Wednesday, April 26, 2017

சுரங்கத்தில் ரயில் ஓடும்போது என்ன ஆகும்? - ஜூ.வி ஸ்பெஷல் ஸ்டோரி - 2

சுரங்கத்தில் ரயில் ஓடும்போது என்ன ஆகும்? - ஜூ.வி ஸ்பெஷல் ஸ்டோரி - 2

‘மேக் இன் இந்தியா’ முழக்கத்தை அதிகம் கேட்கிறோம். ஆனால், சென்னை மெட்ரோ ரயிலைப் பொறுத்தவரை ‘மேக் இன் தமிழ்நாடு’ என்ற குரல் பலவீனமாகவே ஒலிக்கிறது. மெட்ரோ ரயிலுக்காக சுரங்கம் தோண்டும் மிஷின்கள் சீனாவிலிருந்து வந்திருக்கின்றன. ரயில் பெட்டிகள் ஆந்திராவின் ஸ்ரீசிட்டி நகரில் செய்யப்படுகின்றன. பெரும்பாலான ஊழியர்கள், வட இந்தியர்கள். மெட்ரோ ரயில் பணிகள் நடக்கும் இடத்தில் விபத்து நேரும்போது பாதிக்கப்படுவது மட்டுமே தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். 

சென்னை அண்ணா சாலையில், கடந்த சில நாட்களாக பஸ், கார் மற்றும் இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்பவர்கள் ஒரு வித பயத்துடனே கடந்து செல்கிறார்கள். காரணம், கடந்த ஏப்ரல் 9-ம் தேதி நிகழ்ந்த ஒரு விபத்து. அன்றைக்குப் பிற்பகலில், சர்ச் பார்க் பள்ளி அருகே அண்ணா சாலையில் திடீர் பள்ளம் ஏற்பட்டது. அதில், மாநகரப் பேருந்து ஒன்றும் ஒரு காரும் விழுந்தன. அவற்றில் பயணித்தவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். நல்லவேளையாக, அவர்கள் அனைவரும் பத்திரமாக வெளியேறினர். ஒருவேளை, அந்தப் பள்ளம் இன்னும் ஆழமாக  இருந்திருந்தால், உயிர்ச்சேதம் ஏற்படும் அளவுக்குப் பெரிய விபத்தாக அது மாறியிருக்கும். அதே பகுதியில் மறுநாளும் இன்னொரு இடத்தில் விரிசல் ஏற்பட்டது. அங்கு இருந்த, பாதசாரிகள் கடந்து செல்லும் சுரங்கப்பாதையை உடனே மூடிவிட்டனர். நல்லவேளையாக அதில் ஏதும் பாதிப்பு ஏற்படவில்லை. சாலை உள்வாங்கியது போல இந்த சப்வே உள்வாங்கி இருந்தால், பெரும் விபரீதமாகி இருக்கும்.

ஏற்கெனவே சென்னை அரசுப் பொது மருத்துவமனையின் முன்பு சுரங்கம் தோண்டியபோது, சாலையில் திடீரெனப் பள்ளம் ஏற்பட்டது. அதிலிருந்து அதிக அளவில் மணல் வெளியேறியது. அந்தப் பள்ளத்தில் கார் ஒன்று சிக்கியது. அதேபோல, ஸ்பென்சர் அருகே அண்ணா சாலையில் திடீரென சகதி போன்ற மண் வெளியேறியது. கடந்த வாரம்கூட, வண்ணாரப்பேட்டை முத்தையா முதலி தெருவில் ஒரு வீட்டுக்குள் சகதி போல மண் பீறிட்டு பொங்கியது.

சென்னை மக்களின் இப்போதைய பயமே, ‘பணிகள் நடக்கும்போதே இத்தனை பிரச்னைகள். எல்லாம் முடிந்து, சுரங்கப்பாதையில் தினமும் அதிவேகத்தில் பலமுறை ரயில்கள் செல்ல ஆரம்பிக்கும்போது, அந்த அதிர்வைத் தாங்க முடியாமல் வேறு என்னவெல்லாம் ஆகும்?’ என்பதுதான்.  

மெட்ரோ ரயில் திட்டத்துக்கான சாத்தியக் கூறு அறிக்கை தயாரிக்கப்பட்டபோது, பல ஆலோசனைகள் நடந்தன. அப்போது, ‘நிலம் கையகப்படுத்துதலில்’ உள்ள சாதக, பாதகங்கள் அலசப்பட்டன. ‘தனியார் நிலங்களை அதிகம் கையகப்படுத்தினால், அதில் பாதிக்கப்படுபவர்கள், நீதிமன்றங்களை நாடுவார்கள். அதனால், திட்டத்தைச் செயல்படுத்துவது தாமதமாகும். எனவே, இயன்றவரை இப்போது உள்ள சாலைக்கு மேலே உயர்மட்டப் பாலம் அமைத்தும், சாலைக்குக் கீழே சுரங்கப் பாதை அமைத்தும் திட்டத்தைச் செயல்படுத்தலாம்’ என்று முடிவு செய்யப்பட்டிருக்கிறது. ரயில் நிலையங்கள் அமைப்பதற்கு மட்டும் சில இடங்களில் தனியார் நிலங்களைக் கையகப்படுத்தினார்கள். 

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தில், 24 கி.மீ அளவுக்கு சுரங்கப்பாதையில் ரயில் தடம் அமைக்கப்படுகிறது. இதில், திருமங்கலம் முதல் நேரு பார்க் வரையுள்ள பகுதியில் பணிகள் முழுமை அடைந்துவிட்டன. இன்னும் சில தினங்களில் இந்தப்பாதையில் ரயில்கள் செல்லப்போகின்றன. திருமங்கலம், அண்ணாநகர் டவர், அண்ணாநகர் கிழக்கு, ஷெனாய் நகர், பச்சையப்பன் கல்லூரி, கீழ்பாக்கம், நேரு பார்க் ஆகிய இடங்களில் பூமிக்கு அடியில் மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. முதல்முறையாக சென்னை மக்கள், சுரங்க ரயிலில் பயணம் செய்யும் பரவச அனுபவத்தைப் பெறப்போகிறார்கள்.

இதுதவிர, வண்ணாரப்பேட்டையில் இருந்து சென்ட்ரல் ரயில் நிலையம் வரை சுரங்க ரயில் பாதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் தொடர்ச்சியாக, சேத்துப்பட்டு நேரு பார்க் - எழும்பூர் இடையே 939 மீட்டர் தூரத்துக்குச் சுரங்கப் பாதை அமைக்கப்பட்டுள்ளது. 

சுரங்கத்தில் ரயில் ஓடும்போது என்ன ஆகும்? - ஜூ.வி ஸ்பெஷல் ஸ்டோரி - 2

சுரங்கம் தோண்டுவதற்காக, ‘டன்னல் போரிங் மெஷின்’கள் சீனாவில் இருந்து கப்பல் மூலம் சென்னைக்குக் கொண்டுவரப்பட்டன. 90 மீட்டர் நீளம் கொண்ட இந்த மிஷின்கள் ஒவ்வொன்றும் 60 கோடி ரூபாய் மதிப்புள்ளவை. இப்போது 11 மிஷின்கள் சுரங்கம் தோண்டுவதற்காகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. 

சுரங்கம் தோண்டும்போது, அருகில் உள்ள வீடுகளில் விரிசல்கள் விழுகின்றனவா என்பதைக் கண்காணிக்க கிராக் மீட்டர், ஆப்டிக்கல் மீட்டர் ஆகியவையும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இவ்வளவு முன்னேற்பாடுகளுடன் இருந்தாலும், மண்ணடியில் சுரங்கம் தோண்டியபோது பல்வேறு கட்டடங்களில் கீறல்கள் விழுந்தன. சர்ச் ஒன்றிலும் கீறல் ஏற்பட்டது. அவற்றை, மெட்ரோ ரயில் நிறுவனம் சரி செய்து கொடுத்தது. 

அண்ணா பல்கலைக்கழகத்தின் சாயில் மெக்கானிக்ஸ் பிரிவைச் சேர்ந்த பேராசிரியர் வி.கே.ஸ்டாலின், ‘‘இது தவிர்க்க முடியாதது” என்கிறார். “சுரங்கம் தோண்டும்போதே, மண்ணின் அழுத்தம் சரிபார்க்கப்படுகிறது. எவ்வளவு தோண்ட வேண்டும் என்று முன் கூட்டியே தீர்மானிக்கப்படுகிறது. சென்னையில் சில இடங்களில் ஏழு மீட்டர் ஆழத்தில் தண்ணீர் வரக்கூடும். இதையெல்லாம் கவனத்தில் கொண்டுதான் பணி நடக்கும். சுரங்கம் தோண்டும்போது, மண் சரியாமல் இருக்க மண்ணை வலுப்படுத்துவார்கள். இதை, சாந்து ஒட்டுதல் என்று சொல்லலாம். சிமென்ட்டை அதிக அழுத்தத்தில் உபயோகித்துப் பூசுவார்கள். எங்கெல்லாம் நெகிழ்வான மண் பகுதிகள் இருக்கின்றனவோ, அங்கு இதுபோல முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். 

என்னதான் திட்டமிட்டாலும், என்ன மாதிரியான மண் இருக்கும் என்பது சில நேரங்களில் முன்கூட்டியே தெரியாமல் போய்விடும். மண் சரிந்து விழாது என்ற எதிர்பார்ப்பில், அழுத்தம் கொடுக்காமல் இருந்திருக்கலாம்.அப்படியான சூழலில்தான், அண்ணா சாலையில் பள்ளம் ஏற்பட்டிருக்கிறது” என்றார்.

சுரங்கத்தில் ரயில் ஓடும்போது என்ன ஆகும்? - ஜூ.வி ஸ்பெஷல் ஸ்டோரி - 2

அதே பிரிவின் மற்றொரு பேராசிரியர் முத்தாரம், “ஒவ்வோர் இடத்திலும் வெவ்வேறு வகையான மண் இருக்கும். மெட்ரோ ரயில் திட்டத்தில் சுரங்கம் தோண்டுவது ஒரு சவாலான பணி. அனுபவம் வாய்ந்த ‘சைட் இன்ஜினீயர்’ உடன் இருக்க வேண்டும். அப்போது, மண்ணின் தன்மையில் மாறுபாடு இருப்பதை அவர் கண்காணித்து இருக்கவேண்டும். விபத்து ஏற்பட்ட இடத்தில், சுரங்கம் தோண்டியபோது, அனுபவம் வாய்ந்த பொறியாளர்கள் இருந்தார்களா என்பது தெரியவில்லை. மண் எப்போதும் மொத்தமாகச் சரியாது. சில நிமிடங்களுக்கு முன்பு, லேசாக மண் சரிந்திருக்கக் கூடும். அப்போது கவனித்திருந்தால், உடனே சரிசெய்திருக்க முடியும்” என்றார்.

சுரங்கம் தோண்டும் பணிகளுக்கு, ‘ஜியோ டெக்னிக்கல் இன்ஜினீயரிங்’ படித்த மண்ணியில் பொறியாளர்கள் மிகவும் அவசியம். ஆனால், இந்தத் துறையில் அனுபவம் வாய்ந்தவர்கள் இந்தியாவில் குறைவாகவே உள்ளனர். அண்ணா பல்கலைக்கழகம், ஐ.ஐ.டி ஆகியவற்றில் கடந்த சில ஆண்டுகளாகத்தான் இதற்கான படிப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.

சென்னை மெட்ரோ ரயிலைப் பொறுத்தவரை, பயணக் கட்டணம் ஒரு பிரச்னையாக உள்ளது. டெல்லி, கொல்கத்தா மெட்ரோ ரயில்களுக்கான கட்டணங்களுடன் ஒப்பிடும்போது, சென்னை மெட்ரோ ரயில் கட்டணம் மிக அதிகமாக இருப்பதற்கு என்ன காரணம்? அடுத்த இதழில் பார்க்கலாம். 

News2
News2

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a comment