Monday, February 06, 2017

“சர்வதேச தீவிரவாதிகளைப்போல் சிறுவர்களைக் கைதுசெய்த சென்னை போலீஸ்!’’

“சர்வதேச தீவிரவாதிகளைப்போல் சிறுவர்களைக் கைதுசெய்த சென்னை போலீஸ்!’’

ல்லிக்கட்டுக்கு ஆதரவான இளைஞர்-மாணவர் எழுச்சியை ஒடுக்குவதற்காக போலீஸார் நடத்திய வன்முறையின் இன்னொரு கொடுமை இது. அப்போது, சாலைமறியலை வேடிக்கை பார்த்த பள்ளிச் சிறுவர்களை கொலை முயற்சி உள்ளிட்ட கடுமையான பிரிவுகளின் கீழ் போலீஸார் கைதுசெய்தது கடும் கண்டனத்துக்கு ஆளாகியிருக்கிறது.

 சென்னை மெரினாவில் ஜல்லிக்கட்டுக்காகப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இளைஞர்கள், மாணவர்களை ஜனவரி 23-ம் தேதி காலையில் போலீஸார் கலைத்தனர். இளைஞர்களுக்கு ஆதரவாக சென்னையில் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் கிளர்ந்தன. சாலைமறியல்களும் நடந்தன. வடபழனி அருகே, போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் போலீஸாருக்கும் கடும் மோதல் ஏற்பட்டது. அதை, அந்தப் பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் வேடிக்கை பார்த்தனர். அவர்களைத்தான் ‘வன்முறையாளர்கள்’ என்று போலீஸார் கைது செய்தனர்.

பெரும் போராட்டத்துக்குப் பின்னர் அந்தச் சிறுவர்களை ஜாமீனில் எடுத்துள்ள வழக்கறிஞர் காருண்யா தேவியிடம் பேசினோம். “வடபழனி அருகே 23-ம் தேதி இரவு சாலைமறியலில் ஈடுபட்டவர்களுக்கும், போலீஸாருக்கும் மோதல் ஏற்பட்டது. அதை, அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ குடியிருப்பு அருகே இருந்த பள்ளி மாணவர்கள் ஆர்வக்கோளாறில் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களில் இந்த மாணவர்களின் முகங்களும் இடம்பெற்றன. அந்தப் புகைப்படங்களை வைத்துக்கொண்டு வீடு வீடாகப் புகுந்து மாணவர்களை போலீஸார் கைதுசெய்தனர். அந்தச் சிறுவர்களை சர்வதேசத் தீவிரவாதிகளைப்போல, நள்ளிரவு ஒரு மணிக்குப் பிடித்துச்சென்றனர். கொலைமுயற்சி, ஆயுதங்களைக் கொண்டு சேதப்படுத்துதல் உட்பட பல்வேறு பிரிவுகளில் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர். சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அவர்களை அனுப்பினர். அவர்களில் சிலரை இப்போது ஜாமீனில் எடுத்திருக்கிறோம். ஒவ்வொரு மாதமும் மூன்றாவது புதன்கிழமை அன்று சிறார் நீதிமன்றத்தில் அவர்கள் ஆஜராக வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. கொடுங் குற்றவாளிகளைப்போல அந்தக் குழந்தைகளை போலீஸார் நடத்தியதால், அவர்கள் மன ரீதியில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் கல்வியும் பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கு, போலீஸார் பதில் சொல்லியே ஆக வேண்டும்” என்றார்.

 குழந்தைகள் உரிமைக்காகப் போராடி வரும் தேவநேயனிடம் பேசினோம். “பள்ளி மாணவர்களைக் கைது செய்தவுடன், அவர்களை சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்குத்தான் போலீஸாருக்கு உரிமை உள்ளது. ஆனால், அந்த மாணவர்களை அடித்துத் துன்புறுத்தி, சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி உள்ளனர். மாணவர்களை அடித்த காவல்துறை அதிகாரிகளை பணிநீக்கம் செய்ய வேண்டும். தேசத்துக்கு எதிரான கொடுங்குற்றத்தை அந்த மாணவர்கள் செய்துவிடவில்லை. அவர்களை அடிப்பதற்கு போலீஸாருக்கு யார் உரிமை கொடுத்தது? பள்ளி மாணவர்களான அந்த அப்பாவிச் சிறுவர்களை, வாழ்க்கை முழுவதும் குற்றவாளிகளாக... சமூக விரோதிகளாகப் பார்க்கும் நிலையை போலீஸார் ஏற்படுத்தி உள்ளனர். அவர்களின் உயர்கல்வி பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. அவர்கள் மீது போடப்பட்ட அனைத்து வழக்குகளையும் திரும்பப்பெற வேண்டும். அவர்களுக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை கொடுக்கப்பட வேண்டும். போலீஸாரின் ஊதியத்தில் இருந்து மாணவர்களுக்கு நஷ்டஈடு கொடுக்கவேண்டும். பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்க வேண்டும். பொதுவாக, சென்னையில் குறிப்பிட்ட சில பகுதிகளைச் சேர்ந்த சிறுவர்களைக் குற்றவாளிகளாகப் பார்க்கும் மனப்பான்மையுடன் போலீஸார் உள்ளனர். போலீஸாரின் மனப்பான்மையில் மாற்றம் வேண்டும்” என்றார்.

 ஜாமீனில் வெளிவந்துள்ள அந்த மாணவர்களைச் சந்தித்தோம். அவர்கள் கடும் மனஉளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறார்கள். (சிறார்கள் என்பதால் அவர்களின் பெயர்களை நாம் வெளியிடவில்லை. புகைப்படங்களில் அவர்களின் முகங்களை மறைத்துள்ளோம்).

 கிண்டி ஐ.டி.ஐ-யில் படித்துவருகிறார் ஒரு மாணவர். “26-ம் தேதி இரவு என் வீட்டில் இருந்து சாப்பாடு எடுத்துக் கொண்டு, என் நண்பனுக்குக் கொடுப்பதற்காகச் சென்றேன். பிறகு, நண்பன் அறையிலேயே தங்கிவிட்டேன். இரவு இரண்டு மணி அளவில் நாங்கள் தங்கியிருந்த அறைக்குள் போலீஸார் நுழைந்தனர். எங்கள் இருவருடன், இன்னொருவரையும் பிடித்து இழுத்துப்போய், வடபழனி போலீஸ் ஸ்டேஷனில் வைத்தனர். ‘ஏண்டா... எவ்வளவு கொழுப்பு இருந்தா எங்க டூவீலரை எரிப்பீங்க. நாங்கதாண்டா உங்க அம்மாக்களை வெச்சுருக்கோம்’ என்றெல்லாம் வாய்க்கு வந்தபடி திட்டினார்கள். ‘சார், நான் தப்பு ஏதும் செய்யலை சார். நான் வன்முறை நடந்த பகுதிக்கே வரலை.’ என்றெல்லாம் சொல்லிப்பார்த்தேன். அவர்கள் கேட்கவே இல்லை. தடிமனான பிளாஸ்டிக் பைப்பால் கால்களிலும், கைவிரல்களிலும் தொடர்ந்து அடித்தார்கள். பிறகு, சாப்பாடு வாங்கிக் கொடுத்தார்கள். ஐந்து, ஐந்து போலீஸ்காரர்களாக முறை வைத்து அடித்தார்கள். பைப்பால் அடித்ததால் விரல்களில் உள்காயம் ஏற்பட்டு, பயங்கரமாக வலித்தது. அதனால், சாப்பிட முடியவில்லை. 27-ம் தேதி மாலையில்தான் சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்கள். சிறுவர் சீர்திருத்தப்பள்ளிக்கு எல்லாம் போய் வந்திருக்கிறேன். இனி, மீண்டும் என் படிப்பைத் தொடர முடியுமா என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது” என்றார் வேதனையுடன்.

  மாநகராட்சிப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர், “23-ம் தேதி மதியம் நண்பர்களோடு சேர்ந்து நூறடி சாலை வழியே போய்க்கொண்டிருந்தேன். அங்கு சாலை மறியல் நடந்தது. போலீஸார் அங்கிருந்தவர்களை விரட்டி அடித்துக்கொண்டிருந்தனர். அப்போது என்னுடன் வந்த ஒருவன், மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்த கண்காணிப்பு கேமராவை கல்லை எறிந்து சேதப்படுத்தினான். ‘அப்படியெல்லாம் பண்ணாதேடா’ என்று சொன்னேன். அதோடு நாங்கள் திரும்பிவிட்டோம். 26-ம் தேதி மதியம் எங்கள் வீட்டுக்கு வந்த போலீஸ்காரர்கள் என்னை அழைத்துக்கொண்டு போனார்கள். அப்போதே அவர்களிடம், ‘சார்! நான் எந்தத் தப்பும் செய்யலை. என் கூட வந்தவன்தான் கல்லை விட்டு எறிஞ்சான்’ என்று சொன்னேன். ‘சரி, ஸ்டேஷன்ல வந்து இன்ஸ்பெக்டர்கிட்ட சொல்லு. 10 நிமிஷத்தில் விட்டுவிடுகிறோம்’ என்று சொன்னார்கள். ஸ்டேஷனில் உட்காரவைத்து பிளாஸ்டிக் பைப்பால் என் தொடையில் அடித்தார்கள். உள்காயம் ஏற்பட்டு பயங்கரமாக வலித்தது. அந்த வலியோட 300 தடவை தோப்புக்கரணம் போடச்சொன்னார்கள். தொடையெல்லாம் பயங்கரமாக வலித்த நிலையில் தோப்புக்கரணம் போட்டேன். இப்போது ஜாமீனில் வந்திருக்கிறேன். ஒவ்வொரு மாதமும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்கள். நான் பள்ளிக்குப் போவதா, நீதிமன்றத்துக்குப் போவதா என்றே தெரியவில்லை. நான் படிக்கும் பள்ளியில்தான் என் தம்பியும் படிக்கிறான். என் தம்பியிடம் அவனுடைய நண்பர்கள், ‘என்னடா? உன் அண்ணன் ஜெயிலுக்குப் போயிட்டு வந்தானாமே’ என்று கேட்டார்களாம். அந்த வேதனையோடுதான், இன்று பள்ளிக்கூடம் போய்வந்தேன்” என்றார்.

“சர்வதேச தீவிரவாதிகளைப்போல் சிறுவர்களைக் கைதுசெய்த சென்னை போலீஸ்!’’

அரசினர் மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர், “26-ம் தேதி இரவு, வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். அப்போது என் நண்பன் ஒருவன் என்னை வந்து கூப்பிட்டான். முழுமையாக சாப்பிட்டு முடிக்கவில்லை. என்னவென்று கேட்க வீட்டைவிட்டு வெளியே வந்தேன். மஃப்டியில் இருந்த போலீஸார் என்னை கூட்டிக்கொண்டு போனார்கள். சூளைமேடு போலீஸ் ஸ்டேஷனில் வைத்து என்னிடம் விசாரித்தனர். ‘நான் நூறடி சாலை பக்கமே போகவில்லை. எனக்கும் வன்முறைக்கும் தொடர்பில்லை’ என்று சொன்னேன். ‘பொய் சொல்லாதே. எங்ககிட்ட ஆதாரம் இருக்கு’ என்று சொல்லிக்கொண்டே பிளாஸ்டிக் பைப்பால் அடித்தனர். போலீஸ்காரர்கள் அடித்த வலியைவிட, பள்ளியில் நடந்த டெஸ்ட்டை எழுத முடியவில்லையே என்ற வேதனைதான் அதிகமாக இருக்கிறது. எந்தத் தப்பும் செய்யாத என்னை ஏன் கூப்பிட்டுக்கொண்டு போனார்கள் என்று தெரியவில்லை” என்றார்.

 இந்தப் பள்ளி மாணவர்களைக் கைது செய்தது குறித்து அவர்களின் பெற்றோர்களிடம் முறைப்படி போலீஸார் தகவல் சொல்லியிருக்க வேண்டும். ஆனால், சொல்லவில்லை. விசாரணைக்காக அழைத்துச்சென்ற போலீஸார், அவர்களை உடனடியாக சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி இருக்க வேண்டும். ஆனால், 24 மணி நேரம் கழித்து மறுநாள்தான் ஆஜர்படுத்தி உள்ளனர். மேலும், மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் மாணவர்களை போலீஸார் கடுமையாகத் துன்புறுத்தி உள்ளனர். உடல் ரீதியாக சித்ரவதைகள் செய்தது வெளியே தெரியக்கூடாது என்பதற்காக, உள்காயம் ஏற்படும் வகையில் பிளாஸ்டிக் பைப் போன்றவற்றால் அவர்களைத் தாக்கியுள்ளனர். சம்பந்தப்பட்ட போலீஸார் மீது அரசு நடவடிக்கை எடுக்குமா?

- கே.பாலசுப்பிரமணி
படங்கள்: வீ.நாகமணி

News2
News2

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a Comment