Tuesday, April 25, 2017

கழுகார் பதில்கள்

கழுகார் பதில்கள்

ரசிகர்கள் சந்திப்பை ரஜினி ரத்து செய்திருப்பது பற்றி?

ரஜினி எந்த முடிவையும் தீர்க்கமாக எடுக்கமாட்டார். ‘அவர் என்ன சொல்வாரோ’, ‘இவர் என்ன நினைப்பாரோ’ என்று யோசிப்பார். அதனால்தான் அவரது அறிவிப்புகள் அனைத்தும், திடீர் பின்வாங்கலாக அமையும். 

ரசிகர்களை அவர் பத்து ஆண்டுகளாகச் சந்திக்கவில்லை. எனவே, ரசிகர்கள் மத்தியில் ஒருவித சோர்வு உள்ளது. இரண்டு படங்கள் அடுத்தடுத்து வர இருப்பதால், ரசிகர்களை உற்சாகப்படுத்துவதற்காக இந்தச் சந்திப்புக்கு ஏற்பாடு செய்தார் ரஜினி. அவரை பி.ஜே.பி, தனது ஆதரவு சக்தியாக மாற்ற முயற்சிகள் எடுத்துவருவதை அனைவரும் அறிவார்கள். அதற்கு இதுவரை ரஜினி சம்மதிக்கவில்லை. இந்த சமயத்தில் ரசிகர்கள் சந்திப்பு நடந்தால் அது அரசியல் நுழைவுக்காகத்தான் என்று சொல்லிவிடுவார்களோ என்று பயந்தார் ரஜினி. அதனால் ரத்து செய்துவிட்டார்.

இப்படி எல்லாம் யோசித்தால் அவரால் நிம்மதியாக எந்தக் காரியத்தையும் செய்ய முடியாது. படத்தில் காட்டும் கம்பீரத்தை நிஜத்திலும் காட்ட வேண்டும்.

கழுகார் பதில்கள்

தமிழ்நாட்டில் நடக்க இருந்த ஆர்.கே. நகர் இடைத்தேர்தல், காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் நடந்த இடைத்தேர்தல்... இரண்டையும் ஒப்பிடுக?

இந்திய ஜனநாயகம் எத்தகைய அதலபாதாளத்தில் போய்க்கொண்டு இருக்கிறது என்பதற்கு இந்த இரண்டு இடைத்தேர்தல்களும் உதாரணங்கள்.

சுமார் 100 கோடி ரூபாய்க்கு மேல் பணம் பாய்ந்ததால் ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது. வாக்குகளைப் பணம் கொடுத்து வாங்கலாம் என்று நினைக்கும் கட்சிகள் தமிழகத்தில் அதிகம் ஆகிவிட்டன.

ஸ்ரீநகரில் மொத்தமே 7 சதவிகித வாக்குகள்தான் பதிவாகி இருக்கின்றன. வாக்களிப்பதற்கு அந்த மக்களுக்கு எந்த ஆர்வமும் இல்லை. தொடச்சியான போர், தினமும் வன்முறை, அடக்குமுறைகள், மத்திய - மாநில அரசுகள் மீது நம்பிக்கையின்மை, வாழ்க்கை மீதான வெறுப்பு இவை அனைத்தும் சேர்ந்து வாக்காளர்களைச் சோர்வடைய வைத்துவிட்டன. 

இந்த இரண்டு செயல்பாடுகளுமே இந்திய ஜனநாயகத்துக்கு நல்லதல்ல.

கழுகார் பதில்கள்

? ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலில் ஓ.பன்னீர்செல்வம் அணியினர் ஜெயலலிதாவின் உருவப்பொம்மையை சவப்பெட்டியில் வைத்து பிரசாரம் செய்தது சரியா?

! தவறான முன்னுதாரணம். ‘வோட்டு வேண்டுமானால் சவத்தை வைத்துக்கூட பிரசாரம் செய்யும் இழிநிலையில் அரசியல்வாதிகள் அலைவார்கள்’ என்பதற்கு உதாரணம் இது. வாழ்நாள் எல்லாம் தன்னுடைய இமேஜ் பற்றியே கவலைப்பட்ட ஜெயலலிதா நிலைமையைப் பார்த்தீர்களா? இப்படிப்பட்டவர்களைத்தான் அவர் நம்பியிருக்கிறார்; வளர்த்துவிட்டுள்ளார்.

? இந்தியர் குல்பூஷண் ஜாதவுக்கு பாகிஸ்தான் மரண தண்டனை விதித்ததை இனியும் இந்தியா வேடிக்கைதான் பார்க்க வேண்டுமா?

! இந்தியாவைச் சேர்ந்த முன்னாள் கடற்படை வீரரான குல்பூஷண் ஜாதவ், பாகிஸ்தானில் நாச வேலைகளை நிகழ்த்த சதிச் செயல்களில் ஈடுபட்டதாகக் கூறி அவருக்கு மரண தண்டனை விதிக்கப் பட்டுள்ளது. ராணுவத்தினர் அல்லாதவர்களுக்கு ராணுவ நீதிமன்றத்தில் தண்டனை விதிக்கும் அநியாயத்தை பாகிஸ்தான் செய்கிறது.

‘‘மரண தண்டனை நிறைவேற்றப்பட்டால் இந்தியா - பாகிஸ்தான் நல்லுறவு பாதிக்கப்படும்’’ என்று வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் சொல்லி இருக்கிறார். அந்த நாட்டு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என்றும் சொல்லி இருக்கிறார். இதனால் எல்லாம் எந்தப் பயனும் ஏற்படுவது மாதிரி தெரியவில்லை. மிகச் சாதாரணமாக ஜாதவுக்குக் கிடைக்க வேண்டிய உதவிகள்கூட 13 முறை மறுக்கப் பட்டு உள்ளன. ‘ஜாதவுக்கு ஆதரவாக பாகிஸ்தான் நீதிமன்றத்தில் யாரும் ஆஜராகக் கூடாது’ என்று லாகூர் பார் கவுன்சில் அறிவித்துள்ளது. எனவே, மரண தண்டனை உறுதி ஆகும் என்றே தெரிகிறது. ஐ,நா மன்றம் வரை இந்த விவகாரத்தை இந்தியா கொண்டு சென்றால் மட்டும்தான் தீர்வு கிடைக்கும்.

? இனிவரும் காலத்தில் தேர்தல்களில் பணப்பட்டுவாடாவை முற்றிலுமாகத் தடுக்க தேர்தல் ஆணையம் என்ன செய்ய வேண்டும்?

! தேர்தல் தேதியை அறிவிப்பது, வேட்பாளர்கள் இறுதிப்பட்டியலை வெளியிடுவது, வெற்றிபெற்றவர் பட்டியலை வெளியிடுவது மட்டுமே தேர்தல் ஆணையத்தின் வேலை அல்ல. நியாயமான தேர்தலை நடத்துவதும்தான். அதாவது, தங்களுக்கான அனைத்து அதிகாரங்களையும் பயன்படுத்தி நியாயமான தேர்தலை நடத்துவது. தேர்தல் காலகட்டத்தில், ஒரு அரசாங்கத்தின் அனைத்து அதிகாரங்களையும் தேர்தல் ஆணையம் பெற்றுச் செயல்பட வேண்டும். ‘மாரல்’ போலீஸ் மாதிரி தேர்தல் ஆணையம் நடந்தால் மட்டும்தான் நேர்மையான தேர்தல் சாத்தியம்!

கழுகார் பதில்கள்

கோவை புறநகர்ப் பகுதியில் 50 போலீஸார் பாதுகாப்புடன் டாஸ்மாக் கடை ஒன்று திறக்கப்பட்டதாமே?

போலீஸுக்கு வேலை வேண்டாமா? அதனால் இருக்கும்.

டாஸ்மாக் வட்டாரத்தில் வலம்வரும் சமூக விரோதிகளிடம் இருந்து மக்களைப் பாதுகாக்கும் காரியத்தைத்தான் போலீஸ் செய்ய வேண்டும். ஆனால், அவர்கள் இப்போது பொதுமக்களின் தாக்குதலில் இருந்து டாஸ்மாக் கடைகளைப் பாதுகாக்க ஆரம்பித்துள்ளார்கள். ‘காவல் துறை மக்களின் நண்பன்’ என்பதை ‘டாஸ்மாக்கின் நண்பன் போலீஸ்’ என்று மாற்றிச் சொல்லலாம்.

கழுகார் பதில்கள்

அ.தி.மு.க-வின் இரண்டு அணிகளும் ஒன்று சேர்ந்தபிறகு ஜெயலலிதா மரணம் குறித்த நீதி விசாரணை நடைபெறுமா?

நடைபெறும் என்று நம்ப முடியாது!

ஓ.பன்னீர்செல்வமும் எடப்பாடி பழனிசாமியும் இணைய, பேச்சுவார்த்தை நடக்கிறதே தவிர, இருவரும் இணைந்து விடவில்லை. இணைந்துவிட்டார்கள் என்றே வைத்துக் கொள்வோம்.... இன்றைய சூழ்நிலையில் அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் சசிகலா. அவரை இவர்கள் கட்சியை விட்டு நீக்குவார்களா என்று இப்போதைக்குச் சொல்ல முடியாது. ‘தினகரனின் குடும்ப ஆதிக்கம்’ என்றுதான் அமைச்சர் ஜெயக்குமார் சொல்கிறார். சசிகலாவின் குடும்ப ஆதிக்கம் என்று சொல்லவில்லை. இது ஒரு சாமர்த்தியம்.

ஜெயலலிதாவின் மரணத்தைப் பொறுத்தவரை சசிகலா, டாக்டர் சிவகுமார், டாக்டர் பிரதாப் ரெட்டி, அன்றைய தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ், அன்றைய அரசின் ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன் ஆகிய ஐவருக்குத் தெரியாமல் எதுவும் நடக்கவில்லை. இந்த ஐந்து பேரையும் விசாரிக்க இன்றைய ஆளும்கட்சி தயாராக இருக்காது என்பதே உண்மை. ஷீலா பாலகிருஷ்ணனுக்கும் பன்னீர்செல்வத்துக்கும் நட்பு உண்டு. ராம மோகன ராவை எடப்பாடியால் பகைத்துக்கொள்ள முடியாது. இவர்கள் யாருமே அப்போலோ ரெட்டியை பகைத்துக்கொள்ள மாட்டார்கள். எனவே, விசாரணை எல்லாம் நடக்காது.

சசிகலாவை குற்றம் சொல்ல பன்னீருக்கு அன்று ஒரு காரணம் தேவைப்பட்டது. ‘என்னை முதல்வர் பதவியில் இருந்து தூக்கினார்கள்’ என்று சொல்ல முடியாது அல்லவா? அதற்காக இதைச் சொன்னார். உண்மையில் என்ன நடந்தது என்று பன்னீருக்குத் தெரியும். தைரியம் இருந்தால் அதை அவர் சொல்ல வேண்டும்!

News2
News2

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a comment