தொடர்ந்தது. இந்தக் காலகட்டத்தில், ‘யாரும் பணம் கொடுக்கக் கூடாது. எனக்காக எந்த இடத்திலாவது பணம் கொடுத்தது தெரிந்தால், போட்டியில் இருந்து விலகி விடுவேன்’ என்று சொன்ன பைத்தியக்கார வைகோவுக்கு என்ன இடம்?”

“தி.மு.க., அ.தி.மு.க-வுக்கு மாற்றாக அணிகள் கட்டினீர்களே?”

“மாற்று அணி முயற்சிகள் தோற்றுப்போய் விட்டன. விஜயகாந்த்தை முதலமைச்சர் வேட்பாளராக முன்மொழிந்தது தவறுதான். ஆனால், அன்று அந்த அணி உருவாக, உருவாக்கப்பட அதற்கு ஒப்புக்கொள்ள வேண்டியதாயிற்று. பணம் வாங்கிக்கொண்டு வாக்களிக்க, குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மக்கள் தயாராக இருக்கும்வரை, மாற்று அணிகள் தோற்றுத்தான் போகும். வெற்றி, தோல்வியைத் தீர்மானிப்பதே 25 ஆயிரம் வாக்குகள்தான். அதைப் பணம் கொடுத்து வாங்கி விடும் தி.மு.க-வும், அ.தி.மு.க-வும். பணம் கொடுக்க முடியாதவர்கள் என்ன செய்ய முடியும்? ‘நாங்கள் கெட்டவர்கள்’ என்று வாக்களிக்க மறுத்தால் திருத்திக்கொள்ளலாம். ‘பணம் தரவில்லை’ என்று சொன்னால் என்ன செய்ய முடியும்?”

“தி.மு.க., அ.தி.மு.க-வுக்கு மாற்று பி.ஜே.பி.தான் என்ற முழக்கம் தொடங்கி இருப்பதைக் கவனித்தீர்களா?’’

“நாடு புறந்தள்ள வேண்டிய காமெடிகளில் இதுவும் ஒன்று. திராவிட இயக்கத்தைக் கொல்லைப்புறம் வழியாக வந்து அழித்து விடலாம் என்று இந்த இயக்கத்தின் ஜென்ம எதிரிகள் திட்டமிடுகிறார்கள். இரட்டை இலையை முடக்கி விட்டால் தாமரைக்கு ஓட்டுப் போடுவான் என்று மனப்பால் குடிக்கிறார்கள். ‘இனி எல்லாமே இந்திதான்’ என்று சொல்லி தமிழை அழிக்க நினைப்பவர்கள், கூடங்குளம் தொடங்கி ஹைட்ரோகார்பன் வரை அழிவுத் திட்டங்கள் அனைத்தையும் அமல்படுத்தி வருபவர்கள் எப்படி மாற்றாக வரமுடியும்? அய்யாக்கண்ணு உள்ளிட்ட விவசாயிகளை இரண்டு நிமிடங்கள் கூட பார்க்க மனமில்லாத நரேந்திர மோடி, தமிழ்நாட்டைக் காப்பாற்றி விடுவாரா? இலங்கை அரசாங்கத்துடன் கொஞ்சிக் கொண்டு, உலக அரங்கில் அவர்களைக் காப்பாற்ற முயற்சிக்கும் மோடியை நம்ப தமிழன் என்ன முட்டாளா? இது இந்தி உத்தரப்பிரதேசம் அல்ல.  தமிழ் இன உணர்வுப்பிரதேசம்.”

“திராவிட இயக்கம் என்று நீங்கள் பொதுமைப்படுத்துவதால் தி.மு.க., அல்லது அ.தி.மு.க ஆகிய இரண்டில் ஒரு கட்சியை ஆதரிப்பீர்கள் என எடுத்துக்கொள்ளலாமா?

“தேர்தல் நிலைப்பாடுகளை தேர்தல் நேரமே தீர்மானிக்கும். நான் சொல்ல வருவது, ‘திராவிட இயக்கத்தின் அடிப்படை லட்சியங்களை வீழ்த்த விடமாட்டேன்’ என்பதுதான். பேரறிஞர் அண்ணா உருவாக்கிய இன எழுச்சி, மொழிப்பற்று, மாநில உரிமைகள், நமது கலாசாரம், பண்பாடு ஆகியவற்றை தமிழ் மக்களுக்கு, குறிப்பாக இளைஞர்களுக்கு எடுத்துச் சொல்லும் வகையில் எனது நடவடிக்கைகள் இனி அமையும். வெளியில் வந்த பிறகு இதுபோன்ற நிகழ்வுகளில் அதிகம் பங்கெடுப்பேன்.”

“வெளியில் எப்போது வருவீர்கள்?”

“அதைப் பற்றியே நான் யோசிக்கவில்லை!”

News2
News2

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a comment