Monday, February 06, 2017

மீனவர்களுக்கு எமனாகும் எண்ணெய்! - கப்பலைக் காப்பாற்ற கொட்டப்பட்டதா கச்சா?

மீனவர்களுக்கு எமனாகும் எண்ணெய்! - கப்பலைக் காப்பாற்ற கொட்டப்பட்டதா கச்சா?

மெரினாவில் அமைதியாகப் போராடியவர்கள் மீது போலீஸ் நிகழ்த்திய கொடூரத் தாக்குதல், மெரினா கடற்கரைக்கு அழியாத கறையை ஏற்படுத்தியது. அதே மெரினா இப்போது நிஜமாகவே கறையாகிக் கிடக்கிறது.

கடந்த ஜனவரி 28-ம் தேதி அதிகாலை, சென்னையை அடுத்த எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் ஒரு விபத்து... மும்பையிலிருந்து வந்த `டான் காஞ்சிபுரம்’ என்ற சரக்குக் கப்பலும் எரிவாயு எடுத்துச் சென்ற மேப்பிள் என்ற கப்பலும் எதிர்பாராத விதமாக மோதிக்கொண்டன.

டான் காஞ்சிபுரம் கப்பலுக்கு இதில் பலத்த சேதம். கப்பலின் நடுப்பகுதி உடைந்ததில், கச்சா எண்ணெய் கொட்டி கடல் நீரில் கலந்தது. ‘அதிகம் சிந்தவில்லை’ எனப் பலரும் மாறி மாறி மறுத்தாலும், சுமார் 20 டன் அளவுக்கு கடலில் எண்ணெய் கொட்டி இருக்கலாம் என்கிறார்கள் நிபுணர்கள்.

கடல்நீரே அங்கு கறுப்பாக மாறியிருக்க, காற்றின் வேகத்தில் அது அங்கிருந்து தெற்காகப் பரவத் தொடங்கியது. இரண்டே நாட்களில் மெரினாவைத் தாண்டி போக ஆரம்பித்தது. உயிரிழப்பு எதுவும் இல்லை என்றபோதும், கண்ணுக்கெட்டிய தூரம் வரை மணல் பரப்பு கறுப்புப் போர்வை போல கச்சா எண்ணெயை போர்த்திக்கொண்டது. உலகின் பல நாடுகளில் ஏற்பட்ட மிகப் பெரிய எண்ணெய் விபத்துகளுடன் ஒப்பிடுகையில் எண்ணூர் விபத்து மிகச் சிறியதுதான். ஆனால், அவர்களிடம் இருந்த தொழில்நுட்ப வசதிகள் நம்மிடம் இல்லை என்பதுதான் ஆபத்தின் வீரியத்தை அதிகரிக்கச் செய்திருக்கிறது.

முதலில் ‘எண்ணெயே கசியவில்லை’ எனப் பூசி மெழுகப் பார்த்தது துறைமுக நிர்வாகம். அதன்பின் கடலோரக் காவல் படையின் இரண்டு நீர்மூழ்கி பம்புகள் வரவழைக்கப்பட்டு, எண்ணெயை அகற்றும் முயற்சி நடந்தது. இரண்டுமே சொல்லி வைத்தது போல ரிப்பேர் ஆகிவிட, மெட்ரோ வாட்டரின் நீர் உறிஞ்சும் டிரக்குகள் வரவழைக்கப்பட்டு எண்ணெய் கலந்த கடல்நீரை அள்ளினார்கள். அதற்குள் இது மேலும் பல இடங்களில் பரவிவிட, இப்போது தீயணைப்பு ஊழியர்கள், மீனவர்கள், தொண்டு நிறுவனத்தினர் என பலரும் சேர்ந்து வாளிகளால் அள்ளி டேங்கர்களில் ஊற்றுகிறார்கள். டிஜிட்டல் இந்தியாவின் உயர்ந்தபட்ச தொழில்நுட்பம் இதுதான் போலிருக்கிறது! ‘எண்ணெய் கலந்த கடல்நீரைத் தொட்டாலே ஆபத்து’ என ஐ.ஐ.டி நிபுணர்கள் எச்சரித்துக்கொண்டிருக்க, இங்கு பலரும் இதைக் கைகளிலும் முகத்திலும் பூசிக்கொண்டு அள்ளுகிறார்கள்.

மீனவர்களுக்கு எமனாகும் எண்ணெய்! - கப்பலைக் காப்பாற்ற கொட்டப்பட்டதா கச்சா?

எண்ணூரை அடுத்த எர்ணாவூர் பகுதியில், எண்ணெய்க் கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தவர்களைச் சந்தித்தோம். மீனவர் தேசராஜ், ‘‘இரண்டு நாட்களாக அள்ளிக் கொண்டிருக்கிறோம். ஆனால், அளவு மட்டும் குறையவே இல்லை. இதை அள்ளிக் கொட்டினாத் தான் எங்களோட மக்கள் கடலுக்குப் போகமுடியும், பொழப்பை பார்க்கமுடியும். அதனாலதான் நானே முன்வந்து கடலில் இறங்கிட்டேன்’’ என்கிறார். தேசராஜின் அதே மனநிலைதான் அங்கிருந்த அத்தனை மீனவர்களுக்கும்.

கடலோரக் காவல்படை கமாண்டோ மண்டல், “தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், எண்ணெய் சுத்திகரிப்பில் உதவும் அளவுக்குத் தொழில்நுட்பத்தில் மேம்படவில்லை. அதனால் மீனவர்கள், துப்புரவாளர்கள் மற்றும் தன்னார்வ நிறுவனம் ஒன்றின் உதவியுடன் கழிவை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளோம். முடிந்தவரை மீனவர்களை கையுறை, காலுறை அணிந்துகொண்டு அப்புறப் படுத்துமாறு அறிவுறுத்தியிருக்கிறோம். முழுவதுமாக எண்ணெயை அகற்ற ஒரு வார காலத்துக்கு மேல் ஆகும்” என்கிறார்.  

ஆனால், திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லியோ, ‘‘இரண்டு நாட்களுக்குள் முழுவதுமாக எண்ணெய் கழிவுகள் அகற்றப்பட்டு விடும்’’ என்று முரண்பட்ட கருத்தை சொன்னார்.

மீனவர்களுக்கு எமனாகும் எண்ணெய்! - கப்பலைக் காப்பாற்ற கொட்டப்பட்டதா கச்சா?

வழக்கமாக, இப்படி எண்ணெய்க்கசிவு ஏற்பட்டால், அதன்மீது ஒரு பவுடரைக் கொட்டுவார்கள். Biodegradable Oil Spill Dispersant எனப்படும் இது, எண்ணெய்க் கசிவைக் கட்டிகளாக மாற்றி கரையில் அடித்து ஒதுங்கச் செய்யும். அதன்பின் அதை அகற்றுவது சுலபம். மிகத் தாமதமாக இப்படிச் செய்ய முடிவெடுத்து, கடலோரக் காவல்படை கப்பல்கள் மூலம் நான்கு டன் பவுடரைத் தூவினார்கள். ஆனால், அது எதிர்பார்த்த விளைவைத் தரவில்லை.

ஏன் இவ்வளவு எண்ணெய் கசிந்தது? கப்பல் மோதி உடைந்த நிலையில், அது மூழ்கிவிடாமல் இருக்க, அதன் எடையைக் குறைக்கும் வகையில் அதிகாரிகளே கச்சா எண்ணெயைக் குழாய்கள் வழியாகத் திறந்து விட்டதாக மீனவர்கள் குற்றம்சாட்டுகிறார்கள். ஏற்கெனவே எண்ணெய் பிரித்தெடுக்கும் நிறுவனத்தின் குழாய் ஒன்று அந்தப் பகுதியில்தான் கழிவுகளைக் கடல்புறமாக வெளியேற்றிக் கொண்டிருக்கிறது. இப்போது கப்பலைக் காப்பாற்ற... குப்பைத் தொட்டியாக கடல் மாற்றப்பட்டுவிட்டது.

பெட்ரோல், டீசல், வெள்ளை பெட்ரோல் உள்ளிட்ட பல எண்ணெய்களின் கலவைதான் கச்சா. கச்சாவில் இருந்துதான் இவை அத்தனையும் பிரித்தெடுக்கப்படுகின்றன. சாலை போட பயன்படுத்தப்படும் தார்கூட கச்சாவிலிருந்தே எடுக்கப்படுகிறது. ‘‘கச்சா எண்ணெயில் பென்சின், பென்டேன், ஹெக்சேன் உள்ளிட்ட வாயுக்களும் இருக்கின்றன. இவை அத்தனையும் ஹைட்ரோ கார்பனின் வெவ்வேறு பரிமாணங்கள். இதை சுவாசிப்பதாலோ அல்லது தொடுவதாலோ வாந்தி, மயக்கம், குமட்டல் போன்ற பிரச்னைகள் ஏற்படும். சிலசமயங்களில் மூச்சுவிடுவதுகூட சிக்கலாகும். சிறுநீரகம், கல்லீரல் போன்றவற்றைப் பாதிக்கும். இதன் நச்சுத்தன்மை உடனடியாக உணரக்கூடியது அல்ல’’ எனச் சூழலியலாளர்கள் எச்சரிக்கிறார்கள்.

கப்பலுக்கு இருக்கும் மரியாதைக்கூட மீனவனுக்கு இல்லை.

- ஐஷ்வர்யா
படங்கள்: தி.குமரகுருபரன்மீனவர்களுக்கு எமனாகும் எண்ணெய்! - கப்பலைக் காப்பாற்ற கொட்டப்பட்டதா கச்சா?

மீன் சாப்பிட்டால் ஆபத்தா?

‘எண்ணெய்க் கசிவால் மீன்கள் விஷமாகிவிட்டன. மீன் சாப்பிடுவதை நிறுத்துங்கள்’ என வாட்ஸ்அப்பில் தகவல்கள் பரவிக்கொண்டிருக்கின்றன. தமிழக மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் எண்ணூருக்கு வந்து, அங்கேயே பிடித்து வறுத்த மீனை சாப்பிட்டு ‘‘அபாயம் ஏதுமில்லை’’ எனச் சொன்னார். ஆனால், இதனால் சென்னை முழுக்க மீன் விலை பாதியாகக் குறைந்திருப்பது நிஜம். மீனவர் ராசேந்திரன், ‘‘நாங்க நடுக்கடல்லதான் மீன் பிடிச்சுட்டு வர்றோம். அதுக்கு எந்த பாதிப்பும் இல்லை. மக்கள் இதைப் புரிஞ்சுக்காம இப்போ மீன் வாங்குறதை நிறுத்திட்டாங்க. எண்ணெய்க் கசிவு இருக்கறதால நாங்களும் நாலஞ்சு நாளா மீன் பிடிக்கப் போக முடியாம திண்டாடுறோம்” என்கிறார். 

ஆலிவ் ரிட்லி எனப்படும் அரிய வகை ஆமைகள், சென்னை கடற்கரைக்கு ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை வந்து முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்யும். இந்த சீஸனில் எண்ணெய்க் கசிவு ஏற்பட்டதால், ஆமைகள் பெரும் பாதிப்பு அடைந்துள்ளன.

News2
News2

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a comment