Tuesday, April 25, 2017

“டெல்லி சகுனியை அனுமதிக்கக் கூடாது!” - கொந்தளிக்கும் தா.பாண்டியன்

“டெல்லி சகுனியை அனுமதிக்கக் கூடாது!” - கொந்தளிக்கும் தா.பாண்டியன்

‘‘மிழகத்தில் பி.ஜே.பி காலூன்றுவதைத் தடுக்க எந்தக் கட்சியோடும் கூட்டு சேரலாம்; எந்த மாதிரியான குரலும் எழுப்பலாம்’’ என சுருதி மாறுகிறார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன். சமீபத்திய அரசியல் சூழல்கள் குறித்து, அவரிடம் பேசினோம்...

‘‘கம்யூனிஸ்ட்கள் மீண்டும் தி.மு.க-வோடு கைகோத்து விட்டீர்களே?’’

‘‘டெல்லியில் நம் விவசாயிகள் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் உறுதியான உள்ளத்தோடு ஒவ்வொரு நாளும் விதவிதமான போராட்டத்தை நடத்தி வருகிறார்கள். என்ன செய்தாலும் மோடியின் பார்வை, அந்த விவசாயிகளின் மீது படவே இல்லை. 2015-ம் ஆண்டு பெருமழை, 2016-ல் வர்தா புயல், இப்போது பெரும் வறட்சி என்று தமிழக மக்களை இயற்கை வதைத்துக்கொண்டே இருக்கிறது. இயற்கையின் தாக்குதலோடு மத்திய அரசின் அரசியல் தாக்குதலும் தமிழகத்துக்கு ஆபத்தாக வந்துள்ளது. மத்திய அரசின் ஜனநாயகமற்ற செயல்களை முறியடிக்க அனைத்துக் கட்சிகளும் ஒன்றுசேர்வது அவசியம்.’’

‘‘தமிழகத்தில் நடைபெறும் வருமான வரித் துறையின் ரெய்டுக்கு ஏதேனும் உள்நோக்கம் இருக்குமா?’’

‘‘மத்திய அரசின் நடவடிக்கை, மாநிலத்தில் உள்ள ஆளும்கட்சியைக் குறிவைத்துத் தாக்குவது போலத்தான் இருக்கிறது. ஆளும்கட்சி மீது தி.மு.க-வுக்குப் பல விமர்சனங்கள் இருக்கலாம். நமக்குள் இருக்கும் சகோதரச் சண்டையில் பி.ஜே.பி-க்கு இடம் கொடுத்துவிடக் கூடாது. பி.ஜே.பி-யோடு சேர்ந்துகொண்டு, தமிழகத்தை ஆளும் கட்சியை அடிக்கக் கூடாது. 2016-ம் ஆண்டு மக்கள் கொடுத்த தீர்ப்பை மத்திய அரசு ஏற்காவிட்டாலும், நாம் ஏற்று அடுத்த பொதுத்தேர்தல் வரும் வரை அவர்களை ஆட்சி நடத்த அனுமதிக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் டெல்லியில் இருந்து வரும் சகுனியையும் மனுதர்மத்தை மீண்டும் திணிக்க முயலும் வகுப்புவாதிகளையும் தமிழ்நாட்டில் அனுமதிக்கக் கூடாது.’’

‘‘பி.ஜே.பி-யால் என்ன ஆபத்து வந்துவிடும் என்கிறீர்கள்?’’

‘‘அவர்கள் நோக்கம் தெளிவு. 100 ஆண்டுகள் பாரம்பர்யமுள்ள கட்சி, சுதந்திரப் போரில் பங்குகொண்ட கட்சி, 50 ஆண்டுகள் ஆண்ட கட்சி... காங்கிரஸ். கோவாவிலும் மணிப்பூரிலும் அவர்கள் வெற்றி பெற்றாலும் ஆட்சி அமைக்க முடியாமல் போனது. 20-ஐ, 30 ஆக்கி காட்டிய மோடியின் ஜாலவித்தைகளைப் பார்த்தோம். 1936-ம் ஆண்டு ஜெர்மனியில் சமூக ஜனநாயகக் கட்சிதான் அதிக இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. ஹிட்லருக்கு ஜெர்மானிய முதலாளிகள் ஆதரவு கொடுத்தும், அவருக்கு 3-வது இடம்தான் கிடைத்தது. 2-வது இடத்தைக் கம்யூனிஸ்ட் கட்சி பெற்றிருந்தது. ஆனால், அந்த நாட்டின் அதிபர் இறந்தவுடன் பச்சையாகப் படுகொலைகளைச் செய்து, ஹிட்லர் முதலில் ஜனாதிபதி ஆனார். மறுநாள் சர்வாதிகாரி ஆக அறிவித்துக் கொண்டார். அதன் விளைவை ஜெர்மனி மட்டுமல்ல... உலகமே அனுபவித்தது. அதேபோல சிறுபான்மையினரை மட்டுமல்ல, இந்தியாவில் உள்ள பல மொழிகளையும் கலாசாரங்களையும் மதிக்காத கட்சி,  இப்போது மத்தியில் ஆட்சியில் இருக்கிறது.’’

‘‘எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீர்செல்வம் அணிகள் ஒன்றுசேர்கின்றனவே?’’

‘‘இரண்டு பேரும் ஒன்றுசேர்வது மாநிலத்துக்கு மிகமிக அவசியம். அவர்களுக்குள் கொள்கை முரண்பாடு இல்லை. அவர்களுடைய ஒரே தலைவி, ஜெயலலிதாதான். எனவே, இதில் சிக்கல் எதுவும் இல்லை என்பதுதான் யதார்த்தம். அவர்கள், இப்போதைய அரசியல் சூழ்நிலைகளை உணர்ந்து முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். அடுத்தவன் உள்ளே புக இடம் கொடுத்துவிட்டால், பிறகு முதலுக்கே மோசம் வந்துவிடும்.’’

‘‘இரட்டை இலையை தேர்தல் ஆணையம் முடக்கி வைத்துள்ளதை எப்படிப் பார்க்கிறீர்கள்?’’

‘’2014-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற 37 எம்.பி-க்களும் இன்று வரை அ.தி.மு.க உறுப்பினர்கள் என்றுதான் நாடாளு மன்றத்தில் அழைக்கப்படுகிறார்கள். தம்பிதுரை, அ.தி.மு.க சார்பில்தான் துணை சபாநாயகராக இருக்கிறார். அதுபோல 2016-ம் ஆண்டு சட்டமன்றத்  தேர்தலில் ஜெயித்த அக்கட்சி எம்.எல்.ஏ-க்களும் அ.தி.மு.க என்றுதான் அழைக்கப்படுகிறார்கள். யாருக்கு மெஜாரிட்டி என்று பார்க்க எண்ணிக்கைதான் முக்கியம். அவன், ‘நல்லவனா... கெட்டவனா...’ என்று தேர்தல் ஆணையம் சொல்ல முடியாது. உத்தரப்பிரதேசத்தில் அப்பாவுக்கும் மகனுக்கும் சண்டை. கட்சியின் சின்னம் யாருக்கு என்பதில் சிக்கல். மகனுக்குத்தான்    எம்.எல்.ஏ-க்களின் பெரும்பான்மையான ஆதரவு இருக்கிறது என்று ஒரே நாள் விசாரணையில் தெரிந்துகொண்டு அகிலேஷ் யாதவுக்கு சைக்கிள் சின்னத்தை தேர்தல் ஆணையம் கொடுத்தது. ஆனால், தமிழ்நாட்டில் அ.தி.மு.க உள்கட்சி பிரச்னையில் இரட்டை இலையைத் தேர்தல் ஆணையம் முடக்கி வைத்துவிட்டது. இது, ஜனநாயகப் படுகொலை. கட்சிக்குப் பெயர் வைக்கச் சொல்லி அ.தி.மு.க-வினர் தேர்தல் ஆணையத்தைக் கேட்கவில்லை. இது மாநில கட்சிகளை மிரட்டும் அராஜகப் பயமுறுத்தல்.’’ 

‘‘தமிழ்நாட்டில் தாமரை மலரும் என்று அந்தக் கட்சி தலைவர்கள் சொல்லி வருகிறார்களே?’’

‘‘தமிழ்நாட்டில் தேர்தல் மூலம் அவர்களால் என்றைக்கும் காலூன்றவே முடியாது. கன்னக்கோல் போட்டு அதிகாரங்களில் குழப்பத்தை ஏற்படுத்துவார்கள். அதன் மூலம் ஏதாவது செய்துவிடலாமா என்று துடிக்கிறார்கள். மனுதர்மத்தையும் வகுப்புவாதத்தையும் புரிந்து கொண்டவர்கள் தமிழக மக்கள். பி.ஜே.பி-யின் தாமரை ஒரு நாளும் தமிழகத்தில் மலர முடியாது.’’

News2
News2

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a comment