Monday, February 06, 2017

“மேலிடத்துல இருந்துதான் கேஸ் போடச் சொன்னாங்க!”

“மேலிடத்துல இருந்துதான் கேஸ் போடச் சொன்னாங்க!”

நீச்சல் சாம்பியனின் கையை உடைத்த போலீஸ்

நான்கு மாதங்களுக்கு முன்புதான் நீச்சல் போட்டியில் தமிழக அளவில் இரண்டு பழைய சாதனைகளை உடைத்து எறிந்தவர் பிரேம்நாத். தமிழகத்தின் பெருமைக்குரிய விளையாட்டு வீரரான அவர் கையை உடைத்து, நீந்தவே முடியாமல் செய்திருக்கிறது தமிழக காவல்துறை. பிரேம்நாத் செய்த ஒரே தவறு, மெரினா போராட்டக் காரர்களை போலீஸ் துரத்திச் சென்ற வீதியில் வசிப்பதுதான்!

ஜல்லிக்கட்டுக்காக மெரினாவில் போராடியவர்களைக் கலவரம் செய்து கலைத்த போலீஸ், சம்பந்தமே இல்லாமல் பொதுமக்களையும் அப்பாவி இளைஞர்களையும் தாக்கியதுடன், அவர்களின்மீது பொய்க் குற்றம் சுமத்தி வழக்குகளையும் போட்டிருக்கிறது. இதனால், அவர்களுடைய எதிர்காலமே கேள்விக்குறியாகி இருக்கிறது. சிக்கியவர்களில், பிரேம்நாத்தும் ஒருவர்.

சென்னை அயோத்தியா குப்பத்தில் எளிய குடும்பத்தில் பிறந்த இவர், இளம் வயதிலிருந்தே அபார நீச்சல் திறமையோடு வளர்ந்தார். இதுவரை, சுமார் 600-க்கும் மேற்பட்ட நீச்சல் போட்டிகளில் பங்கேற்று பல பரிசுகளைப் பெற்றவர். தேசிய அளவிலான போட்டிகளில் 30 பதக்கங்கள் வென்ற இவர், நான்கு தேசிய சாதனைகளைப் படைத்திருக்கிறார். மாநில அளவில் 17 சாதனைகள் படைத்தவர். இதனாலேயே 25  வயதாகும் இவருக்கு, தெற்கு ரயில்வேயில் வேலை கிடைத்தது. திருவல்லிக்கேணி ரயில் நிலையம் அருகில் இருக்கிறது இவருடைய வீடு.

வீட்டுக்குள் புகுந்து இவரை போலீஸ் அடித்துத் துவைத்ததை, இன்னமும் அச்சம் விலகாத முகத்தோடு விவரிக்கிறார்...

‘‘ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் கடைசி நாளான கடந்த 23-ம் தேதி, நான் மயிலாப்பூர் ரயில்வே ஸ்டேஷன்ல பணியில இருந்தேன். அன்றைக்குப் போராட்டத்தால ரயில் சேவை முடங்கிடுச்சு. டியூட்டி முடிஞ்சு, திருவல்லிக்கேணியிலே இருந்த என் வீட்டுக்கு ரயில்வே ட்ராக்லயே நடந்து போய்க்கிட்டிருந்தேன். எங்க ஏரியாகிட்ட வந்தபோது, போலீஸ்காரங்க எல்லாரையும் கண்மூடித்தனமா தாக்கிட்டு இருந்தாங்க. அந்தக் களேபரத்துக்கு நடுவுல நான் வேகமா ஓடி எங்க வீட்டுக்குப் போயிட்டேன்.

போலீஸ் துரத்தினதால, எங்க பகுதியில நிறைய பசங்க வீடு வீடா புகுந்து ஓடிக்கிட்டு இருந்தாங்க. அப்போ, யாரோ என் வீட்டுக் கதவைத் தட்டினாங்க. வலி தாங்க முடியாம பசங்கதான் தட்டுறாங்கன்னு நெனச்சிக் கதவைத் திறந்தேன். திடீர்னு உள்ளே வந்த போலீஸ்காரங்க, என்னை தரதரன்னு வெளியிலே இழுத்துக்கிட்டுப் போனாங்க. அம்மாவும் அப்பாவும், ‘அவனை விட்ருங்க... அவன் ரயில்வே எம்ப்ளாயி. இப்பத்தான் டியூட்டி முடிச்சிட்டு வர்றான்’னு கத்துனாங்க. ஆனா, எதையுமே போலீஸ் காதுல வாங்கலை. என் அப்பா, அம்மா முன்னாடியே என்னை அடிக்க ஆரம்பிச்சாங்க. தடுக்க வந்த அவங்களையும், ‘மரியாதையா போயிடுங்க. இல்லே, உங்களுக்கும் இதே கதிதான்’னு மிரட்டினாங்க. தலையிலேயே குறிவெச்சு அடிச்சதால, வலி தாங்கமுடியாம கையால தடுத்தேன். அதனால என் கையை உடைச்சிட்டாங்க. அப்புறம் எல்லாரையும் வண்டியிலே ஏத்தி போலீஸ் ஸ்டேஷனுக்குக் கூட்டிட்டுப் போனாங்க.

“மேலிடத்துல இருந்துதான் கேஸ் போடச் சொன்னாங்க!”

வலி தாங்கமுடியாத பலரும், ‘ஆஸ்பிட்டலுக்குக் கூட்டிட்டுப் போங்க’ன்னு போலீஸ்காரங்ககிட்டே கெஞ்சினோம். ஆனா, அவங்க எதையும் கேக்கல. ‘டேய், ஒழுங்கு மரியாதையா சத்தம் போடாம இருங்க. இல்லே கொன்னுடுவோம்’னு சொல்லி ரெண்டு நாள் ஸ்டேஷன்லயே வெச்சிருந்தாங்க. அதுக்குப்பிறகு கோர்ட்டுக்குக் கூட்டிக்கிட்டுப் போனாங்க. ஜட்ஜ் அய்யா பார்த்துட்டு, ‘இவுங்களைமுதல்ல ஆஸ்பிட்டலுக்குக் கூட்டிட்டுப் போங்க’ன்னு சொன்னாரு. அப்புறம்தான் எங்களை ராயப்பேட்டை ஜி.ஹெச்-சுக்கு அழைச்சிட்டுப் போனாங்க. வீட்டுக்கும் போன் பண்ணாங்க.

என் பெற்றோர், நான் வாங்குன மெடல், ரயில்வே ஐ.டி கார்டு எல்லாத்தையும் கொண்டுவந்து காட்டினாங்க. அதையெல்லாம் பார்த்தவங்க, ‘எங்களால ஒண்ணும் செய்ய முடியாது. மேலிடத்துல இருந்துதான் கேஸ் போடச் சொன்னாங்க; நாங்களும் போட்டுட்டோம். இனி எதுவா இருந்தாலும் கோர்ட்டுல பார்த்துக்கோங்க’ன்னு சொல்லி அனுப்பிட்டாங்க. ஜாமீன்ல வந்திருக்கற நான், உடைஞ்ச கையோட தினமும் போலீஸ் ஸ்டேஷனுக்கும் ஆஸ்பிட்டலுக்கும் அலைய வேண்டியிருக்கு. பல மாதங்களுக்கு நீச்சலைப்பத்தி நினைச்சுப் பார்க்கவே முடியாது.

பதினோரு செக்‌ஷன்ல கேஸ் போட்டிருக்காங்க. இந்த பொய் கேஸால என் வாழ்க்கையே நாசமாயிடும்... வேலைக்கும் பிரச்னை வந்திடும். பிரச்னை செய்யாம வீட்டுல இருந்த எனக்கு எதுக்கு இவ்வளவு பெரிய தண்டனை?’’ என்கிறார் கண்ணீரோடு.

இளைஞர்களின் வாழ்க்கையை, காவல்துறை இப்படியா சீரழிப்பது?

- ஜெ.அன்பரசன்
படங்கள்: ப.சரவணகுமார்

News2
News2

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a comment