Sunday, March 26, 2017

மிஸ்டர் கழுகு: மேடையில் ‘சின்னம்மா’ கட்... பேப்பரில் ‘அம்மா’ கட்..!

மிஸ்டர் கழுகு: மேடையில் ‘சின்னம்மா’ கட்... பேப்பரில் ‘அம்மா’ கட்..!

‘‘தினகரன் தனது அடுத்த நகர்வை ஆரம்பித்து விட்டார்” என்றபடி வந்து உட்கார்ந்தார் கழுகார்.

‘‘அடுத்த நகர்வா?” என்றோம்!

‘‘சசிகலாவையே ஒதுக்குவதுதான்” என்று அதிர்ச்சியைக் கொடுத்தார் கழுகார். ‘‘சசிகலாவை மொத்தமாகப் புறக்கணிக்கும் எண்ணத்துக்கு வந்துவிட்டார் தினகரன் என்பதையே அவரது நடவடிக்கைகள் காட்டுகின்றன. ஆர்.கே. நகர் தொகுதியில் போட்டியிடும் தினகரனுக்காக தண்டையார்பேட்டையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. மேடையில் ஜெயலலிதா, தினகரன் படங்கள் மட்டும்தான் இருந்தன. சசிகலா படம் இல்லை. சித்தியை இப்போதே ஒதுக்க ஆரம்பித்துவிட்டார் தினகரன்.”

‘‘தைரியம்தான்!”

‘‘இதில் என்ன தைரியம்? சித்தி சிறையில் இருக்கிறார். அவருக்காகப் பரிந்து பேசக் கட்சிக்குள்ளும் யாரும் இல்லை. பிறகென்ன... துள்ளிக் குதிக்க வேண்டியதுதானே? ‘அம்மா’ என்று பெரிதாகப் பெயர் அச்சடித்தார்களே தவிர, ‘சின்னம்மா’ என்று சின்னதாகக்கூட வைக்கவில்லை. சசிகலா படமும் இல்லை. மேடையில் பேசிய தினகரன், ஏதோ ஜெயலலிதாவால் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட வாரிசு போலவே பேசினார். வரிக்கு வரி அம்மா புராணம். ஒரே ஓர் இடத்தில்தான் ‘சின்னம்மா’ என்று போகிற போக்கில் சொன்னார். ‘1989-ல் இரட்டை இலை சின்னம் தொடர்பாக பிரச்னை வந்தபோது, வழக்கறிஞர்களை சந்திக்கச் சென்ற அம்மா, என்னையும் அழைத்துச் சென்றார். அப்போதே எனக்குப் பயிற்சி கொடுத்துவிட்டார். புரட்சித் தலைவர் மறைந்தபிறகு மூன்று ஆண்டுகள் புரட்சித் தலைவி தனக்குப் பாதுகாவலராக என்னைத்தான் வைத்திருந்தார். 1999 நாடாளுமன்றத் தேர்தலில் முதன்முதலாக என்னை அம்மா நேரடியாக அரசியலுக்குக் கொண்டு வந்தார். இந்தத் தேர்தலில் அம்மா அவர்களின் ஆசியோடு என்னை வேட்பாளராக நிறுத்தி இருக்கிறீர்கள். எனக்குத் தெரிந்து இந்த 30 ஆண்டுகளில் பல்வேறு சரித்திரங்கள் திரும்பி இருக்கின்றன. எனது அரசியல் அனுபவத்தில் இதைக் கூறுகிறேன்’ என்று ஒரே அம்மா புராணம்தான்!”

மிஸ்டர் கழுகு: மேடையில் ‘சின்னம்மா’ கட்... பேப்பரில் ‘அம்மா’ கட்..!

‘‘சொல்லும்!”

‘‘இரட்டை இலை முடக்கப்பட்ட பிறகு அளித்த பேட்டியிலும் அதே அம்மா புராணம்தான். ‘நான் அம்மாவின் மாணவன். அம்மாவின் அதே துணிவு, விடாமுயற்சி, தன்னம்பிக்கையோடு கழகத்தை நிலைநிறுத்திக் காட்டுவேன். எந்த சின்னத்தில் போட்டியிட்டாலும் அம்மாவின் ஆசியோடு வெற்றி பெறுவேன். யார் தலையீடு இருந்தாலும் கவலை இல்லை என்று சொன்னார் தினகரன். சின்னம்மா பெயரைச் சொல்லவே இல்லை. பொதுவாக, அ.தி.மு.க-வின் அதிகாரபூர்வ நாளேடான ‘நமது எம்.ஜி.ஆர்’, எல்லா பக்கங்களிலும் ஜெயலலிதா படங்களைத் தாங்கி வரும். மந்திரிகள் அறிவிப்பாக இருந்தாலும், அதிலும் ஜெயலலிதா படம்தான் இருக்கும். சசிகலா பொதுச்செயலாளர் ஆக்கப்பட்ட பிறகு அவரது படங்கள் இடம்பிடிக்க ஆரம்பித்தன. ஆனால், அப்போதும் பல இடங்களில் ஜெயலலிதா படமே இருக்கும். ஆனால், தினகரன் வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முந்தைய நாள் ‘நமது எம்.ஜி.ஆர்’ நாளேட்டின் ஒவ்வொரு பக்கத்திலும் தினகரன்தான் இருந்தார். அவர் படங்கள்தான் பெரிது பெரிதாகப் பிரசுரிக்கப்பட்டு இருந்தன.’’

‘‘அப்படியானால் ‘நமது எம்.ஜி.ஆர்’... ‘நமது தினகரன்’ ஆகிவிட்டதா?”

‘‘அப்படித்தான் சொல்லத் தோன்றுகிறது. ‘நமது எம்.ஜி.ஆர்’ ஆசிரியரான மருது அழகுராஜ், ‘சித்ரகுப்தன்’ என்ற பெயரில் தினமும் கவிதை எழுதி வருகிறார். அரசியல் எதிரிகளைக் கவிதையால் கடுமையாகப் பதம் பார்ப்பார். ‘இடைவேளை முடியும்! இலைவேளை தொடங்கும்!’ என்று அவர் ஒரு கவிதை எழுதி இருக்கிறார். கவிதையின் உள்ளடக்கம், ‘மோடியின் சதிக்கு பன்னீர் ஆட்கள் பலியாகிவிட்டார்கள், இதில் வெல்வோம்’ என்பது. நான் சொல்ல வந்தது அதுவல்ல. அந்தக் கவிதைக்கு ஒரு படம் போடப்பட்டுள்ளது. அதில் இரண்டு பேர் மட்டும்தான் இருக்கிறார்கள்!”

‘‘ஜெயலலிதாவும் தினகரனுமா?”

‘‘அதுதான் இல்லை! எம்.ஜி.ஆரும் தினகரனும் மட்டும் இருக்கிறார்கள். மக்கள் கூட்டத்தைப் பார்த்து எம்.ஜி.ஆர் சிரிக்கிறார். தினகரன் வணங்குகிறார். இப்படி ஒரு படத்தை வைத்துள்ளார்கள்...”

‘‘இவை எல்லாம் தினகரனுக்குத் தெரியாமல் நடந்திருக்குமா?”

‘‘அப்படி ஒருவர் நம்பினால், அவர் ‘பச்சை மண்’ என்றுதான் சொல்ல வேண்டும். ‘திட்டமிட்டு ஜெயலலிதாவை மறைத்துள்ளார்கள். திட்டமிட்டு சசிகலாவை மறைக்கிறார்கள்’ என்றே அ.தி.மு.க-வினர் சந்தேகப்படுகிறார்கள். ஆர்.கே. நகர் தேர்தல் செயல்வீரர்கள் கூட்ட மேடையில் சசிகலா படம் வைக்கப்படாதது மன்னார்குடி பிரமுகர்கள் சிலரின் கண்களை உறுத்தியது. அவர்கள், தினகரனிடம் இதுபற்றி நேரடியாகக் கேட்டதாகச் சொல்லப்படுகிறது. ‘எனக்குத் தெரியாமல் நடந்துவிட்டது’ என்று தினகரன் சொன்னாராம். ‘ஐந்தாறு தடவை டிசைனை சரி பார்த்த தினகரன் இப்படிச் சொல்வதை நம்ப முடியவில்லை’ என்று மன்னார்குடி ஆட்கள் சொல்கிறார்கள்.”

‘‘மன்னார்குடி என்றால் அவர்கள் திவாகரன் ஆட்களாக இருக்கலாம் அல்லவா?”

மிஸ்டர் கழுகு: மேடையில் ‘சின்னம்மா’ கட்... பேப்பரில் ‘அம்மா’ கட்..!

‘‘திவாகரன் - தினகரன் மோதல், நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. ‘நமது குடும்பத்தைச் சேர்ந்த அனைவரையும் தினகரன் ஒதுக்குகிறார்’ என்று சசிகலா வரை புகார் போயுள்ளது. திவாகரனையும் தினகரனையும் நேரில் அழைத்துச் சமாதானம் செய்ய, அல்லது கண்டிக்க சசிகலா நினைக்கிறார். எப்போது வேண்டுமானாலும் இவர்கள் இருவரும் பெங்களூரு செல்லலாம். போய் திட்டு வாங்கிவிட்டு வந்து, ‘சின்னம்மாவிடம் ஆசி வாங்கப் போனேன்’ என்றும் சொல்லலாம். சாமர்த்தியமாக, ‘எல்லாமே நான்தான்.  சசிகலாவுக்குக்கூட எந்த அதிகாரமும் இல்லை’ என்று தினகரன் காட்ட ஆரம்பித்துவிட்டார்.”

‘‘முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆட்கள் அமைதியாக இருக்கிறார்களா?”

‘‘தினகரனின் ஒவ்வோர் அசைவையும் எடப்பாடி ஆட்களும் கொங்கு வட்டாரத்து அமைச்சர்களும், அந்த வட்டாரத்து அ.தி.மு.க பிரமுகர்களும் உன்னிப்பாகக் கவனித்து வருகிறார்கள். ஆர்.கே. நகர் இடைத் தேர்தலுக்காக 152 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழு அமைத்து இருக்கிறார்கள். எடப்பாடி பழனிசாமி, இந்தப் பட்டியலில் நான்காவது இடத்தில் இருக்கிறார். ‘முதல்வர் என்பதற்காக அவருக்கு எங்கும் முதலிடம் கொடுத்துவிடக் கூடாது’ என்பதில் தெளிவாக இருக்கிறார் தினகரன். தேர்தல் பணிமனைத் திறப்பு விழாவில் எடப்பாடி கலந்து கொண்டார். பொதுவாக, முதலமைச்சர் மேடையில் இருந்தால், அவரது பெயரைத்தான் முதலில் சொல்வார்கள். ஆனால் வட சென்னை மாவட்டச் செயலாளர் வெற்றிவேல், ஆர்.கே. நகர் பகுதிச் செயலாளர் சந்தானம், அமைச்சர் ஜெயக்குமார், வெங்கடேஷ்பாபு    எம்.பி ஆகியோரின் பெயர்களைச் சொல்லிவிட்டு, அதன் பிறகுதான் ‘மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் என் அருமைச் சகோதரர் எடப்பாடியார் அவர்களே’ என்று சொன்னார் தினகரன். ‘முதலமைச்சர் பெயரைச் சொல்லிவிட்டுத்தான் மற்றவர்களின் பெயர்களைச் சொல்லியிருக்க வேண்டும்’ என்று கட்சித் தொண்டர்கள் பேசிக்கொண்டார்கள். ‘ஜெயித்தால் தினகரன் முதலமைச்சர் ஆகிவிடுவார்’ என்று பரவியிருப்பதால் அதற்கு பதில் சொல்லும் விதமாக, ‘நமது முதலமைச்சர் எடப்பாடியார் தலைமையிலே இயங்கும் அரசு, அம்மா அவர்கள் விட்டுச் சென்ற பணிகளை நிறைவேற்றத்தான் என்னை ஆட்சி மன்றக் குழுவினர், அம்மாவின் பிரதிநிதியாக வேட்பாளராக நிறுத்தி இருக்கிறார்கள்’ என்று சுற்றி வளைத்து எதையோ சொல்லப்போய், எடப்பாடிக்குப் பதிலும் சொன்னார் தினகரன். இந்தக் கூட்டத்தில் இன்னோர் அதிர்ச்சிகரமான நிகழ்வு என்னவென்றால், தமிழ்நாட்டின் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசி முடித்தபிறகுதான் தினகரன் பேசி இருக்கிறார். முதலமைச்சரை விட துணைப்பொதுச்செயலாளர் என்ற அங்கீகாரம் இல்லாத பதவி பெரிதாகிவிட்டது!”

மிஸ்டர் கழுகு: மேடையில் ‘சின்னம்மா’ கட்... பேப்பரில் ‘அம்மா’ கட்..!

‘‘பதவி பெரிதோ, இல்லையோ, அந்தப் பதவியில் இருக்கும் தினகரன் பெரிய ஆள் அல்லவா? இது எங்கே போய் நிற்குமோ?”

‘‘தெரியவில்லை! பார்ப்போம்” என்ற கழுகார், தமிழக சட்டமன்றத்தில் சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லாத் தீர்மானம் ஓட்டெடுப்புக்கு வந்த விஷயத்தில் நுழைந்தார். 

‘‘எடப்பாடி பழனிசாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்த பிப்ரவரி 18-ம் தேதி, தமிழக சட்டசபையில் கொந்தளிப்பு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து சபாநாயகர் தனபால் மீது நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வருவதற்கான கடிதத்தை தி.மு.க சார்பில் சேகர்பாபு, தாயகம் கவி ஆகிய எம்.எல்.ஏ-க்கள் சட்டசபை செயலாளரிடம் கொடுத்தார்கள். அதன் நகல் சபாநாயருக்கும் தரப்பட்டது. உடனே அ.தி.மு.க உறுப்பினர் வெற்றிவேல் ஒரு புகார் கொடுத்தார். ‘சபை மாண்பைக் கெடுத்ததற்தாக தி.மு.க-வின் ஏழு எம்.எல்.ஏ-க்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்பது அந்தப் புகார். இதைத் தொடர்ந்து, இந்த ஏழு பேருக்கும் உரிமை மீறல் குழு நோட்டீஸ் அனுப்பியது. பட்ஜெட் தாக்கல் செய்வதற்குமுன் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் எழுந்து, ‘சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொடுத்துள்ளேன். அதனை உடனடியாக எடுத்துக்கொள்ள வேண்டும்’ என்றார். ‘இந்தக் கூட்டத்தொடரின்போதே அதனை நான் எடுத்துக்கொள்வேன். இன்று பட்ஜெட் தாக்கல் செய்ய ஒத்துழையுங்கள்’ என்றார் தனபால். சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொடுத்தால் 15 நாட்களுக்குள் அதனை எடுக்க வேண்டும். அதனால் ஸ்டாலின் அவசரப்படுத்தினார்!”

மிஸ்டர் கழுகு: மேடையில் ‘சின்னம்மா’ கட்... பேப்பரில் ‘அம்மா’ கட்..!

‘‘ஓஹோ!”

‘‘கடந்த 23-ம் தேதி, சபாநாயகர் மீதான நம்பிக்கை இல்லாத் தீர்மானம் எடுத்துக் கொள்ளப்பட்டது. ‘சட்டசபையில் நடந்த சம்பவம் மட்டும் இதற்குக் காரணம் அல்ல. ஜெயலலிதா என்று பெயரைச் சொல்லவே விடமாட்டேன் என்கிறார்கள். எதைப் பேசினாலும் சபைக்குறிப்பில் இருந்து நீக்குகிறார். அதற்காகத்தான் இப்படி ஒரு தீர்மானம் கொண்டு வரபோகிறோம். இது தோற்கும் என்று தெரியும். ஆனாலும் ஆளும்கட்சியை பயமுறுத்தவே இது’ என்று தி.மு.க-வினர் சொன்னார்கள். 23-ம் தேதி கேள்வி நேரம் முடிந்ததும் சபாநாயகர் தனபாலே, இந்த தீர்மானத்தைப் பற்றிப் பேச ஆரம்பித்தார். தன்னைப் பற்றி ஜெயலலிதா சொன்ன விஷயங்களை சுட்டிக் காட்டிய தனபால், ‘நான் துன்பத்தில் இருக்கும் நேரம் என்றால் இதுதான். எனது துரதிர்ஷ்டமான நேரம் இது’ என்று சொல்லி, தன் ஆசனத்தை விட்டு இறங்கினார். துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், சபாநாயகர் இருக்கையில் அமர்ந்து சபையை நடத்தினார். தீர்மானத்தை முன்மொழிந்து பேசினார் ஸ்டாலின். ‘தனபால் மீது தனிப்பட்ட கோபம் இல்லை. சபாநாயகர் நடுநிலையாக இல்லை. அதனால்தான் தீர்மானத்தைக் கொண்டு வருகிறோம்’ என்றார். காங்கிரஸ் கட்சியும் இந்தத் தீர்மானத்தை ஆதரித்தது. முதலில், குரல் வாக்கெடுப்பு நடந்தது. அதில் தீர்மானம் தோல்வி அடைந்தது. இரண்டாவதாக, ‘எண்ணிக்கை அடிப்படையில் வாக்கெடுப்பு வேண்டும்’ என்று ஸ்டாலின் கேட்டார். தீர்மானத்துக்கு ஆதரவாக 97 பேரும், எதிர்ப்பாக 122 பேரும் இருந்தார்கள். ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் சபையைவிட்டு எப்போது போனார்கள் என்பதே தெரியாதது மாதிரி சத்தமில்லாமல் கிளம்பிவிட்டார்கள். ஆதரித்தார்களா, எதிர்த்தார்களா என்பதே பதிவாகவில்லை. ஆனால், ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரித்த மயிலாப்பூர் எம்.எல்.ஏ நடராஜ், தனபாலுக்கு ஆதரவாக வாக்களித்தார். தீர்மானத்தைப் பன்னீர் ஆட்கள் ஆதரிப்பார்கள் என்று ஸ்டாலின் நினைத்தார். தீர்மானத்தை ஆதரிக்க வேண்டாம் என்று பன்னீர் ஆட்களிடம் தனபால் பேசியதாகவும் சொல்கிறார்கள். ‘அம்மாவின் ஆட்சிக்கு எதிராகச் செயல்படுகிறோம் என்று இருக்க வேண்டாம். அதே நேரம், தி.மு.க-வுக்கு ஆதரவாக இருக்கிறோம் என்ற தோற்றமும் வந்துவிடக்கூடாது’ எனப் பன்னீர் கருதியதாகவும் சொல்கிறார்கள்” என்ற கழுகார், ‘விர்’ரெனப் பறந்தார்.

News2
News2

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a comment