Monday, February 06, 2017

கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!

 ச.ந.தர்மலிங்கம், சத்தியமங்கலம்.

? மாணவர்களை, இளைஞர்களை கண்மூடித்தனமாகக் காவல்துறையினர் தாக்கியதற்கு முதலமைச்சர் பன்னீர்செல்வம் என்ன பதில் சொல்லப் போகிறார்?

! நடந்த வன்முறைகள் பற்றி விசாரணை நடத்த நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கிறார் என்றால், அநீதி நடந்துள்ளது என்றுதானே அர்த்தம்.

சட்டம் - ஒழுங்கைக் காப்பாற்ற வேண்டிய காவலர்களே தீ வைக்கும் காட்சிகளைப் பார்த்து அவர்கள்மீது நடவடிக்கை உறுதி என்றும் சொல்லி இருக்கிறார். போராட்டக் களத்தில் கைதான 36 மாணவர்களை ஜாமீனில் விடுதலை செய்துள்ளார். இதையெல்லாம் பார்க்கும்போது, ‘ஜல்லிக்கட்டுப் போராட்டத்தை தமிழகக் காவல்துறை சரியாகக் கையாளவில்லை’ என்பதை முதல்வரே ஒப்புக்கொள்கிறார் என்று தெரிகிறது.

மேலும், பலப்பிரயோகம் இல்லாமல் கூட்டத்தைக் கலைத்த திருச்சி மாநகரக் காவல் துறை துணை கமிஷனர் மயில்வாகனனை அழைத்துப் பாராட்டி உள்ளார் முதல்வர். இவர் ஏன் சென்னை ஆணையர் ஜார்ஜ், கூடுதல் கமிஷனர்கள் சேஷசாயி, சங்கர் ஆகியோரை அழைத்துப் பாராட்டவில்லை? 
அவருக்கே உண்மை தெரிகிறது என்றுதானே அர்த்தம்!

கோ.குப்புசுவாமி, சங்கராபுரம். 

? அ.தி.மு.க ஆட்சி இன்னும் நான்கு ஆண்டுகள் தாக்குப்பிடிக்குமா?

! சென்னை மாநகர போலீஸ் நடந்துகொண்டதைப் போல நான்கு சம்பவங்கள் நடந்தால் இந்த ஆட்சியின் வாழ்நாள் குறுகிய காலம்தான்.

  எம்.சம்பத், வேலாயுதம்பாளையம். 

? ஜெயலலிதா மறைவுக்கான இரங்கல் தீர்மானத்தில் அவரை வெகுவாகப் பாராட்டி உள்ளாரே ஸ்டாலின்?

! அரசியல் நாகரிகம்தான். இதுபோன்ற நிலைப்பாடுகள் நிச்சயம் வரவேற்கப்பட வேண்டியவை. கருணாநிதி மருத்துவமனையில் இருந்தபோது தம்பிதுரையும் ஜெயக்குமாரும் சென்று பார்த்தார்கள். அரசியல் என்பது பங்காளிச் சண்டை ஆகக்கூடாது... பரஸ்பர நட்பு பாராட்ட வேண்டியது.

  ஜெவி நண்பேன்டா, கருப்பம்புலம்.

? புதுவை கவர்னருக்கு எதிரான போர்க்கொடிக்கு விடை கிடைக்குமா?

! அங்கு நடப்பது காங்கிரஸ் அரசு. கவர்னராக இருப்பவர் பி.ஜே.பி-யைச் சேர்ந்தவர். இந்த முரண்பாடுதான் தினமும் வெடிக்கிறது. எல்லாவற்றுக்கும் சொந்தக் கருத்து உள்ள கிரண் பேடி கவர்னராக இருக்கிறார். சரியோ, தவறோ... தான் நினைத்ததைச் சொல்லும், செய்யும் மனிதராக முதல்வர் நாராயணசாமி இருக்கிறார். மத்தியில் காங்கிரஸ் ஆட்சி இருந்தபோது நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சராக இருந்தவர் நாராயணசாமி. அப்போதே அவருக்கும் பி.ஜே.பி-க்கும் நிறைய முட்டல் மோதல் உண்டு. இந்த அரசியல் மோதல்தான் புதுவையில் நடக்கிறது.

கழுகார் பதில்கள்!

  செல்வராஜ் சித்தப்பா, பூம்புகார். 

? ராம மோகன ராவ் செய்த ஊழலுக்கு தண்டனை கிடையாதா?

! உலகம் பார்த்த ஓரங்க நாடகங்களில் அதுவும் ஒன்று. ஒரு மாநிலத்தின் தலைமைச் செயலாளர் வீட்டில் ரெய்டு நடத்தி, ஒரு மாநிலத்தின் தலைமைச் செயலகத்திலும் புகுந்து புறப்பட்டது மத்திய அரசு. அதன்பிறகு எந்த மேல் நடவடிக்கையும் இல்லை.

இது பரவாயில்லை... பிரச்னைக்குரிய ராம மோகன ராவ், மத்திய அரசுக்கு சவால்விடும் பேட்டியைக் கொடுத்தார். ‘‘ஜெயலலிதா இருந்திருந்தால் இப்படி நடந்துகொள்வீர்களா? உங்களுக்கு தைரியம் இருந்திருக்குமா?’’ என்று கேட்டார். அதன்பிறகும் மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ‘‘இதை தட்டிக் கேட்கும் தைரியம் மாநில அரசுக்கு இல்லை’’ என்றும் அந்த அதிகாரி சொன்னார். மாநில அரசும் அவரை ஒன்றும் செய்யவில்லை. இந்திய ஆட்சிப் பணியில் இருக்கும் ஓர் அதிகாரி இரண்டு அரசுகளுக்கும் பகிரங்கமாக சவால்விட்ட பிறகும் இரண்டு அரசுகளும் சும்மா இருக்கின்றன. யாரைப் பார்த்து யார் பயப்படுகிறார்கள் என்றே தெரியவில்லை!

எஸ்.பூவேந்த அரசு, சின்னதாராபுரம்.

? கவர்னர் உரையை தி.மு.க புறக்கணித்தது ஏற்றுக்கொள்ள முடியாததுதானே?

! கவர்னர் என்ன சொல்கிறார் என்பதை கேட்டுவிட்டு எதிர்ப்புத் தெரிவிப்பதே சரியான அணுகுமுறை. கவர்னர் உரை என்பது அரசாங்கத்தின் ஒட்டுமொத்த கொள்கை நிலைப்பாடு. அதை தி.மு.க புறக்கணித்திருக்கக்கூடாது. கவர்னர் உரை மீது ஒருவார காலம் நடக்கும் விவாதத்தில் தங்களது எதிர்ப்பைப் பதிவுசெய்ய வேண்டியதுதானே?

 சீர்காழி சாமா, ஸ்ரீரங்கம். 

? சென்னை மெரினா?

! முன்பு மக்களை மகிழ்ச்சிப்படுத்தியது. இப்போது பீதிக்குள்ளாக்குகிறது!

சுப்பு காசி தம்பி, கருப்பம்புலம். 

? தீபாவிடம் வேகம் காணப்படுகிறதா?

! பிப்ரவரி 24-ம் தேதி ஜெயலலிதா பிறந்த நாளின்போது தனது புதுக்கட்சி முடிவை தீபா அறிவிக்க இருக்கிறார். ‘ஜெயலலிதா மரணத்தில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை’ என்று தீபா சொன்னதும், ‘தீபா எங்கள் வீட்டுப் பெண். அவர் விரைவில் எங்களோடு வந்துவிடுவார்’ என்று நடராசன் சொல்லி இருப்பதும் தீபாவின் அரசியல் பிரவேசத்தைக் குறைப்பது போல் காட்டுகின்றன.

கழுகார் பதில்கள்!

நெல்லை தேவன், தூத்துக்குடி.

? ஜல்லிக்கட்டுக்கான தடையை எதிர்த்து மாணவர்கள் நடத்திய அமைதிப் போராட்டம் இப்படி வன்முறையாக முடிக்கப்பட்டுள்ளதே... யார் காரணம்?

! திருச்சியில் அமைதியாகப் போராட்டம் முடித்துவைக்கப்பட்டதற்குக் காரணம், போலீஸ். சென்னையில் அமைதியாக நடந்த போராட்டத்தில் வன்முறை விதைக்கப்பட்டதற்குக் காரணம், போலீஸ். ‘எங்களது வழக்கறிஞரை அழைத்துள்ளோம். அவர் வந்ததும் ஆலோசனை நடத்திவிட்டுக் கலைந்துவிடுகிறோம்’ என்றுதான் இரண்டு மணி நேரம் அவகாசம் கேட்டார்கள் சென்னை இளைஞர்கள். கால அவகாசம் கொடுக்காமல்... கால அவகாசம் தருவார்களா, இல்லையா என்றே சொல்லாமல் கூட்டத்தைக் கலைக்க முயற்சித்தார்கள். சாலையை நோக்கி பாதி பேர் ஓடினார்கள். கடலை நோக்கி மீதி பேர் போனார்கள். எல்லாப் பக்கமும் போலீஸ். 

போராட்டக்காரர்களுக்கு அடைக்கலம் கொடுத்ததாக மீனவர் குப்பம் மீது போலீஸ் முதலில் கல் வீசியது. திருப்பி மீனவர்கள் வீசினார்கள். அமைதிப் போராட்டம் இப்படித்தான் வன்முறையாக மாறியது.

கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி:

கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன்,  757, அண்ணா சாலை, சென்னை- 600 002
kalugu@vikatan.com  என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!

News2
News2

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a comment