Tuesday, April 25, 2017

மெட்ரோ ரயில்... சென்னைக்கு இது வரமா? - ஜூ.வி ஸ்பெஷல் ஸ்டோரி

மெட்ரோ ரயில்... சென்னைக்கு இது வரமா? - ஜூ.வி ஸ்பெஷல் ஸ்டோரி

திடீர் திடீரென சென்னை மெட்ரோ ரயில், தலைப்புச் செய்தி ஆகிறது. ரயில்களால் அல்ல, மெட்ரோவுக்காக சுரங்கம் தோண்டும் இடங்களின் மேலே, சாலைகளில் விழும் பள்ளங்களால். திடீரென பஸ்ஸே உள்ளே போய்விழும் அளவில் பள்ளம் விழுகிறது. கெமிக்கல் கலவை பீறிட்டுப் பொங்கிவந்து வீடுகளை மூழ்கடிக்கிறது. இந்தியாவின் பல நகரங்களில் மெட்ரோ ரயில் பணி நடந்திருக்கிறது; இப்போதும் நடந்துகொண்டு இருக்கிறது. ஆனால், சென்னை அளவுக்கு எங்கும் இத்தனை விபத்துகள் நேர்ந்ததில்லை. இதேபோல வேறு சில ‘பெருமை’களும் சென்னை மெட்ரோவுக்கு உண்டு. இந்தியாவிலேயே மெட்ரோ ரயில் கட்டணம் மிக அதிகமாக இருப்பது இங்குதான். இந்தியாவிலேயே மெட்ரோ ரயில் பணிகள் அதிகம் தாமதமாவதும் இங்குதான். பணி நடக்கும்போதே கான்ட்ராக்ட் எடுத்த நிறுவனம் பாதியில் ஓடியதும் இங்குதான். 

சென்னை மாநகரின் போக்குவரத்தை மேம்படுத்துவதற்காகக் கொண்டு வரப்படும் மெட்ரோ ரயில் திட்டக் கட்டுமானப் பணிகள், 10 ஆண்டுகளைக் கடந்தும் தொடர்கின்றன. பணிகள் முடிவடைந்த இரு பாதைகளில் மட்டும் இப்போது மெட்ரோ ரயில்கள் இயங்குகின்றன. திட்டப்பணிகள் முழுமை அடைந்து, முழு வீச்சில் போக்குவரத்து தொடங்குவதற்கு இன்னும் சில ஆண்டுகள் ஆகலாம். ‘சென்னை மெட்ரோ ரயில் திட்டம்’ பற்றிய இந்த ஸ்பெஷல் ஸ்டோரி, பல்வேறு அம்சங்களை அலசுகிறது.

பிள்ளையார் சுழி!

சென்னை நகரின் மக்கள்தொகைப் பெருக்கமும் அதனால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலும்தான், மெட்ரோ ரயில் அவசியத்துக்கானத் தொடக்கப்புள்ளி. தற்போது, சென்னையின் மக்கள்தொகை 47 லட்சம். இது, இன்னும் 10 ஆண்டுகளில், 60 லட்சத்தைத் தொடும் என்ற கணிப்பு நம்மை மிரள வைக்கிறது. தற்போது சென்னையின் சாலைகளில் ஓடிக்கொண்டிருக்கும் வாகனங்களின் எண்ணிக்கை 37 லட்சம். இது, அடுத்த 10 ஆண்டுகளில் 50 லட்சமாக அதிகரிக்கும். அப்போது ஏற்படப் போகும் போக்குவரத்து நெரிசலை நினைத்தாலே மயக்கம் வரும்.

சென்னை மாநகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க, மெட்ரோ ரயில் திட்டத்தைக் கொண்டு வருவதற்கான யோசனை, தி.மு.க ஆட்சியில் விதையாக விழுந்தது. 2007-ம் ஆண்டு நவம்பர் 7-ம் தேதி, 14,600 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மெட்ரோ ரயில் திட்டத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது. இந்தத் திட்டத்துக்கு, 2009-ம் ஆண்டு ஜனவரி 28-ம் தேதி மத்திய அரசு ஒப்புதல் அளித்தது.

மெட்ரோ ரயில்... சென்னைக்கு இது வரமா? - ஜூ.வி ஸ்பெஷல் ஸ்டோரி

வண்ணாரப்பேட்டையில் இருந்து அண்ணா சாலை வழியாக விமான நிலையம் வரையில் 23 கி.மீ தூரத்துக்கு ஒரு பாதை, சென்ட்ரலில் இருந்து கோயம்பேடு வழியாக பரங்கிமலை வரை 22 கி.மீ தூரத்துக்கு இன்னொரு பாதை என இரண்டு பாதைகள். காகிதங்களில் வரைபடங்களாக இருந்த இதன் கட்டுமானப் பணிகள் 2009-ம் ஆண்டு ஜூன் 10-ம் தேதி தொடங்கப்பட்டன. கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரை ரயில் பாதை மற்றும் ரயில் நிலையங்கள் அமைக்கும் பணிகள் ஏறக்குறைய ஆறு ஆண்டுகள் நடைபெற்றன. இந்தப் பாதையில் மெட்ரோ ரயில் போக்குவரத்தை, 2015-ம் ஆண்டு ஜூன் 29-ம் தேதி அன்றைய முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார். அதற்கடுத்து, சின்னமலையில் இருந்து விமான நிலையம் வரையிலான பாதையில், 2016-ம் ஆண்டு செப்டம்பர் 21-ம் தேதி போக்குவரத்து தொடங்கப்பட்டது. 

ஆரம்ப நாட்களில் சுற்றுலாப்பயணிகள் போல மக்கள் கூட்டம் கூட்டமாக பயணம் செய்தார்கள். ஆனால், இப்போது இந்த இரண்டு ரயில் பாதைகளிலும் காலை, மாலை நேரங்களைத் தவிர்த்து, மற்ற நேரங்களில் பயணிப்பவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். 

எகிறிய பட்ஜெட்!

மெட்ரோ ரயில் திட்டத்துக்காக, இதுவரை 2,383 கோடி ரூபாயைப் பங்கு மூலதனமாகவும், 1,854 கோடி ரூபாயை சார்நிலைக் கடனாகவும், 82.51 கோடி ரூபாயை மானியமாகவும் தமிழக அரசு வழங்கியுள்ளது. மத்திய அரசு 1,950 கோடி ரூபாயைப் பங்கு மூலதனமாகவும், 365 கோடி ரூபாயை சார்நிலைக் கடனாகவும் வழங்கியுள்ளது. ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமையின் மூலம் 7,095 கோடி ரூபாய் கடன் பெறப்பட்டு உள்ளது. ரூ.14,600 கோடி மதிப்பீட்டில் ஆரம்பிக்கப்பட்ட இந்தத் திட்டமானது, மூலப்பொருள் விலையேற்றம், சம்பள உயர்வு போன்ற காரணங்களால் தற்போது ரூ.19,000 கோடியை எட்டியுள்ளது.

எப்போது முழுமை பெறும்?

சென்ட்ரல் ரயில் நிலையம் முதல் திருமங்கலம் வரை மெட்ரோ ரயிலுக்கான சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் முடிந்துவிட்டன. அங்கு, சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது. இன்னும் சில நாட்களில், அந்தப் பாதையில் ரயில் போக்குவரத்து ஆரம்பிக்கும் என்று செய்திகள் வருகின்றன. வண்ணாரப்பேட்டை முதல் சின்னமலை வரை சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் இப்போது நடைபெற்று வருகின்றன. திட்டமிடப்பட்ட அனைத்துப் பாதைகளிலும் அடுத்த ஆண்டில் முழுமையாகப் போக்குவரத்துத் தொடங்கும் என்று அதிகாரிகள் சொல்கிறார்கள்.

மெட்ரோ ரயில்... சென்னைக்கு இது வரமா? - ஜூ.வி ஸ்பெஷல் ஸ்டோரி

ஒருங்கிணைப்பு அவசியம்!

மாநகரப் பேருந்து, மெட்ரோ ரயில், மாடி ரயில், புறநகர் ரயில் என பல்வேறு வகையான போக்குவரத்து வசதிகள் இருந்தபோதிலும், இந்த வசதிகளை இன்னும் ஒருங்கிணைக்கவில்லை. அண்ணா பல்கலைக்கழகத்தின் நகரமைப்புப் பொறியியல் துறையின் முன்னாள் பேராசிரியர் கே.பி.சுப்பிரமணியனிடம் பேசினோம். “சென்னையின் போக்குவரத்தில் 65 சதவிகிதம் அளவுக்கு கார்கள், டூ வீலர்கள் இருக்கின்றன. புறநகர் ரயில்கள், எம்.ஆர்.டி.எஸ் எனப்படும் மாடி ரயில், அரசுப் பேருந்துகள், மினிப் பேருந்துகள் என 35 சதவிகிதம் மட்டும்தான் பொதுப் போக்குவரத்து வசதிகள் இருக்கின்றன. சென்னையின் 2-வது மாஸ்டர் பிளான் திட்டத்தில், ‘2026-ம் ஆண்டுக்குள் பொதுப் போக்குவரத்தை 70 சதவிகிதமாக அதிகரிக்கத் திட்டமிடப்பட்டது. பொதுப் போக்குவரத்தை மேம்படுத்தும் வகையில்தான் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இப்போது, மெட்ரோ ரயில்களில் கூட்டம் இல்லை. எனினும், திட்டத்தை முழுமையாகச் செயல்படுத்தும் போது வரவேற்பு இருக்கும். மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு மினிப் பேருந்து வசதி செய்யப்பட வேண்டும். புறநகர் ரயில் நிலையத்தில் இருந்து மாடி ரயில் நிலையத்துக்குப் போவதற்கு அதிக நேரம் பிடிக்கிறது. மெட்ரோ ரயிலுடன், மாடி ரயில், புறநகர் ரயில் ஆகியவற்றை ஒருங்கிணைக்க வேண்டும். மாடி ரயிலில் நாள் ஒன்றுக்கு ஆறு லட்சம் பேர் பயணிக்க வேண்டும் என்பதுதான் இலக்கு. ஆனால், இப்போது ஒரு லட்சம் பேர்தான் பயணிக்கின்றனர்” என்றார்.

சமீபத்தில், சென்னை அண்ணா சாலையில் மெட்ரோ ரயில் பாதைக்காகச் சுரங்கம் தோண்டப் பட்டிருந்த இடத்தில் திடீரென பள்ளம் ஏற்பட்டது. அதில் ஒரு காரும், ஒரு பேருந்தும் விழுந்து விபத்துக் குள்ளாகின. அதற்கு அடுத்த சில தினங்களில் அண்ணா சாலையின் இன்னோர் இடத்தில் மீண்டும் பள்ளம் ஏற்பட்டது. இதற்கு என்ன காரணம்?

(அடுத்த இதழில்)

ஒரு டிக்கெட்... பல பயணங்கள்!

சென்னையின் போக்குவரத்தை ஒருங்கிணைக்க ‘சென்னை யூனிஃபைடு மெட்ரோபாலிடன் டிரான்ஸ்போர்ட் அத்தாரிட்டி’ (Chennai Unified Metropolitan Transport Authority) என்ற அமைப்பு தொடங்கப்பட உள்ளது. நகரின் மொத்தப் போக்குவரத்தையும் ஒரே அதிகாரத்தின் கீழ் கொண்டு வருவதுதான் இந்த அமைப்பின் நோக்கம். ஆனால், இது இன்னும் பேப்பர் அளவில்தான் இருக்கிறது. இது அமலுக்கு வந்தால், ஒரே டிக்கெட்டில் மெட்ரோ ரயில், புறநகர் ரயில், மாடி ரயில், பேருந்து என அனைத்து போக்குவரத்துகளிலும் பயணிக்கலாம்.

News2
News2

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a Comment