Wednesday, April 26, 2017

மம்தா... கெஜ்ரிவாலுக்கு இருக்கும் திராணி தினகரனுக்கு இல்லை!

மம்தா... கெஜ்ரிவாலுக்கு இருக்கும் திராணி தினகரனுக்கு இல்லை!

சில நாட்களாகவே, செய்தி சேனல்களின் தலைப்புச் செய்திகளை அ.தி.மு.க-வினரே ஆக்கிரமிக்கின்றனர். ஒருநாளைக்குக் குறைந்தபட்சம் ஆறு பிரேக்கிங் நியூஸ்களாவது அவர்களை மையப்படுத்தியே அமைகின்றன. தினகரன் ஆதரவு அ.தி.மு.க அம்மா அணி, தினகரனைக் கழற்றிவிட்ட அ.தி.மு.க அம்மா அணி, தினகரனோடு சசிகலாவையும் கழட்டிவிடச் சொல்லும் அ.தி.மு.க புரட்சித்தலைவி அம்மா அணி, சில வாரங்களுக்கு முன் ஜெ.தீபா துவக்கிய ‘எம்.ஜி.ஆர் அம்மா தீபா’ பேரவை, அவரிடமிருந்து பிரிந்துபோய் சில நாட்களுக்கு முன் அவரின் கணவர் மாதவன் துவக்கிய ‘எம்.ஜி.ஆர் ஜெயலலிதா தி.மு.க’... என ஐந்து அணிகள் ஜெயலிதாவையும் அவரது சின்னமான இரட்டை இலையையும் சொந்தம் கொண்டாடுகின்றன.

இதில் மாதவனை தீபாவே பொருட்படுத்துவதில்லை என்பதால், மற்றவர்களும் பொருட்படுத்தப் போவதில்லை. ‘ஜெ.தீபாவுக்கு தமிழக அரசியல் குறித்து அனா, ஆவன்னாகூடத் தெரியாது’ என்பதை மக்களுக்கு உணர்த்துவதற்கு அவரது நேர்காணல்கள் உதவுகின்றன. மூன்று வாரங்களுக்கு முன்பு வரை அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள் புடைசூழ ஆர்.கே. நகரில் வலம் வந்த டி.டி.வி.தினகரனை இப்போது ஆதரிப்பவர்களை விரல்விட்டுக்கூட எண்ணமுடியாது.

மிச்சம் இருப்பது இரண்டு அணிகள். ஆர்.கே. நகர் தேர்தல் பிரசாரம் வரை ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்து வந்த இந்த ‘அ.தி.மு.க அம்மா’ அணியும், ‘அ.தி.மு.க புரட்சித்தலைவி அம்மா’ அணியும் இணைவதற்கான பேச்சுவார்த்தைக்கு 7 பேர் கொண்ட குழுக்களை அமைத்துள்ளார்கள். ‘அம்மாவின் ஆட்சி தொடரவேண்டும்’, ‘கட்சி ஒன்றாக வேண்டும்’, ‘இரட்டை இலையை மீட்க வேண்டும்’ என்றெல்லாம் இதற்குக் காரணங்கள் சொல்லப்பட்டாலும், இதன் உண்மையான காரணங்கள் மக்களுக்குத் தெரிந்ததுதான்.

அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டிலும் சரத்குமார் வீட்டிலும் ரெய்டு நடக்கும்வரை, ‘சசிகலா குடும்பத்தை அ.தி.மு.க தொண்டர்கள் ஏற்கவில்லை’ என்ற உண்மை ‘அம்மா அணி’க்குத் தெரியவில்லை என்பதை சாதாரண அ.தி.மு.க தொண்டர்களே ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். 

ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக இருந்தபோது தலைமைச் செயலகத்திலேயே ரெய்டு நடந்தபோதும் அமைதி காத்தார். பதவியை ராஜினாமா செய்யச் சொன்னபிறகுதான், சசிகலாவை எதிர்த்து ‘புரட்சி’ பண்ண ஆரம்பித்தார் பன்னீர்செல்வம். ரெய்டுகள்... இரட்டை இலைச் சின்னத்தைப் பெறுவதற்காக லஞ்சம் கொடுக்க முயன்றதாகத் தினகரன் மீது விசாரணை... ஆகியவற்றுக்குப் பிறகுதான் ‘அம்மா அணி’யினர் தினகரனை ஒதுக்கிவைத்துவிட்டு, இணைப்பு பற்றிப் பேச ஆரம்பித்திருக்கிறார்கள்.

எல்லாவற்றின் பின்னாலும் மத்திய பி.ஜே.பி. அரசு இருக்கிறது என்பதும், ‘ரெய்டு வரும் முன்னே... மாற்றம் வரும் பின்னே’ என்பதும், மடியில் கனம் இருப்பதால்தான் அ.தி.மு.க-வினருக்கு வழியில் பயம் இருக்கிறது என்பதும்... வெளிப்படையாகவே எல்லோருக்கும் தெரிந்திருக்கிறது. தினகரன் இதில் கடுமையாக அதிர்ச்சி அடைவார் என்று பார்த்தால், ‘அவர்கள் ஒதுக்கிவிட்டார்கள்; நான் ஒதுங்கிவிட்டேன்’ என்று பம்மி, நம்மை அதிர்ச்சியடையச் செய்கிறார்.

அ.தி.மு.க-வை மட்டுமல்ல, இந்தியாவில் செயல்படும் பல கட்சிகளையும், சந்தர்ப்பம் வாய்க்கும்போது எல்லாம் மத்திய அரசு மிரட்டி வழிக்குக் கொண்டுவரப் பார்க்கிறது. டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவாலும், மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியும் இதற்கு எதிராகத் தீவிரக்குரல் எழுப்புகின்றனர். ஆனால், ‘தங்கள் கட்சியைச் சிதைக்கப் பார்க்கிறார்கள்’ என்று தெளிவாகத் தெரிந்தும் பாரதிய ஜனதாவுக்கு எதிராகக் குரல் எழுப்பத் தினகரனுக்குத் திராணியில்லை. சசிகலாவும் ஜெயிலுக்குப் போகும்வரை பி.ஜே.பி-க்கு எதிராகக் கருத்து உதிர்க்கவில்லை.

நாஞ்சில் சம்பத் மட்டும், ‘‘மதவாதக்கட்சியை தமிழகத்தில் காலூன்றவிட மாட்டோம்’’ என்கிறார். மற்றவர்கள் யாரும் அதைப் பொருட்படுத்தவில்லை. எப்போதுமே அ.தி.மு.க-வுக்கு நிலையான கொள்கை இருந்ததில்லை. தனிநபர் கவர்ச்சி, தலைமை வழிபாடு, பாமர அரசியல் ஆகியவற்றை அடித்தளமாகக் கொண்டு எம்.ஜி.ஆர் உருவாக்கிய அ.தி.மு.க-வுக்கு ‘மதவாத எதிர்ப்பு’ போன்ற கொள்கைச் சுமை எப்போதும் இல்லை.

ஜெயலலிதா தன்முனைப்பு காரணமாக பி.ஜே.பி-யைக் கடுமையாக எதிர்த்திருக்கிறார். ‘‘அத்வானிக்கு செலக்டிவ் அம்னீஷியா இருக்கிறது’’ என விமர்சித்தவர், கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது ‘‘மோடியா, லேடியா என்று பார்ப்போம்’’ என்று சவால் விட்டார். ஆனால் இப்போது அ.தி.மு.க-வில் உள்ள சகல அணிகளைச் சேர்ந்தவர்களும், பி.ஜே.பி-க்குப் பணிந்துபோகத் தொடங்கியிருக்கிறார்கள்.

இரு அணிகளும் இணைந்தாலும், யார் கட்சியைத் தலைமையேற்று வழிநடத்துவார் என்பது கேள்விக்குறி தான். ‘‘கட்சியை வழிநடத்தக் குழு அமைக்கப்படும்’’ என்று அமைச்சர் ஜெயக்குமார் அறிவித்திருக்கிறார். ஒற்றைத் தலைமை இல்லாமல், கூட்டுத் தலைமை என்பது ஜனநாயகத்தில் வரவேற்கப்படவேண்டிய ஒன்று. ஆனால் அ.தி.மு.க-வில் இந்த நிலை, ஜனநாயகத்தின் மீதான ஆர்வத்தால் வரவில்லை; வேறுவழியில்லாத நிர்பந்தத்தால் வந்திருக்கிறது.

அ.தி.மு.க எப்போதுமே தனிநபரை நம்பி இயங்கும் கட்சி. அதன் எதிர்ப்பு அரசியல்கூட, தனிநபரை மையப்படுத்தியே அமைந்தது. கருணாநிதி என்ற தனிநபரை எதிர்த்துதான் எம்.ஜி.ஆர் கட்சி தொடங்கினார். ஜெயலலிதாவும், ‘கருணாநிதி லாரி ஏற்றிக் கொல்லப் பார்த்தார்’, ‘சென்னா ரெட்டி தவறாக நடந்துகொள்ளப் பார்த்தார்’ என்று தனிநபர் குற்றச்சாட்டுகளை வைத்தே அரசியல் நடத்தினார். அதனால்தான் ஓ.பன்னீர்செல்வமும், சசிகலா என்ற தனிநபரை எதிர்த்து அரசியல் செய்து கணிசமான ஆதரவைப் பெற முடிந்தது. சசிகலா குடும்பம் ஒதுங்கிவிட்டதாக சொல்லப்படும் நிலையில், இனி அ.தி.மு.க-வினர் எந்தத் தனிநபரை மையமாக வைத்து அரசியல் செய்வார்கள்? எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் என்று தனித்தனியாகத் தங்களைத் தலைவர்களாக நினைத்துக்கொள்கிறவர்கள், யாருக்குக் கட்டுப்படப் போகிறார்கள்?

ஓ.பன்னீர்செல்வம் கையில் இருக்கும் ஒரே ஆயுதம், ‘ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை கமிஷன் அமைக்கவேண்டும்’ என்ற கோரிக்கைதான். ஆனால், இதை அம்மா அணியில் உள்ள யாரும் இதுவரை ஏற்கவில்லை. ஜெயலலிதா மருத்துவ மனையில் இருந்தபோது முதலமைச்சர் பொறுப்பில் இருந்த பன்னீர்செல்வம், தன் தலைவிக்கு அளிக்கப்படும் சிகிச்சையில் சந்தேகம் இருந்தால், அப்போதே அதை எழுப்பாமல் அதை அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்துவது மலிவான அரசியல். 

ஜெயலலிதாவின் மரணம் மட்டுமல்ல, அரசியல் வாழ்க்கையும் மர்மமான ஒன்றுதான். கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தும்போதே வேட்பாளர் பட்டியலை வெளியிடுவார். ‘எனக்குத் தெரியாமலே வேட்பாளர் பட்டியல் வெளியாகிவிட்டது’ என்பார். எதற்கு ஓர் அமைச்சரை நீக்குகிறார், ஏன் அவரை மறுபடியும் சேர்க்கிறார்... எதற்கும் மக்களிடம் விளக்கம் சொல்லியதில்லை. அதிகாரிகளைச் சந்தித்ததில்லை, அமைச்சர்களைச் சந்தித்ததில்லை, கூட்டணிக் கட்சித் தலைவர்களைச் சந்தித்ததில்லை, பிரசாரக் கூட்டங்களைத் தவிர மற்ற நேரங்களில் மக்களைச் சந்தித்ததில்லை - இதுதான் ஜெயலலிதா. ஜெயலலிதாவின் அரசியல் வாழ்க்கை மர்மங்கள் குறித்து விமர்சிக்காதவர்கள்தான், இப்போது அவர் மரணத்தில் இருக்கும் மர்மங்கள் குறித்து விவாதித்துக்கொண்டிருக்கிறார்கள்.

இப்போது அ.தி.மு.க.வின் இரு அணிகளையும் இணைத்திருப்பது ஒன்றே ஒன்றுதான், அது சுயநலம். அதுவேகூட அ.தி.மு.க-வின் எதிர்காலத்துக்கும், தமிழகத்தின் நிகழ்காலத்துக்கும் ஆபத்தாக இருக்கலாம்.

News2
News2

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a comment