Monday, February 06, 2017

உள்ளாட்சித் தேர்தல்... அ.தி.மு.க காய்ச்சல்!

உள்ளாட்சித் தேர்தல்... அ.தி.மு.க காய்ச்சல்!

ஜெயலலிதா மரணம் முதல் ஜல்லிக்கட்டு எழுச்சி வரை

‘‘ஏப்ரல் இறுதிக்குள் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும்’’ - சென்னை உயர் நீதிமன்றத்தில் மாநிலத் தேர்தல் ஆணையம் தகவல்.

‘‘ஏப்ரல் மாதம் உள்ளாட்சித் தேர்தல் நடத்த வாய்ப்பு இல்லை’’ - இது சட்டமன்றம்.

இந்த இரண்டுக்கும் இடையே இருந்தது மூன்று நாட்கள்தான். அதற்குள் என்ன நடந்தது? 

உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான வழக்கு உயர் நீதிமன்றத்தில் நடந்துவருகிறது. ஜனவரி 27-ம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ‘ஏப்ரல் இறுதிக்குள் தேர்தல் நடத்தப்படும்’ என மாநிலத் தேர்தல் ஆணையம் சொன்னது.

உள்ளாட்சித் தேர்தலை உயர் நீதிமன்றம் கடந்த அக்டோபரில் ரத்து செய்ததால் உள்ளாட்சி நிர்வாகத்தை நிர்வாகிக்க தனி அதிகாரிகள் நியமிக்க அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்தப் பதவிக்காலத்தை ஜூன் 30-ம் தேதி வரை நீட்டித்து சட்ட முன்வடிவு ஜனவரி 30-ம் தேதி சட்டசபையில் கொண்டு வரப்பட்டது. ‘வாக்காளர் இறுதிப் பட்டியல் ஜனவரியில்தான் கிடைக்கும்; 2017 மார்ச் 2-ம் தேதி முதல் ஏப்ரல் வரையில் பள்ளி மாணவர்களுக்கு தேர்வு நடைபெறும்; ஏப்ரலில் விடைத்தாள்கள் திருத்தப்படும்; வாக்குப்பதிவு அலுவலர்கள் தேர்வுப் பணியினை பார்த்துக் கொண்டிருப்பர். பள்ளிக் கட்டடங்கள் வாக்குச்சாவடியாக பயன்படுத்தப்படுகின்றன; எனவே, இவையெல்லாம் முடிந்தபிறகே தேர்தல் நடத்தமுடியும்’ என சட்டமன்றத்தில் சொல்லியிருக்கிறார்கள். 

அதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு ‘ஏப்ரலில் தேர்தல் நடத்தத் திட்டமிட்டுள்ளோம்’ என நீதிமன்றத்தில் சொன்னவர்கள், அதற்குள் பல்டி அடித்ததற்குக் காரணம் என்ன? 

ஜெயலலிதா அப்போலோவில் இருந்தபோதுதான் அவசர அவசரமாக உள்ளாட்சித் தேர்தலை அறிவித்தார்கள். ஜெயலலிதாவின் உடல்நிலை காரணமாக எழுந்த அனுதாபத்தை வைத்து வெற்றிபெற நினைத்தனர். ஆனால், தேர்தலுக்குத் தடை விதித்தது உயர் நீதிமன்றம். இதற்கிடையே ஜெயலலிதா மரணம் அடைந்துவிட்டார். அவர் மரணத்தில் மர்மம், செல்லாக்காசு அறிவிப்பு, ஏ.டி.எம். மற்றும் வங்கி வாசல்களில் மக்கள் அவதி, ஜெயலலிதா உடலைச் சுற்றி மன்னார்குடியினர் அரண், அவசர அவசரமாக ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் மந்திரிசபை நள்ளிரவில் பதவியேற்பு, அ.தி.மு.க-வின் அவசர பொதுக்குழுவில் சசிகலா பொதுச்செயலாளராக நியமனம், ஜல்லிக்கட்டு போராட்டத்தில் இளைஞர்கள் எழுச்சி, போராட்டத்தை ஒடுக்க போலீஸ் கையாண்ட முறை, அதைத் தொடர்ந்து ஏற்பட்ட வன்முறை  எனப் பல சம்பவங்கள் அரங்கேறிவிட்டன. இவை அனைத்தும் ஆளும் கட்சிக்கு எதிரான விஷயங்கள். அதனால், இப்போது தேர்தல் நடத்தினால் தேறுவது கஷ்டம் என நினைத்துத்தான் தேர்தலைத் தள்ளி வைத்திருக்கிறார்கள். ‘ஏப்ரலில் தேர்வுகள் நடக்கும். அதனால் தேர்தலை நடத்த முடியாது’ என சொல்லும் காரணமும் அப்பட்டமான பொய். 2011 சட்டமன்ற தேர்தலே ஏப்ரல் 13-ம் தேதிதான் நடத்தப்பட்டது. சட்டசபைத் தேர்தலை நடத்த முடியும்போது உள்ளாட்சித் தேர்தலை நடத்த முடியாதா?

உள்ளாட்சித் தேர்தல்... அ.தி.மு.க காய்ச்சல்!

உள்ளாட்சித் தேர்தலுக்கு தடைவிதித்த நீதிபதி கிருபாகரன், ‘வேட்பாளர்களின் குற்றப்பின்னணி குறித்து வேட்புமனுவில் குறிப்பிட வேண்டும். குற்றப்பின்னணி உள்ளவர்கள் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடக் கூடாது’ எனவும் தீர்ப்பில் சொல்லியிருந்தார். இதற்கிடையே இன்னொரு வழக்கு, நீதிபதி கிருபாகரன் முன்பு வந்தது. ‘சென்னை அ.தி.மு.க கவுன்சிலர் அண்ணாமலைக்கு சொந்தமாக 12 வீடுகள் இருந்தும் அதற்கு சொத்து வரியாக சொற்பத் தொகை நிர்ணயம் செய்யப் பட்டுள்ளது’ எனச் சொல்லி பொன். தங்கவேலு என்பவர் வழக்கு போட்டார். அந்த வீடுகளின் போட்டோக்களை பார்த்து அதிர்ச்சியடைந்த நீதிபதி, கவுன்சிலர் பதவிக்கு அண்ணாமலை போட்டியிட்டபோது தாக்கல் செய்த வேட்புமனுவை வரவழைத்து சரி பார்த்தார். அதில் ‘அசையா சொத்துகள் எதுவும் இல்லை’ என அண்ணாமலை சொல்லியிருந்தார். பிறகு இந்த வழக்கை தலைமை நீதிபதி தலைமையிலான பென்ச்சுக்கு கிருபாகரன் பரிந்துரை செய்தார். ‘அரசு புறம்போக்கு நிலத்தில், பல வீடுகளை அண்ணாமலை கட்டியிருக்கிறார். பட்டா நிலத்தில் அவர் கட்டியுள்ள சில வீடுகளுக்கு முறையான கட்டட திட்ட அனுமதி பெறவில்லை. இதுகுறித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது’ என நீதிமன்றத்தில் சொன்னது சென்னை மாநகராட்சி. ‘சட்டவிரோதமாக கட்டப்பட்ட கட்டடங்கள் அகற்றப்பட வேண்டும். வேட்பு மனுவில் தவறான தகவல்களை அண்ணாமலை அளித்துள்ளார் என்ற குற்றச்சாட்டு நிரூபணமாகி யுள்ளது. இதுகுறித்து தகுந்த நடவடிக்கைகளை சட்டப்படி அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும். வருமான வரித்துறைக்கு தகவல் மறக்கப்பட்டதா என்பதை சரி பார்க்க வேண்டும்.’ எனச் சொல்லி வருமானவரித்துறை விசாரிக்க உத்தரவிட்டது நீதிமன்றம்.

உள்ளாட்சித் தேர்தலில் வேட்பாளர்கள் தாக்கல் செய்யும் சொத்துப் பட்டியலானது, சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தலைப்போல வெளிப்படையாக வெளியிடப்படுவது கிடையாது. இதனாலேயே வேட்பாளர்கள் பற்றிய விவரம் வாக்காளர்களுக்குத் தெரிவது கிடையாது. வேட்பாளர்கள் பற்றிய விஷயங்கள் வாக்காளர்களுக்குத் தெரிய வேண்டும் என்பதற்காகதான் வேட்புமனுவோடு சொத்துப்பட்டியலையும் வழக்கு விவரங்களையும் வெளியிட வேண்டும் என்கிற உத்தரவை சுப்ரீம் கோர்ட் பிறப்பித்தது. அதன்பிறகுதான், அது அமலுக்கு வந்தது. ஆனால், உள்ளாட்சித் தேர்தலில் மட்டுமே அது பின்பற்றப்படவில்லை. அதனால் கிரிமினல் பின்னணி கொண்டவர்கள் பதவிக்கு வந்துவிடுகிறார்கள். இப்படி எல்லா பக்கமும் இடி விழுந்ததால்தான் தேர்தலை எதிர்கொள்ளத் தயங்குகிறது அ.தி.மு.க.

- எஸ்.ஏ.எம்.பரக்கத் அலி

News2
News2

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a comment