Monday, February 06, 2017

மணல் யாருக்கு? - மன்னார்குடி குடும்பத்துக்குள் ஜல்லிக்கட்டு!

மணல் யாருக்கு? - மன்னார்குடி குடும்பத்துக்குள் ஜல்லிக்கட்டு!

ண்ணைப் பொன்னாக்கும் வாய்ப்பை யாருக்கு வழங்கலாம் என்பதற்கான பரீட்சையை நடத்திக்கொண்டிருக்கிறது மன்னார்குடி. சசிகலாவின் உறவுகள் ஒவ்வொருவரும் தங்களுக்குத் தோதான ஆட்களை இன்னும் தேடிக்கொண்டிருக்கிறார்கள்.

மணல் யாருக்கு? - மன்னார்குடி குடும்பத்துக்குள் ஜல்லிக்கட்டு!

இதுவரை மணல் குவாரிகள் மூலம் கொட்டிய கரன்சி கட்டுகளில் ஒரு பகுதி மட்டுமே மன்னார்குடி பக்கம் சென்று கொண்டிருந்தது. ஜெயலலிதா மறைவு, மணல் பிசினஸைத் தன் கையில் வைத்திருந்த சேகர் ரெட்டி கைது என அடுத்தடுத்த நிகழ்வுகளால் தமிழகத்தின் மணல் குவாரிகள் தற்காலிகமாக செயல் இழந்துள்ளன. 

‘ஆறுமுகசாமி, படிக்காசு, சேகர் ரெட்டி வரிசையில் அடுத்தது யார்’ என்பதுதான் இப்போதைக்கு மில்லியன் டாலர் கேள்வி. இதற்காகப் பலரும் போயஸ் கார்டனிலும் மன்னார்குடி சொந்தங்களின் வீட்டு வாசல்களிலும் முட்டிமோதிக் கொண்டிருக்கின்றனர். மணல் குவாரிகளை தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள வேண்டும் என சசிகலாவின் தம்பி திவாகரன் ஆர்வம்காட்டி வருவதாகக் கூறப்படுகிறது. இதற்காக திவாகரன் கைகாட்டும் நபர், மணமேல்குடி கார்த்திகேயன். 

யார் இந்த கார்த்திகேயன்?

மணல் பிசினஸ் புள்ளிகளிடம் பேசினோம். ‘‘சசிகலா குடும்பத்துக்கு நெருக்கமான குடவாசல் ராஜேந்திரனின் மகள் சத்யாவின் கணவர் என்பதுதான், இவர் அடையாளம். கார்த்திகேயனின் ஆரம்ப காலம், சுமார் ரகம்தான். உள்ளாட்சித் தேர்தலில் குதிரை பேரம் நடத்தி, மணமேல்குடி ஊராட்சி ஒன்றியத் தலைவராக பவனிவந்த நிலையில், குடவாசல் ராஜேந்திரன் மகளைத் திருமணம் செய்தார். தனது மருமகனையும் குடவாசல் ராஜேந்திரன், திவாகரனிடம் அறிமுகம் செய்தார். முதல் சந்திப்பிலேயே திவாகரன் காலில் விழுந்து, ‘மாமா’ என்று உரிமையோடு அழைக்கத் தொடங்கினார். திவாகரன் நிழலில் 2006-ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் அறந்தாங்கி தொகுதியில் நின்று தோல்வியைத் தழுவினார். ஆனாலும், அந்த சந்தர்ப்பத்தில்தான் சேகர் ரெட்டியின் கூட்டாளி, புதுக்கோட்டை ராமச்சந்திரன் தொடர்பு கிடைத்தது. மணல் பிசினஸ் நெளிவுசுளிவுகளை அவரிடம் கற்றுக்கொண்டார் கார்த்திகேயன்.

மணல் யாருக்கு? - மன்னார்குடி குடும்பத்துக்குள் ஜல்லிக்கட்டு!

2011-ல் அ.தி.மு.க ஆட்சிக்கு வந்தததும், மணல் குவாரிகள் ஆறுமுகசாமி கைவசம் சென்றன. ஆறுமுகசாமியிடம் பேசினார் திவாகரன். 12 மாவட்டங்களில் மணல் அள்ளும் குத்தகை, கார்த்திகேயன் கைக்கு வந்தது. ஐந்து மாதங்கள் கோடிகளில் புரண்டார் கார்த்திகேயன். ஒட்டுமொத்த மணல் தொழிலையும் வசப்படுத்த நினைத்தபோது, முதலுக்கே வந்தது மோசம். சசிகலா குடும்பத்தினர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்கள். மணல் கரன்சி டீலிங் கோபத்தில் வழக்கும் பாய்ந்தது. கார்த்திகேயனைக் கைது செய்து சிறையில் அடைத்தார்கள். வெளியே வந்தபிறகு சில காலம் அமைதியாக இருந்தார் கார்த்திகேயன். சேகர் ரெட்டி கைக்கு மணல் குவாரிகள் சென்று, ராமச்சந்திரன் மணலில் கோலோச்சிய நேரத்தில், கார்த்திகேயன் அந்த ராமச்சந்திரனோடு இணைந்தார். சில குவாரிகளை இவர் பொறுப்பில் விட்டார் ராமச்சந்திரன். மீண்டும் கரன்சிகளில் குளித்தார் கார்த்திகேயன். இந்த அனுபவம்தான் இப்போது இவர்வசம் மணல் கான்ட்ராக்ட் செல்லக் காரணமாக உள்ளது’’ என்கிறார்கள். 

ஆனால், கார்த்திகேயன் கையில் தமிழகம் முழுக்க மணல் அள்ளும் உரிமையைக் கொடுக்கக்கூடாது என்று சசிகலா குடும்பத்தைச் சேர்ந்த டாக்டர் வெங்கடேஷும், அவருடைய அம்மா சந்தான லெட்சுமியும் போர்க்கொடி தூக்கியிருக்கிறார்கள்.    

தமிழ்நாடு மாநில மணல் லாரி சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் எஸ்.யுவராஜ் என்ன சொல்கிறார்? ‘‘கடந்த இரண்டு வாரங்களாகவே மணல் பிசினஸ் கைமாறப்போவதாக வதந்திகள் பரவின. ராட்சத லாரிகள், பொக்லைன், ஆள் பலம், இயந்திரங்கள் வைத்திருப்பவர்கள்தான் மணல் பிசினஸில் கால் பதிக்கமுடியும். பழைய ஆட்களேதான் இதுவரை நடத்திவருகிறார்கள். அரசே நேரிடையாக மணல் பிசினஸ் செய்வதாகச் சொல்லிக்கொண்டாலும், மணலை அள்ளிப்போடும் உரிமத்தை தனியாரிடம் விட்டுள்ளனர். இந்த முறை மாற வேண்டும். டாஸ்மாக் கடைகளை நடத்துவது போல மணலுக்கென்று தனித்துறையை உருவாக்கி அதன் தலைவராக ஐ.ஏ.எஸ். அதிகாரியை நியமிக்க வேண்டும். மணல் அள்ளும் இடத்தில் அரசு ஊழியர்களை நியமித்து மொத்த விஷயங்களையும் அரசே நடத்த வேண்டும். பணப் பரிமாற்றம் எல்லாம் ஆன்லைன் வழியாக செலுத்த ஏற்பாடு செய்ய வேண்டும். பில்லில் எவ்வளவு பணம் என்பதைக் குறிப்பிட வேண்டும். வருமானவரி பிரச்னையைச் சமாளிக்க அரசு வரிமுத்திரை பொறித்துத்தர வேண்டும். இதையெல்லாம் நிறைவேற்றினால் அரசுக்கு டாஸ்மாக் போல நல்ல வருவாய் கிடைக்கும்’’ என்றார். 

டெல்டா மாவட்டங்களில்தான் மணல் கொழிக்கிறது. அதை அள்ளத்தான் ஏக டிமாண்டு. கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த முன்னாள் மணல் பிசினஸ் பிரமுகரிடம் வேலை பார்த்த ‘சாமி’ பெயரைக்கொண்ட ஒருவர் சென்னையில் முற்றுகையிட்டிருக்கிறாராம்.

 ‘‘சேகர் ரெட்டி அண்டு ராமச்சந்திரன் கோ-வினரின் கஸ்டடியில்தான் மணல் பிசினஸ் நடைபெற்றது.  ராமச்சந்திரன், சசிகலாவின் உறவினர். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, கட்சியின் பொதுச்செயலாளராக சசிகலா ஆனதும், ராமச்சந்திரன் மேலும் பலம் பொருந்தியவராக ஆகிவிட்டார். இந்த நிலையில், மணல் அள்ளும் இயந்திரங்களை வாங்குவது தொடர்பாக கார்த்திகேயன் பிஸியாக இருக்கிறார். இதேபோல், ஆறுமுகசாமியும் தன் பங்குக்குக் காய் நகர்த்திக்கொண்டிருக்கிறார். நாமக்கல்லைச் சேர்ந்த சட்டம் தெரிந்த ஒரு பிரமுகரும் நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த ‘கொடை’ பிரமுகர் ஒருவரும் மூவ் செய்துவருகிறார்கள். யாருக்கு சான்ஸ் அடிக்கும் என தெரியவில்லை’’ என்கிறார்கள் மணல் புள்ளிகள்.    

மணல் பிசினஸ் எப்படி நடக்கும்?

2003-ம் ஆண்டு வரை மணல் குவாரிகள் தனியாருக்கு ஏலம் விடப்பட்டு, அவர்கள் மூலம் மணல் விற்பனை நடந்து வந்தது. அதன்பிறகு ‘மணல் குவாரிகளை அரசே ஏற்று நடத்தும்’ என அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார். டெண்டர் மூலமாக லோடிங் கான்ட்ராக்டர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்கள் மூலமாகக் குவாரிகளுக்கு வரும் லாரிகளுக்கு மணல் ஏற்றிவிடப்பட்டது. மணலுக்கு உரிய விலையை பொதுப்பணித் துறை நேரடியாகப் பெற்றுக்கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டது. 

இரண்டு யூனிட் மணல், ஆரம்பத்தில் 626 ரூபாய்க்கு விற்கப்பட்டது. அதன்பின், 2013-ம் ஆண்டு 1,050 ரூபாய் என விலை உயர்த்தப்பட்டது. ஆனால், இந்த விலைக்கு குவாரிகளில் மணல் கிடைக்காது. ஏனென்றால், அங்கிருந்து மணல் எடுக்கும் சப்-கான்ட்ராக்டர்கள், அதை முறையாக விற்பனை செய்யாமல் யார்டுகளில் பதுக்கி வைப்பார்கள். மணல் வாங்க விரும்புவோர் குவாரிகளுக்குப் போனால் அவர்களுக்குக் கிடைக்காது. யார்டுகளை நாடித்தான் போக வேண்டும். அவர்கள் சொல்வதுதான் விலை. 1,050 ரூபாய் மதிப்புள்ள மணல், அவர்களிடம் 15 ஆயிரம் ரூபாய் வரையில் விற்கப்படும். விலை அப்போதைய டிமாண்டைப் பொறுத்தது. அதன்பிறகு, அது லாரிகளில் பெரு நகரங்களுக்கு வரும்போது, இன்னும் விலை உயரும். இதுவே பக்கத்து மாநிலங்களுக்குச் சென்றால் பல மடங்கு உயரும்.  

சேகர் ரெட்டி காலத்தில் ரத்தினமும், ராமச்சந்திரனும் சப்-கான்ட்ராக்டர்களாக இருந்தனர். அவர்கள் கட்டுப்பாட்டில் சில மாவட்டங்கள் இருக்கும். அவர்கள், 100 பொக்லைன்கள், 500 லாரிகள் என்று வைத்துக்கொண்டு சாம்ராஜ்ஜியம் நடத்துவார்கள். தமிழகத்தில் ஒரு டாரஸ் லோடு மணல் 7,000 முதல் 8,500 ரூபாய் வரை விற்கப்படும் என்றால், அதே மணல் பெங்களூரில் ரூ. 80,000 முதல் ஒரு லட்சம் வரையும், கேரளாவில் ஒரு லட்சம் முதல் ஒன்றேகால் லட்சம் வரையும் விற்கப்பட்டது. தமிழகம் முழுவதும் ஒரு நாளைக்கு நாலரை லட்சம் யூனிட் மணல் அள்ளப்பட்டு ஒரு லட்சம் யூனிட் மட்டுமே தமிழகத் தேவைக்குக் கொடுத்தார்கள். மீதி மூன்றரை லட்சம் யூனிட்டை கர்நாடகா, ஆந்திரா மற்றும் கேரளாவுக்கு அனுப்பினார்கள். கப்பலில் வளைகுடா நாடுகளுக்கும் அனுப்பினார்கள். இதை அரசு புரோக்கர்களே நேரடியாகச் செய்து வந்தார்கள். தற்போது சேகர் ரெட்டி சிறையில் இருப்பதால், தமிழகத்தில் உள்ள 230 மணல் குவாரிகளில் பெரும்பாலானவை தற்காலிகமாக இயங்கவில்லை. பிரைவேட் யார்டுகளில் பதுக்கி வைக்கப்பட்டு இருக்கும் மணல் மட்டும் விற்பனை செய்யப்படுகிறது. அதனால், தற்போதைக்கு மணல், விலை மதிப்பற்ற பொருளாக மாறி நிற்கிறது.

மணல் யாருக்கு? - மன்னார்குடி குடும்பத்துக்குள் ஜல்லிக்கட்டு!

கான்ட்ராக்ட் நிபந்தனைகள் 

புதிதாக மணல் கான்ட்ராக்ட் தருவதற்கு, ‘30 கோடி ரூபாய் முன்பணம் கட்ட வேண்டும்; ஆறுமுகசாமி, படிக்காசு, சேகர் ரெட்டி போன்றவர்களுடன் எந்தத் தொடர்பும் வைத்தவர்களாக இருக்கக்கூடாது; மாதா மாதம் வரவேண்டிய தொகை தொய்வில்லாமல் சேரவேண்டிய இடத்தில் சேர வேண்டும்’ என்று மேலிடம் சில நிபந்தனைகளை விதிக்கிறதாம். இந்த மணல் ஜல்லிக்கட்டில் மன்னார்குடி குடும்பத்தில் யார் ஜெயிப்பார்கள் என்பது தெரியாத நிலையில், பல பகுதிகளில் மணலுக்குக் கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. 

நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களின் கட்டுமானத் தேவையப் பூர்த்திசெய்யும் வகையில் தாமிரபரணி ஆற்றில் மணல் அள்ளப்பட்டு வந்தது. இதனால், சில இடங்களில் ஆற்றின் போக்கே திசை மாறியது. நிலத்தடி நீர் மட்டம் குறைந்தது. விவசாயம் பாழ்படத் தொடங்கியது. இதையடுத்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவர் நல்லகண்ணு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இதனால் தாமிரபரணி ஆற்றில் மணல் அள்ளத் தடை விதிக்கப்பட்டது. தற்போது குவாரிகள் இல்லாத சூழலில் மணல் விலை தாறுமாறாக உயர்ந்துவிட்டது. நெல்லை லேண்ட் புரோமோட்டர்ஸ் அசோசியேஷன் தலைவர் மயன் ரமேஷ்ராஜா, ‘‘முன்பு மூன்று யூனிட் மணல் எங்களுக்கு 8,000 ரூபாய் வரையில் கிடைத்தது. கடுமையான தட்டுப்பாடு காரணமாக இப்போது 28,000 ரூபாய்க்கு விற்கப்படுகிறது’’ என்கிறார். 

திருச்சிராப்பள்ளி சிவில் இன்ஜினீயர் அசோசியேஷனைச் சேர்ந்த பொறியாளர் சந்திரகாந்த், “மணல் கிடைக்காததால், கட்டுமானப் பணிகள் முன்பைவிட 70 சதவிகிதம் குறைந்துவிட்டன. உடனே மணல் தேவை என்றால் கூடுதல் விலை கொடுத்து வாங்க வேண்டும். ஒரு பொறியாளராக மணல் எனது தொழிலுக்குத் தேவை என்றாலும், கடந்த 20 வருடங்களில் அள்ளிய மணலைவிட, இந்த இரண்டு வருடங்களில் இரண்டு மடங்கு கூடுதலாக அள்ளப்பட்டுள்ளது. தற்போது ஏற்பட்டுள்ள மணல் தட்டுப்பாட்டைச் சரி செய்ய மாற்று வழிமுறைகளைச் சிந்திக்க வேண்டும். அப்படிச் செய்யவில்லையெனில் மிகப்பெரிய பிரச்னைகளுக்கு ஆளாவோம்’’ என எச்சரித்தார்.

- ஜோ.ஸ்டாலின், அ.சையது அபுதாஹிர், சி.ய.ஆனந்தகுமார், பி.ஆண்டனிராஜ், வீ.கே.ரமேஷ்

News2
News2

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a comment