Tuesday, April 25, 2017

பி.ஜே.பி ஆபரேஷன் சக்சஸ்... உயிர் பிழைக்குமா வழக்குகள்?

பி.ஜே.பி ஆபரேஷன் சக்சஸ்... உயிர் பிழைக்குமா வழக்குகள்?

டந்த 2016-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின் போது கரூர் அன்புநாதன் வீட்டில் வருமானவரித் துறை ரெய்டு நடந்தது. அந்த ரெய்டின் கரங்கள், அப்போதைய மின்சாரத்துறை அமைச்சர் நத்தம் விசுவநாதன், சென்னை மேயர் துரைசாமி வீடுகளுக்கும் நீண்டது. அந்த நேரத்தில் இருந்து தமிழகத்தில் வருமானவரித் துறை பிஸியாக இருக்கிறது.  

மூன்றாவது முறையாக ஓ.பி.எஸ் முதல்வரான நிலையில், அவருக்கு நெருக்கமான சேகர் ரெட்டி வீட்டில் வருமானவரி ரெய்டு நடந்தது. இது தமிழகத்தின் அப்போதைய தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ் வீட்டையும், தலைமைச் செயலகத்தில் அவரின் அலுவலகத்தையும்கூட விட்டு வைக்கவில்லை. 

ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் சூழலில், அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் அதிரடியாக வருமானவரித் துறையினர் நுழைந்தனர்.  

இப்படி தமிழகத்தில் அடுத்தடுத்து நடந்துவரும் ரெய்டுகளுக்கும் இங்குள்ள அரசியல் சூழலுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சி.பி.ஐ., வருமானவரித் துறை, அமலாக்கத் துறை நடத்தும் அதிரடிகளால், தமிழகத்தின் அரசியல் சூழல் நாளுக்கு நாள் மாறிக்கொண்டே வருகிறது. இதனால், ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் தடம் மாறுகிறார்கள். இந்தச் சூறாவளி சுழலுக்குள் சிக்கியதால், “நான் கட்சியில் இருந்து ஒதுங்குகிறேன்” என்று அறிவித்த அ.தி.மு.க-வின் துணைப்பொதுச் செயலாளர் தினகரன், “அமைச்சர்கள் ஏதோ ஒரு பயத்தில் இருக்கிறார்கள். அதனால், அவர்கள் நேற்று ஒரு பேச்சு... இன்று வேறு முடிவு என்ற நிலைப்பாட்டை எடுக்கிறார்கள்” என்றார். 

‘அமைச்சர்களுக்கு இருக்கும் பயம்’ என்று தினகரன் அழுத்திச் சொன்னது, ‘ரெய்டு’ பயத்தைத்தான். மத்திய பி.ஜே.பி அரசு ஆரம்பித்த ‘ஆபரேஷன்’ ஏறத்தாழ வெற்றி அடைந்து விட்டது என்றே சொல்லலாம். இந்த வெற்றியை அடைவதற்காக, இதுவரை நடத்தப்பட்ட ரெய்டுகள், வழக்குகள் எல்லாம் இனி என்ன ஆகும் என்பது மிகப் பெரிய கேள்வியாக இருக்கிறது.

ஓ.பி.எஸ்-ஸுக்காக சேகர் ரெட்டி!

சேகர் ரெட்டி மற்றும் அவருடன் நிழல் மனிதர்களாக வலம்வந்த மணல் ராமச்சந்திரன், சர்வேயர் ரத்தினம் உள்ளிட்டவர்களின் வீடுகளில் ரெய்டு நடத்தப்பட்டது. அதில், சேகர் ரெட்டி இப்போதும் சிறையில் இருக்கிறார். வருமானவரித் துறை நடத்திய சோதனையின் அடிப்படையில் சி.பி.ஐ., அமலாக்கத் துறை என இரண்டு துறைகளும் சேகர் ரெட்டி மற்றும் அவரின் நண்பர்களை வளைத்துள்ளன. சேகர் ரெட்டி ஜாமீனுக்கு அமலாக்கத் துறை கடும் எதிர்ப்புத் தெரிவித்து வந்தது. சி.பி.ஐ தொடர்ந்த வழக்கில் கடந்த மாதம் ஜாமீன் பெற்ற சேகர் ரெட்டியை, அடுத்த இரண்டே நாட்களில் அமலாக்கத் துறை கைதுசெய்து சிறையில் அடைத்தது. மேலும், அவருடைய ஜாமீன் மனு விசாரணைக்கு வந்த போதெல்லாம், ஜாமீனுக்குக் கடும் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. 

சேகர் ரெட்டி விவகாரத்தில் சிக்கிய அசோக் ஜெயின், மஹாவீர் ஹிரானி ஆகியோர் வீடுகளில் கைப்பற்றப்பட்ட 10.25 கோடி ரூபாய் பணம், 6.5 கிலோ தங்கம் ஆகியவற்றை அமலாக்கத் துறை, கடந்த வாரம் முடக்கியது. விரைவில் உத்தரவு பிறப்பித்து, இவை பறிமுதல் செய்யப்பட்டு, அரசின் சொத்தாக அறிவிக்கப்படும். ஆனால், சேகர் ரெட்டியிடம் பிடிபட்ட 147 கோடி ரூபாய் பணமும், 178 கிலோ தங்கமும் இப்படி முடக்கி வைக்கப்பட வில்லை. 

இந்தச் சூழலில், இனிமேல் நிலைமை எப்படி இருக்கும் என்பது குறித்து வழக்கறிஞர்கள் சிலரிடம் பேசியபோது, “இனி, சேகர் ரெட்டியின் ஜாமீன் மனு விசாரணைக்கு வரும்போது, அரசுத் தரப்பில் இருந்து கடுமையான எதிர்ப்புகள் இருக்காது. அதற்கான சிக்னல் அரசுத் தரப்பில் இருந்து வரத் தொடங்கிவிட்டது” என்றனர். அமலாக்கத் துறை அதிகாரிகள் சிலரிடம் கேட்டபோது, “நாங்கள் வழக்கமான முறையில் வழக்கை நடத்துவோம். சேகர் ரெட்டி உள்ளிட்டவர்களைக் கடுமையாக நடத்துவதும், இயல்பாக நடத்துவதும் எங்கள் கையில் இல்லை. அது ஓ.பி.எஸ்-ஸுக்கும் டெல்லிக்கும் உள்ள உறவைப் பொறுத்தது” என்றனர். ஆக, சேகர் ரெட்டியின் முடிச்சு ஓ.பி.எஸ் கையில்தான் இருக்கிறது.

பி.ஜே.பி ஆபரேஷன் சக்சஸ்... உயிர் பிழைக்குமா வழக்குகள்?

தினகரனுக்காக அமைச்சர் விஜயபாஸ்கர்!

ஆர்.கே. நகர் தேர்தல் பரபரப்பு உச்சத்தில் இருந்த நேரத்தில், அமைச்சர் விஜயபாஸ்கரின் வீடுகள் மற்றும் தொழில் நிறுவனங்களில் அதிரடியாக ரெய்டு நடத்தப் பட்டது. அதில், ஏகப்பட்ட ஆவணங்கள் சிக்கின. அத்துடன், ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் தினகரனுக்கு ஆதரவாக வாக்களிக்க  பணப்பட்டுவாடா செய்ததற்கான ஆதாரங்களும் சிக்கின. அவற்றில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, திண்டுக்கல் சீனிவாசன், கடம்பூர் ராஜு, உடுமலை ராதாகிருஷ்ணன் உள்ளிட்டவர்கள் எவ்வளவு பணம் கொடுத்தார்கள் என்பது தொடர்பான கணக்கு வழக்குகளும் சிக்கியதாகச் சொல்லப்பட்டது. 
இந்த ரெய்டு நடந்து கொண்டிருந்தபோது அமைச்சர்கள் காமராஜ், கடம்பூர் ராஜு, உடுமலை ராதாகிருஷ்ணன், தமிழக அரசின் டெல்லிப் பிரதிநிதி தளவாய் சுந்தரம் ஆகியோர் வருமானவரித் துறை அதிகாரிகளைப் பணி செய்ய விடாமல் தடுத்ததாகவும் புகார் எழுந்தது. இது தொடர்பாக வருமானவரித் துறை அதிகாரிகள் புகார் அளித்தனர். இதையடுத்து, அவர்கள்மீது வழக்குப் பதிவு செய்யப் பட்டுள்ளது. கட்சியில் இருந்து தினகரன் ஒதுங்கிக் கொண்ட நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணியோடு அமைச்சர் விஜயபாஸ்கர் ஐக்கியமாகிவிட்டார். மற்ற அமைச்சர்களும் அதே நிலைப் பாட்டைத்தான் எடுத்துள்ளனர். அதனால், அ.தி.மு.க-வின் இரு அணிகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடக்கும் இந்த நேரத்தில், இந்த வழக்குகளில் எந்தச் சிக்கலும் இருக்காது. இந்தப் பேச்சு வார்த்தைகளில், எடப்பாடி அணியை டெல்லி ஆதரிக்கிறதா... ஓ.பி.எஸ் அணியை ஆதரிக்கிறதா... என்பதைப் பொறுத்தும், டெல்லி ஆதரிக்கும் அணியோடு இவர்கள் எவ்வளவு விசுவாசம் காட்டுகிறார்கள் என்பதைப் பொறுத்தும்தான், இந்த வழக்குகள் சிக்கலை ஏற்படுத்துமா என்பது தெரிய வரும்.

பி.ஜே.பி ஆபரேஷன் சக்சஸ்... உயிர் பிழைக்குமா வழக்குகள்?

எடப்பாடி, தங்கமணி, வேலுமணி!

தினகரனை ஒதுக்கிவிட்டு ஆட்சியை நடத்தும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணி, ஓ.பன்னீர்செல்வம் அணியோடு பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறது. இந்தப் பேச்சுவார்த்தையின்போது, தனக்கு முதல்வர் பதவி வேண்டும் என்பதில் ஓ.பன்னீர் செல்வம் கறார் காட்டுகிறார். ஆனால், முதல்வர் பதவியை விட்டுத்தர எடப்பாடி பழனிசாமி அணி தயாரில்லை. இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி வரும் 23-ம் தேதி டெல்லி செல்கிறார். அங்கு, ‘‘ஓ.பி.எஸ்-ஸுக்குப் பதவியை விட்டுக் கொடுங்கள்’’ என்று கட்டளை பிறப்பிக்கப்பட வாய்ப்பு உள்ளது. அப்படி ஓர் உத்தரவு வரும் சூழலில், எடப்பாடி அணி முரண்டு பிடித்தால், அவர்களைப் பணிய வைக்க மீண்டும் ரெய்டு அஸ்திரத்தை மத்திய அரசு கையில் எடுக்கலாம். அப்போது, மத்திய அரசின் முதல் டார்கெட் ஆக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இருக்கமாட்டார். அவருக்கு முன்பாக, அமைச்சர்கள் தங்கமணியும், வேலுமணியும்் சிக்குவார்கள். பிறகு, உடுமலை ராதா கிருஷ்ணன், கடம்பூர் ராஜு ஆகியோருக்குக் குறி வைக்கப் படும். அவர்களை வைத்து எடப்பாடி பழனிசாமியை வழிக்குக் கொண்டுவருவார்கள். 

சசிகலா, தினகரன் குடும்பத்தைக் கட்சியில் இருந்தும், ஆட்சியில் இருந்தும் வெளியேற்ற வேண்டும் என்பது மட்டுமே மத்திய அரசின் மறைமுகத் திட்டமாக இருந்தது. தற்போது, அது நிறைவேறி விட்டது. அதனால், இன்னும் சில நாள்களுக்கு ரெய்டுகள், வழக்குகள் தமிழகத்தில் இருந்து கொஞ்சம் தள்ளி இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. 

News2
News2

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a comment